கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
00:00

கேள்வி: எம்.எஸ்.ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் பயன்படுத்தி வருகிறேன். இதில் அளவுகள் அனைத்தும் அங்குலத்திலேயே உள்ளது. இதனை செண்டி மீட்டருக்கு மாற்றும் வழி இருப்பதாகப் படித்துள்ளேன். இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.
ஆர். நல்லதம்பி, சேலம்.
பதில்:
வேர்ட் புரோகிராமில், மாறா நிலையில் இருப்பது அங்குல அளவு மட்டுமே. ஆனால், வேறு பல அளவை அலகுகளுக்கு மாறிக் கொண்டு செயல்படவும் வழி தந்துள்ளது. இந்த வகையில், centimeters, picas, points, மற்றும் millimeters எனப் பல அளவுகளுக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு தருகிறேன்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டன் அழுத்தி, கீழாக வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கமாக உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இந்த பகுதியில் கிடைக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் ஒவ்வொன்றாக, மவுஸின் ஸ்குரோல் வீலை அழுத்திச் சென்று பார்க்கவும். இங்கு Display என்று ஒரு பிரிவு கிடைக்கும்.
4. இந்தக் கட்டத்தில், Show measurements in units of: என்று இருப்பதன் முன் உள்ள கட்டத்தில் கிடைக்கும் கீழ் விரி அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில், முதலில் Inches இருக்கும். கீழாக, பல அலகுகள் காட்டப்படும். உங்களுக்கு எது தேவையோ அதனைத் தேர்ந்தெடுத்து, சேவ் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த அலகில், மார்ஜின் மற்றும் பிற இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10க்கு மாறி, பயன்படுத்தி வருகிறேன். சில பிரச்னைகள் உள்ளன. அதில், கண்ட்ரோல் பேனல் பிரிவை எளிதாக அடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும், சுற்றிச் சென்று, பெற வேண்டியதுள்ளது. எளிய வழி இருந்தால் கூறவும்.
என். மஹேஸ்வரி, கோவை.
பதில்:
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனுவின் கீழாக, முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் எளிதாகக் கிடைத்த கண்ட்ரோல் பேனல் தரப்பட்டுள்ளது. இதனை Settings app என அழைக்கின்றனர். இதில்தான், டிஸ்பிளே, டிவைசஸ், நெட்வொர்க் கனெக் ஷன்ஸ் போன்றவை கொண்ட கண்ட்ரோல் பேனல் உள்ளது. இதில் சென்று, கண்ட்ரோல் பேனலில் உள்ள பல அமைப்புகளின் தன்மையை மாற்றலாம். ஆனால், முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இருந்த கண்ட்ரோல் பேனலில் கிடைத்த Default Programs, AutoPlay and the Device Manager ஆகியவற்றை இதில் பெற முடியாது. அதற்குப் பதிலாக, விண்டோஸ் 10ல், கார்டனா மூலம், அதில் டைப் செய்து பெறலாம்.
எளிதாகவும், விரைவாகவும் கண்ட்ரோல் பேனல் பெற ஒரு வழியும் உள்ளது. ஸ்டார்ட் மெனு பட்டனில், ரைட் கிளிக் செய்திடவும். அதில் பாப் அப் ஆகி வரும் மெனுவில், கண்ட்ரோல் பேனல் என்பதில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனலைப் பெறலாம்.
அத்துடன் விண்டோஸ் மற்றும் X கீகளை ஒரு சேர அழுத்தியும் கண்ட்ரோல் பேனலைப் பெறலாம். இங்கேயே, Device Manager, Task Manager, Power Options, Command Prompt மற்றும் File Explorer போன்றவற்றைப் பெற வழி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனல் பிரிவினை ஒரு டைலாக (கட்டமாக) அமைத்துக் கொள்ளலாம். சர்ச் பாக்ஸில், “Control Panel” என டைப் செய்தால், கண்ட்ரோல் பேனல் எனக் கிடைக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், “Pin to Start.” என்பதில் கிளிக் செய்திடவும். ஸ்டார்ட் மெனுவில் இது தோன்றியவுடன், அதனை அப்படியே மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று, டைல்கள் உள்ள இடத்தில் விட்டுவிடலாம். அதன் பின்னர், அந்த டைலில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனலைப் பெறலாம்.

கேள்வி: கம்ப்யூட்டரில் ஏன் யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்து ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்த முடியாது? அல்லது அப்படி இயக்கும் வகையில் ஏதேனும் ஹார்ட் டிஸ்க் உள்ளதா?
என். பிரகாஷ் குமார், திருப்பூர்.
பதில்:
இதுவரை இல்லாமல் இருந்தது. நீங்கள் கேள்வி கேட்ட நேரத்தில், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான, ஸீ கேட் நிறுவனம், யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துப் பயன்படுத்தக் கூடிய ஹார்ட் ட்ரைவினை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் இறுதியில் இது விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை 350 டாலர் ஆக இருக்கும்.
Innov8 என்று இந்த ஹார்ட் ட்ரைவினை, ஸீகேட் அழைக்கிறது. இதுதான், உலகின் முதல் யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துப் பயன்படுத்தும் ஹார்ட் ட்ரைவ் ஆகும். இதனை இயக்கத் தனியாக பவர் சோர்ஸ் அல்லது மின் இணைப்பி தேவையில்லை. இதன் கொள்ளளவு 8 டெரா பைட். மாற்றி இணைத்தாலும் செயல்படக் கூடிய reversible USB-C கேபிள் இதனுடன் தரப்பட்டு, அதன் வழியில் இதனை இயக்க மின் சக்தி கிடைக்கிறது. இந்த தொழில் நுட்பத்தினை Ignition Boost என ஸீ கேட் நிறுவனம் அழைக்கிறது. நல்லதொரு அலுமினியத் தகடானால் ஆன பாக்ஸில் இது சரியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனுடைய ட்ரைவ்கள் இயங்க Seagate Dashboard தரப்பட்டுள்ளது. பயனாளர்கள் விரும்பினால், இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஒரு கிளிக் செயல்பாடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேக் அப் என அமைத்துக் கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்த, உங்கள் கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி.3.1 போர்ட் இருக்க வேண்டும். விண்டோஸ் 8 மற்றும் பின்னர் வந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இது இயங்கும். OS X 10.11 மற்றும் அதன் பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இது இயங்கும்.

கேள்வி: ஒன் ட்ரைவ் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தினேன். ஆனால், சரியாக பாஸ்வேர்ட் கொடுத்தாலும், அதனைப் பயன்படுத்தும் வகையில் அது திறக்கப்படவில்லை. இது எனக்கு மட்டுமா? அல்லது பலருக்கும் இந்த பிரச்னை உள்ளதா? இந்த பிரச்னையால், ஒன் ட்ரைவினைப் பயன்படுத்துவதனையே விட்டுவிட்டேன். தயவு செய்து சரியான வழி கூறவும்.
பா. நாசர், இராமேஸ்வரம்.
பதில்:
நாசர், உங்களுடைய பிரச்னை என்னவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்றை உறுதியாகக் கூறுவேன். ஒன் ட்ரைவில் அக்கவுண்ட் திறந்து பயன்படுத்துவது மிக எளிது. உங்களுக்கு ஏற்கனவே, மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் இருந்தால் (Outlook.com, Hotmail, MSN or LiveMail மின் அஞ்சல் முகவரி) அதனையே, ஒன் ட்ரைவ் அக்கவுண்ட் திறக்கவும் பயன்படுத்தலாம். அதே மின் அஞ்சல் முகவரியினையும், பாஸ்வேர்டினையும் பயன்படுத்தலாம். அக்கவுண்ட் செட் செய்வதும் மிக எளிது. https://onedrive.live.com/about/en-us/ என்ற இணைய தள முகவரியில் உள்ள இணைய தளத்தில் இந்த வழிகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் இல்லை எனில், Sign up for free என்பதில் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு மின் அஞ்சல் முகவரியையும், பாஸ்வேர்டையும் தந்து அக்கவுண்ட் திறக்கலாம்.
நீங்கள் கூறியுள்ளபடி, ஏற்கனவே, அக்கவுண்ட் திறந்து, அதனைப் பயன்படுத்த முடியவில்லை என்றால், நீங்கள அதற்கான பாஸ்வேர்டினைச் சரியாக அமைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, சரியாக, தேவையற்ற ஸ்பேஸ் விடாமல் பாஸ்வேர்டினைத் தந்து முயற்சிக்கவும்.

கேள்வி: விண்டோஸ் 8.1 என் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ளது. இதில் சிஸ்டம் ஷட் டவுண் செய்திட ஷார்ட் கட் கீ ஒன்று உருவாக்குவது குறித்து முன்பு நீங்கள் எழுதி இருந்தீர்கள். அதனை அமைத்திருந்தேன். ஆனல், திடீரென அது இயங்கவில்லை. ஒன்று நான் மாற்றி இருக்க வேண்டும். அல்லது மறந்திருக்க வேண்டும். தயவு செய்து எனக்கு அந்த ஷார்ட் கட் கீ குறித்துச் சொல்லவும்.
கா.தமிழ் நேசன், மதுரை.
பதில்:
ஷார்ட் கட் கீ உருவாக்கி இருந்தால் நிச்சயம் அது பயன்பாட்டில் இருக்கும். நீங்கள் அதனைத் தவறாகத் தருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனை உருவாக்கும் வழியைத் தருகிறேன்.
கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
1. உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.
2. இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் நடுவில், ஒரு சிறிய பாக்ஸில், உங்கள் ஷார்ட் கட் இருக்க வேண்டிய இட்த்தை அமைக்க வேண்டும். இந்த பாக்ஸில் shutdown /s /t 0 என டைப் செய்திடவும்.
3. அடுத்து “Next” பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து உங்கள் ஷார்ட் கட் வழிக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இதற்கு Shut Down என்றே பெயர் கொடுக்கலாம். அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கும். இறுதியாக “Finish” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் புதிய ஷார்ட் கட் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், விண்டோஸ்
8 சிஸ்டம் ஷட் டவுண்ட் செய்யப்படும். இது விண்டோஸ் 8க்கு மட்டுமல்ல, அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் செயல்படும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள எடுத்த முடிவினை என் நண்பரிடம் கூறிய போது, தற்போது விண்டோஸ் 7ல் பயன்படுத்தும் பலவற்றையும், பைல்களையும் இழந்துவிடுவாய் என அவர் எச்சரிக்கிறார். இது உண்மையா? உங்கள் பதில் பார்த்த பின்னரே, இது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
என். கூத்தபிரான், சிவகாசி.
பதில்:
பலமுறை கம்ப்யூட்டர் மலரில் இது குறித்து எழுதப்பட்டுள்ளது. விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வதே நல்லது. உங்கள் நண்பர் கூறியுள்ள, “இழக்கும் பைல்கள்” குறித்து கீழ்க்காணும் தகவலைத் தர விரும்புகிறேன்.
விண்டோஸ் 7, விண்டோஸ் 8/8.1 லிருந்து, விண்டோஸ் 10க்கு மாறும்போது, எந்த புரோகிராமும், பைல்களும், போட்டோக்களும், டாகுமெண்ட்களும் இழக்கப்பட மாட்டாது. ஆனால், சில நீக்கப்படும். தொடர்ந்து கிடைக்காது. அவை எவை எனத் தருகிறேன்.
'மீடியா செண்டர்' புரோகிராம் நீக்கப்படும். எனவே, இதை விண்டோஸ் 7, 8, 8.1 ல் பயன்படுத்தியவர்கள் ஏமாற்றமடையலாம். ஆனால், இதன் இடத்தில் பயன்படுத்த கூடுதல் வசதிகளுடன் பல புரோகிராம்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.
காலம், சீதோஷ்ண நிலை போன்றவற்றைக் காட்டும், டெஸ்க்டாப் கேட்ஜெட்டுகள் (Desktop Gadgets) நீக்கப்படும். Solitaire, Minesweeper, and Hearts போன்ற விளையாட்டுகள் நீக்கப்படும். ஆனால், இவற்றை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெற்றுக் கொண்டு, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
தனியாக, யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து இயக்கும் யு.எஸ்.பி. பிளாப்பி ட்ரைவ் செயல்படாது. இதற்கென தனி ட்ரைவர் பைல்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கிய டிவிடி ட்ரைவ் இயங்காது. தனியே இதற்கென சாப்ட்வேர் பதிய வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X