கேள்வி: விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். எட்ஜ் பிரவுசரில் பார்க்கும் ஓர் இணையதளத்தினை தற்போது எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்திட முடியவில்லை. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் சேவ் செய்தேன். இதனை எப்படி இயக்கி வைப்பது? டிப்ஸ் தரவும்.
ஆர். இப்ராஹிம், காரைக்கால்.
பதில்: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட்டிருக்கும் எட்ஜ் பிரவுசர், இணைய தளப் பக்கத்தினை, எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்திடும் வசதியினைக் கொண்டிருக்கவில்லை. வரும் காலங்களில், இதனை மைக்ரோசாப்ட் எளிதாக்கலாம். இப்போதைக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் வழியாக இதனை மேற்கொள்ளலாம். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்பட்டுள்ளது. நீங்கள் சேவ் செய்திட விரும்பும் இணைய தளப் பக்கத்தினை, எட்ஜ் பிரவுசரில் பார்த்துக் கொண்டிருக்கையில், எட்ஜ் விண்டோவில் வலது மூலையில் கிடைக்கும் மெனுவினை இயக்கவும். இந்த மெனுவில் 'open with Internet Explorer' என்ற ஆப்ஷன் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இது, தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், புதிய டேப் ஒன்றில் திறக்கும். உடனே, கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தினால், Save as டயலாக் பாக்ஸ் கிடைக்கும். பின்பு, நீங்கள் விரும்பும் டைரக்டரியில், போல்டரில், இந்தப் பக்கத்திற்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்து கொள்ளலாம்.
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். இன்னொரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். என் டாகுமெண்ட்களில், குறிப்பிட்ட இடத்தில், அவற்றின் ஹெடர் அல்லது புட்டர்களை அமைக்க விரும்புகிறேன். சரியாக நான் விரும்பும் இடத்தில் அமைக்க முடிவதில்லை. இதற்கான வழி காட்டவும்.
ஆ. ஜெயச்சந்திரன், ஆடுதுறை.
பதில்: வேர்ட் புரோகிராம் நாம் ஹெடர் மற்றும் புட்டரில் என்ன அமைப்பது என்பதை முடிவு செய்வதனை நம்மிடம் விட்டுவிடுவதைப்போல, அவை எங்கே அமைய வேண்டும் என்பதனையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் தருகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
1. எந்த ஹெடர் அல்லது புட்டரின் இடத்தைத் தீர்மானிக்க வேண்டுமோ, அதில் உங்கள் கர்சரை வைக்கவும்.
2. அடுத்து, பைல் மெனுவில் இருந்து பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். உடன், பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் Margins டேப் (வேர்ட் 97 /வேர்ட் 2000) அல்லது Layout டேப் (வேர்ட் 2002, 2003) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இங்கு ஹெடர் மற்றும் புட்டர் (Header / Footer) என இரண்டு நீள் கட்டங்கள் கிடைக்கும். இதில் டாகுமெண்ட் முனையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இவை அமைக்கப்பட வேண்டும் எனக் குறிக்கவும். Footer பாக்ஸில், புட்டரில் உள்ள டெக்ஸ்ட் பக்கத்தின் கீழ் பகுதியில், எவ்வளவு தூரத்தில் அமைய வேண்டும் என்பதனை அமைக்கவும்.
5. இந்த அளவுகள், டாகுமெண்ட்டின் எந்த பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து Apply To என்பதனை கிளிக் செய்திடவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கேள்வி: நான் தற்போது விண்டோஸ் 8.1 பயன்படுத்தி வருகிறேன். இதன் டைல்ஸ் மற்றும் புதிய விஷயங்கள் அனைத்தும், இந்த சிஸ்டம் வந்த நாள் முதல் ரசித்து பயன்படுத்தி வருகிறேன். இப்போது விண்டோஸ் 10க்கு மாற இருக்கிறேன். இதில் சார்ம்ஸ் பார் எடுக்கப்பட்டுவிட்டதாகப் படித்தேன். இதன் செயல்பாடு எனக்கு மிகவும் பிடித்த, நான் ரசித்த ஒன்றாகும். இதற்குப் பதிலாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இதனைத் தருமா?
என். குலோத்துங்கன், குடவாசல்.
பதில்: சார்ம்ஸ் பார் பலருக்குப் பிடிக்கவில்லை என்பதால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் எடுக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக, விண் 10ல், Start பட்டன் கிளிக் செய்திட வேண்டும். உடன் புதிய ஸ்டார்ட் மெனு கிடைக்கும். இதில் கிடைக்கும் பட்டியலில், Settings திரைக்குச் செல்ல ஒரு லிங்க் தரப்பட்டுள்ளது. அதில் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் 8ல், சார்ம்ஸ் பார் தந்ததற்கும் மேலாகவே, இதில் ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் Settings பார் வழியாக, Network, Volume, Notifications and Power எனப் பல பிரிவுகளுக்குச் செல்லலாம். தற்போது சிஸ்டம் ட்ரேயில், வலது புறம் காட்டப்படும் அனைத்தும் இந்த செட்டிங்ஸ் லிங்க்கில் கிளிக் செய்தால் கிடைக்கும்.
ஸ்டார்ட் மெனுவில், All apps லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அப்ளிகேஷன் ஒன்றைத் திறக்கலாம். People அல்லது Mail என எதனையும் தேர்ந்தெடுக்கலாம். திரையின் இடது மேல்புறம் உள்ள Options பட்டனில் கிளிக் செய்திடவும். இது இங்கு மூன்று படுக்கைக் கோடுகள் கொண்ட ஐகான் போல காட்சி தரும். இதில் கிளிக் செய்தால், சார்ம்ஸ் பாரில் கிடைக்கப்பெற்ற அதே கட்டளைகளுடனான பாப் அப் விண்டோ காட்டப்படும். இதில் Settings கிளிக் செய்தால், குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கான செட்டிங்ஸ் பார் கிடைக்கும். இதில் App கட்டளையில் கிளிக் செய்தால், அந்த அப்ளிகேஷனுக்கான App பார் கிடைக்கும்.
விண் 8ல் சார்ம்ஸ் பார் பார்த்து இயக்கி ரசித்தவர்களுக்கு, விண் 10ல் சார்ம்ஸ் பார் இல்லை என்பது ஒரு குறை தான். ஆனால், பல நிறைவான வசதிகள் தரப்பட்டுள்ளனவே.
கேள்வி: ஐபோனில் உள்ள அழைத்தவர்களின் பட்டியலில் உள்ள பெயர்களையும் எண்களையும் எவ்வாறு நீக்குவது? எங்கு தேடினும் அதற்கான வழி கிடைக்கவில்லை. பொதுவாகவே, ஐபோன், ஐபேட் குறித்து தகவல்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. தயவு செய்து வழி காட்டவும்.
என். ஸ்ரீரஞ்சனி, கோவை.
பதில்: நீங்கள் சொல்வது சரிதான். ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்பம் உயர்ந்ததாக இருந்தாலும், அதன் சாதனங்களின் விலை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம் என்பதால், ஆப்பிள் சாதனங்கள் அவ்வளவாக நம் நாட்டில் புழக்கத்தில் இல்லை. இருப்பினும், தற்போது அவற்றின் பயன்பாடு உயர்ந்து வருகிறது. இனி, உங்களின் கேள்விக்கு வருவோம். உங்களுடைய போனில், போன் அப்ளிகேஷனைத் திறக்கவும். இதில் Recents என்னும் டேப் செல்லவும். இங்கு நீங்கள் மேற்கொண்ட அழைப்புகள் பட்டியல் கிடைக்கும். இங்கு வலது மூலையில், Edit என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிளிக் செய்தவுடன், சிகப்பு வண்ணத்தில் Delete பட்டன், ஒவ்வொரு அழைப்பின் அருகே இடது பக்கத்தில் கிடைக்கும். குறிப்பிட்ட அழைப்பினை மற்றும் நீக்க வேண்டும் எனத் திட்டமிட்டால், அதன் அருகே உள்ள சிகப்பு பட்டனில் அழுத்தவும். அவ்வாறு கிளிக் செய்திடுகையில், அந்த அழைப்பு இடது புறமாக வழுக்கிச் செல்லும். பின் அடுத்த சிகப்பு பட்டன் காட்டப்படும். இப்படியே ஒவ்வொரு அழைப்பிற்கும் காட்டப்படும். முழுமையாக, மொத்தமாக அனைத்தையும் அழிக்க வேண்டும் என்றால், மேலாக இடது மூலையில் உள்ள Clear என்பதில் கிளிக் செய்தால் போதும். இதனைச் சரி பார்க்க, “Clear All Recents” என்ற பட்டனில் அழுத்தவும்.
உங்கள் அழைப்பு பதிவுகளை நீக்குவது நல்லதுதான். இதன் மூலம் உங்களின் தனி நபர் நடவடிக்கையினை மற்றவர்கள் பார்க்க இயலாது. மற்றவர்கள் உங்கள் போனைப் பயன்படுத்தினாலோ அல்லது பாஸ் கோட் எதுவும் இன்றி நீங்கள் போனைப் பயன்படுத்துபவராக இருந்தாலோ, இது போல அழிப்பது நல்லதுதான்.
கேள்வி: என்னிடம் எச்.பி. பெவிலியன் 15 என்னும் லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. இதில் வை பி இணைப்பு பெறுவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து பிற வாசகர்கள் உங்களிடம் கூறியுள்ளார்களா? இதற்கான தீர்வு என்ன?
என். பிரதாப் சந்திரன், கோவை.
பதில்: இதே போன்ற பிரச்னையை நம் வாசகர் இருவர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்னவெனக் குறிப்பிடவில்லை. நீங்கள் பயன்படுத்தும் அதே லேப்டாப் கம்ப்யூட்டராகவோ, வேறாகவோ இருக்கலாம். எச்.பி.நிறுவனம் இதற்கான உதவிக் குறிப்பினை
http://www8.hp.com/us/en/campaigns/hpsupportassistant/hpsupport.html?jumpid=va_r602_us/en/any/psg/pl_ot_ob_ds_pd/hpsupportassistant_cc/dt#.VeXhlZfy1AY என்ற முகவரியில் உள்ள தன் தளத்தில் தந்துள்ளது. இதில் எச்.பி. நிறுவனம், நீங்களாக கம்ப்யூட்டரில் உள்ள வயர்லெஸ் அடாப்டர் செயலியை அன் இன்ஸ்டால் செய்து, பின் மீண்டும் இன்ஸ்டால் செய்தால் தீர்வு கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சர்ச் பாக்ஸில் Device Manager என டைப் செய்திடவும். முதலில் கிடைக்கும் முடிவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Network adapters என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு wireless driver என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் “Uninstall.” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். ட்ரைவர் அன் இன்ஸ்டால் செய்யப்படும். பின்னர், கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவும். இப்போது அந்த ட்ரைவர் புரோகிராம் மீண்டும் இன்ஸ்டால் ஆகும். தானாகவே இது நடக்கும். பின்னர் வை பி இணைப்பு சரியாகிவிடும். சிலர் இந்த வழி தீர்வு அளிப்பதாக, இணையத்தில் தெரிவித்துள்ளனர்.
கேள்வி: வை பை அல்லது வை பி என்பதில், அந்த Fi எதைக் குறிக்கிறது? மொத்தத்தில் Wi Fi எதன் சுருக்கம்? ஒவ்வொருவரும், இந்த சுருக்குக் குறியீட்டினை வெவ்வேறாக விரிக்கின்றனர். தயவு செய்து விளக்கம் தரவும்.
ஆர். மரிய சூசை, தென்காசி.
பதில்: Wi-Fi என்ற சுருக்குக் குறியீட்டுச் சொல்லை எப்படி விரித்துக் கூறுவது என இணையத்தில் பல விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், Wi Fi எதனுடைய சுருக்கமும் அல்ல. பலர் இதனை Wireless Fidelity என்பதன் சுருக்கம் எனக் குறிப்பிட்டு அதுவே பலரின் கருத்தாகவும் அமைந்துவிட்டது. முதலில் வை பி எதனைக் குறிக்கிறது எனப் பார்க்கலாம். வயர் இணைப்பு எதுவுமின்றி, லோக்கல் ஏரியா நெட்வொர்க், LAN, தரும் தொழில் நுட்ப வரையறையினை, வை பி என அழைக்கின்றனர். மிக உயர்ந்த நிலையில் துல்லியமான ஆடியோ தரப்படுவதை ஹை பிடலெட்டி (High Fidelity) என அழைத்தனர். அதன் அடிப்படையிலேயே, சிலர் வை பி என்பதை Wireless Fidelity என விரிவாக அழைக்கத் தொடங்கினர். Wi-Fi Alliance என்னும் அமைப்பு, இது ஒரு சுருக்குச் சொல் அல்ல என்று தெளிவு படுத்தியுள்ளது. (காண்க: http://searchmobilecomputing.techtarget.com/definition/Wi-Fi)
வை பி என்பது, வர்த்தக ரீதியாக, வயர்லெஸ் நெட்வொர்க் இணைப்பில் IEEE 802.11x. என்ற தரத்தைக் குறிக்கவே பயன்பட்டது. இந்த வரையறையை வடிவமைத்துத் தரும் அமைப்பினை, Wi-Fi Alliance என அழைத்தனர். அது திரிந்து, மேலே சொல்லப்பட்ட அமைப்பினைச் சாந்து Wireless Fidelity என அழைக்கப்பட்டது.
இருப்பினும், எந்த ஒரு சொல்லாட்சியும், பரவலான மக்களால் பயன்படுத்தப்படுகையில், அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவது மொழிப் பயன்பாட்டில் வழக்கம். அந்த வகையில், Wi Fi என்பது Wireless Fidelity என்பதாகவே கொள்ளலாம்.