சகோதரி ஜெனிபர் அவர்களுக்கு...
என் பெயர் குமரேஷ்; வயது 48. 'மிடில் கிளாஸ்' பேமிலி. எனக்கு இரண்டு மகள்கள். பெரிய மகள் பி.ஜி., படிக்கிறாள். இரண்டாவது மகள் கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். எனக்கு பெருமை தாங்கவில்லை. என் உறவினர்களில் எவருமே இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியதில்லை. உடனே, 'உனக்கு என்ன பரிசு வேண்டும்?' என்று கேட்டேன். 'ஸ்மார்ட் போன்' வேண்டுமென கேட்டாள். நானும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
இப்போது பிரச்னைக்கு வருகிறேன். என் மகள் அழகாக இருப்பாள். ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றி, 'சினி ஆக்ட்ரஸ்' போல ஸ்டைலாக தோன்றுவாள். வித விதமான காஸ்ட்யூம்களில் போட்டோ எடுத்து, 'வாட்ஸ் அப்' மற்றும், 'பேஸ் புக்கில், 'போஸ்ட்' செய்கிறாள். பள்ளியில் படிக்கும் பெண் நண்பர்களுடன் உனக்கு எவ்வளவு, 'லைக்ஸ்' வந்துள்ளது. எனக்கு அதை விட அதிக, 'லைக்ஸ்' வந்துள்ளது என போனில் பேசி மகிழ்கிறாள்.
என் மகள் தவறான வழியில் சென்று விடுவாளோ என்று அஞ்சுகிறேன். அவளை கண்டிக்கவும் முடியவில்லை. தற்போது +2 படித்து வருகிறாள். மதிப்பெண் குறைந்து விடுமோ என அஞ்சுகிறேன். என் மனைவியை விட்டு அவளிடம் கேட்டபோது, 'இந்த புகைப்படங்கள் என் நண்பிகள் வட்டத்தில் மட்டும்தான் போகும். வெளிநபர்களுக்கு செல்லாது!' என்று கூறுகிறாள். நீங்கள் தான் என் மகளுக்கு தகுந்த அறிவுரை கூறுவீர்கள் என்று நம்புகிறேன் சகோதரி.
மகளே... கங்கிராட்ஸ்... எதுக்கா? பத்தாம் வகுப்பில் இவ்ளோ மதிப்பெண்கள் வாங்கியதற்குத்தான். ஒண்ணு தெரியுமா? இப்போ உங்க உறவினர், நண்பர்கள் மத்தியிலும், பள்ளியிலும் கூட உன் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு வந்திருக்கு? +2 வில், நீ 'ஸ்டேட் ரேங்க்' எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதுதான் அது.
மகளே... டென்த் போல +2வில் மதிப்பெண்கள் எடுப்பது அவ்ளோ சுலபம் அல்ல என்பது +1 படிக்கும்போதே நீ புரிந்து கொண்டிருப்பாய். ரொம்ப கடினமாக உழைத்தால் தான் நீ சாதிக்க முடியும். அப்படி இருக்கும்போது தயவு செய்து உன், 'ஸ்மார்ட்' போனை, 'டாடி' கிட்ட கொடுத்துடு...
+2 முடித்து மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்திட்டு அப்புறமா நீ போனை கையில் எடு. இந்த, 'வாட்ஸ் அப்', 'பேஸ் புக்' எல்லாமே உன் எதிர் காலத்தை அழித்து விடும் மாயைகள் என்பதை மறந்து விடாதே. இந்த வருடப் படிப்பு போனால், திரும்ப வருமா என யோசித்துப் பார்!
உங்க டாடி சொல்வதில் இருந்தே நீ, 'சினி ஆக்ட்ரஸ்' போல இருப்பாய் என்று தெரிகிறது. இதை, 'வாட்ஸ்-அப்', 'பேஸ் புக்'கில் போட்டு மற்றவர்கள் கமென்ட் கொடுத்து புகழ்வது மூலம்தான் தெரிஞ்சிக்கணுமா என்ன?
பொதுவாகவே, பெண்கள் தங்கள் அழகை மற்றவர்கள் புகழ்வதை மிகவும் விரும்புவர். ஆனால், ஆண்கள் அப்படி மயங்குவதில்லை. இந்த புகழ்ச்சி நம்மை அதள பாதாளத்தில் கொண்டுபோய்விடும் என்பதை மறந்து விடாதே. அழகு என்றும் ஆபத்தானதுதான்.
காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக் கொள். இயற்கை வளம் கொழிக்கும் அதன் அழகுக்கு ஈடு இணையேது. ஆனால், அங்கே மக்கள் நிம்மதியாக வாழ முடியுதா பார்! மிகவும் அழகியான நீ, உன் புகைப்படத்தை வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் போடுவதே தப்பு. பெண் நண்பர்கள் வட்டத்துக்குள் தான் போகுது என்கிறாய். ஆனால், அவர்களுக்கும் அண்ணன், தம்பிகள் மற்றும் ஆண் உறவினர்கள் இருப்பர் இல்லையா?
பொதுவாகவே எல்லாருக்குமே, 'வாட்ஸ்-அப்'ல் வரும், 'DP' என்கிற Display Pictureயை பார்க்கிற வழக்கம் உண்டு. அப்படி உன் அழகான போட்டோவை , 'சேவ்' பண்ணி வச்சிகிட்டு உன் புகைப்படத்தை எப்படி வேண்டுமானாலும், 'மிஸ் யூஸ்' பண்ண ஆண்களால் முடியும். அப்படி வாழ்க்கையே கருகிப்போன எத்தனையோ அழகு மலர்களை பற்றி நான் அறிவேன்.
ஸோ... பட்டுகுட்டி... நீ உன் ஸ்மார்ட் போனை டாடிகிட்ட கொடுத்து பீரோவில் வைக்கச் சொல்லு. +2 வில் சாதனை படை ஸ்டேட் பர்ஸ்ட் வா. சிறுவர்மலர் இதழிலும் உன் புகைப்படத்தை போட்டு அப்போ அசத்தலாம்.
உன்னால நிம்மதி இழந்து, உன்னை கண்டித்தால் நீ மனம் வருந்துவாயோன்னு நினைக்கிற உன் அன்பு டாடிக்கு ஒரு நிம்மதியை கொடு. அப்புறமா போனை கையில் எடு. ஒ.கே..!
செல்ல Hugsயுடன்
- ஜெனிபர் பிரேம்.