நான் கடலூரிலுள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் போது ஆண்டுவிழாவில், நாடகத்தில் நடிக்கப் பெயர் கொடுத்தேன். விழாவன்று நானும், என் தோழியும் யாருக்குமே தெரியாமல் குறவன், குறத்தி வேடமிட்டு வந்தோம். (அப்போதெல்லாம் அது மிகவும் பேமஸ்) நாங்கள் பள்ளி கேட் அருகில் சென்றபோது எங்களை உள்ளே போகவிட மறுத்துவிட்டனர்.
அத்தோடு, 'குறவர்கள் உள்ளே செல்லக் கூடாது!' என்று துரத்திவிட்டனர். 'எங்கள் பிள்ளைகள் படிக்கின்றனர். பையன் நாடகத்தில் நடிக்கிறான்!' என்று பொய் சொல்லி, ஆசிரியரின் அனுமதியுடன் உள்ளே குறவன், குறத்தி போலவே அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டு உள்ளே வந்துவிட்டோம்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் முடியும்போது 'ஏ சாமியோ நல்லா இருக்குது!' என்று சத்தமாக கோஷங்கள் போட்டதால், எல்லாரும் எங்களைப் பார்த்து, 'இவர்களை ஏன் உள்ளே அனுமதித்தீர்கள்; நாகரிகம் இல்லாமல் கத்துகின்றனர்' என்று ஏசினர்.
அடுத்து எங்கள் நிகழ்ச்சி வரவே, எங்களை குறவன், குறத்தி என்று அழைத்தனர். உடனே, நாங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு மேடையேறியதும், பரபரப்புடன் பார்த்தனர். எங்கள் நிகழ்ச்சி மிக்க ஆரவாரத்துடன் ஆடல், பாடல், வசனத்துடன் சிறப்பாக முடிந்தது. அதன் பின்புதான் இந்திரா, சந்திரா என்ற மாணவிகள்தான் இவர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்தது, ஒரே கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. உண்மையான குறவன், குறத்தியின் ஆபரணங்களை வாங்கி வந்து அணிந்து நடித்ததால் எங்கள் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.
எல்லாரும் வெகுவாகப் பாராட்டி பரிசும் அளித்தனர். நான் இப்போது முதுநிலை ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன். கடந்த கால நினைவுகளின் இன்பம், தங்களால் மீண்டும் நினைவுக்கு வந்ததில் மிகுந்த சந்தோஷம். நன்றி!
- சந்திரவதனா, உளுந்தூர்பேட்டை.