இனவேர்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 மே
2016
00:00

அலுவலக ஜீப்பிலிருந்து, அந்த வீட்டின் முன் இறங்கிய போது, என் மனம், 'பரபர'வென இருந்தது. எத்தனையோ முறை, அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனால், இம்முறை செல்வதற்கும், இதற்கு முன் சென்றதற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததே என் மன பரபரப்பிற்கு காரணம்.
பெரிய மதில் சுவர்; நடுவில் அந்த சுவருக்கு சிறிது கூட பொருந்தாத மரச்சட்டத்தில், தகரம் அடித்த சாதாரணக் கதவு, ஒரு கதவு எப்போதும் மூடியும், இன்னொரு கதவு, மூடிய மாதிரியும் இருக்கும். யார் வேண்டுமென்றாலும், திறந்து போகலாம். உள்ளே நுழைந்தவுடன், வீட்டை பார்த்தால், யாருமே பிரமித்து போவர்.
நூறு மீட்டர் நீளமுள்ள நடைபாதை; இருபுறமும் செடிகள். அதன்பின், 20 படிகள். கிட்டத்தட்ட, 10 அடி உயரம். அதன்மேல் தான் திண்ணையே ஆரம்பிக்கும். நிமிர்ந்து தான் வீட்டை பார்க்க வேண்டும்; கழுத்து வலிக்கும். மழை வெள்ளம் வந்தால், தண்ணீர் வீட்டிற்குள் வராமல் இருக்க, அவ்வளவு படிகள் கட்டியதாக கூறுவர்.
இக்காலத்தில், மூட்டு வலியில் அவதிப்படுவோர் அதில் ஏறுவது கடினம். யார் கதவை திறந்தாலும், அந்த உயரமான திண்ணையில் அமர்ந்திருப்பவருக்கு தெரியும். காலையிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை, அவர், திண்ணையிலேயே அமர்ந்திருப்பார். குளிக்க, சாப்பிட மற்றும் உறங்க மட்டுமே வீட்டிற்குள் செல்வார். அவர் அருகில் கணக்குப் பிள்ளை.
அவர் அமர்ந்திருக்கும் சேரை, 'ஈஸி' சேர் என்று சொல்ல முடியாவிட்டாலும், சாய்வான சேர் என்று கூறலாம். கை வைத்த பனியன், வேட்டி இதுதான் அவரது உடை. அவரது முகம், மிக பிரகாசமாக இருக்கும் அதற்கு அழகு சேர்ப்பது போல், அவரது நெற்றியில் விபூதி பட்டை; குங்குமம் இருக்காது. கழுத்தில் தங்க செயின். கதவை திறந்தவுடன், அவரது குரல், 'யாருங்க...' என்று அதட்டலாக வரும். நாம் இன்னார் என்று தெரியப்படுத்தியவுடன், 'வாங்க...' என்று அழைப்பு வரும்.
அவரது வாங்க என்ற சொல்லை கேட்டவுடன், கணக்குப்பிள்ளை எழுந்து, வருபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு பாயை விரிப்பார். அவரை பார்க்க வந்தாலும், அமர்வதற்கு பாய் தான். அந்த மனிதனை தான், நான் இப்போது சந்திக்க போகிறேன்.
என்ன... நான் இதற்கு முன், பலமுறை பார்க்க போனதற்கும் இப்போது போகும் சூழ்நிலையும் வேறு. என் அப்பா தான், என்னை அழைத்துச் செல்வார். மனதில் எந்தவிதமான விருப்பும் இல்லாமல், அப்பாவின் விருப்பத்திற்காக, பலமுறை இவரை சந்தித்திருக்கிறேன். வாயை திறந்து, ஒருமுறை கூட அவரிடம் பேசியதில்லை. இம்முறை முதல் முறையாக, என் அப்பா இல்லாமல், அவரை சந்திக்கப் போகிறேன்; அவரிடம் முதல் முறையாக பேசப் போகிறேன்.
'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று பள்ளி பாடத்தில் படித்திருக்கிறேன். கடனுக்காக, பணமிருப்போரிடம் பணி செய்து காலத்தை கழிப்பவர்கள் தான் என் குடும்பத்தார். வறுமையோடு வசதியாக வாழ்வது ஒரு கலை. அதை, மிக திறமையாக செய்தார் என் அப்பா. குடிசை வீடு, பழைய பாத்திரங்கள், அழுக்கு சட்டை, கஞ்சி மட்டுமே உணவு என, வறுமைக்கான அடையாளங்களை விருப்பத்தோடு ஏற்று, அதற்கு மேல் முன்னேற வேண்டும் என்ற துளி கூட எண்ணமில்லாமல், அதோடு வசதியாக வாழ்ந்தவர்.
முன்னோர் பட்ட கடனுக்கு, விவசாய கூலியாக, தலைமுறை தலைமுறையாக, உழைப்பை கொடுத்த பரம்பரையில் வந்தவர். திடீரென என்னை படிக்க வைக்க வேண்டும் என, அவருக்கு தோன்றியது. யாராவது வாத்தியார்கள் அறிவுரை சொல்லியிருப்பரோ என்னவோ! என்னை பள்ளியில் சேர்ப்பது என தீர்மானித்து, விளையாடி கொண்டிருந்த என்னை, 'தரதர'வென இழுத்து வந்து, இந்த வீட்டின் கதவை திறந்து, உள்ளே நுழைந்தார். அதுதான் நான் முதல் முறையாக இந்த வீட்டினுள் நுழைந்தது. 'யாருங்க...' கணீரென குரல்.
'நாந்தான் முனியன்...'
'என்னடா காலங்காத்தால...'
எனக்கு அந்த படி, செடி, கதவை பார்த்து பயங்கர ஆச்சரியம். 'கடகட'வென படியில் ஏறி ஓட வேண்டும் என்று ஆர்வம். நிச்சயம் நான் அப்படி செய்வேன் என்று அப்பாவுக்கு தெரிந்ததால், என் கையை இறுக பிடித்திருந்தார். நான், அவர் கையை கிள்ளியவாறு இருந்தேன்.
'என்னடா சொல்லு?'
'என் பிள்ளைய ஸ்கூல்லே சேர்க்கணும்...'
'நல்ல விஷயம்... சேரு; நான் பள்ளிக்கூடத்துல சொல்லிடறேன். முதல்ல அவனுக்கு சட்டை வாங்கிப் போடு. காசை கணக்கு பிள்ளைக்கிட்ட வாங்கிக்கோ...' என்று சொல்லி, கையில் இருந்த பேப்பருக்குள் புகுந்து விட்டார்.
தன்னை பார்க்காத மனிதரை பார்த்து கும்பிட்டு, என்னை இழுத்து கொண்டு கிளம்பினார், என் அப்பா. நான் திரும்பி அந்த வீட்டை பார்த்தவாறே அப்பாவின் பின் வந்தேன். அதன்பின், ஒவ்வொரு ஆண்டும் என்னை அவரிடம் அழைத்துப் போய், காசு கேட்பார்; அவரும் கொடுப்பார். எனக்கு விவரம் புரிய புரிய, அந்த யாசகத்தின் மேல் வெறுப்பு வந்தது. அவர், என் அப்பாவை வாடா போடா என்று அழைத்தது, எனக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை கூட, அந்த படியின் மேல் ஏறி வர, நாங்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்கு ஏக்கமாக இருக்கும். பலமுறை என் அப்பாவிடம், 'நீ மட்டும் போயிட்டு வா; எனக்கு அங்க வர பிடிக்கல...' என சண்டை போட்டுள்ளேன்.
'டேய்... அவர் நமக்கு படி அளக்கிறவர்டா... வாங்குற நாம பணிவோட தாண்டா கேட்கணும். நீயும் படிச்சு, பணம் காசு சம்பாதிச்சு, அப்புறம் நெஞ்சை நிமித்தலாம். உன்னை கூட்டிக்கிட்டு போய் வருஷா வருஷம் காட்டுறேனே எதற்குன்னு நினைக்குறே... அவர் வீட்டுல இருக்கிற படி மாதிரி, உன் வாழ்க்கையும் உசரணும்ன்னு உனக்கு உரைக்கணும்ன்னு தான்.
'காசையும், உழைப்பையும் கடவுள் வேற வேற இடத்தில் தான் எப்பவுமே வைக்கிறான். இது, இரண்டையுமே இணைக்கிறது சரஸ்வதி தான். அவுக எல்லாம் முன்னாடியே, சரஸ்வதிய வைச்சு, உழைச்சு காசு சம்பாதிச்சுட்டாங்க. நம்ப குடும்பத்துல நீ தான் முத முறையா அத மாதிரி செய்யப் போற. அதுக்கு தான், வருஷத்துல ஒரு முறையாவது அவுக மூஞ்சிய உங்கிட்ட காட்டுறேன். பார்த்துட்டு, ரோஷத்தை படிப்பில் காட்டு...' என திட்டினார்.
எங்க அப்பா மாதிரி அவர கும்பிட்டு நிற்க எனக்கு பிடிக்கல, விறைச்ச மாதிரி நிற்பேன். வருசா வருசம் அவரின் ஒரு சொல் மட்டும் தான் என் காதில் விழும். அது, 'நல்லா படிக்கச் சொல்லு; இனம் வளரும்!'
எனக்கு அந்த படி மேல ஏறணும், என் அப்பாவை போல படிக்கு கீழ குனிந்து இருக்கிற நிலைமை இருக்கக் கூடாது என்று ரோஷம் வந்தது. கல்லூரி படிப்பை முடித்தபின், மேற்படிப்புக்காக செல்லும் முன், இந்த வீட்டினுள் நுழைந்தது தான் கடைசி.
'மேல நல்லா படி; நல்ல வேலைக்கு போ. இனத்தை வளரு. நீ மட்டும் வளரணும்ன்னு நினைக்காதே...' என்றார். எனக்கு சிரிப்பு தான் வந்தது; இவர் இனம்ன்னு எதை சொல்கிறார் என்று புரியவில்லை.
மேற்படிப்பு முடித்து, குரூப் 2 எழுதி, இன்கம்டாக்ஸ் ஆபிசராக பணியில் சேர்ந்தேன். இன்கம்டாக்ஸ் ரெய்டு என்று இவர் பேர் குறிப்பிடவும், எனக்கு அவ்வளவு சந்தோஷம். என்னுடைய நீண்ட கால ஆசை நிறைவேற போகிறது. கம்பீரமாக அந்த படிகளின் மேல் ஏற போகிறேன் என்று பெருமையுடன் கூடிய படபடப்பு.
கதவைத் திறந்தவுடன், ''யாருங்க...'' என்ற அதே குரல்!
''நாங்க இன்கம்டாக்ஸ் ஆபிசுல இருந்து வந்திருக்கோம்; உங்க வீட்டுல ரெய்டு,'' என்று உரத்த குரலில் சொன்னேன்.
''வாங்க...'' என்றார்.
அந்த படி அருகே சென்றவுடன், அனிச்சை செயலாக, என் கால் நின்றது.
''சார்... மேல ஏறுங்க,'' என்ற குரல் கேட்டவுடன் தான் ஏறினேன். ஒவ்வொரு படியிலும் நிதானமாக காலை பதித்து ஏறினேன். எவ்வளவு நாள் ஆசை. உணர்ந்து செய்ய வேண்டாமா... ரசித்து ஏறினேன். மேலே ஏறி நின்று, கீழே பார்க்கும் போது தான் தெரிந்தது அவர் அமர்ந்திருந்த இடம் எவ்வளவு உயரத்தில் என்று!
வழக்கம் போல், பாய் தான் போடப்பட்டது.
''சார்... நாங்க நிறைய ரெக்கார்டுலாம் பாக்கணும்; ஒரு ரூம்ல டேபிள், சேர் போடச் சொல்லுங்க,'' என்று அதட்டலாக உத்தரவிட்டேன்.
''டேய்... சார் சொல்லுற மாதிரி உள்ளே ரெடி பண்ணு... அதுவரை உட்காருங்க சார்,'' என்றார்.
நான் உட்காரவில்லை; இன்னும் ஏன் கீழே உட்காரணும்... சரிசமமா உட்காரணும். நின்ன காலம் மலையேறி போச்சுன்னு காட்ட வேண்டாமா... அருகாமையில் அவர் முகத்தை பார்க்கிறேன். இவ்வளவு காலம் தாண்டியும், அவர் முகத்தில் இருந்த பளபளப்பு குறையவில்லை. சுருக்கம் மட்டும் அதிகமாகியுள்ளது. அவர் கண்ணை பார்த்தேன்; என்னை அடையாளம் தெரிந்த மாதிரி தெரியவில்லை.
''சார்... என் ஆடிட்டரை வரச் சொல்லலாமா?'' என்று கேட்டார்.
''தாராளமா... போன் செய்து விஷயத்தை சொல்லி வரச் சொல்லுங்க. வீட்டுல இருந்து யாரையும் வெளியே போக வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல; எல்லாம், வழக்கமா ரொட்டீனா நடக்குறது தான். பத்திரம், நகை எல்லாம் கணக்கு பாக்கணும். எல்லாத்தையும் சரியா காட்டுங்க,'' என்றேன்.
''நல்லது சார்... என் கணக்குப்பிள்ளைக்கு எல்லாம் தெரியும். நீங்க எதை கேட்டாலும் எடுத்து கொடுத்திடுவான். 'முறையா கணக்கு வைக்காத பணம், கம்மாயில புதைச்ச பணம் மாதிரி. ஒருநா இல்லாட்டி, ஒரு நா, நமக்கே எங்கே வைச்சோம்ன்னு தெரியாது. நமக்கு பயன்படாம போயிடும்'ன்னு என் பாட்டன் சொல்வார். முறைப்படி தான் வரி கட்டியிருக்கோம்; உங்க திருப்திக்கு பாத்துக்கோங்க,'' என்று சொல்லி, பேப்பரில் புகுந்தார்.
என்னை யாருன்னு ஒரு வார்த்தை விசாரிக்க மாட்டேங்கிறாரே என்று எனக்குள் ஏமாற்றம். விசாலமான அரண்மனை; எங்கு பார்த்தாலும் லட்சுமி கடாட்சம். அவரது முன்னோர்களின் பெரிய பெரிய புகைப்படங்கள். சாமி படம் முதற் கொண்டு எல்லாமே பெரிது பெரிதாக தான் இருந்தது. தலைமுறை தலைமுறையாக சேமிக்கப்பட்ட விஷயங்கள் என்பது நன்றாக தெரிந்தது. ஒரு பெரியவர் மிக பெரிய படிப்பு படித்து, பட்டம் பெறுவது போன்ற புகைப்படம் இருந்தது. புகைப்படத்தில் ஸ்டுடியோ பெயர் போட்டு, பர்மா என்று இருந்தது. பர்மாவில் இருந்து வந்த குடும்பம் போல என நினைத்துக் கொண்டேன்.
அவருடைய குடும்பத்தார், எங்களை மிக மரியாதையாக நடத்தினர். யாருக்கும் என்னை தெரியவில்லை. அவரோட ஆடிட்டர் வந்தார்.
''சார் வாங்கோ... ஒண்ணும் சொல்லல,'' என்று நக்கலாக கேட்டு, பெரிதாக சிரித்தார்.
''சாமி... பார்த்து, உங்க நக்கலால என்னை சிரமப்படுத்திட போறாங்க,'' என்றார் பெரியவர்.
''நீங்க கவலைப்படாதேள்... மடியில கனம் இருக்கிறவா தான் பயப்படணும். எதை முறை இல்லாம வாங்கி இருக்கீங்க, இல்ல கொடுத்திருக்கீங்க. உங்க இடத்துக்கு, 'ரெய்டு' ஆர்டர் ஏன் போட்டாங்கன்னு தான் தெரியல. புது ஆட்களுக்கு உங்க அருமை தெரியல,'' என்று குத்தி பேசினார்.
''சார்... கொஞ்சம் எங்களோட விஷயங்களை கவனிக்கிறீங்களா?'' என்றேன் கடுமையாக!
''சாரி சார்... வாங்க ரெக்கார்ட்ஸ் பாக்கலாம்,'' என்று ஒரு அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார்.
உடன் வந்த அதிகாரிகள், சல்லடை போட்டு தோண்டி, துருவி பார்த்தனர். கணக்கு வழக்குகளை மெயின்டெயின் செய்துருக்கிற முறைகளை பார்த்து, அவர்களுக்கு ஆச்சரியம்.
''சார்.. பெர்பெக்ட் ரெக்கார்ட்ஸ் மெயின்டனென்ஸ்; எல்லாமே பக்காவா இருக்கு. எதுக்கு உங்க பேரை தேர்வு செய்தாங்கன்னு எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு,'' என்றார், சக அதிகாரி ஆங்கிலத்தில்!
'இங்க எதுவும் கிடைக்காதுன்னு எனக்கு தெரியாதா என்ன... நான் வந்த நோக்கமே வேறே, படி ஏறணும்ன்னு நினைச்சேன்; ஏறிட்டேன். என் பெருமை அவருக்கு தெரியணும்ன்னு நினைச்சேன். இன்னும் நடக்கலயே...' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
''சார் முடிச்சிடுவோமா?'' என்றார்.
''எஸ் முடிச்சிடலாம்... என்ன ரெக்கார்ட்ஸ் தேவையோ, அதை மட்டும் எடுத்துக்கலாம்; எதையும் சீல் செய்யணுமா?''
''தேவைப்படாது சார்,'' என்று போய் விட்டார்.
நான் மெதுவாக பெரியவரிடத்தில் போய் நின்றேன். அவர், ''என்கிட்ட எதுவும் கேக்கணுமா?'' என்று கேட்டார்.
''சார்... நான் யாருன்னு தெரியுமா... மேட்டுக்கடை முனியனோட பையன்,'' என்றேன்.
என் முகத்தை முதன் முறையாக நேருக்கு நேர் பார்த்தார். என் கண் தரையை பார்த்து தாழ்ந்தது. அவர் முகத்தில் பரவசம் கலந்த சிரிப்பு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏளனம் கலந்த சிரிப்பை தான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் முகத்தில் தெரிந்த சிரிப்போ, பெற்ற மகனை பார்த்து சிரித்தது போல் இருந்தது.
''டேய்... நீ முனியன் பையனா... ரொம்ப மகிழ்ச்சி; உங்க அப்பன் இதை தானே எதிர்பார்த்தான். அவன் வயித்துல பால் வார்த்துட்ட... ஆமா... முனியன் இப்ப எங்க இருக்கான்... உன் கூட தானே...''
''இல்ல... நான் குவாட்டர்ஸ்ல இருக்கேன்; அவர் அதே வீட்டில தான் இருக்கார்.''
''ஏண்டா... அவர் இருக்கிற வீட்டில தானே நீ இருக்கணும். உன் இடத்துக்கு அவன் வருவானா... அதுக்கா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டான். டேய்... நீதாண்டா இனிமே உங்க இனத்துக்கு முன்மாதிரி. உங்க குடும்பத்துல, மொத மொத சரஸ்வதி கடாட்சம் வாங்குனவன் நீ. இனி, உன் உழைப்பில், செல்வம் தேடி வரும்டா... எங்கிட்ட உதவிக்கு வர்றவங்ககிட்ட, 'படிச்சா இனம் வளரும்; நீ மட்டும் வளரணும்ன்னு நினைக்காதே இனத்தோட சேர்ந்து வாழ்'ன்னு சொல்வேன். ஏன்னு நினைக்குற... ஒருத்தன் உசரும் போது, கூட இருக்கிறவங்களையும், வளர்ற சந்ததிகளையும் சேர்த்துகிட்டு வளரணும்.
''எங்க குடும்பம் எல்லாம் பரம்பரையா பணக்காரங்கன்னு நினைச்சயா... எல்லாம் பர்மாவுல அடிமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவங்க தான். என் பாட்டன்லயும் ஒருத்தன் சட்டை இல்லாம, உங்க அப்பனை போல நின்னவன் தான். எல்லா இனத்திலேயும், ஒருத்தனுக்கு படிக்கணும்ன்னு தோணும். அவனால எந்திரிக்கிறது தான் அவன் சந்ததியே!
''உங்க அப்பன் உன்னை படிக்க வைக்க போறேன்னு சொன்னப்ப, 'ஒருத்தனுக்காவது புத்தி வந்துச்சே, இனி, அவன் சமுதாயம் முன்னேறிடும்'ன்னு எனக்கு சந்தோஷம். இப்ப நீ எந்திரிச்சிட்ட. இப்ப தான் உன் இனத்து பக்கத்தில நிக்கணும்; உதவணும். உன்னை பார்த்து அவனுக படிக்கணும்; வளரணும். அதை செய்...
''குவாட்டர்ஸ்ல தங்கினா, உன்னை யாருக்கு தெரியும். உங்க இனத்தோட வேர் நீ! தண்ணிய தேடி, வேர் தானா போகும். அதுமாதிரி, உங்க இனத்தோட உதவிக்கு நீ தானா போகணும். வீட்டை காலி செய்துட்டு, உங்க அப்பனோட போய் இரு. இனிமே உங்க பக்கத்துல இருந்து உதவி கேட்டு எவனும் என்கிட்ட வரக் கூடாது; பாத்துக்கோ,'' என்று அவர் சொல்ல சொல்ல, என் கண்களில் கண்ணீர், 'மளமள'வென வடிந்தது.
அவர், என் அப்பாவை உதாசீனப்படுத்தியதாக கோபப்பட்டேன். உண்மையல்ல; என் இனத்தை உதாசீனப்படுத்தியது நான் தான். என் இனம் வளர, நான் தான் வேர்!
கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
''யாருங்க?''
''நாந்தான் முருகன் ஐயா,'' வெறும் உடம்போடு அப்பாவும், பையனும் நின்றிருந்தனர்.
''டேய்... இனி, என் வீட்டுக்கு வராதே... இந்தா நிக்கிறாரே, இந்த சார் வீட்டுக்கு போங்க,'' என்றார்.

மு.பால முரளி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karutthu solbavan - A,இந்தியா
05-ஜூன்-201610:52:04 IST Report Abuse
Karutthu solbavan அருமையான கருத்து
Rate this:
Share this comment
Cancel
Gokul - Singapore,சிங்கப்பூர்
03-ஜூன்-201610:51:15 IST Report Abuse
Gokul மிக அருமையான கதை. இவ்வளவு பேர் ஒரு கதைக்கு கருத்துக்கள் எழுதி இருக்கிறார்கள் என்றால் அதுவே இக்கதைக்குச் சான்று. கதாசிரியர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mr.Gem - St louis,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-201602:02:44 IST Report Abuse
Mr.Gem அருமையான கதை...நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல சிறுகதை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X