சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2016
00:00

சமரசம் என்ற வார்த்தைக்கு, சமாதானம் செய்து வைத்தல் என்கின்றன, அகராதிகள். இதை, நாம் சற்றே வித்தியாசமான கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். எப்படியும் வாழலாம் என்பது பலரது கொள்கை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று முறையாக வாழ்வோரை, சல்லடை போட்டு அரித்தெடுக்க வேண்டியுள்ளது.
எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக கருதலாம்.
உச்ச நீதிமன்றத்திற்கு கூட கிடைக்காத, அருமையான நீதிபதி, நம் மனசாட்சி தான். அதை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கை பின்பற்றுவோர், எத்தகைய செயலையும், நியாயப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
தவறுகள் மற்றும் குற்றங்களின் முதல் ஊற்றுக்கண் இது தான். ஒரு தவறை செய்ய முற்படும் போது, உடனே உள்ளேயிருந்து, 'அடேய்... வேணாம்டா பாவம்... அப்புறம் மாட்டிக்கின்னு முழிப்பேடா... வம்பு, வழக்குன்னு ஆகி அசிங்கப்படுவேடா...' என்கிறார், நம் மன சாட்சியார்.
'நீ கம்முன்னு கெட... உன்னை எவன் கேட்டான்...' என்று மனசாட்சியை அடக்குவது தான், சமரசம் செய்து கொள்வது என்பது! அதாவது, நியாயத்திற்கு எதிரான சமாதானங்கள்.
'அவன், என்னை ஏமாற்றினான்; எனவே, நான் அவனை ஏமாற்றுவதில் என்ன தவறு...' என்பதும், மனசாட்சியை அடக்க பார்க்கும் சமாதானமே!
'அவன் தன் குணத்தை காட்டிட்டான்; இதற்காக, நான் ஏன் இறங்கி போக வேண்டும்...' என்று எதிர் கேள்வி எழுப்புவது, மனசாட்சிக்கு உரமூட்டும் செயல்.
நீங்கள் அறிந்த உதாரணம் தான். நாய் குரைக்கிறது என்பதற்காக, நாமும் அதை பார்த்து குரைக்க முடியுமா... நாய், நாயாக தான் நடந்து கொள்ளும்; ஆனால், மனிதன், நாயின் தரத்திற்கு இறங்கி போகலாமா!
'அவன், எனக்கு தபாலில் தானே அழைப்பு அனுப்பினான்; நான், ஏன் நேரில் போய் அழைக்க வேண்டும்...' என்று கேட்பது, நியாயத்தின் குரல் அல்ல; மனசாட்சியை அடகு வைக்கும் குரல். இது, ஒரு தவறான சமரசமே!
'அவனுக்கு பண்பாடு தெரியலை... நான் அப்படி அல்ல, முறையாக அழைப்பேன்...' என்பது மனசாட்சியின் குரல்.
'நியாயமான காரணம் சொல்லி, முதலாளியிடம் முன்பணம் கேட்டேன்; அவர் தரலை. எனவே, ஒரு பொய் காரணத்தை சொல்லி, பணம் வாங்கப் போறேன்...' என்று அணுகுவது, நம்மை நாம் சமரசம் செய்து கொள்ளும் தவறான அணுகுமுறையே!
'எங்கப்பா என்னை கோபிச்சுக்கிட்டாரு; எனவே, இந்த முறை நான் அவரை அழைக்கப் போறதும் இல்ல; போய் பாக்கப் போவதும் இல்ல...' என்று ஒரு மகன் குதித்தால், அங்கே சமரசம் தலை தூக்கி விட்டது என்று பொருள்.
'அப்பா என் நன்மைக்கு தான் சொன்னாரு; ஆனா, அதை கோபமாக சொல்லிட்டாரு. என்னை கண்டிக்க, இந்த உலகத்தில அவருக்கு இல்லாத உரிமையா... அது வேறு; இது வேறு. நான் எப்போதும் போல, அவரிடம் நடந்து கொள்வேன்...' என்பது தான் மனசாட்சியின் பார்வை.
சமரசப் பார்வைகளில் நஷ்டம் பிறருக்கு இது, என தப்பு கணக்கு போடுகிறோம். அது உண்மையல்ல; நஷ்டம் நமக்கே!
அரிசியில், கல்லை கலந்து விற்கிற கலப்படம்; ஒரு காலத்தில் எடுபட்டது; ஏற்க தக்கதாகவும் இருந்தது. இன்று அது நடவாது; வியாபாரம் படுத்து விடும்.
மிளகில், பப்பாளி விதையை கலந்து விற்போரும் உண்டு. இவர்கள் பிடிபடவும் மாட்டார்கள்; வியாபாரமும் படுத்து விடாது. இவர்களை, 'காம்ப்ரமைஸ்' காரர்கள் என்பேன். 'இது என்ன பெரிய தவறு... எல்லாம் மிளகு என்றால் கட்டுபடியாகாது...' என்பவர்கள் இவர்கள். ஆனால், காலம் இவர்களை காட்டி கொடுத்து, வியாபாரத்தை படுக்கச் செய்து விடும்.
சமரசம் என்பது, தரத்திலிருந்து இறங்கி போவது, தாழ்ந்து பேசுவது, தம் செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவது. இது நீண்ட, நெடிய, இனிய பயணத்திற்கு ஒருபோதும் உதவாது.
ராக்கெட் பயணத்திற்கு ஆசைப்பட்டு, கட்டை வண்டி பயணத்திற்கு தள்ளப்படுவோரின் வரலாறுகளை ஆராய்ந்தால், பெரும்பாலும், இவர்கள் எப்படியும் வாழலாம் எனும், 'காம்ப்ரமைஸ்' ரகத்தவர்களாகவே இருப்பர்.
மாறாக, இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற முடிவிற்கு வந்து விட்டால், அவர்கள், எப்படி எப்படியோ வாழுமளவு உயர்த்தப்படுவர் என்பதே உண்மை!

லேனா தமிழ்வாணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X