கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
00:00

கேள்வி: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கும்போது, ஒர்க் ஷீட்களில், டேட்டா கொடுக்கும் தேதியை அருகே உள்ள செல் ஒன்றில் அமைக்க விரும்புகிறேன். சிஸ்டத்தில் இருந்தே தேதியை, எக்ஸெல் எடுத்துக் கொள்ளும் வகையில் பார்முலா அல்லது ஷார்ட் கட் கீ உள்ளதா? அன்புகூர்ந்து தெரியப் படுத்தவும்.
கே.ஆர். விஸ்வநாதன், திருச்சி.
பதில்:
நல்ல கேள்வி. எக்ஸெல் புரோகிராமில் நம் பணியைக் குறைக்கும் வகையில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பல ஷார்ட் கட் கீகளாகவும் உள்ளன. நீங்கள் கேட்டது போல, அன்றைய நாளினைத் தர 'Ctrl' + ';' கீகளைப் பயன்படுத்துங்கள். எதற்காக 08042016 என எழுத வேண்டும். மேலே குறிப்பிட்ட ஷார்ட்கட் கீ தொகுப்பினைப் பயன்படுத்தினால் போதும்.
=Now() or =Today() போன்றவற்றில், அவ்வப்போது இதன் மதிப்பு, அதாவது நாள் மாறுபடும். ஆனால், கண்ட்ரோல் கீ பயன்படுத்தி அமைத்துவிட்டால், தரப்படும் நாள் மாறாமலேயே இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள் (கோபம் கொள்ள வேண்டாம்). ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் கூடுதல் வசதிகள் குறித்தும் விரிவாகத் தகவல்களைத் தந்துள்ளீர்கள். இது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தர வேண்டிய வசதிகள் தான். சில பழைய சிஸ்டங்களுக்கு மட்டும் இது இலவசம். இவை தவிர, இந்த சிஸ்டத்தில் என்ன புதுமை உள்ளது?
ஆ. சுந்தர பாண்டியன், மதுரை.
பதில்
: எனக்குக் கிடைத்த அனுபவத்தினை, நான் பெற்ற சில வசதிகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இதில் என்ன கோபம்!) ஆனால், உங்களுடைய கேள்வி மிக அருமையான ஒன்று. எந்த அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் புதிய வசதிகளைத் தந்துதான் ஆக வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் அடையாளம் என்று நீங்கள் குறிப்பிடுவது நல்ல கோணம். அடுத்தபடியாக, நீங்கள் கேட்டுள்ள “புதுமை” என்பதற்குக் கீழே பதில் தருகிறேன்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகப் பெரிய 'புதிய' சாதனை, அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். Windows PCs, Windows tablets, Windows phones, Windows for the Internet of Things, Microsoft Surface Hub, Xbox One and Microsoft HoloLens என அவற்றை மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது. சிஸ்டம் சாப்ட்வேர் தயாரிப்பில் இது ஒரு புதிய புரட்சி. மைக்ரோசாப்ட் இதனை "broadest device family ever" என அழைக்கிறது. ”நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் ஒரே இயக்க முறைமையைப் பயன்படுத்தி புதிய சுகமான அனுபவத்தினைப் பெறுங்கள்” என்று அறிவித்துள்ளது. இவை எல்லாம் புதுமையான மாற்றங்களே.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய பலத்தினைத் தருகிறது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமே ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில் முதல் இடத்தைக் கொண்டதாக இருக்கப் போகிறது. தங்கள் கம்ப்யூட்டர்களில் இந்த சிஸ்டத்தினை இயக்குபவர்கள் நிச்சயம் தங்கள் மொபைல் போன் மற்றும் அது போன்ற சாதனங்களிலும் அதனைப் பதித்து இயக்க முடிவெடுக்கலாம். அப்போது ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் பின்னுக்குத் தள்ளப்படலாம்.
இதுவரை வெளியான விண்டோஸ் தொகுப்புகளில், இதுவே மிக மிக பாதுகாப்பான ஒன்றாகும். பல பாதுகாப்பு வளையங்களை இந்த இயக்க முறைமை கொண்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில், பைல்களைத் தேர்ந்தெடுக்க, சேவ் செய்திடச் செல்கையில், டெக்ஸ்டாப் பிரிவு காட்டப்படவில்லை. இத்தனை நாளும் கிடைத்தது. இப்போது எப்படி அணுகினாலும் கிடைக்கவில்லை. ஆனால், டெஸ்க்டாப்பில் நிறைய பைல்கள் உள்ளன. எப்படி மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரில், டெஸ்க்டாப் பிரிவினைக் கொண்டு வருவது என்று கூறவும். நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன்.
என்.முருகேசன், ஆத்தூர்.
பதில்:
ஏற்கனவே இருந்ததனை உங்களை அறியாமல் நீக்கி இருப்பீர்கள். நிச்சயம் அது தானாக அழிக்கப்பட்டிருக்காது. பரவாயில்லை. அதனை மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படுமாறு செய்துவிடலாம். கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறந்து கொள்ளவும்.
2. இந்த விண்டோவில் மேலாக உள்ள நீள் கட்டத்திற்குச் சென்று DESKTOP என டைப் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் DESKTOP என்ற இடத்திற்குச் செல்லவும்.
3. இந்த விண்டோவில் FAVORITES என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Add current location to favorites" என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இனி விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டெஸ்க்டாப் பிரிவு காட்டப்படும்.

கேள்வி: என் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏசர் ஆஸ்பயர் வி 5 லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கிக் கொடுத்து பணியாற்றி வருகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வந்த இதனை, விண்டோஸ் 8.1க்கு மாற்றிக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 10க்கு மாற்றினோம். அதிலிருந்து பிரச்னை தான். புளுடூத் ட்ரைவர் இயங்கவில்லை. டிவிடி ட்ரைவ் இயங்கவில்லை. முதலில், விண்டோஸ் 10 சிஸ்டம் ஒத்துப் போகுமா என்ற சோதனையில் இவை எல்லாம் இயங்கும் என அறிக்கை தரப்பட்டது. தற்போது வெறுத்துப் போய், மீண்டும் விண்டோஸ் 8.1க்கே மாறிக் கொண்டோம். இதற்கான தீர்வு வேறு ஏதேனும் உள்ளதா? ஏன் இவ்வாறு மைக்ரோசாப்ட் தவறு செய்கிறது?
என். ஸ்ரீனிவாச சர்மா, சென்னை.
பதில்:
இந்தப் பிரச்னையை கம்ப்யூட்டர் மலரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. பலரும் இது குறித்து உணர்ந்து கொள்வார்கள். அத்துடன் கீழே தரப்படும்
பதில் குறித்தும் சிந்தித்து முடிவெடுப்பார்கள். இது போன்ற பிரச்னைகள் குறித்து கேள்வி~பதில் பகுதியில் அதிகம் எழுதி இருக்கிறேன். இந்த பிரச்னைகள் இருப்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. பயனாளர்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில்,
எந்த சாப்ட்வேர் புரோகிராமும் வடிவமைக்கப்பட மாட்டாது.
நிறுவனம் ஒன்று, ஹார்ட்வேர் மற்றும் அதற்கான சாப்ட்வேர் இரண்டினையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இயலாத போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. ஒவ்வொரு முறை, மைக்ரோசாப்ட் புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிடுகையில், பயனாளர்கள், அப்கிரேட் மற்றும் புதிய சாப்ட்வேர்ட் தொகுப்புடன் இயங்காத ஹார்ட்வேர் என பிரச்னைகளைச் சந்திப்பது வழக்கம். இந்த முறை மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக வழங்கியதுதான் ஒரு வேறுபாடாக இருந்தது. ஆனாலும், பலர் இந்தப் பிரச்னைகளை தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் கொண்டு சமாளித்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, டிவிடி இயக்கத்தினைக் கூறலாம். இதே போல மற்ற பிரச்னைகளுக்கும், இலவசமாகவே, இணையத்தில், தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்கள் கிடைக்கின்றன.
உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் விண்டோஸ் 8.1.க்கு மீண்டும் சென்று விட்டதால், அதனையே தொடர்ந்து பயன்படுத்தலாம். வரும் ஜனவரி 2018 வரை இதற்கு முதன்மை பாதுகாப்பினை, மைக்ரோசாப்ட் தொடர்ந்து தரும். நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பினை 2023 ஆம் ஆண்டு வரை தரும். மற்றவர்கள், விண்டோஸ் 10 பிரச்னையைத் தரும் என எண்ணினால், ஆப்பிள் நிறுவன சிஸ்டம் அல்லது லினக்ஸ் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொண்டேன். என்னுடைய கம்ப்யூட்டர், எச்.பி. லேப்டாப். இதில் இப்போது கேமராவிற்கான டைல் காணப்படவில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில் கேமரா உறுதியாக உள்ளது. இதன் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்குமா? நான் அடிக்கடி ஸ்கைப் பயன்படுத்துவதால், எனக்கு கேமரா தேவையாய் உள்ளது. தயவு செய்து உதவவும்.
ஆ. அன்புச் செல்வன், திருச்சி.
பதில்:
நீங்கள் ஸ்கைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன், உங்கள் கேமரா தானாகச் செயல்படத் தொடங்குமே. இருப்பினும், டைல் குறித்த பயத்தினைத் தெளிவு படுத்துகிறேன். இது மிகவும் எளிது. தேடல் கட்டத்தில், “camera” என்று டைப் செய்திடவும். கிடைக்கும் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Pin to Start என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், ஸ்டார் மெனு திறக்கையில், கேமரா டைல் காட்டப்படும். இதனை, நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும், நகர்த்தி வைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவினை டிபிராக் செய்த பின்னர், சில செக்டார்கள், கெட்டுப்போனதாக, Bad Sector எனக் காட்டப்பட்டது. இவற்றை ஹார்ட் ட்ரைவ் எப்போதும் நினைவில் வைத்து, டேட்டாவினை அதில் எழுதாமல் இருக்குமா? என் பைல் சிஸ்டம் என்.டி.எப்.எஸ்.ஆகும்.
ஆ. சுப்ரமணியன், மதுரை.
பதில்
: என்.டி.எப்.எஸ். சிஸ்டம், அதன் கெட்டுப்போன டிஸ்க் இடங்களை (Bad Sectors) நினைவில் வைத்து இயங்கும். டிபிராக் செய்யப்பட்டு, கெட்டுப் போன டிஸ்க் க்ளஸ்டர்கள் கண்டறியப்பட்டவுடன், அவை $BadClus என்ற பைலில் எழுதப்பட்டு வைக்கப்படுகின்றன. இதனை சிஸ்டம் அடிக்கடி பயன்படுத்திக் கொள்ளும். இந்த பைல் அழிக்கப்பட்டாலோ, அனைத்து டேட்டாவும் அழிப்பதற்கான கட்டளை கொடுத்தாலோ, இந்த தகவல்களும் அழிக்கப்படும். அதிக செக்டார்கள் கெட்டுப் போவதாகக் காட்டப்பட்டால், ஹார்ட் ட்ரைவினை மாற்றுவதே சிறந்த வழியாகும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் விடியோ பைல்களை இயக்க, வி.எல்.சி. பிளேயர் பயன்படுத்தலாமா? லேப்டாப் ஸ்பீக்கரை இது கெடுத்துவிடும் என்று கூறுகிறார்கள். அது உண்மையா? இதனையே என்னுடைய மாறா நிலை புரோகிராமாக, விடியோ பைல்களுக்கு அமைக்க என்ன செய்திட வேண்டும்? எப்போதும் விடியோ பைல்கள், விண்டோஸ் மீடியா பிளேயரிலேயே திறக்கப்படுகின்றன. இதனை மாற்றி அமைக்க விரும்புகிறேன்.
ஆர். கல்பனா ரமேஷ், தாம்பரம்.
பதில்
: வி.எல்.சி. பிளேயர், விடியோ பைல்களை இயக்க ஓர் அருமையான புரோகிராம். இது பெரும் அளவில் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் குறிப்பிடும் குறை எல்லாம், இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மாறா நிலையில் இதனை அமைக்கக் கீழே உள்ள செயல்முறைகளைப் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரில் உள்ள விடியோ பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன்மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு மெனு கிடைக்கும். கிடைக்கும் மெனுவில், “Open With” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். மீண்டும் “Browse” என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் புரோகிராம்பட்டியலில் VLC Media Player என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த விண்டோவில் கீழாக, “Always use the selected program to open this file” என்று இருப்பதற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருப்பதனை உறுதிப்படுத்தவும். அல்லது, ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் வீடியோ பைல்களைத் திறக்க, வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை மட்டும் திறக்கும்படி, கம்ப்யூட்டருக்கு கட்டளை கொடுத்துள்ளீர்கள் என்றாகிறது. இனி, எந்த விடியோ பைல்கள் மீது கிளிக் செய்தாலும், அது வி.எல்.சி. பிளேயர் புரோகிராமில் தான் திறக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X