வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை! அதற்காக, வண்ணத்துப் பூச்சியை 'பிடிக்க' முயற்சி செய்வது தவறு இல்லையா? அதனால், நாமே வண்ணத்துப் பூச்சி செய்துவிடுவோம்! அட, செயற்கை வண்ணத்துப் பூச்சிதாங்க…
நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்தே செய்துவிடுவோம்...
தேவையான பொருட்கள்: தேவையான பொருட்கள்: டிஷ்யு பேப்பர் 2, கத்தரிக்கோல், வெள்ளை நிறப் பெரிய மணி 1, ஆன்டனாக்கள் செய்ய 6 செ.மீ. நீள கலர் கம்பிகள் 2. ஸ்டிக்கர் பொட்டுகள் சில. மாஸ்கிங் டேப் 1. அக்ரலிக் பெயின்ட் கருப்பு, சிவப்பு. (ஆன்டனா என்பது, வண்ணத்துப் பூச்சியின் தலைப் பகுதியில் நீட்டிக்கொண்டு இருக்குமே, அந்த சிறு உணர்விகள்தான்!)
நான்காக மடித்த டிஷ்யு பேப்பரை, அதன் ஒரு முனையில் தொடங்கி, விசிறி மாதிரி மடிக்க வேண்டும். இதே மாதிரி இன்னொரு விசிறியும் செய்துகொள்ள வேண்டும்.
இரண்டு விசிறிகளையும் இணைத்து நடுவில் டேப் சுற்றி ஒட்டிவிட வேண்டும். கீழ்ப்பகுதி இறக்கைகளை மடித்து ஒரு அங்குல அளவு வெட்டிவிட வேண்டும். வண்ணத்துப் பூச்சியின் உடல்பகுதி தயார்!
கம்பியை வளைத்து இரண்டு ஆன்டனாக்கள் செய்துகொள்ள வேண்டும். மணியின் உள்ளே ஆண்டனாக்களை நுழைக்க வேண்டும்.
ஆன்டனாக்களுடன் மணியை நெருக்கிவிட்டு, மணி ஆடாத வகையில் கீழ் பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளைச் சுற்றி டேப் சுற்ற வேண்டும். மணியில் கண்களையும், வாயையும் வரைந்து கொள்ளுங்கள். தலைப்பகுதியும் தயார்.
இனி வண்ணத்துப் பூச்சியின் நடுப் பகுதியில் தலைப் பகுதியைப் பொருத்த வேண்டும். மணியின் அடிப் பகுதியில் துருத்திக் கொண்டு இருக்கும் இரு கம்பி முனைகளையும், வண்ணத்துப் பூச்சியின் நடுப்பகுதியைச் சுற்றி முன் ஒன்றும், பின் ஒன்றுமாக, கொக்கி மாதிரி மடிக்க வேண்டும்.
ஜிகினா பேப்பரை நறுக்கி நடுப் பகுதியில் ஒட்டி, அதன் மத்தியில் ஸ்டிக்கர் பொட்டுகளை வரிசையாக ஒட்ட வேண்டும். உடல் முழுவதும் ஆங்காங்கே ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டினால் அழகிய வண்ணத்துப்பூச்சி உங்கள் உள்ளங்கையில்!