சாவித்திரி! (15)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

பீம்சிங் தயாரித்த, பதிபக்தி படத்தின் கடைசி காட்சி ஒரு மலைக்குன்றின் மீது படம் பிடிக்கப்பட்டது. சிவாஜிகணேசன், ஜெமினியை துப்பாக்கியால் சுடுவதாகக் காட்சி அமைப்பு.
அக்காட்சி படமாக்கப்பட்டபோது, சிவாஜி சுட்ட குண்டு, அருகில் புரொடக் ஷன் வேலைகளை செய்து கொண்டிருந்த ஜி.என்.வேலுமணியின் மீது தவறுதலாக பட்டு விட்டது. போலி குண்டு என்பதால், உயிருக்கு ஆபத்தின்றி, காயம் மட்டும் ஏற்பட்டது.
தன்னால் ஒருவர் காயமடைந்தது, சிவாஜிக்கு வேதனையாக இருந்தது. அதனால், ஜி.என்.வேலுமணியை தயாரிப்பாளர் ஆக்கி, ஒரு படம் நடித்துக் கொடுக்க முடிவு செய்தவர், தன் அடுத்த படத்திற்கு வேலுமணியை தயாரிப்பாளர் ஆக்கினார்.
பாதகாணிக்கை படத்தில், தனியா தவிக்கிற வயசு... என்ற பாடலின் படப்பிடிப்பு, மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில், காவிரிக் கரையில், திப்பு சுல்தான் கல்லறைக்கு அருகில் நடந்தது.
டாக்கா என்ற குதிரை வண்டியில் ஜெமினி, சாவித்திரி, விஜயகுமார் மற்றும் சந்திரபாபு ஆகியோர் ஏறி, நடனம் ஆடுவது போல காட்சி அமைப்பு. இக்காட்சி படமாக்கப்பட்ட போது, படப்பிடிப்பைக் காண வந்த கல்லூரி மாணவர்களால், படப்பிடிப்பிற்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டது.
தயாரிப்பாளர், ஜி.என்.வேலுமணியும், இயக்குனர் சங்கரும், மாணவர்களிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தனர்; பலன் இல்லை. படப்பிடிப்பு காலதாமதம் ஆனது. பொறுமை இழந்த சாவித்திரி, இயக்குனர் சங்கரிடம், 'என்ன பிரச்னை...' என்று கேட்டார்.
கல்லூரி மாணவர்கள் செய்யும் இடைஞ்சலைப் பற்றி விளக்கினார், சங்கர். இதைக் கேட்டதும் கோபமடைந்த சாவித்திரி, 'இத்தனை ஆம்பிளைங்க இருக்கீங்க... இந்த சின்ன பிரச்னையை தீர்க்க முடியலையா...' என்று கேட்டு, கோபத்துடன் மாணவர்கள் அருகே சென்று, 'இங்கே பாருங்க... நாங்க எங்க தொழிலை செய்ய வந்துருக்கோம்; அமைதியாக இருந்து பார்ப்பதாய் இருந்தால் பாருங்க; இல்ல இடத்தை காலி பண்ணுங்க...' என விளாசித் தள்ளிவிட்டார். சாவித்திரியின் தைரியத்தைக் கண்டு வாய் அடைத்து விட்டனர் மாணவர்கள். படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற்றது.
இத்தகைய தைரியசாலியான சாவித்திரி, ஒரு சுண்டைக்காய் பட விவகாரத்தில் வாழ்க்கையை இழந்தார் என்பது எவ்வளவு இட்டுக் கட்டிய கதை!
வாழ்வில், அவர் அதிகம் நேசித்தது ஜெமினி மற்றும் மகன் சதீஷ் ஆகிய இருவரை தான். கடைசி வரை அந்த எண்ணத்தை அவர் மீறவேயில்லை. சில நேரங்களில், காலம் காட்சிகளை மாற்றி எண்ணங்களை சிதைக்க முயலும். ஆனால், எண்ணங்கள் சிதையாது போனால், எண்ணியவரை சிதைத்துவிடும். சாவித்திரியின் எண்ணத்தை சிதைக்க, காலத்தால் முடியாமல் போக, எண்ணியவரை சிதைத்து விட்டது.
ஒருவர் வீழ்ந்து விட்டால், கூடி நின்று, கை தட்டி, இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லும் சமுதாயம், சாவித்திரியின் வாழ்க்கையிலும் அதையே செய்தது.
சாவித்திரி, தெலுங்கில், சிரஞ்சீவி என்ற படத்தை இயக்கிய காலகட்டத்தில், அந்தச் செய்தி வந்தது. அது, தமிழ் சினிமாவின் பிரபல நடிகையோடு, ஜெமினி, 'அனுபவம் புதுமை' என்று அன்பு மழை பொழிவதாக! அதைக் கேட்டதும், அவரால் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.
உடல், பொருள், ஆவி அனைத்தும் ஜெமினியே என்று வாழ்ந்த அவரை, அந்தச் செய்தி ரணம் கொள்ளச் செய்தது.
காதலுக்கு தேவை நம்பகத்தன்மை; தன் காதல் கணவனை சந்தேகப்பட்டால், அது, தன்னையே கொச்சைப்படுத்தும் செயல் என்பதால் அமைதியானார், சாவித்திரி. ஆனாலும், அவரும் சராசரிப் பெண் தானே! மன உளைச்சல், அவரைத் துரத்தியது.
இச்சூழ்நிலையில், அவர் இயக்கிய படங்கள் தோல்வியைத் தழுவ, பைத்தியம் பிடித்தது போல ஆனார், சாவித்திரி.
'நீ பானுமதியை விட திறமைசாலி; உன்னால் பல வெற்றிப் படங்களை இயக்க முடியும்...' என்று சாவித்திரியை தூண்டி விட்ட தோழியர், சத்தமின்றி கழன்று கொள்ள, தனிமையை உணர்ந்தார், சாவித்திரி.
வாய் விட்டு அழக் கூட முடியாத சூழ்நிலையில், எல்லாம் வெறுமையாகவே தெரிந்தது. இருட்டுக்குள் சிக்கிய குழந்தை, எங்காவது வெளிச்சம் வருமா என, வாய் விட்டுக் கதறி அழும். அதுபோல, சாவித்திரிக்கு அழ வேண்டும் போல இருந்தது.
ஜெமினி காட்டிய பாசத்திலோ, அன்பிலோ எந்த மாற்றமும் இருக்கவில்லை. எப்போதும் போல, 'கலகல'வென்ற பேச்சும், கள்ளமில்லாத சிரிப்பும், அவரிடம் அப்படியே இருந்தது.
சாவித்திரியை, 'அம்மாடி' என்றழைத்து, தலையை வருடி ஆறுதல்படுத்தவும் தவறவில்லை. 'இது உண்மையா அல்லது வந்த செய்தி உண்மையா...' என, குழப்பத்தில் தவித்தார், சாவித்திரி.
'மனக்குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் மது தான் மருந்தாக உதவும்...' என தோழி ஒருத்தி சொல்ல, கொஞ்சம் அதிகமாகவே மதுவின் பக்கம் சாய்ந்து போனார். அதுவரை, விருந்துகளில் மட்டுமே மது அருந்தியவர், அடிக்கடி அருந்தத் துவங்கினார்.
'வீட்டில் எல்லாரையும் எதிர்த்து, தான் தேடிய மணவாழ்க்கை, கடைசி வரை நிலைக்காமல் போய்விடுமோ...' என்ற மன இறுக்கத்தில் தவித்த சாவித்திரி மனதில், மணமாலை படம் தயாரிப்பில் இருந்தபோது நடந்த நிகழ்வு, மனதில் நிழலாடியது...
கடந்த, 1956ல், சாவித்திரி, ஜெமினியை கரம் பிடித்த சில மாதங்களில், நடிகர் ஸ்ரீராம் தன் ஜனதா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம், மணமாலை. இப்படத்தில், ஜெமினி, சாவித்திரி, ஸ்ரீராம், நாகையா, தங்கவேலு மற்றும் மைனாவதி ஆகியோர் நடித்தனர்.
படப்பிடிப்பின் போது, நடனக் குழுவில், புதிதாக ஒரு நடனக் கலைஞர் சேர்ந்திருந்தார்; அவர் ஜெமினியின் தீவிர ரசிகை.
படப்பிடிப்பு நேரத்தில், ஜெமினிக்கு இடைவெளி கிடைக்கும் போதெல்லாம், அந்த நடனக் கலைஞர் ஓடோடி வந்து, ஜெமினியிடம் பேசியபடி இருந்தார். இதைத் தொலைவில் இருந்து பார்த்த சாவித்திரியின் முகத்தில், பெண்களுக்கே உரிய பொறாமையின் சாயல் படிந்தது. இதனால், ஜெமினியிடம் பேசாமல், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவர், இரண்டு நாட்கள் அவரிடம் பேசவேயில்லை.
சாவித்திரியை சமாதானப்படுத்த, அவரையே சுற்றிச் சுற்றி வந்தார், ஜெமினி.
இந்நினைவு வந்ததும் சாவித்திரியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
'எப்போது நேரம் கிட்டும்... ஜெமினியையும், சாவித்திரியையும் பிரித்து விடலாம்...' என, சாவித்திரியின் உறவினர்கள் சிலர், இலவு காத்த கிளி போலக் காத்திருந்தனர்.
சாவித்திரியின் செல்வத்தில் கவலையில்லாமல் காலத்தை கழிக்க கணக்கிட்டுக் காத்திருந்தவர்கள், இச்சூழலைப் பயன்படுத்தி ஆறுதல் கூறுவது போல, சாவித்திரியின் மனதில், சலனம் என்ற நெருஞ்சி முட்களை, தூவ ஆரம்பித்தனர்.
தொடரும்.

- ஞா. செ. இன்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X