வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்துவிடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள். இதற்குப் பதிலாக, வேர்ட், இது போல டேபிளைப் பிரிப்பதற்கு, எளிய வழி ஒன்றைக் கொண்டுள்ளது. 1. ஏற்கனவே அமைந்த டேபிளில், எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து அமைக்க வேண்டுமோ, எந்த வரிசை புதியதாய் அமைய இருக்கும் டேபிளின் முதல் வரிசையாக அமைய வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு வைக்கவும். 2. அடுத்து ரிப்பனில், Layout டேப்பினை கிளிக் செய்திடவும். (இந்த டேப், டேபிள் உள்ளாக கர்சர் அமைக்கப்பட்டிருந்தால் தான் காட்டப்படும்)3. இங்கு Merge குரூப்பில் Split Tool என்பதில் கிளிக் செய்திடவும்.இப்போது வேர்ட், நீங்கள் கர்சரை வைத்த வரிசைக்கு மேலாக வழக்கமான வடிவில் பாரா ஒன்றை அமைக்கும். மேலாகவும், கீழாகவும் இரண்டு டேபிள்கள் கிடைக்கும். இவற்றைத் தனித்தனியே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாறுதலாகப் பக்க எண்கள்: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும். 3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும். 5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.
டேபிளை முழுமையாக அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். பின் அதனை முழுமையாக நீக்க நினைக்கிறீர்கள். வேர்ட் புரோகிராம் இதற்கெனச் சில வசதிகளையும் வழிகளையும் தந்துள்ளது. அவை:1. முழு டேபிளையும் தேர்ந்தெடுக்கவும்.2. ரிப்பனில், Layout டேப் செல்லவும். 3. Rows & Columns குரூப்பில் Delete என்பதில் கிளிக் செய்திடவும்.4. அடுத்து Delete Table அல்லது Delete Rows என்பதில் கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழி: ரிப்பனில் ஹோம் டேப்பினை அழுத்தித் திறக்கவும். இதில் Clipboard குரூப் செல்லவும். தொடர்ந்து Cut ஆப்ஷன் தேர்ந்தெடுத்து இயக்கவும். இங்கு Del பட்டனுக்கு மதிப்பிருக்காது. ஆனால், பாரா ஒன்றையும் டேபிளுடன் இணைத்து டெல் கீயை அழுத்தினால், அதுவும் சேர்ந்து அழியும்.