ஆண்டு தோறும், ஜூன் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம், தன் சாதனங்களுக்கென செயலிகளை உருவாக்குபவர்களுக்கான, பன்னாட்டளவிலான கருத்தரங்கை நடத்துவது வழக்கம். இதனை “ஆப்பிள் பொறியாளர்களின் சங்கமம்” என்று அழைக்கலாம்.
இந்த ஆண்டில், சென்ற ஜூன் 13 அன்று, சான்பிரான்சிஸ்கோ நகரில், ஆப்பிள் சாதனங்களுக்கென செயலிகள் உருவாக்குபவர்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கினை, ஆப்பிள் நடத்தியது. இதில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் தலைமையுரை ஆற்றினார். பிற நிர்வாகிகளும் புதிய மாற்றங்கள் குறித்து உரையாற்றினார்கள். விரைவில் வெளி வர இருக்கும் அனைத்து செயலி மாற்றங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. ஐபோன், ஐபேட், மேக் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி என ஆப்பிள் சாதனங்கள் அனைத்தின் இயக்க முறைமைகளிலும் மாற்றங்கள் இருக்கும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு மிக முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக, ஆப்பிள் பல சவால்களைச் சென்ற ஆண்டு முழுவதும் சந்தித்து வந்தது. பத்தாண்டுகளுக்குப் பின், முதல் முறையாக, ஆப்பிள் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் குறைந்திருந்தது. அண்மையில் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு வரவேற்பும் இருந்தது; சரியில்லை என்ற கருத்தும் வெளியானது. ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும், ஐபோன் விற்பனை, உலக அளவில் சரிந்த ஸ்மார்ட் போன் விற்பனையைப் போலவே சரிந்து இருந்தது. எனவே, தன்
சாதனங்களை இயக்கும் செயலிகள் அனைத்தின் செயல்பாடுகளிலும் மேம்பாட்டினை மேற்கொள்ள ஆப்பிள் முடிவெடுத்து, கடுமையாக உழைத்துப் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
மிக முக்கிய அறிவிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின், மொபைல் சாதனங்களுக்கான, முக்கிய இயக்க முறைமையில் புதியதாக ஐ.ஓ.எஸ்.10, பல புதிய வசதிகளுடன் வெளியிடப்படுகிறது. புதியதாக பத்து நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் பல மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:
நம் கண்களைக் கவரக் கூடிய முதல் மாற்றம், மெசேஜ் செயலியில் தரப்பட்டுள்ளது. இதன் பயனாளர்கள், இனி சொற்களை ஒரு சிறிய தட்டலில் எமோஜி எனப்படும் சிறிய படங்களாக மாற்றி, எழுதிய குறிப்புகளை அனுப்பலாம். திரை முழுவதிலும் காட்டப்படும் வகையில் அசையும் படங்களை இணைக்கலாம்.
இந்த 'ஐமெசேஜ்' மேம்படுத்தலில், இசைக் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் செயல்பாடும் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டச் கீ போர்ட் மூலம் இதனைச் செயல்படுத்தலாம். ஆப்பிள் ஸ்டோரில், 20 லட்சம் செயலிகள் பயனாளர்களுக்கென இருப்பதாகவும், அவை 13 ஆயிரம் கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிம் குக் தெரிவித்தார். கட்டணம் செலுத்திப் பெறும் செயலிகள் மூலம், இந்த செயலிகளை உருவாக்கியவர்கள், இதுவரை 5000 கோடி டாலர் பணம் ஈட்டியுள்ளதாகவும் அறிவித்தார்.
ஆப்பிள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கான இயக்க முறைமையில் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டமானது மேக் ஓ.எஸ். (MacOS) என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பதிப்பு இந்தப் பெயருடன் சியரா (Sierra) என அழைக்கப்படுகிறது. சியரா என்பது கலிபோர்னியாவையும் நெவாடாவினையும் இணைக்கும் ஒரு மலைத்தொடராகும்.
முதல் முறையாக, ஆப்பிள் வழங்கும் ஒலி வழி டிஜிட்டல் உதவியாளரான 'சிரி', (Siri) மேக் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே, 'ஆப்பிள் பே' செயலியையும் செயல்படுத்தி வருகிறது. இனி மேக் கம்ப்யூட்டர் பயனாளர்கள், தங்கள் ஆப்பிள் வாட்ச் கட்டிய கரத்தினை, லேப்டாம் ஒன்றுக்கு அருகே கொண்டு செல்வதன் மூலம், மேக் கம்ப்யூட்டரை இயக்க திறக்க முடியும்.
ஆப்பிள் வாட்ச் சாதனமும் மேம்படுத்தப்படுகிறது. 'வாட்ச் ஓ.எச்.3' (WatchOS 3) கடிகாரத்தில் இனி உங்கள் நண்பர்களின் உடற்பயிற்சிகளையும் கணக்கிட்டுப் பார்க்க முடியும். இந்த புதிய இடைமுகம், செயலி ஒன்றை உங்களுடைய ஐபோனில் மிக வேகமாக இயக்கத்திற்குக் கொண்டு வரும். இதனை ஆப்பிள் 'InstantLaunch' என அழைக்கிறது.
இணையத்தின் வழியாகச் செயல்படும் 'ஆப்பிள் பே' செயலியில், 'சபாரி'க்கென புதிய பட்டன் ஒன்று அறிமுகப்படுத்துகிறது. இதன் வழியாக, உங்கள் ஐபோன் அல்லது உங்கள் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் உள்ள 'டச் ஐ.டி.' (TouchID) மூலம் நீங்கள் பணம் செலுத்தியதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
சென்ற ஆண்டு, சந்தா செலுத்திப் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஆப்பிள் மியூசிக்' (Apple Music) இப்போது மேம்படுத்தப்படுகிறது. பயனாளர் ஒருவரின் தற்போதைய இசை நூலகம், இந்த செயலியின் முன்னுக்குத் தள்ளப்படுகிறது. இதில் 'பிளே லிஸ்ட்' வகையிலும் மேம்பாடு தரப்பட்டுள்ளது. இப்போது பல புதிய டேப்கள் இதில் இணைக்கப்பட்டு, நம் விருப்பங்களுக்கேற்பச் செயல்படுத்தும் வகையில் இவை இயங்குகின்றன. தற்சமயம், ஒரு கோடியே 50 லட்சம் பேர் இதனைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் சந்தாதாரர்களாக உள்ளனர்.
படங்கள் இனி, Memories பகுதியில் பிரித்து வைக்கப்படும். படத்தில் உள்ள நபர்கள், எடுக்கப்பட்ட இடம், நிகழ்வுகள் எனப் பல வகைகளில் இவை பிரிக்கப்பட்டு அமைக்கப்படும். ஐபோனில் இயங்கும் ஐபோன் அசிஸ்டன்ட் செயலியை, மேலும் மேம்படுத்தி வடிவமைத்திட, நிறுவனத்தில் பணியாற்றாத, செயலிகள் வடிவமைப்பாளர்களுக்கும் இசைவு தரப்படுகிறது.
'ஆப்பிள் மேப்ஸ்' (Apple Maps) செயலியில் ஏற்படுத்தப்படும் மாற்றப்பட்ட வடிவமைப்பு அதனை இன்னும் சிறப்பாகச் செயலாற்றும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் காலண்டர் செயலியை ஆய்வு செய்து, நீங்கள் செல்ல இருக்கின்ற இடங்களைப் பார்த்து கண்காணிக்கும். நாம் தேடும் நமக்கான வசதிகளைத் தரும். நம் அருகே இருக்கும் இடங்களைத் தேடித் தருவதில், நல்ல முன்னேற்றம் கொண்ட செயல்பாடு தரப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். 10 சிஸ்டத்தில், இனி தேவையற்ற, ஏற்கனவே பதிந்து பயன்படுத்தாத செயலிகளை நீக்குவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நம் முகப்புப் பக்கத்தில் தேவையற்ற இடங்களைப் பிடித்து, அதன் அழகைக் கெடுக்கும் செயலிகளின் படங்கள் இனி இருக்காது.
இந்த இயக்க முறைமையின் மிகச் சிறப்பான மாற்றம், சாதனத்தைத் திறந்து இயக்கும் வழி மாற்றப்பட்டுள்ளதுதான். முன்பு, பக்க வழியாகத் திரையில் அழுத்தி இழுக்க வேண்டும். இப்போது ஹோம் அழுத்தித் திறக்கலாம். முதலில் உங்கள் விரல் ரேகையை ஸ்கேன் செய்துவிட்டுப்பின், ஹோம் பட்டனில் தட்டினால் போதும். சாதனம் இயங்கத் தொடங்கும். பல ஆண்டுகளாக, 'ஸ்வைப்' செய்தே பயன்படுத்தி வந்த பயனாளர்களுக்கு, இந்த புதிய முறை சற்று எரிச்சலைத் தந்தாலும், இது எளிது என்பதால், நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.
அத்துடன், ஐபோனைச் சற்று உயரத் தூக்கியவுடனேயே, விழித்துக் கொண்டு செயல்பாட்டிற்கு வரும் மேம்பாடும் தரப்பட்டுள்ளது.
அனைத்து மேம்படுத்துதலுக்கான செயலிகளும் அதன் வழிமுறைகளும், செயலிகள் உருவாக்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இலவச மேம்பாடுகள் அனைத்தும், அனைத்து ஆப்பிள் பயனாளர்களுக்கும் தரப்பட்டுள்ளன.