அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

வானொலியில், முன்பு, 'இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டிருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், 'இன்று ஒரு தகவல்' தந்தபடி இருந்தார், ஒரு பெண். அவர் யார் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என், 'லேண்ட் லைன்' தொலைபேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் அழைப்பவர்கள் தாங்கள் சொல்ல வந்த சேதியை பதிவு செய்து விடலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, தினமும் ஒரு ஜோக், தகவல், கிசுகிசு, அறிவிப்பு, செய்தி என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து விடுகிறார், அப்பெண்.
என் தொலைபேசி எண்ணை எப்படி கண்டுபிடித்தார் அல்லது யார் கொடுத்தது என, கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், கொடுத்தவருக்கு நன்றி; பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே...
அன்று, அலுவலகம் வந்ததும், 'ஆன்சரிங் மிஷினை' இயக்கினேன். அதே பெண்ணின் குரல்...
'இன்று ஒரு ஜோக்...' என்றவர், சிறிது இடை வெளி விட்டு, ஜோக்கைக் சொல்ல ஆரம்பித்தார்...
'அடல்ட்ஸ் ஒன்லி சர்ட்டிபிகேட் பெற்ற படத்தில் ஒரு காட்சி... நீச்சல் குளத்தில் இறங்கப் போகுமுன், கதாநாயகி, தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றுகிறாள்... கடைசியாக, உள்ளாடைகளை களைய எத்தனிக்கும் சமயம், 'விர்'ரென்று ஒரு கார் போகிறது. கார் சென்றதும் பார்த்தால், கதாநாயகி, தண்ணீரில் முகம் மட்டும் தெரிய நீந்திக் கொண்டிருக்கிறாள்.
'ஒரு சர்தார்ஜி, தினந்தோறும் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தார். ஒரு நாள் சர்தார்ஜியிடம், 'இந்த சினிமா அவ்ளோ நல்லாவா இருக்கு... விடாமல் பாக்குறீங்களே...' எனக் கேட்டார், தியேட்டர் மேனேஜர்.
'அதற்கு, 'இல்லை... ஒரு நாளாவது அந்தக் கார், ஒரு நிமிடமாவது தாமதமாக வராதா என்ற நம்பிக்கையில் தான் வருகிறேன். சொல்லி வைத்தாற் போல, அது எப்போதும் போலத்தான் வந்து தொலைக்கிறது...' என்றாராம் சர்தார்ஜி...'
- இந்த ஜோக்கைச் சொல்லி, 'ஜோக் எப்படி...' எனக் கேட்டு, கலகலவெனச் சிரித்து, தொடர்பைத் துண்டித்திருந்தார்.
சர்தார்ஜிகளை கிண்டலடித்து இங்கு நாம் ஜோக் அடிக்க, பஞ்சாபில், இதே ஜோக்கை மதராசி, அதாவது, தமிழனை மையப்படுத்தி கிண்டலடிக்கின்றனர்.
இந்தியனுக்கு, அது எந்த மாநிலத்தவனாக இருக்கட்டும், உண்ண உணவிருக்கிறதோ இல்லையோ, தமாஷ் உணர்ச்சிக்கு பஞ்சமில்லை!

லென்ஸ் மாமாவுக்கு, கடவாய் பல்லில் வலி... கன்னம் கொழுக்கட்டையாக வீங்கி விட்டது. 'தெரிஞ்ச டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போப்பா...' என்றார்.
தமிழ்ப் பற்று கொண்ட பல் டாக்டர் அன்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார்; அவரிடம் அழைத்துச் சென்றேன். அவர், மாமாவின் பல்லை பரிசோதித்துக் கொண்டிருந்தார்; வரவேற்பு அறையில், 'காலச் சுவடுகள்' என்ற நூல் கிடந்தது.
அதில், கண்ணதாசன், பெண்களைப் பற்றி எழுதி இருந்தார்.
இதோ அது:
இறைவன் சிருஷ்டியில் பெண்மை ஓர் அதிசயம்.
அறிவில் தெளிந்த முனிவர்கள் கூட அறிய முடியாத ரகசியம் பெண்மை; படைக்கும் கடவுளும், பாதுகாக்கும் கடவுளும் கூட, அந்தக் கிணற்றில் விழுந்திருக்கின்றனர்.
மகா வீரர்களையே பேதைகளாக்கிய நாட்டிய சாலை; ஆழம் தெரியாத சுரங்கம். இறங்குகிறவனை மூச்சுத் திணற வைக்கும் சமுத்திரம்.
'உண்டால் தான் மயக்குகிறது மது; கண்டாலே மயக்குகிறாள் மாது...' என்றான் வள்ளுவன்.
பச்சைப் பசேல் என்று தலை தூக்கி நின்று, பவள நிற மலர்களை உதிர்த்து, சில்லென்ற காற்றுக்கு மெல்லிய நடனமாடும் பூஞ்செடிகள் போல, நளின தாரகைகளின் மயக்கு முகங்களும், சற்றே செறிந்த கூந்தலும், தங்க கொடி போன்ற இடையும், எவ்வளவு நல்லவனையும் கிறங்கடித்து விடுகின்றன.
சில பெண்களுக்கு சிரிப்பு, சில பெண்களுக்கு இனிமையான குரல், சில பெண்களுக்கு கண்கள், சில பெண்களுக்கு அழகான கூந்தல்...
ஒவ்வொருத்தியிடமும் ஒவ்வொரு ஆயுதம் இருக்கிறது.
பாலைவனத்து நீரோடைகள் பசியையும், தாகத்தையும் அதிகப்படுத்துகின்றன; பார்வை கலக்கிறது. புதிய உலகுக்கு இழுத்துச் செல்கின்றன.
அங்கே, ஏமாற்றம் காத்திருந்தால், உயிர் சாதாரணமாகி விடுகிறது; தர்ம தேவதை காத்திருந்தால், உலகம் சாதாரணமாகி விடுகிறது.
மனித இனத்தின் பலவீனத்தை வேடிக்கை பார்க்கவே இறைவன் பெண்ணைப் படைத்தான்!
- இப்படி எழுதியுள்ளார்; உண்மைதானா? அறிந்தவர் எழுதலாமே!
(மாமாவின் பல்லைப் பிடுங்கியே ஆகவேண்டுமென்று சொல்லிவிட்டார் டாக்டர்!)

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூடிப் பேசுகின்றனர், சங்கம் வைத்து, தலைவர், செயலர் போன்ற அலுவலர்களை தமக்குள்ளேயே தேர்வு செய்கின்றனர். ஆனால், ஐ.பி.எஸ்., அல்லாத போலீசார், சங்கம் அமைக்கக் கூடாது என்கின்றனர்.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது, போலீஸ் வேலை நிறுத்தம் நடந்தது; அதை, அவர் ஒரே நாளில் முறியடித்தாராம். எப்படி என்று தம் நூலில் விளக்கியுள்ளார், முன்னாள் ஐ.ஜி., எப்.வி.அருள்...
கடந்த, 1952ல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, போலீஸ் வேலை நிறுத்தத்தை ஒரே நாளில் முறியடித்தார். அந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிய, 200 யூனியன் தலைவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து, அரசியல் சட்டத்தில் உள்ள விசேஷப் பிரிவுகளையும் பயன்படுத்தி, வேலையிலிருந்தும் நீக்கினார்.
இந்த வேலை நிறுத்தத்தின் போது சென்னை நகர போலீஸ் கமிஷனராக தேவசகாயம் இருந்தார். நான், சட்டம் - ஒழுங்கிற்கான துணை கமிஷனராக இருந்தேன். பரபரப்பூட்டிய இவ்வேலை நிறுத்தத்தின் போது, சீனியரான ஒரு போலீஸ் அதிகாரிக்கு என்ன செய்தி வந்ததோ தெரியவில்லை. எங்களையெல்லாம் அழைத்து, 'கைது செய்த போலீசாரை நாம் விட்டு விட வேண்டியது தான்! எல்லா போலீஸ்காரர்களுமே ஸ்ட்ரைக் செய்யப் போகின்றனராம்... மலபார் ஸ்பெஷல் போலீஸ் படையும் ஸ்ட்ரைக்கில் சேரப் போகிறதாம். அதோடு, ரவுடிகள் நகரில் ரகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் செய்தி...' என்றார், அந்த சீனியர் போலீஸ் அதிகாரி.
ஸ்ட்ரைக் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட போலீசாரை வெளியே விடுவதற்கு, நாங்கள் இருவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். 'முதல் அமைச்சரிடம் கேட்கலாம்...' என்று ராஜாஜியிடம் அழைத்துச் சென்றார், அந்த சீனியர் அதிகாரி.
சோபாவில் அமர்ந்தபடி, சீனியர் அதிகாரி சொல்லியவற்றை அமைதியாகக் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டார், ராஜாஜி. பின், அவரை பார்த்து, 'கைது செய்தவர்களை விடுவதற்கில்லை; முதலில் நீங்கள் ஸ்ட்ரைக்கை முறியடிக்கும் வேலையைப் பாருங்கள்...' என்றார்.
போலீஸ் வேலை நிறுத்தம் முறியடிக்கப்பட்ட மறுநாள், அந்த சீனியர் அதிகாரியை வரவழைத்து, தவறான தகவல்களைக் கொடுத்து பயமுறுத்தியதற்காக, உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டு போகும்படி சொல்லி விட்டார் ராஜாஜி.
அந்த வேலை நிறுத்தத்தில் துணிச்சலுடன் ராஜாஜி எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்து, அவரை வழிபடவே ஆரம்பித்து விட்டேன்.
- புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
10-ஜூலை-201614:18:51 IST Report Abuse
manivannan நான் மிகவும் வருந்து கிறேன். என் முந்தைய கருத்து பதிவில் "ராஜாஜி அவர்களை குறித்து எழுதும் போது அவர் பதவிக்காக அரசியலுக்கு வந்தவர் 'என்று உள்ளது .. அல்ல என்பது தவறுதலாக விட்டு போய்விட்டது.. அதை " ராஜாஜி அவர்கள் பதவிக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல " என்று வாசிக்கும்படி தாழ்மையாக கேட்டு க்கொள்கிறேன். திரு கதிரழகன் அவர்கள் கருத்து பதிவு, மிகவும் அரிய விஷயங்களை அறிய தந்திருப்பதற்கு நன்றி .
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
11-ஜூலை-201601:52:43 IST Report Abuse
கதிரழகன், SSLC@sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா: ரொம்ப வருத்தப்படாதீக. உங்களோட அடுத்த வாக்கியம் தெளிவா காட்டிச்சு ஒரு "இல்லை" விட்டு போயிடுச்சின்னு. ராஜாஜி பத்தி பொழுதன்னிக்கும் சொல்லிக்கிட்டே இருக்கலாம். அவரை சென்னை சட்ட சபையிலே பிரகாசம் ன்னு ஒரு ஆந்திர கம்யூனிஸ்ட்டு காரரு தெலுங்கு கெட்ட வார்த்த சொல்லி திட்டிட்டாரு (தாலி அறுத்தவ புள்ளைன்னு அர்த்தம் வரும் ) . ஒடனே ராஜாஜி கட்சி காரங்க கொத்திச்சு போயி அந்த வார்த்தைய சபை குறிப்புலேந்து நீக்கணும் ன்னு தீர்மானம் கொண்டு வந்தாக. அந்த தீர்மானத்துக்கு எதிர்த்து ஒட்டு போட்டாரு ராஜாஜி. "சொன்ன வார்த்த சிந்தின பாலு. திருப்பி அள்ள முடியாது. மதிப்பிற்குரிய உறுப்பினர் பிரகாசம் அவர்கள் எந்த மாதிரியான வார்த்தை எல்லாம் பேசக்கூடியவர்னு சரித்திரத்துக்கு தெரியணும். ஆகையினாலே இந்த வார்த்தையை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவதை எதிர்க்கிறேன்"ன்னு பேசினாரு. முகத்துதிக்கு மயங்காம, வசவுக்கு கோபப்படாத நிர்சலனா பற்றற்ற துறவி மாதிரி இல்ல இருந்தாரு அவரு. சொந்த வாழ்க்கையில தாங்க முடியாத சோகம் அவருக்கு வந்தபோது எழுதின பாட்டுல்ல "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை.. வேண்டியதை தர வேங்கடவன் நீ இருக்க... நித்தம் நின் மார்பில் வாழும் கருணை கடலன்னை இருக்க என்ன குறை எனக்கு? குறை ஒன்றுமில்லை மணி வண்ணா கோவிந்தா.. கோவிந்தா... கோவிந்தா... ". சாதாரண மனுஷனால அப்படி இருக்க முடியுமா? மாமனிதன் இல்ல அவுரு...
Rate this:
Share this comment
Cancel
Sekar - MM Nagar  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூலை-201611:10:43 IST Report Abuse
Sekar காமராசர்,Rajaji,கக்கன்,ஓமந்தூரார்,குமாரசாமிராசா, Jeeva போன்றவர்கள் தலைவர்கள். அடுத்தடுத்து வரும் தலைமுறைகளைப் பற்றி சிந்தித்தவர்கள். தற்போது உள்ளவர்கள் தலைவர்களல்ல, அரசியல்வாதிகள். அவர்கள் சேவையாக நினைத்தவர்கள். இவர்கள் தொழிலாக மாற்றிவிட்டவர்கள். அதனால் தங்களது சொந்த தலைமுறைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயல்படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
10-ஜூலை-201610:43:43 IST Report Abuse
manivannan அருமையான விஷயம் இதிலே முதலில் கவனிக்க வேண்டியது ராஜாஜி ஒரு முதலில் இரு சிறந்த வக்கீல். நன்கு படித்த அறிஞர். அதன் பின்பே அரசியல் வாதி. அவர் பதவிகளுக்காக அரசியல் செய்ய வந்தவர். சுதந்திர போராட்டத்துக்காக வந்தவர். அடுத்து அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளோடு பழகி இருந்தவர் என்பதனால் அரசியலோடு , சட்ட அறிவோடு அட்மினிஸ்டரேஷன் அறிவையும் குறைவில்லாமல் பெற்றிருந்தார். சமயோசிதம் , நிதானம் அவர் பண்பு.. அடுத்து இந்திய நாட்டின் முதல் கவர்னர் ஜெனெரல் அவரே கடைசி கவர்னர் ஜெனெரல் அவரே. அவர் வயதின் காரணமாக அவர் ஆரம்பித்த " ஸ்வராஜ்ய "கட்சியை நடத்த முடியாமற் போயிற்று. மிக மிக எளிமையான வாழ்க்கை வாஸ்த்த அவர் , காந்தி நேரு விவேகானந்தர், நேதாஜி அம்பேத்கர் இன்னும் பலர் இவர்களெல்லாரும் நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம் பொக்கிஷங்கள். அப்பேர்ப்பட்ட ராஜாஜி அவர்கள் இந்த ஸ்ட்ரைக் எல்லாம் சட்ட அறிவோடு இருந்ததனால் தான் ஒரே படியாக ஒடுக்கி கெடுபிடி எதுவும் இன்றி அமைதி காத்து அடி கொடுத்தார். இன்றைக்கு நம் தலைவர்களுக்கு இந்த அறிவு, ஞானம் , நிதானம். எளிமை, மக்கள் பற்றிய கவலை உண்டா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X