பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான மண்டலங்கள் (Galaxies) இருக்கின்றன. மண்டலங்கள் எப்போதும் அசுர வேகத்தில் சுற்றியபடியே இருக்கும். அபூர்வமாக, ஒரு மண்டலம் இன்னொரு மண்டலத்துடன் இணைவதும் நடக்கும். நமது பூமி இருக்கும் பால் வெளி மண்டலமும், ஆண்ட்ரோமீடா என்ற மண்டலமும் இன்னும் 450 கோடி வருடங்களில் ஒன்றாக இணைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
ஹெர்குலஸ் (Hercules) என்ற விண்மீன் தொகுதியில் 'NGC 6052' என்ற ஒரு மண்டலம் இருக்கிறது. இதுவரை இதை 'ஒற்றை மண்டலம்' என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள். கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஹபிள் (Hubble) தொலைநோக்கி, இந்த மண்டலத்தைப் புகைப்படம் எடுத்தது. அதில் இரண்டு மண்டலங்கள் காந்தம் போல ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டு, ஒற்றை மண்டலமாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. இதன்மூலம், 'NGC 6052' என்பது இரட்டை மண்டலங்களின் கூட்டு என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள்.
இந்த மண்டலங்கள் தற்போதுதான் இணைகின்றன என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
'NGC 6052' மண்டலம், பூமியிலிருந்து 230 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. அதாவது இந்த மண்டலத்திலிருந்து வரும் ஒளி நமது கண்களை எட்ட 23,000 கோடி ஆண்டுகள் ஆகின்றன. ஆக, எத்தனையோ கோடி வருடங்களுக்கு முன்னர், இரு மண்டலங்கள் இணைந்ததை நாம் இப்போது பார்க்கிறோம். இந்த மண்டலங்கள் தற்போது எப்படி இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் 23,000 கோடி வருடங்கள் ஆகும்தானே…