கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில், பக்க எண்களையும் பார்மட் செய்திட முடியுமா? எந்த இடத்தில் அமைப்பது என்று மட்டுமே முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன். இதற்கான குறிப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். சத்யகலா, சென்னை.
பதில்:
தாராளமாக எளிதாக அமைக்கலாம். எப்படி வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டை பார்மட் செய்கிறீர்களோ, அதே போல, பக்க எண்களையும் அமைக்கலாம். முதலில், டாகுமெண்ட்டில் ஏற்கனவே, பக்க எண்களை அமைத்திருக்க வேண்டும். இந்த எண்களை, அதன் எழுத்து அளவை மாற்றலாம். அழுத்தமாகவும், சாய்வாகவும், அடிக்கோடிட்டும் அமைக்கலாம். அனைத்து பார்மட் வழிகளையும் இங்கு பயன்படுத்தலாம்.
நீங்கள் Print Layout viewல் செயல்பட்டுக் கொண்டிருந்தால், header or footer என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். வேறு Normal அல்லது Outline வியூவில் பணியாற்றினால், அந்தப் பக்கத்தின் ஹெடர் அல்லது புட்டரினைத் தெரியும் வகையில் அமைக்க வேண்டும். அதற்குக் கீழ்க்கண்ட வழிகளில் செயல்படவும்.
1. கர்சரை எந்த பக்க எண்ணை மாற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கிறீர்களோ, அந்த பக்கத்தில் கொண்டு செல்லவும். வியூ மெனுவில், Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Header and Footer டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
3. இங்கு கிடைக்கும் டூல்களைப் பயன்படுத்தி, ஹெடர் அல்லது புட்டர் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனை அமைக்கலாம்.
4. இங்கு ஹெடர் அல்லது புட்டரில் பக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். இதனை நீங்கள் விரும்பும் வகையில் பார்மட் செய்திடவும்.
5. பின்னர் Close கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் ஆண்ட்ராய்ட் போனில், தேடுதல் சாதனமாக, மாறா நிலையில், கூகுள் உள்ளது. குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன். எனக்கு தேடுதல் சாதனம் மட்டும் மாற்றப்பட்டு, நான் விரும்பும் வேறொரு தேடல் சாதனத்தினைப் பயன்படுத்த விரும்புகிறேன். இதற்கு வழிகள் உள்ளனவா? அல்லது கூகுள் தான் பயன்படுத்த வேண்டுமா?
இராம. சுப்பையா, காரைக்குடி.
பதில்
: குரோம் அப்ளிகேஷன் பயன்பாட்டில் இருந்தாலும், நீங்கள் உங்களுக்கான தேடல் இஞ்சினை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ:
1. முதலில் பிரவுசரைத் திறக்க குரோம் ஐகானில் தட்டவும்.
2. உங்கள் பிரவுசரில், அட்ரஸ் பாரினை அடுத்து வலது மேல் பக்கம், மூன்று புள்ளிகள் கொண்ட ஐகான் ஒன்று இருக்கும்.
3. அதில் டேப் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு யாஹூ அல்லது பிங் சர்ச் இஞ்சின் தேர்ந்தெடுக்க வழி கிடைக்கும். உங்கள் போன் மாடலைப் பொறுத்து, வேறு சில சர்ச் இஞ்சின்களும் பட்டியலிடப்படலாம். நீங்கள் பயன்படுத்த விரும்பும் சர்ச் இஞ்சினுக்கான ஐகானில் தட்டி, அதனை உங்கள் மாறா நிலை தேடல் சாதனமாக மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: இமெயில் கையெழுத்து என்பது என்ன? நான் யாஹூ மெயில் பயன்படுத்துகிறேன். இதில் இமெயில் கையெழுத்து என ஒன்றை நான் உருவாக்க முடியுமா? அதற்கான செயல்முறைகளைத் தயவு செய்து விளக்கவும்.
என்.மிருதுளா செல்வி, பாளையங்கோட்டை.
பதில்:
மின் அஞ்சல் கடிதங்களை எழுதி முடிக்கும் போது, நாம் கையெழுத்திட மாட்டோம். அதற்குப் பதிலாக, நம் பெயரை டைப் செய்திடுவோம். சிலர் தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்ணையும் அமைப்பார்கள். சிலர், சிறிய படங்களை இணைப்பார்கள். இவற்றை ஒவ்வொரு இமெயில் முடிவிலும் டைப் செய்து அமைப்பதற்குப் பதிலாக, இமெயில் கையெழுத்து (e-signature) என அமைத்துவிட்டால், அஞ்சல் எழுதி முடித்து, அதனை அனுப்புவதற்கான 'Send' பட்டனை அழுத்துகையில், இந்த கையெழுத்திற்கான டெக்ஸ்ட் தானாக இணைக்கப்பட்டு அனுப்பப்படும். இதனை யாஹூ மெயிலில் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். 1. உங்கள் பிரவுசரைத் திறந்து, அதில் www.mail.yahoo.com எனச் செல்லவும். அல்லது www.mail.yahoo.com என டைப் செய்து மெயில் பக்கத்தினைத் திறக்கவும். அடுத்து, உங்கள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தந்து Sign In பட்டனை அழுத்தவும். உங்களுக்கான இன் பாக்ஸ் (Inbox) பக்கம் கிடைக்கும். இதன் வலது மேல் மூலையில், செட்டிங்ஸ் வீல் ஐகான் இருக்கும். இதில் கிளிக் செய்திட்டால், கிடைக்கும் மெனுவில், “Settings” அழுத்தவும். இனி, செட்டிங்ஸ் மெனு விண்டோ திறக்கப்படும். இதில், இடதுபுறம் உள்ள Accounts என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் இமெயில் முகவரியில் கிளிக் செய்திடவும். இங்கு “Append an email signature to the emails you send” என்று உள்ளதன் அருகே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இதன் மூலம், நீங்கள் அமைக்கும் அனைத்து மின் அஞ்சல் கடிதங்களிலும், நீங்கள் அமைக்க இருக்கும், மின் அஞ்சல் கையெழுத்தினை இணைக்க நீங்கள் சம்மதிக்கிறீர்கள். தொடர்ந்து, நீங்கள் உங்கள், கையெழுத்துப் பகுதியில் என்னவெல்லாம் அமைய வேண்டும் என்பதனை உருவாக்கலாம். அதற்கான பாக்ஸில் தேவையானவற்றை நிரப்பவும். இது கீழே உள்ள எடுத்துக் காட்டுதல் படி அமையலாம். இதனை நீங்கள் விரும்பும் வகையில் பார்மட் செய்து முடிக்கலாம். அனைத்தையும் சேவ் செய்துவிட்டு வெளியேறவும். இனி நீங்கள் அமைக்கும் மின் அஞ்சல் கடிதங்களில், நீங்கள் அமைத்த, அஞ்சல் கையெழுத்து இணைக்கப்பட்டு அனுப்பப்படும்.

கேள்வி: வேர்ட் 2007 புரோகிராமில் தயார் செய்யப்பட்ட டாகுமெண்ட்ஸ் சிலவற்றை என்னுடைய பென் ட்ரைவில் பதிந்துள்ளேன். இவற்றை என்னுடைய விண்டோஸ் 10 புதிய கம்ப்யூட்டரில் திறக்க முயற்சிக்கையில், சிகப்பு வண்ணத்தில் ஓர் அடையாளம் காட்டப்படுகிறது. இதற்கெனத் தனியே ஆபீஸ் செட் அப் அமைக்க வேண்டுமா? அல்லது நான் வேறு முயற்சிகளை மேற்கொள்ளலாமா?
நா. சிவநேசன், மதுரை.
பதில்:
நீங்கள் .docx என்ற துணைப்பெயருடன் உங்கள் டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்திருந்தால், வேர்ட் பேட் (WordPad) இவற்றைத் திறக்கும். எனவே, முதலில் வேர்ட் பேடைத் திறந்துவிட்டு, பின்னர், உங்கள் பென் ட்ரைவிலிருந்து, டாகுமெண்ட் பைல்களைத் திறக்க முயற்சிக்கவும். வேர்ட் பேடில் “Open” என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ட்ரைவில் உள்ள பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கவும்.
அல்லது, இணையத்தில் கிடைக்கும் ஆபீஸ் அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்திப் பார்க்கவும். இந்த வகையில், LibreOffice அல்லது Open Office போன்றவை உங்களுக்கு உதவலாம்.

கேள்வி: போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம் 'பிகாஸோ' இனி கிடைக்காது என எழுதி இருந்தீர்கள். அதன் இடத்தில் வேறு என்ன புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். அவை எங்கு கிடைக்கும்? இலவசமாகவா? கட்டணம் செலுத்தியா? என விளக்கம் அளிக்கவும்.
எஸ். ஜெயமாலா, சேலம்.
பதில்
: வேறு சில வாசகர்களும் இதே கேள்வியைக் கேட்டிருந்தனர். வெகு காலமாக பிகாஸோ பயன்படுத்தியவர்களுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். இலவசமாக இது கிடைத்ததனால், அதே நோக்கில் கீழே சில செயலிகளை, அதன் இடத்தில் பயன்படுத்தத் தருகிறேன்.
முதலாவதாக, Google Photos. கூகுள் பிகாஸாவை மூடுவதற்குக் காரணம், தன் வாடிக்கையாளர்கள், Google Photos பக்கம் வர வேண்டும் என்பதற்காகத்தான். கூகுள் போட்டோஸ் நல்ல தளம்; ஆனால், அது மிகச் சிறப்பான எடிட்டிங் சாப்ட்வேர் அல்ல. ஆனால், பிகாஸா பழகியவர்கள் இதற்கு மாறிக் கொள்வது எளிது. மேலும், இது மற்ற கூகுள் செயலிகளுடன் தொடர்புடையது. கூகுள் சர்வீசஸ், கூகுள் ட்ரைவ் என அனைத்து கூகுள் சேவை செயலிகளுடன் இது இணைந்து செயல்படும். புதிய அக்கவுண்ட் திறக்க வேண்டியதில்லை. ஆனால், அடிப்படை வசதிகள் மட்டுமே இதில் கிடைக்கும்.
அடுத்ததாக Flickr. (https://www.flickr.com/) இது ஓர் இமேஜ் பகிர்ந்து கொள்வதற்கான தளம். இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு டெரா பைட் இடம் கிடைப்பது இதன் சிறப்பு. படங்களை எடிட் செய்திட, சில அடிப்படை டூல்களும் கிடைக்கின்றன. இது யாஹூ நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஆனால், விரைவில் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. அடுத்ததாக, ட்ராப் பாக்ஸ் (Drop Box). இது ஒரு சிறந்த க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளம். உங்களின் போட்டோக்களை நிர்வகிக்க பலவகையான வழிகளை இது தருகிறது. அடுத்து நாம் கவனிக்க வேண்டியது FastStone Image Viewer. (http://www.faststone.org/) இதுவும் படங்களை நிர்வகித்து சேமித்து வைக்க பல வழிகளைத் தருகிறது.

கேள்வி: உங்கள் மனதில் பட்டதைச் சொல்லுங்கள். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள் (கோபம் கொள்ள வேண்டாம்). ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் கூடுதல் வசதிகள் குறித்தும் விரிவாகத் தகவல்களைத் தந்துள்ளீர்கள். இது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தர வேண்டிய வசதிகள் தான். சில பழைய சிஸ்டங்களுக்கு மட்டும் இது இலவசம். இவை தவிர, இந்த சிஸ்டத்தில் என்ன புதுமை உள்ளது?
ஆ. சுந்தர பாண்டியன், மதுரை.
பதில்:
எனக்குக் கிடைத்த அனுபவத்தினை, நான் பெற்ற சில வசதிகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இதில் என்ன கோபம்!) ஆனால், உங்களுடைய கேள்வி மிக அருமையான ஒன்று. எந்த அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் புதிய வசதிகளைத் தந்துதான் ஆக வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் அடையாளம் என்று நீங்கள் குறிப்பிடுவது நல்ல கோணம். அடுத்தபடியாக, நீங்கள் கேட்டுள்ள “புதுமை” என்பதற்குக் கீழே பதில் தருகிறேன்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகப் பெரிய 'புதிய' சாதனை, அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். Windows PCs, Windows tablets, Windows phones, Windows for the Internet of Things, Microsoft Surface Hub, Xbox One and Microsoft HoloLens என அவற்றை மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது. சிஸ்டம் சாப்ட்வேர் தயாரிப்பில் இது ஒரு புதிய புரட்சி. மைக்ரோசாப்ட் இதனை "broadest device family ever" என அழைக்கிறது. ”நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் ஒரே இயக்க முறைமையைப் பயன்படுத்தி புதிய சுகமான அனுபவத்தினைப் பெறுங்கள்” என்று அறிவித்துள்ளது. இவை எல்லாம் புதுமையான மாற்றங்களே.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய பலத்தினைத் தருகிறது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமே ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில் முதல் இடத்தைக் கொண்டதாக இருக்கப் போகிறது. தங்கள் கம்ப்யூட்டர்களில் இந்த சிஸ்டத்தினை இயக்குபவர்கள் நிச்சயம் தங்கள் மொபைல் போன் மற்றும் அது போன்ற சாதனங்களிலும் அதனைப் பதித்து இயக்க முடிவெடுக்கலாம். அப்போது ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் பின்னுக்குத் தள்ளப்படலாம். இதுவரை வெளியான விண்டோஸ் தொகுப்புகளில், இதுவே மிக மிக பாதுகாப்பான ஒன்றாகும். பல பாதுகாப்பு வளையங்களை இந்த இயக்க முறைமை கொண்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
06-ஏப்-201600:00:48 IST Report Abuse
ஆ.தவமணி,   நாம் அனுப்பும் '' ஜி மெயில் செய்தி '' உரியவரால் படிக்கப்பட்டு விட்டதா என்று தெரிந்து கொள்ள முடியுமா ? எப்படி ? கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X