மூன்று மாநில மக்களின் குலதெய்வம்! | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements
மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஏப்
2016
00:00

திருப்பதி பெருமாள், ஏழுமலை ஏறிவந்து தன்னை தரிசிக்க முடியாதவர்களுக்காக வேறு சில தலங்களிலும் எழுந்தருளியுள்ளார்.
அப்படித் தன் பக்தருக்காக இரங்கி, இறங்கி வந்த தலம், கோபசந்திரம்.
பசுக்கள் நிறைந்த ஊர் என்பதால் கோபசந்திரம் என்று அழைக்கப்படுகிறதாம்.
அக்காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில் வசித்து வந்த சகோதரர்கள், ஏராளமான மாடுகளை வைத்திருந்தனர். தீவிர பெருமாள் பக்தர்களாகிய அவர்கள் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். அதன்படி தம்பி ஆறுமாதம் மாடுகளை பராமரிப்பதென்றும், அப்போது அண்ணன் திருப்பதி சென்று திருவேங்கடவனை தரிசிப்பதோடு கோயில் கைங்கரியங்களில் ஈடபடுவதென்றும்; அவர் ஊர் திரும்பியதும், தம்பி திருப்பதி செல்ல, மாடுகளை அண்ணன் ஆறுமாதம் பார்த்துக் கொள்வதாகவும் முடிவு செய்து கொண்டனர்.
நாட்கள் நகர்ந்தன. வயதான காலத்தில் அண்ணனால் திருப்பதி செல்லமுடியவில்லை. பெருமாளை சேவிக்காமல் வாழ்ந்தென்ன பயன் என நினைத்தவர், வேங்கடவனிடம் தனக்கு முக்தியளிக்குமாறு வேண்டிக் கொண்டார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய பெருமாள், 'கவலைவேண்டாம். உன் ஊரிலேயே நான் எழுந்தருளியிருக்கிறேன். இனி நீ அங்கேயே என்னை தரிசிக்கலாம்' என்றார்.
இருந்தாலும் ஊர் முழுக்கத் தேடியும் பெருமாள் இருக்கும் இடத்தை அவரால் அறியமுடியவில்லை. சிலநாட்களுக்குப் பிறகு வேங்கடவனிடம் மீண்டும் வேண்ட, அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், 'நீ மேய்க்கும் பசுக்களில் ஒன்று நான் இருக்கும் இடத்தைக் காட்டிடும்' என்றார்.
அந்த நாள் மேய்ச்சலுக்காக மாடுகளை அவர் அழைத்துச் செல்ல, ஒன்று மட்டும் கூட்டத்தை விட்டு விலகி, சிறிய மலைமேல் செல்வதைக் கவனித்தார். அதைப் பின் தொடர்ந்து மலையேற புதர் ஒன்றில் அது படுத்துக் கொண்டது. அங்கிருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்திப் பார்த்தபோது அந்த பசு தலை வைத்திருந்த இடத்தில் திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தம் இருந்தது கண்டு மகிழ்ந்தார்.
பின்னர் ஊருக்குள் வந்து விஷயத்தைச் சொல்ல, அந்த இடத்தில் பந்தல் அமைத்து ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் அமைக்கப்பட்ட ஆலயம். கிருஷ்ணதேவராயர் காலத்தில் பெரிதாக உருப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் மைசூர் மகாராஜா கட்டுப்பாட்டில் இருந்த கோயில், தற்போது இந்து சமய அறநிலையத் தறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தென்பெண்ணையாற்றின் அருகில் சிறிய மலையில் கோயில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து உச்சியில், உள்ள கோயிலை அடைய சாலை வசதி உள்ளது. பலிபீடமும், துவஜஸ்தம்பம் முன்னே இருக்க, தெற்கு வாயில் வழியாக நுழைந்தால் மகாமண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் மூலவரை நோக்கி சேவை சாதிக்கிறார். அர்த்தமண்டபத்திற்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்க, உள்ளே ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வெங்கடேஸ்வர சுவாமியின் உற்சவ விக்ரகம் உள்ளது.
கருவறை நாயகனாக சேவை சாதிக்கிறார் மூலவர் வெங்கடேஸவர சுவாமி, திருப்பதி பெருமாளைப் போல் காட்சிதரும் இவர், 2004ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தால் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்புவரை சிறிய வடிவில், சுயம்பாலான மூலவர் மட்டுமே கருவறையில் இருந்திருக்கிறார். வித்தியாசமாக திருநாமம் துலங்க லிங்க வடிவில் காட்சிதரும் ஆதிமூலவரான இவரை சிலாரூப பெருமாளின் திருவடியருகே இன்றும் தரிசிககலாம். இருவருக்குமே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகள் வரை 'வெங்கடரமண சுவாமி' என்றே மூலவர் அழைக்கப்படடு, பின்னர் 'வெங்கடேஸ்வர சுவாமி' ஆனார்.
மணப்பேறு, மகப்பேறு, பெண்கள் சம்பந்தமான பிரச்னைகளில் நல்ல தீர்வு, விரும்பிய வாகன வசதி கிட்டுதல், காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைத்தல், கல்வியில் சிறப்புநிலை என நம் கோரிக்கைகள் எதுவானாலும் அதைநிறைவேற்றி வைக்கும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார், வெங்கடேஸ்வர சுவாமி.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநில எல்லைகளும் அருகருகே இருப்பதால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த 93 கிராம மக்களுக்கு குலதெய்வமாகவும் இவர் விளங்குகிறார்.
திருவிழாக் காலங்களில் மூன்று மொழிகளில் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்படுவதும், இனப் பாகுபாடினறி அம்மாநில மக்கள் குடும்பத்தோடு இங்கு வந்து ஒன்றுகூடி வழிபாடு செய்வதும் கலைநிகழ்ச்சிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் நடத்தப்படுவதும் சிறப்பு.
யுகாதியன்று துவங்கி 13 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் 10ம் நாள் கல்யாண உற்சவம், 11ம் நாள் தேரோட்டம், 12ம் நாள் தென்பெண்ணை ஆற்றில் தெப்போற்சவம், 13ம் நாள் சயன உற்சவமும் முக்கிய நிகழ்வுகள். இங்குள்ள தேர் மிகப்பழமையானது பொதுவாக தேரின் சக்கரங்கள் மரத்தாலோ, உலோகத்தாலோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 1872ல் உருவாக்கப்பட்ட இந்தத் தேரில் சக்கரங்கள் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகக் கருதப்படுகிறது. தற்போது புதிய தேருக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்த்திருவிழா நடக்கும் நாளில் சுற்றிலும் உள்ள, மூன்று மாநிலங்களிலும் உள்ள நூற்றியெட்டு கோயில்களில் தேர்த்திருவிழா நடக்கும் என்பது தனிச்சிறப்பு.
ஆங்கிலப் புத்தாண்டு தினம், சிரவண (தெலுங்கு புரட்டாசி) மாதத்தில் மூன்று மற்றும் நான்காம் சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி உள்பட பெருமாளுக்குரிய அனைத்து சிறப்பு நாட்களிலும் விசேஷ வழிபாடுகள் உண்டு. கோயிலுக்கு சற்று தள்ளி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது.
திருப்பதி செல்ல முடியாதவர்கள், திருப்பதியிலிருந்து வந்த இந்தப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதால் இது தட்சிண திருப்பதி என அழைக்கப்படுகிறது.
திருப்பதி சென்று வந்த பலனைப் பெற நீங்களும் ஒருமுறை கோபசத்திரம் வெங்கடேஸ்வர சுவாமியை வழிபட்டு வரலாமே!

எங்கே இருக்கு: கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் ஓசூர் செல்லும் வழியில் காமன்தொட்டி ஊராட்சியில் கோபசந்திரம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தட்சிண திருப்பதி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்குள்ள கோயில் வளைவிலிருந்து அரை கி.மீ. தொலைவில் மலைமேல் ஆலயம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 7.30 - 12.30; மாலை 4 - இரவு 7.30. சனிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் காலை 6 - இரவு 7.30

மு. வெங்கடேசன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X