அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

வானொலியில், முன்பு, 'இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டிருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், 'இன்று ஒரு தகவல்' தந்தபடி இருந்தார், ஒரு பெண். அவர் யார் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என், 'லேண்ட் லைன்' தொலைபேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் அழைப்பவர்கள் தாங்கள் சொல்ல வந்த சேதியை பதிவு செய்து விடலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, தினமும் ஒரு ஜோக், தகவல், கிசுகிசு, அறிவிப்பு, செய்தி என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து விடுகிறார், அப்பெண்.
என் தொலைபேசி எண்ணை எப்படி கண்டுபிடித்தார் அல்லது யார் கொடுத்தது என, கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், கொடுத்தவருக்கு நன்றி; பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே...
அன்று, அலுவலகம் வந்ததும், 'ஆன்சரிங் மிஷினை' இயக்கினேன். அதே பெண்ணின் குரல்...
'இன்று ஒரு ஜோக்...' என்றவர், சிறிது இடை வெளி விட்டு, ஜோக்கைக் சொல்ல ஆரம்பித்தார்...
'அடல்ட்ஸ் ஒன்லி சர்ட்டிபிகேட் பெற்ற படத்தில் ஒரு காட்சி... நீச்சல் குளத்தில் இறங்கப் போகுமுன், கதாநாயகி, தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றுகிறாள்... கடைசியாக, உள்ளாடைகளை களைய எத்தனிக்கும் சமயம், 'விர்'ரென்று ஒரு கார் போகிறது. கார் சென்றதும் பார்த்தால், கதாநாயகி, தண்ணீரில் முகம் மட்டும் தெரிய நீந்திக் கொண்டிருக்கிறாள்.
'ஒரு சர்தார்ஜி, தினந்தோறும் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தார். ஒரு நாள் சர்தார்ஜியிடம், 'இந்த சினிமா அவ்ளோ நல்லாவா இருக்கு... விடாமல் பாக்குறீங்களே...' எனக் கேட்டார், தியேட்டர் மேனேஜர்.
'அதற்கு, 'இல்லை... ஒரு நாளாவது அந்தக் கார், ஒரு நிமிடமாவது தாமதமாக வராதா என்ற நம்பிக்கையில் தான் வருகிறேன். சொல்லி வைத்தாற் போல, அது எப்போதும் போலத்தான் வந்து தொலைக்கிறது...' என்றாராம் சர்தார்ஜி...'
- இந்த ஜோக்கைச் சொல்லி, 'ஜோக் எப்படி...' எனக் கேட்டு, கலகலவெனச் சிரித்து, தொடர்பைத் துண்டித்திருந்தார்.
சர்தார்ஜிகளை கிண்டலடித்து இங்கு நாம் ஜோக் அடிக்க, பஞ்சாபில், இதே ஜோக்கை மதராசி, அதாவது, தமிழனை மையப்படுத்தி கிண்டலடிக்கின்றனர்.
இந்தியனுக்கு, அது எந்த மாநிலத்தவனாக இருக்கட்டும், உண்ண உணவிருக்கிறதோ இல்லையோ, தமாஷ் உணர்ச்சிக்கு பஞ்சமில்லை!

லென்ஸ் மாமாவுக்கு, கடவாய் பல்லில் வலி... கன்னம் கொழுக்கட்டையாக வீங்கி விட்டது. 'தெரிஞ்ச டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போப்பா...' என்றார்.
தமிழ்ப் பற்று கொண்ட பல் டாக்டர் அன்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார்; அவரிடம் அழைத்துச் சென்றேன். அவர், மாமாவின் பல்லை பரிசோதித்துக் கொண்டிருந்தார்; வரவேற்பு அறையில், 'காலச் சுவடுகள்' என்ற நூல் கிடந்தது.
அதில், கண்ணதாசன், பெண்களைப் பற்றி எழுதி இருந்தார்.
இதோ அது:
இறைவன் சிருஷ்டியில் பெண்மை ஓர் அதிசயம்.
அறிவில் தெளிந்த முனிவர்கள் கூட அறிய முடியாத ரகசியம் பெண்மை; படைக்கும் கடவுளும், பாதுகாக்கும் கடவுளும் கூட, அந்தக் கிணற்றில் விழுந்திருக்கின்றனர்.
மகா வீரர்களையே பேதைகளாக்கிய நாட்டிய சாலை; ஆழம் தெரியாத சுரங்கம். இறங்குகிறவனை மூச்சுத் திணற வைக்கும் சமுத்திரம்.
'உண்டால் தான் மயக்குகிறது மது; கண்டாலே மயக்குகிறாள் மாது...' என்றான் வள்ளுவன்.
பச்சைப் பசேல் என்று தலை தூக்கி நின்று, பவள நிற மலர்களை உதிர்த்து, சில்லென்ற காற்றுக்கு மெல்லிய நடனமாடும் பூஞ்செடிகள் போல, நளின தாரகைகளின் மயக்கு முகங்களும், சற்றே செறிந்த கூந்தலும், தங்க கொடி போன்ற இடையும், எவ்வளவு நல்லவனையும் கிறங்கடித்து விடுகின்றன.
சில பெண்களுக்கு சிரிப்பு, சில பெண்களுக்கு இனிமையான குரல், சில பெண்களுக்கு கண்கள், சில பெண்களுக்கு அழகான கூந்தல்...
ஒவ்வொருத்தியிடமும் ஒவ்வொரு ஆயுதம் இருக்கிறது.
பாலைவனத்து நீரோடைகள் பசியையும், தாகத்தையும் அதிகப்படுத்துகின்றன; பார்வை கலக்கிறது. புதிய உலகுக்கு இழுத்துச் செல்கின்றன.
அங்கே, ஏமாற்றம் காத்திருந்தால், உயிர் சாதாரணமாகி விடுகிறது; தர்ம தேவதை காத்திருந்தால், உலகம் சாதாரணமாகி விடுகிறது.
மனித இனத்தின் பலவீனத்தை வேடிக்கை பார்க்கவே இறைவன் பெண்ணைப் படைத்தான்!
- இப்படி எழுதியுள்ளார்; உண்மைதானா? அறிந்தவர் எழுதலாமே!
(மாமாவின் பல்லைப் பிடுங்கியே ஆகவேண்டுமென்று சொல்லிவிட்டார் டாக்டர்!)

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூடிப் பேசுகின்றனர், சங்கம் வைத்து, தலைவர், செயலர் போன்ற அலுவலர்களை தமக்குள்ளேயே தேர்வு செய்கின்றனர். ஆனால், ஐ.பி.எஸ்., அல்லாத போலீசார், சங்கம் அமைக்கக் கூடாது என்கின்றனர்.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது, போலீஸ் வேலை நிறுத்தம் நடந்தது; அதை, அவர் ஒரே நாளில் முறியடித்தாராம். எப்படி என்று தம் நூலில் விளக்கியுள்ளார், முன்னாள் ஐ.ஜி., எப்.வி.அருள்...
கடந்த, 1952ல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, போலீஸ் வேலை நிறுத்தத்தை ஒரே நாளில் முறியடித்தார். அந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிய, 200 யூனியன் தலைவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து, அரசியல் சட்டத்தில் உள்ள விசேஷப் பிரிவுகளையும் பயன்படுத்தி, வேலையிலிருந்தும் நீக்கினார்.
இந்த வேலை நிறுத்தத்தின் போது சென்னை நகர போலீஸ் கமிஷனராக தேவசகாயம் இருந்தார். நான், சட்டம் - ஒழுங்கிற்கான துணை கமிஷனராக இருந்தேன். பரபரப்பூட்டிய இவ்வேலை நிறுத்தத்தின் போது, சீனியரான ஒரு போலீஸ் அதிகாரிக்கு என்ன செய்தி வந்ததோ தெரியவில்லை. எங்களையெல்லாம் அழைத்து, 'கைது செய்த போலீசாரை நாம் விட்டு விட வேண்டியது தான்! எல்லா போலீஸ்காரர்களுமே ஸ்ட்ரைக் செய்யப் போகின்றனராம்... மலபார் ஸ்பெஷல் போலீஸ் படையும் ஸ்ட்ரைக்கில் சேரப் போகிறதாம். அதோடு, ரவுடிகள் நகரில் ரகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் செய்தி...' என்றார், அந்த சீனியர் போலீஸ் அதிகாரி.
ஸ்ட்ரைக் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட போலீசாரை வெளியே விடுவதற்கு, நாங்கள் இருவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். 'முதல் அமைச்சரிடம் கேட்கலாம்...' என்று ராஜாஜியிடம் அழைத்துச் சென்றார், அந்த சீனியர் அதிகாரி.
சோபாவில் அமர்ந்தபடி, சீனியர் அதிகாரி சொல்லியவற்றை அமைதியாகக் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டார், ராஜாஜி. பின், அவரை பார்த்து, 'கைது செய்தவர்களை விடுவதற்கில்லை; முதலில் நீங்கள் ஸ்ட்ரைக்கை முறியடிக்கும் வேலையைப் பாருங்கள்...' என்றார்.
போலீஸ் வேலை நிறுத்தம் முறியடிக்கப்பட்ட மறுநாள், அந்த சீனியர் அதிகாரியை வரவழைத்து, தவறான தகவல்களைக் கொடுத்து பயமுறுத்தியதற்காக, உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டு போகும்படி சொல்லி விட்டார் ராஜாஜி.
அந்த வேலை நிறுத்தத்தில் துணிச்சலுடன் ராஜாஜி எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்து, அவரை வழிபடவே ஆரம்பித்து விட்டேன்.
- புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X