நாற்பது ஆண்டுகளில் நம்மை மாற்றிய ஆப்பிள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
00:00

சென்ற ஏப்ரல் 1 அன்று, ஆப்பிள் நிறுவனம் தன் நிறுவன வாழ்க்கையில், 40 ஆண்டுகளை முடித்து மகத்தான ஒரு வெற்றி முனையைக் கடந்தது. அன்று, “ஆப்பிள் 40” என்ற, இரண்டு மணி நேரத்திற்குச் சற்று அதிகமாக இயங்கக் கூடிய, இசைத் தொகுப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டு தன் ஊழியர்களுடன் வெற்றியைக் கொண்டாடியது. இதில் இடம் பெற்ற பாடல்கள் மேற்கத்திய இசையின் அனைத்து வகைகளையும் கொண்டதாக அமைந்தது. இந்நிறுவனத்தைத் தொடங்கி, அதனை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்ற, மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்குப் பிடித்த பீட்டில்ஸ் பாடலுடன் தொடங்கி, பீட்டில்ஸ் பாடகரின் தனிப்பாடல் ஒன்றுடன் முடிந்தது. இது ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு நல்ல அஞ்சலியாகவும் அமைந்தது.
உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனமாக, அனைத்து மக்களின் வாழ்வில் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பை ஏற்படுத்தி, முன்னேறச் செய்திடும் அமைப்பாக ஆப்பிள் தன் 40 வயதைக் கடந்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவில்லை என்றாலும், அது கடந்து வந்த பாதை அனைவரும் எண்ணிப் பார்த்து வியப்பாதகவே உள்ளது. ஆப்பிள் நிறுவனச் சரித்திரத்தில், அது சந்தித்த திருப்பங்களை இங்கு பார்க்கலாம்.
1. ஏப்ரல் 1, 1976: ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் (Steve Jobs, Steve Wozniak, மற்றும் Ronald Wayne) ஆகிய மூவரும் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். உலகத் தொழில் நுட்பத்தின் அடையாளமாக அந்நிறுவனம் மலரப் போகிறது என்று அவர்கள் யாருக்கும் அப்போது தெரியவில்லை. ஆனால், அவர்களிடம் தங்கள் தொழில் நுட்ப அறிவின் மீது அபார நம்பிக்கை இருந்தது. மூவரும் தொழில் நுட்பத்தின் மீது அளவிடமுடியாத வெறித்தனமான ஆவல் கொண்டிருந்தனர். சாதாரண பயனாளர் ஒருவருக்கு, அப்போது அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த கம்ப்யூட்டரைக் காட்டிலும் சிறந்த கம்ப்யூட்டரைத் தர வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதன் பயனாக, ஜூலை, 1976ல், Apple I என்ற முதல் கம்ப்யூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதன் விற்பனை உயர்ந்ததால், வேடிக்கையாக தொடங்கப்பட்ட அமைப்பை, 1977ல் நிறுவனமாக மாற்றி அமைத்தனர்.
2. 1977: ஆப்பிள் கம்ப்யூட்டரின் Mark 2, (Apple II) வெளியானது. இதன் ப்ராசசர் 1 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. ராம் மெமரி 4 கே.பி.யாக இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து உயர்ந்து, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கின் சிறந்த நிறுவனமாக ஆப்பிள் இடம் பெற்றது.
3. 1980: ஆப்பிள் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தைக்கு வந்தன. பங்கு ஒன்று 22 டாலர் விலையில் விற்பனையானது. நிறுவனத்தின் அன்றைய மதிப்பு 120 கோடி டாலர். இன்று அதன் மதிப்பு 600 கோடி டாலர்.
4. 1984: அப்போது புழக்கத்தில் இருந்த தொழில் நுட்ப போட்டியில், புதுமையைக் கொண்டு வந்து வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலில், ஸ்டீவ் ஜாப்ஸ், இன்று அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் இடம் பெற்றிருக்கும் கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் நுட்பத்தினை உருவாக்கினார். இன்றைய மேக் கம்ப்யூட்டர் அனைத்திற்கும் முன்னோடியான Macintosh கம்ப்யூட்டர், 1984ல் வெளியானது.
5. 1985-1997: ஆப்பிள் நிறுவனம் தத்தளித்த ஆண்டுகள். இருப்பினும் அதன் தொழில் நுட்ப வேட்கை மறையாமல் இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறி NeXT என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1991ல், ஆப்பிள் நிறுவனத்தின், இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டரின் PowerBook 100 முன்னோடி வெளியானது. 1993ல், கையெழுத்தினைப் புரிந்து டெக்ஸ்ட் அமைக்கும், handwriting recognition தொழில் நுட்பத்தினைக் கொண்ட 'personal digital assistant' அல்லது PDA வெளியானது. இதனை உருவாக்கிய தொழில் நுட்பவியலாளர் குழு, பின்னாளில் ஐபாட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான தொழில் நுட்பத்தினை உருவாக்கியது. 1994ல், முதல் PowerPC கம்ப்யூட்டர் வெளியானது.
6. 1997: ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியதால், ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்பினார். அப்போதிருந்த பல சாதனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை மூட்டை கட்டி வைத்து, இப்போதைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் உதவியுடன் புதிய பல ஆய்வுகளைத் தொடங்கினார்.
7. 1998: ஐமேக் கம்ப்யூட்டர், ஆப்பிள் நிறுவனத்தின் புகழை உயர்த்தியது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபோன் பெற்றுத் தந்த புகழை ஐமேக் உருவாக்கியது.
8. 2001: கம்ப்யூட்டர் நிறுவனமாக வளர்ந்த ஆப்பிள் நிறுவனம், டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கும் நிறுவனமாக மாறியது. இசையை ரசிக்க ஒரு புதிய சாதனமாக 'ஐபாட்' உருவானது. இசை உலகையே மாற்றி அமைத்தது. 5 ஜி.பி. இடம், சிறிய எல்.சி.டி. திரை, உருட்ட ஒரு சிறிய சக்கரம் என வடிவமைக்கப்பட்டு, அனைத்து இசைக்கான சாதனங்களையும் பின்னுக்குத் தள்ளியது. உலகில் பலர், தங்கள் காதுகளில் வெள்ளை நிறத்தில் சிறிய பஞ்சுப் பொதியை வைத்துக் கொண்டு, தாங்கள் இசைப் பிரியர்கள் எனவும், ஆப்பிள் சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள் எனவும் பெருமையாகக் காட்டிக் கொண்டனர்.
9. 2006: பவர் பி.சி. ப்ராசசர்களை புறந்தள்ளி, இன்டெல் நிறுவனத்தின் x86 ப்ராசசர்களை ஆப்பிள் பயன்படுத்தத் தொடங்கியது. ஐபுக், பவர்புக் மற்றும் பவர்மேக் சாதனங்களின் இடத்தில் மேக்புக் மற்றும் மேக் ப்ரோ இடம் பிடித்தன.
10. 2007: ஐபாட் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் புகழ் பெற்ற ”ஐபோனைக்” கொண்டு வந்து, புதிய சகாப்தத்தினைத் தொடங்கியது. 4 ஜி.பி. ஸ்டோரேஜ், 3.5 அங்குல கெபாசிடிவ் மல்ட்டி டச் திரை, 620 மெகா ஹெர்ட்ஸ் சாம்சங் ப்ராசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதனை வடிவமைக்க, ஆப்பிள் நிறுவனத்திற்கு இரண்டரை ஆண்டுகள் ஆயிற்று. எப்போதும் இணையத்துடன் தொடர்பில் இருக்கும், கையில் எடுத்துச் சென்று கம்ப்யூட்டர் போல பயன்படுத்தும் இன்றைய ஸ்மார்ட் போன்களின் முன்னோடியாக ஐபோன் இயங்கியது. ”இது இல்லாமல் இனி வாழ்க்கையை நடத்த முடியாது” என்ற நிலையை, இதனைப் பயன்படுத்தியவர்களுக்கு, இந்த போன் ஏற்படுத்தியது.
11. 2008: இந்த ஆண்டில் வெளியான, மேக்புக் ஏர், ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் வரிசையில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. அதில் சில குறைபாடுகள் இருந்தாலும், இன்றைய காலத்தின் தடிமன் குறைவான, எடை குறைந்த லேப்டாப் கம்ப்யூட்டரின் முன்னோடியாக இது அமைந்தது. இதே ஆண்டில், தன் App Store ஐத் தொடங்கியது. ஆப்பிள் சாதனங்களுக்கான தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இதில் விற்பனை செய்யப்பட்டன. இரண்டே மாதங்களில், 10 கோடி பேர் இதிலிருந்து தங்களுக்குத் தேவையான புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்தனர். இன்று, இந்த ஸ்டோரில் புரோகிராம்களைப் பதிவு செய்திடும் டெவலப்பர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம்.
12. 2010: பல வெற்றிகரமான சாதனங்களை முதன் முதலில் வெளியிட்டு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற ஆப்பிள், இன்னொரு சாதனம் மூலம் இன்றைய அளவில், யாராலும் பிடிக்க முடியாத இடத்தைப் பிடித்தது. ”ஐபேட்”~ இதனை வெளியிட்டு, ஆப்பிள் மீண்டும் தன்னை செல்வமும் செல்வாக்கும் பெற்ற ஒரு நிறுவனமாக உலகிற்குக் காட்டியது. இந்நிறுவனத்தின் பங்கு விலை தாறுமாறாக உயர்ந்தது. நிறுவனத்தின் லாபம், கணித்த இலக்குகளை மீறி எங்கோ சென்றது.
13. 2011: ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி, அதனை உலகம் புகழும் நிறுவனமாக மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ், தன் 56 ஆவது வயதில், அக்டோபர் 5, 2011ல், புற்றுநோயால் இறந்தார். அவருடன் பணியாற்றிய, அவரால் தலைமை நிர்வாகியாக அடையாளம் காணப்பட்ட டிம் குக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
14. 2014: ஆப்பிள் நிறுவனம் Dr Dre and Jimmy Iovine's Beats என்ற நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியது. ஹெட்போன்களைத் தயாரித்ததுடன், மியுசிக் சர்வீஸ் ஒன்றையும் இந்நிறுவனம் நடத்தி வந்தது. பீட்ஸ் மியூசிக், ஆப்பிள் மியூசிக் ஆக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், ஆப்பிள் ஐ ட்யூன் பயன்படுத்தி வந்த அனைவருக்கும் தன் இசை ஆல்பத்தினை இலவசமாக வழங்கியது. ஐபோன்கள் அனைத்திலும் இதனை வலுக்கட்டாயமாக ஆப்பிள் அமைத்தது. அதுவே பெரிய பிரச்னையாகி, இறுதியில் அனைத்தையும் நீக்கும் வேலையையும் ஆப்பிள் மேற்கொண்டது.
15. 2015: டிம் குக் தலைமை ஏற்ற பிறகு வந்த புதிய சாதனம் 'ஆப்பிள் வாட்ச்'. இத்தகைய வாட்ச் விற்பனைச் சந்தையில், சாம்சங், எல்.ஜி., சோனி மற்றும் பெப்பிள் நிறுவன வாட்ச்களைப் புறந்தள்ளி, முதல் இடத்தைப் பிடித்தது.
இன்றும் ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களுக்கும், விற்பனைக்கும், குறையாத லாபத்திற்கும் பெயர் பெற்ற நிறுவனமாக இயங்கி வருகிறது. டிம் குக், ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தித்தைப் போலவே, எதிர்காலத்தில் ஆப்பிள் என்ன சாதனங்களைத் தர வேண்டும் எனத் திட்டமிட்டு இயங்கி வருகிறார். எடுத்துக் காட்டாக, மிக இரகசியமாக தொழில் நுட்ப வல்லுநர் குழுவினை அமைத்து, 'ஆப்பிள் கார்' ஒன்றை முற்றிலும் புதிய வசதிகளுடன், புதிய தொழில் நுட்பத்தில் அமைத்து வருவதாகப் பல அமைப்புகள் கூறியுள்ளன. இது நிச்சயமாக நடக்க கூடிய ஒன்றுதான். நம் வாழ்வினை முற்றிலுமாக மாற்றி அமைப்பதில், ஆப்பிள் நிச்சயம் வெற்றி பெறும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X