நான் சென்னையிலுள்ள ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன். மூன்றாம் வகுப்பு டீச்சர். என் வகுப்பில் கிரீஷ் என்ற மாணவன், ரோஸி என்ற மாணவியின் பின்னால் எப்பவும் சுத்திக் கொண்டிருப்பான். அவள் கூடத்தான் உட்காருவான். அவளுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பான். வேறு யாருக்கும் தரமாட்டான். அவள் ஒருநாள் பள்ளிக்கு வரலைன்னாலும், அடுத்த நாள் ஹோம் ஒர்க் எல்லாம் அந்த மாணவிக்கு எழுதி கொடுப்பான். எனக்கு ரொம்ப சிரிப்பாக வரும். சரி, சின்னப் பசங்க என்று நினைத்து விட்டுவிட்டேன்.
ஒருநாள்-
இந்த கிரீஷ் அந்த குட்டிப் பெண்ணிடம் 'ரோஸி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டிருக்கிறான். அதற்கு அந்த ரோஸி குட்டி, 'நானோ கிறிஸ்டியன்; நீ இந்து நாம் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?' என்று கேட்டிருக்கிறாள்.
விஷயம் தெரிந்த எனக்கு என்ன பண்றதுனே தெரியல. இந்த விஷயத்தை விளையாட்டா எடுத்துக் கொள்வதா இல்ல, சீரியஸா எடுத்துக்கொள்வதான்னே தெரியல.
இருந்தாலும் அந்த பையனுடைய பெற்றோரிடம் விஷயத்தை சொன்னேன். அவர்கள் மிகவும் கோபப்பட்டு, 'தாம், தூம்' என்று குதித்தனர். தங்கள் மகன் பேசிய பேச்சு அவர்களை ரொம்பவும் வெட்கப்படுத்தி விட்டது. இந்த காலத்து சின்னப் பிள்ளைகளின் பேச்சை என்னவென்று சொல்வது?
- ஜெஸ்ஸி, புரசைவாக்கம்.