கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மே
2016
00:00

கேள்வி: விட்ஜெட் (Widget) என்பது எதைக் குறிக்கிறது எனத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொழில் நுட்ப நூல்களில் பலவாரியாக பொருள் தரப்பட்டுள்ளது. அதன் படி பார்த்தால், அனைத்தும் விட்ஜெட் என்பது போலத் தெரிகிறது.
என். தேசிகன், பரமக்குடி.
பதில்:
விட்ஜெட் என்பது முதலில் ஒரு கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் (GUI (Graphical User Interface)). அதன் ஒரு உறுப்பு எனலாம். அல்லது இது சிறிய அளவில் செயல்படும் ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் எனவும் கூறலாம். இது தகவல்களைத் தொடர்ந்து காட்டும் ஒரு செயலி. சில விட்ஜெட்கள், பயனாளர் இவற்றுடன் தொடர்பு கொள்ள வழி தருகின்றன. அல்லது இதன் வழியாக, விட்ஜெட்டை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் தொடர்பு கொள்ளலாம். இதற்கான சில எடுத்துக் காட்டுகளை இங்கு பார்க்கலாம். நாம் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கத் தரப்படும் பட்டன்கள், டிக் அடையாளம் அமைக்கும் சிறிய கட்டங்கள், தலை கீழ் அம்புக் குறி அடையாளத்தில் அழுத்தினால் கிடைக்கும் கீழ் விரி பட்டியல்கள், விண்டோவின் விஸ்தீரணத்தை மாற்றி அமைக்க உதவிடும் முனைகள், ஸ்குரோல் பார்கள், தேடல் கட்டங்கள், சிறிய வரைபடங்கள், ஒரே அழுத்தத்தில் இரு வேறு நிலை காட்டும் ஸ்விட்ச்கள், அலகுகளை மாற்றிக் காட்டும் சிறிய செயலிகள், எத்தனை பேர் ஒரு தளத்தைப் பார்த்துள்ளனர் என்று எண்ணிக்கை காட்டும் சாளரங்கள் மற்றும் விண்டோக்கள் என ஒரு பட்டியலே தரலாம். இத்தனையும் விட்ஜெட்டுகள் என்பதால் தான், உங்களுக்கு அனைத்துமே, விட்ஜெட்டுகளாகத் தெரிகின்றன.

கேள்வி: நம் இணைய தேடல்களை, பிரவுசரில் எளிதாக, செட்டிங்ஸ் பக்கம் சென்று அழிக்க முடிகிறது. இதனால், நமக்குப் பின்னர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர் நாம் தேடிய தளங்களைக் கண்டறிய முடியாது. இதே போல், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், மொபைல் போன் மூலம் நாம் தேடிய தளங்களை அழிக்க முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் வழி என்ன?
எம். தணிகாசலம், காரைக்குடி.
பதில்:
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனைப் பொறுத்தவரை, கூகுள் பிளே ஸ்டோரில், நாம் தேடிய அப்ளிகேஷன்கள் குறித்த பதிவுகள், நாம் தேடிப் பார்த்த திரைப்படங்கள், நூல்கள், பாடல்கள் மற்றும் இது போன்ற அனைத்து தேடல்கள் குறித்தும் பதியப்படுகிறது. அதே போல, இலவசமாகப் பெற்றாலும், கட்டணம் செலுத்திப் பெற்றாலும், நீங்கள் டவுண்லோட் செயத அனைத்து அப்ளிகேஷன்களும் “My Apps” என்னும் பட்டியலில் இடம் பெறும். இந்த பட்டியல் நாள் செல்லச் செல்ல மிக நீண்டதாக வளரும். ஒரு கட்டத்தில் இவை எந்த கட்டுப்பாட்டிற்கும் அடங்காததாகச் சென்றுவிடும். ஆனாலும், இவற்றை நீக்கும் வழியும் எளிதானதே.
ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகானைத் தொடவும். ”பிளே ஸ்டோர்” திறக்கப்படும். இடது மேல் ஓரமாக உள்ள மூன்று சிறிய கோடுகள் அடங்கிய மெனு ஐகானைத் தொடவும். இதில் கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த திரையில் “Clear local search history” என்பதைத் தொடவும். உடன் நமக்கு போன் என்ன செய்கிறது என்பது காட்டப்பட மாட்டாது. சர்ச் ஹிஸ்டரி காலியாகிவிட்டதா என்று நமக்குத் தெரியாது. எனவே “Back” பட்டன் அழுத்தி, கிடைக்கும் திரையில் மேலாக உள்ள தேடல் கட்டத்தில் தொடவும். இங்கு நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட தேடல்கள் கிடைக்கவில்லை என்றால், அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று பொருள். திரையில் மேல் இடது புறம் உள்ள அம்புக் குறியினைத் தொட்டு பிளே ஸ்டோரின் முதல் திரைக்குச் செல்லலாம்.

கேள்வி: வேர்ட் 2007, விண்டோஸ் 7ல் பயன்படுத்தி வருகிறேன். என் டாகுமெண்ட்களில், அமைந்துள்ள டேப் நிறுத்தங்களில், மொத்தமாக அனைத்தையும் நீக்காமல், நீக்க வேண்டிய குறிப்பிட்ட டேப் நிறுத்தத்தை மட்டும் எப்படி நீக்குவது? வேர்ட் ஹெல்ப் போனால், சரியான வழிமுறை இல்லை. அன்பு கூர்ந்து விளக்கவும்.
சாமி. தங்கராசு, தஞ்சாவூர்.
பதில்
: குறிப்பிட்ட பத்திக்கான டேப் குறியீட்டினை நீக்குவதைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதோ அதற்கான வழி.
1. கர்சர், எந்த பத்திக்கான டேப் குறியீட்டை நீக்க வேண்டுமோ, அந்த பத்தியில் இருக்க வேண்டும்.
2. டேப் டயலாக் பாக்ஸைப் பெறவும். ரிப்பனில், ஹோம் டேப்பில், பாரா குரூப்பில் காட்டப்படும் Paragraph என்பதன் வலது ஓரத்தில் உள்ள சாய்வான அம்புக் குறி ஐகானில் கிளிக் செய்திடவும். டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இங்கு கிடைக்கும் Tab Stop Position பாக்ஸ் கீழாகக் கிடைக்கும் பட்டியலில், நீங்கள் நீக்க விரும்பும் டேப் நிறுத்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து Clear என்பதில் கிளிக் செய்திடவும்.
5. இதே போல நீங்கள் நீக்க விரும்பும் டேப்கள் அனைத்தையும் நீக்கலாம். இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
6. இன்னொரு வழியும் உள்ளது. நீங்கள் ரூலர் எனப்படும் அளவு ஸ்கேலினை இயக்கி வைத்திருந்தால், நீக்க வேண்டிய டேப் அடையாளம் மீது கர்சரைக் கொண்டு சென்று, கிளிக் செய்து, அப்படியே மேலே இழுத்துவிட்டால், அது நீக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் இயங்கும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், Sticky Notes என்னும் செயலி குறித்து முன்பு எழுதி இருந்தீர்கள். இதே போல ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்த ஏதேனும் செயலி உள்ளதா? தகவல் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆர். இமானுவேல், தூத்துக்குடி.
பதில்:
நல்ல கேள்வி. கேள்விக்கு நன்றி. ஸ்டிக்கி நோட்ஸ் செயலி ஆண்ட்ராய்ட் போன்களில் இயங்கும் வகையில் தரப்பட்டுள்ளது. வழக்கம் போல, ஆண்ட்ராய்ட் போன்களுக்கான செயலிகளைத் தரும் கூகுள் ஆப் ஸ்டோர் செல்லவும். அங்கு Sticky Notes என டைப் செய்து தேடவும். Install பட்டன் தட்டி பதிந்திடவும். இது இலவசம். எந்த அனுமதியும் தேவை இல்லை. பின்னர், இதனை இயக்கி, புதியதாக நோட் ஒன்றை அமைக்க அதில் உள்ள ப்ளஸ் (+) பட்டனை அழுத்தவும். எந்த வண்ணத்தில் அமைக்க என்பதனை, அங்கு கிடைக்கும் ஆறு வண்ணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். மிகக் குறைந்த கட்டணம் செலுத்தினால், இதே ஸ்டிக்கி நோட்ஸ் நோட்புக், ஸ்டிக்கர் மற்றும் பல வடிவங்களில் கிடைக்கும். கட்டணம் ஒரு டாலருக்கு ஒரு செண்ட் குறைவு. புதிய குறிப்பு ஒன்றைத் தயாரிக்கையில், நமக்கு இரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். T என்பதைத் தட்டி, டெக்ஸ்ட் அமைக்கலாம். எண்ணைத் தட்டி, எழுத்தின் அளவினைச் சிறியதாகவோ, பெரியதாகவோ அமைக்கலாம். இந்நிலையில், திரையில் தோன்றுவதற்கெனத் தரப்பட்டுள்ள கீ போர்ட் திறக்கப்படும். இதன் மூலம் குறிப்பினை உள்ளீடு செய்திடலாம். அல்லது, பேனா ஐகான் தட்டி, ஸ்டைலஸ் அல்லது விரலால் எழுத்தினை அமைக்கலாம். அங்கு தரப்பட்டுள்ள 'சுழல்' (rotate) பட்டன் தட்டி, குறிப்பு எந்த கோணத்தில் வேண்டும் என்பதையும் அமைத்துக் கொள்ளலாம். குறிப்பு எத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை Pin அல்லது Urgent என்ற பட்டன் மூலம் அமைத்துக் கொள்ளலாம். குறிப்பானது, ஒரு போர்டில் அமைக்கப்படும். இது ஒரு நல்ல பயனுள்ள செயலி. போனை எடுத்துக் கொண்டு பலசரக்கு கடை சென்று, பொருட்கள் வாங்கச் செல்லும் முன், என்ன என்ன வாங்க வேண்டும் என இதில் குறித்துக் கொண்டு சென்றால், மறக்காமல் அனைத்தையும் வாங்கி வந்து, மனைவியிடம் திட்டு வாங்காமல் இருக்கலாம்.

கேள்வி: கடந்த ஒரு மாதமாக, என் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் புரோகிராமில், வேர்ட் 2007, கீழ்க்காணும் பிரச்னையைச் சந்தித்து வருகிறேன். வேர்டில் எந்த டாகுமெண்ட்டினைத் திறந்தாலும், அதற்கு முன்னர் திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் டாகுமெண்ட் தானாக மூடப்படுகிறது. அதாவது ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட்களைத் திறந்து பயன்படுத்த முடியவில்லை. பலவகைகளில் சோதனை செய்தும் ஒன்றும் தெரியவில்லை. பிரச்னை என்னவாக இருக்கும்? தீர்வினைத் தரவும்.
என். கோகுல்தாஸ், திருப்பூர்.
பதில்:
சற்று வித்தியாசமான, சிக்கலான பிரச்னை உங்களுடையது. வேர்ட் இது போல செயல்படக் கூடாது. முதலில் சிக்கலை அலசுவோம். ஒருவேளை, வேர்ட் மற்ற டாகுமெண்ட்களை மினிமைஸ் செய்து வைத்திருக்கலாம். எனவே, அது போல செயல்படுகிறதா என்று சோதனை செய்து, சந்தேகத்தினை நிவர்த்தி செய்து கொள்ளவும். இரண்டாவதாக, நீங்கள் அறியாமலேயே, வேர்ட் இயங்குகையில், வேர்டில் செயல்படும் வகையில், மேக்ரோ புரோகிராம் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கலாம். அல்லது வேர்ட் தொகுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கலாம். கீழ்க்காணும் கட்டளையை, கமாண்ட் ப்ராம்ப்டில் இயக்கினால், அது போன்ற புரோகிராம்கள் முடக்கப்படும். தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், winword.exe /a என டைப் செய்து இயக்கவும். winword.exe /m எனக் கட்டளை கொடுத்தால், மேக்ரோ புரோகிராம்கள் மூடப்படும்.
இறுதியாக, வேர்ட் புரோகிராமிற்கான ஸ்டார்ட் அப் (Startup) போல்டரைச் சோதனை செய்திடவும். இதற்கு வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இதற்கு ஆபீஸ் பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் Advanced என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து சென்று, File Locations என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் File Locations டயலாக் பாக்ஸைக் காட்ட்டும். இங்கு File Types என்னும் பட்டியலில், Startup என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Modify என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வேர்ட் பயன்படுத்தும் ஸ்டார்ட் அப் போல்டர் எங்கு உள்ளது என்று காட்டும். இது தெரிந்தவுடன், வேர்ட் புரோகிராமினை மூடி, விண்டோஸ் வழியாக, அந்த போல்டரைச் சோதனை செய்திடவும். அதில் உள்ள புரோகிராம் அல்லது டெம்ப்ளேட் பைல்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்றவும். பின்னர், மீண்டும் வேர்ட் புரோகிராமினை ரீஸ்டார்ட் செய்திடவும். அநேகமாக, உங்கள் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறேன். இல்லை எனில், மீண்டும் வேர்ட் புரோகிராமினை ரீ இன்ஸ்டால் செய்திடவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X