கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் 'ஸ்டிக்கி நோட்ஸ்' தரப்படுகிறதா? விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் இணைத்துள்ளது குறித்து உங்கள் கட்டுரையில் எழுதப்படவில்லை. அறிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.
சி.முருகேசன், திண்டுக்கல்.
பதில்
: நல்ல சந்தேகம், கேள்வியும் கூட. விண்டோஸ் 10ல் ஸ்டிக்கி நோட்ஸ் தரப்பட்டுள்ளது. சாதாரணமாகத் தரப்படவில்லை. பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, ஸ்டிக்கி நோட்ஸ், கார்டனா டூலுடன் இணைக்கப்பட்டுள்ளது. கார்டனாவுடன் இணைந்து குறிப்புகளை உருவாக்கலாம். இரண்டாவதாக, ஸ்டிக்கி நோட்ஸ் மற்ற அனைத்து செயலிகள் மற்றும் டூல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் உள்ள குறிப்புகள், நீங்கள் மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில் எதனைப் பயன்படுத்தினாலும், உங்களுக்கு நினைவு படுத்தப்படும். குறிப்பு ஒன்றினை எழுதி, அதனைச் செயல்படுத்த நேரத்தையும் குறித்துவிட்டால், குறிப்பிட்ட நேரத்தில் அது நீல வண்ணத்தில் மாறும். கார்டனா உங்களுக்கு அதனை நினைவு படுத்தும்.
தொலைபேசி எண்ணை எழுதி வைத்தால், தொலைபேசி தொடர்பு கொள்ளும் அப்ளிகேஷன் இருந்தால், அது அந்த எண்ணை குறிப்பிட்ட நேரத்தில் அழைக்கும். மின் அஞ்சல் முகவரி இருப்பின், விண்டோஸ் 10 மெயில் புரோகிராம் இயங்கி, அஞ்சலை அனுப்ப நினைவூட்டும். அதே போல, இணைய தள முகவரி ஒன்றை எழுதி வைத்தால், அதில் கிளிக் செய்தால் போதும்; இணைய தளம் திறக்கப்படும்.
மேலே சொல்லப்பட்ட சில வசதிகள், வரும் விண்டோஸ் 10 ஆண்டுவிழா அப்டேட் நிகழ்வுடன் ஸ்டிக்கி நோட்ஸில் இணைக்கப்படும்.

கேள்வி: நான் கடந்த நான்கு ஆண்டுகளாக, எச்.பி. லேப்டாப் (HP pavilion) பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம், விண்டோஸ் 7லிருந்து, விண்டோஸ் 10க்கு அப்டேட் செய்தேன். சற்று நேரம் அதிகம் ஆனது என்றாலும், மிகத் தெளிவாகவும், இலகுவாகவும் அப்டேட் ஆனது. எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், இப்போது மவுஸ் நகர்வதில் சிக்கல் இருக்கிறது. லேப்டாப் அப்படியே லாக் ஆகி நிற்கிறது. இது, இணைய இணைப்பில் பிரவுஸ் செய்கையில் இன்னும் பிரச்னைகளைத் தருகிறது. இது விண்டோஸ் 10 சிஸ்டத்தினாலா? அல்லது வேறு ஹார்ட் வேர் பிரச்னையிலா?
ஆர்.டி. மோகனா கார்த்திக், பெங்களூரு.
பதில்
: உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவர் பைல்கள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. Windows Update site தளம் சென்று, எவை அப்டேட் செய்யப்பட வேண்டும் என்பதனை அறிந்து, அவற்றை அப்டேட் செய்திடவும். அதில் காட்டப்படவில்லை என்றால், சிக்கல் சற்று மோசமானதுதான். கம்ப்யூட்டரில் உள்ள வை பி கார்ட், டச்பேட் போன்றவற்றை, ஒவ்வொன்றாக, செயல் நிறுத்த பணியினை (Disable) மேற்கொள்ளவும். எதில் இயக்க நிறுத்தலை மேற்கொள்கையில், பிரச்னை இல்லாமல் இருக்கிறதோ, அதன் ட்ரைவரை மேம்படுத்த வேண்டும். அல்லது, டிவைஸ் மேனேஜர் சென்று ஒவ்வொன்றாகப் பார்க்கவும். டிவைஸ் மேனேஜர் செல்ல, “Computer” ஐகானில் (முன்பு “My Computer”) சென்று ரைட்கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Manage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடதுபுறமாக டிவைஸ் மேனஜர் இருக்கும். வலது பக்கத்தில் சிஸ்டத்தின் சாதனங்கள் அனைத்தும் காட்டப்படும். ஒவ்வொரு சாதனத்திலும் டபுள் கிளிக் செய்து, அதன் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் பெறவும். அதன் ட்ரைவர் டேப்பில், அந்த சாதனத்தின் இயக்கத்தினை Disable செய்வதற்கான வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து, இந்த சோதனையை மேற்கொள்ளலாம். சிஸ்டம் இயக்கத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுபவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டாம். ஒவ்வொன்றாகச் சோதனை செய்து, தேவைப்படும் சாதனத்திற்கான ட்ரைவர் கோப்பினை மேம்படுத்தினால், உங்கள் பிரச்னை சரி செய்யப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். எப்போதும் நான் மூன்று டாகுமெண்ட் பைல்களைத் திறந்து செயல்பட வேண்டியதுள்ளது. இவை அனைத்தும் ஒரே போல்டரில் இருந்தாலும், இவை வரிசையாக இல்லை. எனவே, ஒவ்வொன்றாகத் திறக்க வேண்டியதுள்ளது. மொத்தமாக எனக்கு வேண்டிய பைல்களை, ஒரே நேரத்தில் திறக்க என்ன செய்திட வேண்டும்? அதற்கான வழி உள்ளதா?
அ. மதிவாணன், பெரம்பூர்.
பதில்
: வேர்ட் புரோகிராமினைப் பொறுத்தவரை, அதன் பைல்களை நிர்வகிக்க முழுமையான ஒரு சிஸ்டத்தினைத் தந்துள்ளது. அதில் ஒன்று, ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறக்கும் செயல்பாடாகும். இதனை மேற்கொள்ள கீழே தந்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும். முதலில் பைல் Open டயலாக் பாக்ஸைத் திறக்கவும். Ctrl+O கீகளை அழுத்தி இதனைத் திறக்கலாம். பைல்களின் பட்டியல் கிடைக்கும். இதில் நமக்கு வேண்டிய பைல் ஒன்றில் டபுள் கிளிக் செய்வதற்குப் பதிலாக, பைல்கள் தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கவும். உங்களுக்கு வேண்டிய பைல்கள் வரிசையாக இருந்தால், முதல் பைல் தேர்ந்தெடுத்து பின் ஷிப்ட் கீ அழுத்தி, இறுதி பைலில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். இடம் விட்டு பைல்கள் இடம் பெற்றிருந்தால், வரிசையாக இல்லாமல் இருந்தால், முதல் பைலைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்தித் தேர்ந்தெடுத்து, நாம் ஒரே நேரத்தில் திறக்க வேண்டிய பைல்களின் பட்டியலை அமைக்கலாம். இவ்வாறு தேர்ந்தெடுத்த பின்னர், Open என்பதில் கிளிக் செய்திட, நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள், ஒன்றன் பின் ஒன்றாகத் திறக்கப்படுவதைக் காணலாம்.
நீங்கள் காணும் Open dialog boxல், இது போல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் பாக்ஸில் தரப்படும் வசதிகள் போல, பல வசதிகள் பைல்களை நிர்வகிக்கத் தரப்பட்டிருப்பதைக் காணலாம்.

கேள்வி: என் வேலைக்கு, ஆங்கிலத்தில் டாகுமெண்ட் தயாரிக்கையில், வாக்கியத்தின் முதல் எழுத்தினைத் தானாக பெரிய எழுத்தாக அமைவதனை நிறுத்தும் வகையில் செட் செய்துவிட்டேன். ஆனால், இன்னும் பெயர்களை (Regan, Sekar, Williams) அமைக்கையில், முதல் எழுத்து கேபிடல் எழுத்தாகவே அமைகிறது. ஏன் என்று தெரியவில்லை. இதனையும் சிறிய எழுத்தாகவே அமைக்க என்ன செய்திட வேண்டும்?
என். நிர்மலா ஜெயராமன், விழுப்புரம்.
பதில்
: இரண்டு விஷயங்களில் இதைச் சரி செய்திடலாம். முதலில் கேபிடல் எழுத்து அமைவதன் சூழ்நிலை அனைத்தையும் நிறுத்தி விட்டதனை உறுதி செய்து கொள்க. ஏற்கனவே வாக்கியத்தின் முதல் எழுத்து, கேபிடலாகத் தானாக மாற்றப்படுவதனை நிறுத்திவிட்டீர்கள். இதே போல இன்னும் சில சூழ்நிலைகள் உள்ளன. இதனை அறிந்து நீக்க,
1. Tools மெனுவில் இருந்து Auto correct ஆப்ஷன் கிளிக் செய்திடவும்; அல்லது, வேர்ட் 2007 எனில், Word Options / Proofing / Auto correct எனச் சென்று ஆட்டொ கரெக்ட் ஆப்ஷன்ஸ் விண்டோவினைப் பெறவும்.
2. இங்கு Correct TWo INitial Capitals, Capitalize First Letter of Sentences, Capitalize Names of Days ஆகியவற்றில் உள்ள டிக் அடையாளங்களை நீக்கவும்.
3. பின் கீழாக உள்ள, AutoCorrect பட்டியலில், சொல் ஒன்றின் முதல் எழுத்தை, கேபிடல் எழுத்தாக மாற்றும் வகை அமைக்கப்பட்டிருந்தால், அதனையும் நீக்குக. அல்லது AutoCorrect பிரிவையே முடக்கி வைக்கலாம்.
4. தொடர்ந்து Spelling Checker செக் பாக்ஸில், Automatically Use Suggestions என்பதிலும் டிக் அடையாளம் இருந்தால் நீக்கவும். அல்லது, செயல்பாட்டினை நிறுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: ஒரு போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் பயன்படுத்தி என் பைல்களை சேவ் செய்து வைத்திருக்கிறேன். ஒரு டெரா பைட் அளவுடையது. இதனை விண்டோஸ் எக்ஸ்பி இயங்கிய கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தினேன். இப்போது அதனை விண்டோஸ் 8.1 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்த முயற்சித்த போது, அதனை அறிந்த மாதிரி கூட காட்டிக் கொள்ளவில்லை. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மேம்படுத்தினாலும் இதே நிலை வரும் என்று என் நண்பர் கூறுகிறார். இதனை எப்படி தீர்ப்பது? என் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் இனி வேலை செய்யாதா?
ஆ. பிரேமலதா, செய்யாறு.
பதில்:
எந்த நிறுவனத்தின் போர்ட்டபிள் ட்ரைவ் என நீங்கள் கூறவில்லை. இருப்பினும், பிரச்னையின் அடிப்படை என்ன என்று கூறுகிறேன். இந்த போர்ட்டபிள் ட்ரைவினைச் செயல்படுத்த, அதனை இணைக்கும் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ட்ரைவர்கள் இருக்க வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே அவை தரப்பட்டிருக்கும். இல்லை எனில், ட்ரைவ் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இந்த ட்ரைவர் பைல்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ஆனால், இந்த போர்ட்டபிள் ட்ரைவ் தயாரித்த நிறுவனம், அண்மைக் காலத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குவதற்கான ட்ரைவர் பைல்களைத் தரவில்லை என்றால், அந்த நிறுவனங்களின் மின் அஞ்சல் முகவரிக்கு எழுதிக் கேளுங்கள். பதில் இல்லை என்றாலோ, ட்ரைவர் பைல்கள் கிடைக்காது என்றாலோ, விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் அதனை இணைத்து, பைல்களை இன்னொரு புதிய போர்ட்டபிள் ட்ரைவருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை.

கேள்வி: கம்ப்யூட்டரில் இயங்கும் குரோம் பிரவுசரில், உடனுடக்குடன் ஒரு சொல்லுக்கு பொருள் தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்தேன். அது அடிக்கடி கர்சரில் சிக்கும் சொற்களுக்கெல்லாம், பொருளினை மஞ்சள் கட்டத்தில் தருகிறது. இது வேலைக்கு இடையூறாக உள்ளது. இதனை எப்படி நீக்குவது?
கா. சாரங்கன், திருப்பதி.
பதில்:
குரோம் பிரவுசரில், வலது மேலாக உள்ள மெனுவில் கிளிக் செய்திடவும். அடுத்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், More tools > Extensions எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் காட்டப்படும். எதனை நீக்க வேண்டுமோ, அதற்கு வலது கடைசியில் உள்ள குப்பைத் தொட்டி போன்ற ஐகானின் முன்பு காணப்படும் Remove from Chrome என்பதில் கிளிக்
செய்திடவும். நீக்கப்படுவதற்கான சிறிய அறிவிப்பு காட்டப்படும். Remove என்பதில் மீண்டும் கிளிக் செய்திட, எக்ஸ்டன்ஷன் நீக்கப்படும். இனி, பொருள் கூறும் தொல்லை இருக்காது.

கேள்வி: Bad Cluster என்று ஹார்ட் டிஸ்க் குறித்து படித்துள்ளேன். அண்மையில், failover cluster என்று ஒரு அம்சம் குறித்துப் படித்தேன். அது ஹார்ட் டிஸ்க் குறித்து இருப்பதாகத் தெரியவில்லை. இது குறித்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். அன்புச் செல்வி, இராசபாளையம்.
பதில்:
failover cluster என்பது ஹார்ட் டிஸ்க் குறித்தது இல்லை. பல சர்வர்கள் இணைந்த ஒரு தொகுதி. பல அப்ளிகேஷன்கள் மற்றும் சர்வீசஸ் தொடர்ந்து இயங்க சர்வர்களை இணைத்து அமைப்பு ஏற்படுத்தப்படும். இதில் ஏதேனும் ஒரு சர்வர் செயல் இழக்க நேரிட்டால், இந்த தொகுப்பில் (Cluster) உள்ள இன்னொரு சர்வர், செயல் இழந்த சர்வரின் பணிச் சுமையினையும் சேர்த்து கவனிக்கத் தொடங்கும். சேவை சில விநாடிகள் கூட பாதிக்காத வகையில் இந்த செயல் மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். செயல் இழக்கும் தன்மையையே Failover Cluster என அழைக்கின்றனர். இந்த சர்வர்கள் பல வகைப்படும். பைல் சர்வர், பிரிண்ட் சர்வர், டேட்டா பேஸ் சர்வர் மற்றும் மெசேஜிங் சர்வர்கள் இதில் அடங்கும். ஒவ்வொரு சர்வரும், மற்ற சர்வர்களின் தன்மை குறித்து அறிந்து செயல்படும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு சர்வரும், பிறிதொரு சர்வரின் பதிலியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டும் எப்போதும், குறிப்பிட்ட சிக்னல்கள் மூலம் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கும். இந்த சிக்னல்களை இவற்றின் இதயத்துடிப்பு ("heartbeat") என அழைக்கின்றனர். ஒரு சர்வர் தன் செயல்பாட்டினை மற்ற சர்வருக்குத் தெரிவிக்கையில், அந்த சிக்னல்களை push heartbeats என அழைக்கின்றனர். இந்த சிக்னல்கள் பதிலி சர்வர்களை அடையாத போது, பதிலி சர்வர் விழித்துக் கொண்டு, செயல் இழந்த சர்வரின் செயல்பாட்டினையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X