அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

அன்புமிக்க சகோதரிக்கு —
என் வயது, 70; சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில், வறுமையை உணர்ந்து, சுய முயற்சியால், முதுகலைப் பட்டம் பெற்று, அரசுப் பணியாற்றி, ஓய்வூதியராக இருக்கிறேன். எனக்கு அமைந்த மனைவி சிக்கனமும், நிர்வாக திறனும் பெற்றவள் என்பதால், சொந்த வீடு, நிலம் என அனைத்தும் பெற்று, பிறர் மதிக்கும் அளவுக்கு வாழ்ந்து வருகிறோம்.
எனக்கு மூன்று பெண்கள்; ஒரு ஆண். மகனுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்ததால், டிப்ளமோவோடு நின்று விட்டான். அவன் விரும்பியபடி, சுயதொழில் துவங்கி, நிறைவாக வளர்ந்தான். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டோம்.
என் மகன் ஆடம்பரமாக செலவழித்து வாழ்பவன் என்பதால், கிராமத்து பெண் என்றால், சிக்கனமாக இருப்பாள் என நினைத்து, கிராமத்து பெண்ணை அவனுக்கு மணமுடித்தோம். இறைவன் அருளால், அழகான ஆண் குழந்தை பிறந்தது. குடும்பம் நிம்மதியாக நகர்ந்தது, நான்கு ஆண்டுகள் தான்!
என் மகன், தன் சகோதரிகளிடம் பாசமாக இருப்பான். கோடை விடுமுறைக்கு, தங்கள் குழந்தைகளுடன் வீட்டுக்கு வரும் சகோதரிகள் மற்றும் அவர்கள் பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவான். அதை, அனைவருடனும் சேர்ந்து சாப்பிட ஆசைப்பட்டு, மருமகளைக் கூப்பிட்டால், அவள் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவாள். அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எங்கள் பகுதியில், குழந்தைகள் கல்வி பயில, எல்லா வசதியும் உண்டு. ஆனால், என் பேரனை, நகரத்தில் தான் படிக்க வைப்பேன் என்றும், அதற்காக வெளியூரில் கடை, வீடு பார்த்து போய் விட வேண்டும் என்றும், என் மகனை வற்புறுத்தி, சம்மதிக்க வைத்தாள், மருமகள்.
'நீ வெளியில் சென்று சிரமப்படுவதை எங்களால் பார்க்க முடியாது. எனவே, எண்ணத்தை மாற்றிக் கொள்...' என்று நானும், என் மனைவியும் மன்றாடினோம். அதற்கு, 'நான் உங்களுடன் இருக்கணுமா... மனைவி, குழந்தையை பிரியணுமா...' என்று கேட்டான் மகன். அதற்கு மேல், அவன் விஷயத்தில் தலையிடாமல், அவன் விரும்பியபடி நகரத்தில் கடை, வீடு பார்த்து தொழில் செய்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தோம்.
ஒரு ஆண்டு முடிந்தது. எங்களிடம் இருந்து பிரித்த மகனை, தன் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்த மருமகள், என் மகனிடம், 'உங்கப்பா, பொம்பளப் பிள்ளைகளுக்கே எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, உன்னை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார். உன் சொத்தை இப்போதே வாங்கினால் தான் நாம் பிழைக்க முடியும்; இல்லன்னா, நான் என் குழந்தையுடன் தாய் வீடு சென்று விடுகிறேன்...' என்று தினமும் சண்டை போட்டு, சமைப்பதே இல்லை; இவனும், ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுள்ளான்.
இந்த மன உளைச்சல் தாங்காமல், தன் நண்பர்களிடம் புலம்பியுள்ளான், என் மகன்.
அவ்வப்போது, மருமகளின் பெற்றோர் போன் செய்து, 'கோரிக்கை ஏற்கப்பட்டதா, இல்லையா...' என்று விசாரித்துள்ளனர். மகன் எங்களிடமும் சொத்து கேட்பது இல்லை; மனைவி கருத்தையும் செயல்படுத்த முடியவில்லை. பல நாட்கள், சரியான உணவின்றி இருந்துள்ளான்.
ஒருநாள் இரவில், அவர்களுக்குள் நடந்த விவாதத்தில், குழந்தையுடன் தான் தாய் வீடு செல்வதாகவும், 'நீ எக்கேடாவது கெட்டு ஒழி; நீ ஒழிந்த பின், உன் சொத்து எனக்கு சேர்ந்து விடும்...' எனச் சொல்லி, உறங்கச் சென்றுள்ளாள், மருமகள். அளவற்ற மனவுறுதியுள்ள என் மகன், அன்றிரவே மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்டான்.
வீட்டு உரிமையாளர் தகவல் தந்தார்.
நாங்கள், என் ஒரே மகனின் உடலைப் பார்த்து, அழக்கூட முடியாத அளவுக்கு, ரவுடிகளை வைத்து, எங்களை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்றனர், மருமகள் வீட்டினர். நாங்கள் தான் சொத்து தராமல், என் மகனை கொன்று விட்டதாக கேவலமாக பேசினர். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சனி, ஞாயிற்று கிழமை காரணமாக, அடக்கம் செய்வது தள்ளிப் போகக் கூடாது என, அமைதி காத்தோம்.
காரியங்கள் எல்லாம் முடிந்த பின், 'என்ன செய்யப் போறீர்கள்...' என்று மருமகள் தரப்பில் கேட்டனர். 'பிள்ளையை படிக்க வைக்கிறேன்; மருமகளையும், மேல் படிப்பு படிக்க வைத்து, சுயமாக நிற்க வைக்கிறேன்...' என்றேன்.
மகனுக்குப் பின், பேரன் இருக்கிறான். அவனை படிக்க வைத்து ஆளாக்கி, மகன் உருவில் அவனைப் பார்த்து, ஆறுதல் அடையலாம் என்று நினைத்தோம்.
ஒரு மாதம் கழித்து, மருமகள் வீட்டார், 20 பேருடன் வேனில் வந்து, 'இனி, எங்கள் மகள் இங்கு இருக்க முடியாது; அவளுக்கு சேர வேண்டிய எல்லாவற்றையும் இப்போதே கொடுத்து விடுங்கள். இல்லையேல், குழந்தையை உங்களால் பார்க்க முடியாது. எங்களின் பொருட்களைக் கொடுத்து விடுங்கள்...' என்றனர். அவர்களின் பொருட்கள், நான் போட்ட நகைகள், குழந்தையின் நகைகள் அனைத்தையும் கொடுத்து, 'எங்காவது இருங்கள்; அவ்வப்போது குழந்தையுடன் வந்து செல்லுங்கள்...' என்று சொல்லி, அனுப்பி வைத்தோம்.
ஆனால், வரவில்லை; நாங்கள் சென்று பார்த்த போது, என் பேரன் என்னைக் கட்டிப் பிடித்து போக மறுத்தவன், 'நீங்கள் தான் எங்கப்பாவை சாகடித்து விட்டீர்கள்...' என்றான். அந்த பிஞ்சு மனதில் நஞ்சை ஊட்டி வளர்த்துள்ளாள், மருமகள்.
மறுமுறை சென்றபோது, எங்களைப் பார்க்காமல், முகத்தை திருப்பிக் கொண்டவன், 'எனக்கு தாத்தா, ஆயா இருக்கின்றனர்; நீங்கள் ஒன்றும் பார்க்க வராதீர்கள்...' என்றான், பேரன். இதைக் கேட்டதும் என் மனம் பதை பதைத்தது; என்ன செய்வதென விளங்கவில்லை.
இறுதியாக, மகன் உருவில், பேரன் இருக்கிறான் என்று ஆறுதல் அடைந்த எங்களுக்கு, அவர்களின் மோசமான செயல், மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தன் வருத்தத்தை மறைத்து, என்னைத் தேற்றுகிறாள், என் மனைவி; நான், அவளைத் தேற்றுகிறேன். வேறு எந்த பெற்றோருக்கும் எங்கள் நிலை ஏற்படக் கூடாது. பணம், சொத்து என்று உயிரையே மாய்க்க வைத்து, எங்கள் மீதே பழி சொல்வதை எப்படித் தாங்குவது... இனி, நாங்கள் என்ன செய்வது? ஆலோசனை தாருங்கள்.
இப்படிக்கு, சகோதரன்.

அன்பு பெரியவருக்கு —
உங்களது சோகக் கதை என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. நிறைய குடும்பங்களில் இந்த அவலம் நடக்கிறது.
பொன் முட்டையிடும் வாத்தை, பேராசைக்காரன் அறுத்து பார்த்தது போல, உங்கள் மருமகள், சொத்துக்காக தன் கணவனை தற்கொலை செய்ய வைத்து விட்டாள். மருமகள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்தீர்கள் என்றால், மருமகளும், அவள் வீட்டாரும், கம்பி எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால், மருமகள் வீட்டார் முந்திக் கொண்டு, உங்களையே குற்றம் சாட்டி, ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளனர்.
மகனின் மரணத்திற்கு பின், மருமகளையும், பேரனையும் நீங்கள் பராமரிப்பது இயலாத காரியம். உங்களுடைய மகனின் தற்கொலைக்கு முழு முதல் காரணம், உங்கள் மருமகள் தான் என, அப்பட்டமாக தெரியும் போது, நீங்கள் எதற்கு மருமகளை மேலே படிக்க வைத்து, வேலைக்கு அனுப்புவதாக வாக்குறுதி தருகிறீர்கள்... தியாகி பட்டம் பெறவா?
பிறக்கும் போது, நாம் எந்த உறவையும் கூட கொண்டு வருவதில்லை; உலகை விட்டு பிரியும் போது எந்த உறவையும் கூட கொண்டு போவதில்லை.
மகனின் இழப்பை, ஒருநாளும் பேரன் ஈடு செய்யமாட்டான். பேரனுக்கு, மருமகள் வீட்டார், மூளைச்சலவை செய்து, உங்களுக்கு எதிராக திருப்பியுள்ளனர். குழந்தை யாரிடம் வளர்கிறதோ, அவர்களின் பேச்சை தானே கேட்கும்!
உங்களுக்கு மகன் மட்டும் இல்லை, மூன்று மகள்களும் இருக்கின்றனர். மகன் இழப்பை ஜீரணித்து, மகள்கள் மீது, அன்பை பொழியுங்கள். மகள்கள் வழி பேரன், பேத்திகளை கொஞ்சுங்கள். மகள்கள் உங்கள் மனக்காயங்களுக்கு மருந்திடுவர். சொத்தை பிரித்து கேட்டு, உங்களை மனவருத்தம் அடையச் செய்யக் கூடாது என்று தான், உங்கள் மகன், தற்கொலை செய்து கொண்டான். அவனின் ஆத்மா, தெய்வத்துள் உறைந்திருக்கும்.
நீங்களும், உங்கள் மனைவியும், 'எனக்கு நீ, உனக்கு நான்...' என, அன்பு பாராட்டி, கூடுதல் அணுக்கமாய் வாழ்வை தொடருங்கள். மாதம் மூன்று நாட்கள் மகள்கள் வீடுகளுக்கு சென்று, பேரன் - பேத்திகளை கொஞ்சி மகிழுங்கள். மகன் வழி பேரன், வாலிப வயது அடையும் போது, உண்மையை உணர்ந்தாலும் உணர்வான். அவன் உங்களை தேடி வர வாய்ப்புண்டு. வந்தால், வரவில் வையுங்கள்; வராவிட்டால் செலவில் வையுங்கள். நீங்களும், உங்கள் மனைவியும் தலயாத்திரை செல்லுங்கள்; இது, மன அழுத்தத்தை போக்கும். மகனின் நினைவு நாளன்று, அனாதை இல்லங்களுக்கு சென்று, ஒருநாள் உணவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள். 70 வயதான நீங்கள் சுய இரக்கம் தவிர்த்தல் நல்லது. நீங்களும், உங்கள் மனைவியும் கொள்ளுப் பேரனின் திருமணத்தை பார்த்து விட்டு தான் கண் மூடுவீர்கள். புறாவின் இறக்கை போல, மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். மருமகள் மீது கூட, துவேஷம் கொள்ளாதீர்கள். நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் முன்னமே இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என நினைத்து, மனதை ஆறுதல்படுத்துங்கள்!
பிரச்னைகளில் மூழ்காமல், நீந்த கற்றுக் கொள்ளுங்கள்.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X