இல்லை, ஆனா இருக்கு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இல்லை, ஆனா இருக்கு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

''என் குடும்பம் உருப்படும்ன்னு எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு...'' என்று தன் வருத்தத்தை, வார்த்தைகளாக்கி கொட்டினார், கோசல்ராம்; ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான கோசல்ராமிற்கு, 70 வயது. இந்த வயதிற்கான சோர்வைக் காட்டிலும், தன் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையால் உண்டான சோர்வு தான் அவருக்கு அதிகம்.
வீடு, அவருக்கு உலைக்கலனாக இருந்தது; பொருந்தி உட்காரவோ, நிம்மதியாக சாப்பிடவோ முடியவில்லை. தூக்கம் தொலைந்து, எத்தனையோ மாதங்களாயிற்று.
பேரக் குழந்தைகளைப் பார்க்கும் போது கூட, அவர் மனதில் மகிழ்ச்சி இல்லை. மாறாக, இந்த வீடு, இங்கு இருப்பவர்களால் பாழாகப் போவது போதாதென்று, இருக்கும் கொஞ்சத்தையும் எடுத்து விழுங்கி, ஏப்பமிட வந்தவர்களாகவே அவர்கள் தெரிந்தனர்.
அதற்கேற்றார் போல், மற்ற நாட்களில் அவரோடு ஒட்டாமல் ஓடும் பேரப் பிள்ளைகள், பென்ஷன் தேதியில் மட்டும், 'தாத்தா... தாத்தா...' என்று கழுத்தைக் கட்டிக் கொள்ளவும், மடியில் உட்காரவும், மோவாயைத் தொட்டு கொஞ்சவும் செய்கின்றனர்.
'இந்த மாசம் எனக்கு டிரஸ் வாங்க காசு கொடுங்க... வீடியோ கேம் வாங்கணும்... சைக்கிள் வேணும்...' என்று பிச்சு பிடுங்குகின்றனர்.
'இன்னைக்கு மட்டும் தான் இந்த தாத்தா கண்ணுக்கு தெரியுதா... மத்த நாள்ள கூப்பிட்டா கூட திரும்பிப் பாக்கறது இல்ல; உங்களுக்கு ஏன் செய்யணும்...' என்று கேட்டால், 'எங்களுக்கு செய்யாம வேறு யாருக்கு செய்வீங்களாம்...' என்று எதிர் கேள்வி கேட்கின்றனர்.
இச்சம்பவத்தை தன் நண்பன் பத்மநாபனிடம் சொல்லி, ''சின்னப் பசங்க பேசற பேச்சா இது... எல்லாம் அப்பா, அம்மா சொல்லித் தர்றது. பெரியவன் பெத்ததுகளும் சரி, சின்னவனுக்கு பொறந்ததுகளும் சரி எல்லாம் அப்படி தான் இருக்கு. கொடுமை என்னன்னா, என் மனைவி கூட அவங்களுக்கு தான் துணை போறா. என் விதியைப் பாத்தியா...
''ஊர்ல எல்லாரும் நல்லா இருக்கும் போது, உனக்கும், எனக்கும் மட்டும் ஏண்டா இப்படி எழுதி வச்சிருக்கு... உனக்கும் மனைவி சரியில்ல; வீட்ல யாருக்கும் பொறுப்பு, அக்கறை இல்ல. என்னை மாதிரியே ஓய்வு காலத்தில் நிம்மதி இல்ல. இதிலேயுமா நமக்குள்ள ஒற்றுமை இருக்கணும்... எல்லாம் நேரம்,'' என்று கோசல்ராம் பெருமூச்சு விட, ''நான் அப்படிச் சொன்னேனா...'' என்றார், பத்மநாபன்.
''என்னது...'' என்று நண்பர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார், கோசல்ராம்.
பத்மநாபனின் முகம், அமைதியாக காட்சியளிப்பதை, அப்போது தான் கவனித்தார்.
பூங்காவில், மாலை நேரத்தில் வீசிய காற்றில், ஏதோ ஒரு மரத்திலிருந்து விடுதலை பெற்ற சருகு ஒன்று, அவர் மடியில் விழ, அதை எடுத்து உள்ளங்கையில் வைத்தபடி நண்பரைப் பார்த்த பத்மநாபன், ''இப்ப மட்டுமில்ல... இதுக்கு முன் கூட, உன்கிட்ட நான் என் குடும்பத்தைப் பத்தியோ, மத்தவங்களைப் பத்தியோ குறைபட்டுக்கிட்டதே இல்ல,'' என்றார்.
''உண்மை தான்; புலம்பி என்ன ஆகப் போகுதுன்னு சலிச்சு போயி, வாய் மூடிகிட்டே; என்னால முடியல... இப்பப் பாரு, என்ன இருக்கு, இல்லன்னு கூட கணக்கு பாக்காம, திடுதிப்புன்னு ஊட்டிக்கு வேன், 'புக்' செய்துட்டு கிளம்புறாங்க. உன்கிட்ட சொல்றதுக்கென்ன... இந்த மாச இ.பி., பில்லை கூட, நேரத்துக்கு கட்ட முடியாம, அபராதத்தோடு கட்டியிருக்காங்க. அதான், பொறுக்காம உன்கிட்ட கொட்ட வந்தேன். உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா...'' என்றார்.
''எனக்கு மட்டும் என்ன... நீ ஒருத்தன் தானே ஆத்ம நண்பன்; நீ, ரயில்வேயில் வேலை பார்த்து ரிடையரானே... நான், பேங்குல வேலை பாத்து ஓய்வு பெற்றேன். மற்றபடி, குடும்பம், நல்லது, கெட்டது எல்லாம் உனக்கு மாதிரி தான் எனக்கும். ஆனா, மூணு மாசத்துக்கு முன், எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டதிலிருந்து என் மனசில மட்டுமல்ல, என் குடும்பத்திலயும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கு,'' என்றார். 'என்ன' என்பது போல் பார்த்தார் கோசல்ராம்.
''என் கூட ராமநாதன்னு ஒருத்தரு வேலை பாத்து, இடையில் உடல் நலமில்லாம வி.ஆர்.எஸ்.,ல வீட்டுக்குப் போயிட்டாரு. இதய நோய் அவருக்கு! மூணு அடைப்பு; பைபாஸ் சர்ஜரி நடந்தப்ப போய் பாத்தது; அதுக்கப்புறம் பாக்கல. ஒருநாள், அவரைப் பாக்கலாம்ன்னு அவர் வீட்டுக்கு போனேன். நல்லவேளை மனுஷன் ஆரோக்கியமா இருந்தாரு; சின்னதா பேப்பர் கடை வச்சு நடத்திக்கிட்டிருக்காரு. அவர் வீட்டம்மா, 'என்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா'ன்னு கேட்க, நான், 'காபி'ன்னேன். உடனே, அந்த அம்மா, ஒரு பையனைக் கூப்பிட்டு, 'தம்பி... அப்பாவோட நண்பர் வந்திருக்காரு; காபி போடணும்; நம்ம வீட்ல காபி தூள் நிறைய இருக்கு; நீ சீக்கிரம் கடைக்குப் போயி, காபித் தூள் வாங்கிட்டு வா... அப்படியே சர்க்கரையும் நிறைய இருக்கு; அதுவும் கால் கிலோ வாங்கிட்டு வா'ன்னு அனுப்பினாங்க.
''அவங்க சொன்னது எனக்கு புரியல. 'காபித்தூளும், சர்க்கரையும் நிறைய இருக்குறப்ப, எதுக்காக கடைக்குப் போய் வாங்கணும்'ன்னு தோணிச்சு. 'ஒருவேளை வெளியில் இருந்து வர்றவங்களுக்கு இப்படி தான் புதுசா வாங்கி போடுவாங்களோ'ன்னு நினைச்சு, நண்பர்கிட்ட கேட்டேன். அவர் சிரிச்சு, 'எங்க வீட்டுப் பெண்கள் இப்படித்தான் நேர்மறை வார்த்தைய பயன்படுத்துவாங்க. அரிசி, பருப்பு தீர்ந்து போனா, நிறைய இருக்குன்னு சொல்லுவாங்க. பணம் குறைஞ்சிருந்தாலும், நிறைய இருக்குன்னு தான் சொல்வாங்க. அப்படி சொல்ல ஆரம்பிச்சா, எது இல்லயோ, அது தானாக வந்து சேரும்ங்கிறது நம்பிக்கை. எதிர்மறையா சொன்னா, அதுக்கேத்த மாதிரி நடந்துடும்ன்னு ஒரு பயம்'ன்னு சொன்னாரு; எனக்கு பொட்டில் அறைஞ்ச மாதிரி இருந்தது.
''சாதாரணமா சர்க்கரை, காபித்தூள் இல்லன்னு சொன்னாலே, அந்த வார்த்தை பலிச்சு, அது இல்லாம போயிடும்ங்கற போது, நாம சதாசர்வ காலமும் நிம்மதி இல்ல, வீடு சரியில்ல, குடும்பம் சரியில்ல, மனைவி, மக்கள் சரியில்ல, பொறந்த நேரம் சரியில்ல, நாடு சரியில்லன்னு சொல்லிக்கிட்டிருக்கும் போது, அது அப்படித்தானே ஆகும். ஒரு மாற்றத்துக்காவது, நேர்மறை வார்த்தையை சொல்வோம்ன்னு எனக்குள்ள பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். இப்ப, வீடும், குடும்பமும் நல்லாயிருக்கு; எல்லாரும் நல்லவங்களா தெரியுறாங்க. வீட்டில் சந்தோஷமும், மனசுல நிம்மதியும் இருக்கு. இது, என் மனப் பிரமையாக கூட இருக்கலாம். ஆனா, இதுவரை, மனசுல எரிச்சல், கவலை, அவநம்பிக்கை இருந்த இடத்தில அமைதி, சந்தோஷம், நம்பிக்கை துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வழிமுறையை நீயும் கடைப்பிடிக்கலாமே...'' என்றார் பத்மநாபன்.
அவரைப் பார்த்து, கசந்த சிரிப்பு சிரித்த கோசல்ராம், ''உனக்கு, ஏதோ ஒரு சமாதானம் கிடைச்சிருக்கு; எதிரி வரும்போது, நெருப்புக் கோழி மண்ணுக்குள்ள தலையை நுழைச்சுகிட்டு, தப்பிச்சிட்டோம்ன்னு நினைச்சுக்குமாம். அந்த மாதிரி, மனைவி, மக்கள், பேரப்பிள்ளை நல்லவர்கள்; நான் சந்தோஷமா, உற்சாகமாக இருக்கேன்னு நினைக்கிறதாலேயோ, சொல்றதாலேயோ அப்படியே ஆகிடும்ன்னா, நாடு நல்லது, அரசியல்வாதிகள் நல்லவர்கள், அதிகாரிகள் நல்லவர்கள்ன்னு நினைச்சு, உலகத்தையே ஒரு நொடியில் மாத்திடலாமே...'' என்றார்.
''சரியா சொன்னே... நேர்மறை வார்த்தை நம்பிக்கையைக் கொடுக்குதுன்னு தான் சொன்னேன்; அதோடு நின்னுடனும்ன்னு சொல்லல. அந்த நம்பிக்கை அப்படியே செயல் வடிவமா மாறுது; மாறணும். அப்பதான் பலன். என் மகனை எடுத்துக்கோ... உலக மகா ஊதாரி; ஒரு சட்டை எடுத்தால் போதும்ங்கிற நிலையில பத்து சட்டை எடுப்பான். நடந்து போற தூரத்துக்குக் கூட டாக்சியில போவான். 50 காசுக்கு பெறுமானமான பொருளை, 10 ரூபா கொடுத்து வாங்குவான். இவனால, குடும்பத்துல பெரிய நஷ்டம்.
''அவனை கோபிக்காத, குறை சொல்லாத நாள் இல்ல. இப்ப, அவனை அந்த பழக்கத்திலிருந்து மீட்க முடியும்ங்கிற நம்பிக்கையோடு, அதற்கான முயற்சி எடுத்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், அவன்கிட்ட இருக்கிற நல்ல குணங்களைச் சொல்லி, அவனை உற்சாகப்படுத்தி, 'இந்த ஊதாரிப் பழக்கம் உன் எல்லா நல்ல குணங்களையும் சீரழிச்சு, குடும்ப பொருளாதாரத்தை கெடுக்குது கண்ணா... அதை மட்டும் குறைச்சுக்கிட்டா, மாத்திக்கிட்டா நீ ஓஹோன்னு வந்திடுவேன்'னு பக்குவமாய் எடுத்துச் சொல்லி வர்றேன்.
''ஒருநாள் இல்லாட்டாலும், ஒருநாள் அவன் மனசு மாறும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. மத்த விஷயங்களிலும் இப்படி ஒரு, 'அப்ரோச்'சைக் கொண்டு வந்தா, மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வரும்ன்னு தோணுது. சும்மா புலம்புறதுக்கு பதில், இப்படி ஒரு, 'ஸ்டெப்' எடுக்கறது நல்லது தானே...'' என்றார் பத்மநாபன்.
எழுந்து கொண்டார் கோசல்ராம்.
''என்னாச்சு...''
''ஏதோ என் குறைகளை சொல்லிக்க, நீ ஒருத்தனாவது இருந்தயேன்னு நிம்மதியா இருந்தேன்; இப்ப, அதுவும் போச்சு; எல்லாம் என் தலைவிதி,'' என்று புலம்பியபடி, பூங்காவின் வாசலை நோக்கி நடந்தார், கோசல்ராம்.
நல்ல விஷயம் என்றாலும், அதை, நம்புபவர்களுக்குத் தானே!
'கோசல்ராம்... நீ வீட்டுக்குப் போனதும், நான் சொன்னதை கட்டாயம் சிந்திச்சுப் பாப்ப... அதன்படி நடந்து, அதனால வரும் மாற்றத்தை புரிஞ்சிப்ப. அப்ப, அதை பகிர்ந்துக்க, என்னைத் தேடி நீ வரும் போது, உனக்காக இங்கே காத்திருப்பேன்...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டார், பத்மநாபன்.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X