தவறின்றி ஆங்கிலம் எழுத கருவி தரும் தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

ஆங்கிலம் நமக்கு அந்நியமொழியாக இல்லாமல், இரண்டாம் மொழியாக அமைந்துவிட்டது. அன்றாட வாழ்வில் பல இடங்களில் ஆங்கிலத்தை நாம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. கம்ப்யூட்டரிலும் நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள், ஒர்க்புக்குகள், கட்டுரைகள், கடிதங்கள், சமூக வலைத்தளக் குறிப்புகள் ஆகியவற்றைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைக்கிறோம். மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் சிஸ்டத்தில் ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையின்றிப் பயன்படுத்த அகராதிகளை தன் சிஸ்டத்தில் அமைத்து வழங்கியுள்ளது.
இதனால், மின் அஞ்சல்கள், பேஸ்புக், வேர்ட் செயலி மற்றும் இணைய தளங்களில் நாம் ஆங்கிலத்தில் சொற்களை அமைக்கையில், எழுத்துப் பிழைகளை ஏற்படுத்தினால், உடனே சொற்களின் கீழாக நெளிவுகள் கொண்ட சிறிய சிகப்புக் கோடு காட்டப்படும். அதில் மவுஸ் கொண்டு ரைட் கிளிக் செய்தால், அந்தச் சொல்லின் எழுத்து தவறுகள் திருத்தப்பட்டு காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், சரியான சொல், தவறுகளுடன் அமைக்கப்பட்ட சொல்லின் இடத்தில் அமைக்கப்படும். ஆனால், அந்த சொல்லைப் பயன்படுத்துவதில், ஏதேனும் இலக்கணப் பிழை இருந்தால், அது காட்டப்பட மாட்டாது. இதற்கான தீர்வை அண்மையில் ஓர் இணைய தளத்தில் காண நேர்ந்தது. அந்தத் தளத்தின் முகவரி https://www.grammarly.com/. முன்பு கட்டணம் செலுத்தி மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். அண்மையில் இதில், விரிவான பகுதிகளுடன், நமக்குப் போதுமான வசதிகளுடன், இலவசப் பதிப்பு ஒன்றையும் கொண்டு வந்துள்ளனர்.
Grammarly செயலி, “உலகில் தானாக இயங்கும் மிகச் சிறந்த பிழை திருத்தி” என அழைக்கப்படுகிறது. எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, வாக்கியங்களில் நிறுத்தக் குறியீட்டுப் பிழை ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி, இந்த செயலி, திருத்தங்களைத் தருகிறது. நாம் சரி என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே நாம் எழுதியது திருத்தப்படும்.
இந்த இலவசப் பதிப்பினை Grammarly Editor எனவும் அழைக்கின்றனர். இதனைப் பதிந்துவிட்டால், தொடர்ந்து தானாகப் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். இதன் மூலம், ஏறத்தாழ 250க்கும் மேற்பட்ட இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள் மற்றும் பிறவகைப் பிழைகள் கண்டறியப்பட்டு, அவற்றைத் திருத்துவதற்கான விருப்பத் தேர்வு தரப்படுகிறது. அது மட்டுமின்றி, 'ஏன் அது ஒரு பிழை?' எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. பிழைகள் எண்ணப்பட்டு இத்தனை பிழைகள் உள்ளன என்று ஒரு வட்டத்தில் தரப்படுகிறது. அந்தப் பிழைகளுக்கான சரியான தீர்வினை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, குறிப்பிட்ட பிழையைக் கண்டு கொள்ள வேண்டாம் என Ignore என அறிவிக்க வேண்டும். இல்லை என்றால், இறுதி வரை ஒரு சிகப்பு வட்டம் நாம் அமைக்கும் டெக்ஸ்ட் பக்கத்தின் வலது கீழாகக் காட்டப்படும். பிழைகள் அனைத்தையும் சரி செய்துவிட்டால், சிகப்பு வண்ணம் பச்சையாக மாறிவிடும். இதனை குரோம், சபாரி, பயர்பாக்ஸ் பிரவுசர்கள் மற்றும் மைக்ரோசாப்ட் வேர்ட் செயலி, அதைப் போன்ற மற்ற எடிட்டர்களிலும் பயன்படுத்தலாம்.
இந்த தளம் (https://www.grammarly.com/) சென்று, இதற்கான எக்ஸ்கியூடபிள் பைலைத் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். வேர்ட் புரோகிராமிலும், குரோம் பிரவுசருக்காகவும் இன்ஸ்டால் செய்திடலாம். வேர்ட் புரோகிராமிற்கென இன்ஸ்டால் செய்தவுடன், வேர்ட் செயலியை மூடி மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். வேர்டின் மெனுவில், Home டேப்பில், வலது ஓரத்தில், Enable Grammarly என்று ஒரு பச்சை வண்ணத்தில் ஐகான் ஒன்று இருக்கும். இதனைக் கிளிக் செய்து இயக்க வேண்டும். உடன் Grammarly இயங்கத் தொடங்கும். நம் டெக்ஸ்ட் விண்டோ இடதுபுறம் இருக்க, 'கிராமர்லி' செயலி சுட்டும் பிழைகள், வலதுபுறம் தனிக் கட்டத்தில் காட்டப்படும். இதனை இயக்குகையில், வேர்டில் வழக்கமான சில கட்டளைகள் செயல்படாது. எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல் + இஸட் அழுத்தி நாம் மேற்கொண்ட இறுதிச் செயல்பாட்டினை ரத்து செய்திடும் செயல்பாடு இயங்காது. இன்னொரு முக்கிய விஷயத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது செயல்படுகையில், Auto Save இயங்காது. வேர்ட் புரோகிராமில் நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்கள், குறிப்பிட்ட காலக் கெடுவில், தானாக சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம். இதனால், நாமாக சேவ் செய்யாவிட்டாலும், வேர்ட் கிராஷ் ஆகும் பட்சத்தில், இறுதி வரை சேவ் செய்யப்பட்ட டாகுமெண்ட் கிடைக்கும். ஆனால், 'கிராமர்லி' இயங்கும் பட்சத்தில், இந்த தானாக சேவ் செய்திடும் செயல்பாடு முடக்கப்படும். எனவே, நாமாக, அடிக்கடி கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்திட வேண்டும்.
பிரவுசருக்கென இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அந்த பிரவுசரில் இயக்கப்படும் பேஸ்புக் போன்ற சமூக தளங்கள், அமைக்கும் மின் அஞ்சல்கள் ஆகியவற்றில் உள்ள இலக்கணப் பிழைகள் திருத்தப்படும். வலது கீழாக, 'கிராமர்லி' செயல்படுவதனைக் காட்டும், பச்சை நிறத்திலான வட்டம் இருக்கும். நாம் அமைக்கும் சொல்லில், எழுத்துப் பிழையோ, இலக்கணப் பிழையோ ஏற்பட்டால், இந்த பச்சை வட்டம் சிகப்பாக மாறும். அருகே சிறு கட்டத்தில் என்ன வகையான பிழை என்று விளக்கம் காட்டப்பட்டு, அதற்கான சரியான சொல் அமைப்பு காட்டப்படும். எடுத்துக் காட்டாக, ams என எழுதினால், இது எழுத்துப் பிழை எனக் காட்டி, அந்த இடத்தில் am அல்லது arms என ஏதேனும் சொல் வரலாம் என்று எடுத்துக் காட்டும். I indicate error என எழுதினால், “Article Missing” என்று பிழை காட்டி, 'I indicate an error' எனத் திருத்தும். இந்த சிகப்பு வட்டத்தில் கிளிக் செய்தால், மொத்த பிழைகளும் காட்டப்படும். இது போல, 250க்கும் மேற்பட்ட இலக்கண, சொற்பிழைகளை இந்த செயலி தொடர்ந்து காட்டி, திருத்தும். பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், Tumblr போன்ற சமூக தளங்களிலும் இது போல நம் வாக்கியங்களும், சொற்களும் திருத்தப்படும். திருத்தங்களை நாம் ஏற்க வேண்டாம் எனக் கருதினால், திருத்தம் காட்டும் குறிப்பு பக்கத்தில் Ignore என்பதை கிளிக் செய்தால் போதும். அல்லது, Dictionaryல் சேர்க்கவா எனக் கேட்டு, உள்ளாக இயங்கும் அகராதியில் அந்த சொல் சேர்க்கப்படும்.
எழுத்துப் பிழைகள் மட்டுமின்றி, வாக்கியக் குறியீடுகள் மற்றும் நிறுத்தப் புள்ளி, பிற குறியீடுகளான, கமா, கோலன், செமி கோலன் போன்றவை எங்கே, ஏன் அமைக்க வேண்டும் என்ற குறிப்பினையும் தந்து, 'கிராமர்லி' திருத்தம் செய்கிறது. ஆங்கிலச் சொற்களில், சில சொற்களின் முதல் எழுத்து கேபிடல் எழுத்தாக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, மாதங்களின் பெயரை எழுதும்போது, june என எழுதக் கூடாது. June என்றுதான் எழுத வேண்டும். இது போன்ற பிழைகளையும் சரி செய்கிறது.
இது மாணவர்களுக்கு மட்டுமின்றி, நம் அனைவருக்குமே ஆங்கிலம் பிழையின்றி எழுத உதவுகிறது. 'கிராமர்லி' கிடைக்கும் தளம் சென்றால், பி.எச்.டி. பட்டம் பெற்ற பேராசிரியர்கள் கூட, இதன் செயல்பாட்டினைப் புகழ்ந்து குறிப்புகள் எழுதியுள்ளதைப் படிக்கலாம்.
வலை மனை (Blogs) அமைத்து ஆங்கிலத்தில் கட்டுரைகளை அமைப்பவர்களுக்கு 'கிராமர்லி' சிறப்பாக உதவுகிறது. பிழைகள் திருத்துவது மட்டுமின்றி, நாம் அமைத்திடும் சொற்களுக்குப் பதிலாக, அதே பொருளைச் சிறப்பாகத் தரும் சொற்களையும் காட்டுகிறது. நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள் ஏற்கனவே ஏதேனும் வலை மனை மற்றும் பிற இணைய தளங்களில், ஏன், நம் வலை மனைகளில் இருந்தாலும், அது சுட்டிக் காட்டப்படும்.
'கிராமர்லி' ஓர் இணைய தளத் திருத்தியாகவும் செயல்படுகிறது. ஏதேனும் ஓர் ஆங்கில வாக்கியம் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் வந்தால், அந்த வாக்கியத்தை, Grammarly இணைய தளம் சென்று, அங்கு தரப்பட்டுள்ள இடத்தில் ஒட்டிவிட்டால், உடன் அந்த வாக்கியத்தின் பிழைகள் குறித்து தகவல்கள் காட்டப்பட்டு சரி செய்யப்படும். சரியாக இருந்தால், பிழைகள் இல்லை என்ற தகவலும் காட்டப்படும். ஒவ்வொரு பிழை திருத்தத்திற்கான காரணமும் காட்டப்படும்.
Grammarly தளத்துடன் இணைந்ததாகக் கீழ்க்காணும் சேவைகளும் கிடைக்கின்றன. அவை:
1. Grammarly Answers: இது எழுத்தாளர்களுக்கான இணையக் குழு. இங்கே ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் சந்தேகங்களைக் கேள்விகளாகத் தந்தால், பலரிடமிருந்து, விளக்கங்களுடன் விடைகள் தரப்படுகின்றன.
2. Grammarly Handbook: இந்தத் தளத்தின் மிக அருமையான சேவை. இது ஓர் இலக்கண நூல் கொண்ட தளம் என்று கூறலாம். எட்டுவகை இலக்கணப் பிரிவுகளை விளக்கங்கள் மற்றும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறது. வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் நிறுத்தக் குறியீடுகளை, ஒன்பது பிரிவுகளாக எடுத்துக் காட்டி விளக்கமாகத் தருகிறது. எழுத்துகள் எப்படி சொற்களாகின்றன; அதன் அடிப்படை என்ன? எங்கு கேபிடல் எழுத்து அமைக்க வேண்டும்? வாக்கியங்களில் ஸ்டைல் போன்ற பல பிரிவுகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் முறை பற்றி கூறப்படுகிறது. தொடர்ந்து எப்படி எந்த ஸ்டைலில் எழுதுவது, எழுதியதை எப்படி மீண்டும் திருத்தி அமைப்பது என்றும் விளக்குகிறது.
3. Grammarly Words: இணையத்தில் அமைந்த ஓர் அகராதி மற்றும் ஒரு பொருள் பல சொற்களாக இணைச் சொற்களைக் காட்டும் ஒரு தளம். இங்கு தரப்படும் கட்டத்தில் சொல்லை அமைத்துத் தேடினால், உடன் அதன் பொருள், இலக்கணக் குறிப்பு, சொல் பயன்படுத்தப்படக் கூடிய பல இடங்களுக்கான விளக்கங்கள் என அனைத்தும் காட்டப்படுகிறது. மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட அகராதிகளில் மட்டுமே இந்த அளவிற்கு விளக்கங்களைக் காணலாம்.
4. Grammarly Blog (கிராமர்லியின் வலைமனை): கிராமர்லிக்கென ஒரு வலைமனை உள்ளது. இங்கே நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சொற்களுக்கான விளக்கங்கள் தரப்படுகின்றன. இங்கு சென்று உங்கள் மின் அஞ்சல் முகவரியைப் பதிந்துவிட்டால், உங்கள் அஞ்சல் பெட்டிக்கு தினந்தோறும் ஆங்கில மொழி குறித்து அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களும் தீர்வுகளும் கிடைக்கும். இந்த வலைமனையில் அவை பதிந்து வைத்துத் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, Judgement / Judge ment, Spelled / Spelt, Amongst / Among மற்றும் Than / Then போன்ற இணைகளைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் தெளிவாகத் தரப்படுகின்றன.
5. The Grammarly Facebook Community / Twitter Account: சமூக வலைத்தளங்களிலும், Grammarly இடம் பெற்றுள்ளது. இவை கல்வி கற்றுத் தரும் சமூகப் பக்கங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள், தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெறலாம். விளக்கங்கள் தர முடிந்தவர்கள், மற்றவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கலாம்.
பன்னாடெங்கும் பல லட்சக்கணக்கான எழுத்தாளர்கள் இந்த தளத்தின் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தித் தாங்கள் எழுதும் ஆங்கில மொழியைச் செம்மையாகத் தவறு எதுவுமின்றி எழுதுகின்றனர். இந்த தளத்தினை, 600க்கும் மேற்பட்ட பன்னாட்டு பல்கலைக் கழகங்களும், கல்வி அமைப்புகளும் பரிந்துரை செய்து பயன்படுத்த உரிமங்களைப் பெற்றுள்ளன. கட்டுரைகள், அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், திட்டக் கட்டுரைகள், கல்லூரி நுழைவு விண்ணப்பங்கள் எனப் பலவகை எழுத்தோவியங்கள் இதன் உதவியுடன் அமைக்கப்படுகின்றன. சொற்களின் சரியான இடப் பயன்பாடு, ஒரு பொருள் குறித்துச் சரியான அழுத்தம் தரும் சொற்கள், சட்டம், மதம், உடல்நலம், கல்வி போன்ற பல்வேறு பிரிவுகளில் சரியாகப் பயன்படுத்தக் கூடிய சொற்களை இதன் மூலம் பல எழுத்தாளர்கள் சரி செய்து கொள்கின்றனர். வேலை தேடுபவர்களுக்கும், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகவோ, அந்நிய மொழியாகவோ கற்பவர்களுக்கும் இந்த தளம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை. பன்னாட்டளவில் இதனை 40 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர் என இதன் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாகக் கிடைக்கும் இந்த தளத்தில் கிடைக்கும் டூல்களை, மாணவர்கள் மட்டுமின்றி, ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் தரவிறக்கம் மேற்கொண்டு, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியின் பயன்பாடு குறித்து பல விடியோக்கள், யு ட்யூப் தளத்தில் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, https://www.youtube.com/watch?v=BVCvjZwc4sk என்ற முகவரியில் உள்ள காணொளியைப் பார்க்கவும். 'கிராமர்லி' இணைய தளம் சென்று நம் கட்டுரைகளைத் திருத்துவது குறித்தும், அதன் ப்ளக் இன் புரோகிராம்களை பதிந்து இயக்குவது குறித்தும் அறிந்து கொள்ள https://www.youtube.com/watch?v=_F13V8d_DN0 என்ற முகவரியில் உள்ள காணொளியைக் காணலாம். https://www.youtube.com/watch?v=fVbE2CSXCJ0 என்ற முகவரியில் உள்ள காணொளியும் இந்த வகையில் அனைத்து பயன்பாடுகள் குறித்தும் சுருக்கமாகக் காட்டி விளக்குகிறது.
இணைய தளங்களில், 'கிராமர்லி' போல இன்னும் பல சொல், இலக்கண திருத்திகள் இருந்தாலும், இதனைத்தான் முதல் இடத்தில் அனைவரும் பாராட்டுகின்றனர். மற்ற செயலிகளின் பெயர்களை இங்கு தருகிறேன்.
1. வேர்ட் ப்ரெஸ் தளத்தில் இயங்கும் ப்ளக் இன் புரோகிராமாக, TinyMCE Spellcheck கிடைக்கிறது. இணைய தள முகவரி https://wordpress.org/plugins/tinymce-spellcheck/
2. வேர்ட் செயலியில் உள்ளதைப் போல Google Docs செயலியிலும், சொல் மற்றும் இலக்கண திருத்தி ஒன்று இயங்குகிறது.
3. எந்த ப்ளக் இன் புரோகிராமினையும் இணைக்காமல், டெக்ஸ்ட் திருத்த வேண்டும் என்றால், Paper Rater என்னும் கருவி சரியானதாக இருக்கும். இதன் தளம் சென்று, நாம் திருத்த விரும்பும் டெக்ஸ்ட்டை ஒட்டினால், டெக்ஸ்ட்டில் உள்ள பிழைகள் காட்டப்பட்டு திருத்துவற்கான வாய்ப்புகள் காட்டப்படும்.
4. “தவறுகளைச் செய்யாதீர்கள்” என்ற பஞ்ச் லைன் சொற்களுடன் நமக்குக் கிடைப்பது Ginger என்னும் சொல் திருத்தி. கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன், எம்.எஸ். ஆபீஸ் ப்ளக் இன் புரோகிராம் மற்றும் ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான பதிப்புகளுடன் Ginger கிடைக்கிறது. சொல் மற்றும் இலக்கண பிழைகளைத் திருத்துவதுடன், இதன் உள்ளாக அமைந்த Sentence Phraser, நீங்கள் அமைக்கும் வாக்கியத்தினை எப்படி எல்லாம் மாற்றி சிறப்பாக அமைக்கலாம் என்று காட்டுகிறது. www.gingersoftware என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.
5. After the Deadline என்ற வேர்ட் ப்ரெஸ் ப்ளக் இன், திறவூற்று செயலியாக (Open Source) வடிவமைக்கப்பட்டது. குரோம், பயர்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் லைவ் செயலிகளுக்குமான இணைப்புச் செயலியாகவும் இது கிடைக்கிறது. http://www.afterthedeadline.com/ என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.
6. Slick Write என்னும் இணைய தள கருவி, பயன்படுத்த எளிய இடைமுகமாகத் தரப்பட்டுள்ளது. நம் டெக்ஸ்ட்டை இதில் பொருத்திவிட்டால், எழுத்து மற்றும் இலக்கண, சொற் பிழைகள் மட்டுமின்றி, எத்தனை செயல் சொற்கள், வினையடைச் சொற்கள், சுட்டுப் பெயர்ச் சொற்கள், பொதுவாக
நாம் காணாத சொற்கள் எத்தனை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஒரு பட்டியலே தரப்படுகிறது. இதனை http://www.slickwrite.com என்ற தளத்தில் பெறலாம். இதில் சொற்கள் சார்ந்த ஒரு விளையாட்டும் தரப்படுகிறது. இதன் மூலம், சொற்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்ற நம் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
7. Prowriting Aid என்னும் தளத்தில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்குப் பதிலாக, இன்னும் சிறப்பான சொற்களைப் பயன்படுத்த உதவி தரப்படுகிறது. பல உதவிகள் இங்கு கிடைத்தாலும், அனைத்தும் இலவசம் அல்ல. கிடைக்கும் தள முகவரி https://prowritingaid.com/ ஆங்கில மொழியை நாம் நம்பிக்கையோடு பயன்படுத்தத் துணையாய் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தளங்களும், அதன் கருவிகளும் உள்ளன. தொழில் நுட்பத்தின் உதவியால், நமக்கு இவை கிடைக்கப் பெறுகின்றன. மேலே சொல்லப்பட்ட அனைத்தும், நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் எனக் கூற முடியாது. இருப்பினும் அவ்வப்போது இவற்றையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு, அவர்கள் ஏற்படுத்தும் பிழைகளை அறியவும், பிழைகளைத் திருத்திக் கொள்ளவும் சரியான செயலியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக் கொடுங்கள்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X