பொம்மை சிறகுகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
பொம்மை சிறகுகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2016
00:00

''இந்த வயசுல அப்பாவுக்கு புத்தி இப்படி போக வேணாம்,'' உதட்டைச் சுளித்தாள், ஸ்ரீகுமாரின் மகள்.
''இப்போ, என்னாச்சுன்னு இப்படி பேசுறே...'' தங்கையை அடக்கினான், மூத்தவன் மாதவன்.
''இன்னும் என்னாகணும்... ஆன காலத்துக்கு, இப்போ போயி அப்பாவுக்கு ரெண்டாம் கல்யாணம் தேவையா...''
''செய்துக்கிட்டா என்ன... அவரும் மனுஷன் தானே!''
''சம்பந்தமெல்லாம் எடுத்து, பேரன் பேத்திகள பாத்த பிறகு எதுக்கு இந்தக் கண்றாவியெல்லாம்,'' என்றான், இளையவன் கேசவன்.
''அதுக்கும், இதுக்கும் என்னடா சம்பந்தம்... நாம சின்ன வயசா இருந்தப்ப, அப்பா இப்படி ஒரு முடிவெடுத்திருந்தா மட்டும் இத ஒத்துட்டு இருப்பீங்களாக்கும். இங்க பாரு கேசவா... அப்பா நமக்கான எல்லா கடமைகளையும் முடிச்சிட்டார்; இனிமேலாவது, அவர் தனக்கான வாழ்க்கைய வாழட்டும்,'' என்றான், மாதவன் கண்டிப்பாக!
''அதுக்கில்லேண்ணா... எங்க மாமியார் வீட்டுல கேவலமா பேச மாட்டாங்களா...'' என்றாள், தங்கை.
''அதுவுமில்லாம, அத்தை இன்னும் உயிரோட தானே இருக்காங்க,'' சந்தடி சாக்கில் பேசினாள், கேசவனின் மனைவி.
''அம்மா உயிரோடு தான் இருக்காங்க; என் தங்கை பிறந்த சமயத்துல பிரசவத்துல என்னவோ சிக்கல்; மனப் பிரம்மை வந்துருச்சு. அது இதுன்னாங்க, இப்பவும் ட்ரீட்மென்ட்டுல தான் இருக்காங்க. மூச்சு மட்டும் தான் இருக்கு; பேச்சு நின்னு போச்சு. அப்பா ஓடி ஓடி சம்பாதிச்சதுலே பாதி, அம்மாவோட மருத்துவ செலவுக்கே போயிருச்சு. இன்னிக்கு வரை, நம்ம அப்பா சன்னியாசி வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு வர்றாரு...'' சொல்லும் போதே மாதவனுக்கு தொண்டை அடைத்தது.
''எனக்கென்னமோ, மாமாவோட முடிவு சரின்னு தான் படுது,'' பட்டென்று சொன்னாள், மாதவனின் மனைவி.
''க்கும்... ஐம்பது வயசுல கல்யாணம் கேட்குதாக்கும்,'' நொடித்தாள், கேசவனின் மனைவி.
''இது, உடம்பு சம்பந்தப்பட்ட விஷயமில்ல; மனசு சம்பந்தப்பட்டது,'' என்றாள், மாதவனின் மனைவி.
''எது சம்பந்தப்பட்டதோ, ஆனா, இது நம்ம குடும்ப கவுரவம் சம்பந்தப்பட்டதுங்கறத ஏன் நீங்களும், அண்ணனும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க... அதுவும், அந்தக் குந்தாணியப் போயி கல்யாணம் செய்யப் போறார்... அந்த மூதேவி வேற மதம்; அதோட, அப்பாவை விட மூணு, நாலு வயசு பெரியவ வேற... நினைக்கவே அசிங்கமாயிருக்கு,'' என்றாள், தங்கை.
''ஏய்... பெரியவங்கள பேசுற பேச்சா இது... வாயடக்கி பேசு; அவங்கள பத்தி உனக்கு என்ன தெரியும்,'' என்று, அதட்டினான் மாதவன்.
''அதென்ன... அவளைச் சொன்னா, உனக்கு இவ்வளவு கோபம் வருது...'' என்றாள், தங்கை நிஷ்டூரமாக!
சிறிது நேரம் மவுனமாக இருந்தவன், பின், ''ஏன்னா, அவங்கள நான் அம்மாவா ஸ்வீகரிச்சு, வெகு காலமாச்சு,'' என்றான் அமைதியாக!
உள்ளறையில், எல்லாவற்றையும் கேட்டவாறு படுத்திருந்த ஸ்ரீகுமாருக்கு, மாதவனின் வார்த்தைகள் மனதை நெகிழ வைத்தது.
முதன் முதலாய், ரோஸியை சந்தித்த நாள், மனதில் பூவாய் விரிந்தது.
அது பிரபல, 'டிவி' சேனல் நடத்தும் டாக் ஷோ. 'டிவி' சீரியல்கள் பற்றிய தலைப்பில், நேயர்கள் இரு பிரிவாக பிரிந்து கேட்கும் கேள்விகளுக்கு, வெட்டியும், ஒட்டியும் பேச, 'செலிபிரிட்டி'கள் இடையில் தோன்றி, விடை தருவர்.
அந்த, 'டிவி' நிறுவன உரிமையாளரும், முன்னாள் சினிமா கதாநாயகியுமான செலிபிரிட்டி, வெளிநாட்டில் அகப்பட்டுக் கொள்ள, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஸ்ரீகுமார் நிகழ்ச்சியில் பங்கேற்றான்.
'டிவி' பிரைம் டைமில் எல்லா சேனல்களிலும் பெரும்பாலும் இவர்கள் தயாரிப்பு தான். தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் கூட, இவர்களின் சீரியல்கள் தான்.
அந்த, 'டாக் ஷோ'வில் நிறைய கேள்விகள் கேட்டு, ஸ்ரீகுமாரை திணறடித்தாள், ரோஸி.
எப்படியோ பேசி சமாளித்தாலும், அதன்பின் ஸ்ரீகுமாரின் மனசுக்குள் முடிச்சு போட்டாற் போல நின்று விட்டாள், ரோஸி!
இரண்டு, மூன்று நாட்கள் மனம் அவளையே சுற்றிச் சுற்றி வர, இரண்டு வாரத்திற்கு பின், வாணி மகாலில் நடைபெற்ற ஒரு நாடக இடைவேளையில் அவளைப் பார்த்த போது, அவனால் புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுவாரம், புத்தக கண்காட்சியில், கை நிறைய புத்தகங்களுடன்! அடுத்து, சத்யம் தியேட்டரில்...
அவளை சந்திக்கும்போது எல்லாம் காற்றில் பறப்பதாகவே உணர்ந்தான், ஸ்ரீகுமார். பின், இருவருமே திட்டமிட்டு ஓட்டலுக்கு சென்றனர்; பேசி வைத்து சந்தித்தனர்.
மயிலிறகின் மென்மையுடன், இருவர் நடுவிலும் நட்பு வருடிப் போனது. சினிமா, டிராமா, இலக்கியம் என, எந்தவொரு போலித்தனமும் இன்றி, தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தன் திருமண வாழ்க்கை முறிந்து, தனித்து வாழ்வதை அவளும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதையும், மூன்றாவது பிரசவத்தின் போது, ஏற்பட்ட சிக்கலில், தன் மனைவி மனப்பிறழ்வாகி, மருத்துவமனையில் இருப்பதையும், தன் குழந்தைகள், தன் தாய் வீட்டில் வளர்வதை அவனும் மறைக்கவில்லை.
முதலில், இவை வெறும் செய்திப் பரிமாற்றங்களாக இருந்தனவே ஒழிய, எந்த ஒரு மாற்றமும் இல்லை. தங்கள் நிலைகளை உணர்ந்து, புரிதலுடன் இருந்தனர்.
பத்திரிகையில் பணிபுரிந்தாள், ரோஸி. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில், முக்கிய பணியில் இருந்தான், ஸ்ரீகுமார். வேலை, வீடு என்றிருந்தவர்களின் வாழ்வில், இந்த அறிமுகம், புது மழை போல குளிர்ச்சியாய் இருந்தது.
ஊரிலிருந்து வந்திருந்த தன் மகன் மாதவனை, ரோஸிக்கு அறிமுகம் செய்தான், ஸ்ரீகுமார்.
பிளஸ் 2 முடித்து, கல்லூரியில் சேர சென்னை வந்திருந்தான், மாதவன்.
தோளுக்கு மேல் வெட்டப்பட்டிருந்த கூந்தலும், கஞ்சியில் மொட மொடத்த காட்டன் சேலையும், புன்னகை பூத்த முகம் என, முதல் பார்வையிலேயே மாதவனுக்கு அவளை பிடித்து போனது.
பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஆரம்ப கால தயக்கமும், கூச்சமும் காணாமல் போனதுடன், 'ரோஸிம்மா...' என்று மிக இயல்பாக அழைக்க ஆரம்பித்தான், மாதவன்.
அப்புறம், இருவரும் தான் காலேஜுக்கு அலைந்தனர். சினிமா சென்றனர்; ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். ஸ்ரீகுமாரை ஓரம் கட்டி, இவர்கள் ஒரு சங்கிலிக்குள் பிணைந்தனர்.
ஸ்ரீகுமார், லொகேஷனுக்காக ஆந்திரா சென்றிருந்த சமயம் அது!
நண்பனுடன் டூவீலரில் சென்ற மாதவனுக்கு விபத்து ஏற்பட்டு, காலிலும், இடுப்பிலும் சரியான அடி. செய்தி அறிந்து, ஓடி வந்தாள் ரோஸி. மருத்துவமனையிலேயே தங்கியிருந்து கவனித்தாள்.
மறுநாள் இரவு தான் ஸ்ரீகுமாரால் வர முடிந்தது. ஆனாலும், மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கும் புதிய தொடர் தயாரிப்பில் மூச்சுவிட நேரமின்றி தவித்தவனை, ஆசுவாசப்படுத்தி, வேலைகளை கவனிக்கும்படி கூறி, தானே மாதவனை கவனித்துக் கொண்டாள்.
ஒரு மாதத்திற்கு பின், ஸ்ரீகுமார் சென்னை திரும்பிய போது, மாதவன் டிஸ்சார்ஜ் ஆகி, ரோஸியின் வீட்டில் இருந்தான்.
நன்றியில் நெகிழ்ந்த மனதுடன், மகனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான், ஸ்ரீகுமார்.
'அப்பா...'
'என்னடா...' தோளுக்குயர்ந்த மகன், குழந்தையை போலத் தோன்றினான்.
'வலிக்குதாடா?'
'இல்லப்பா...'
'பால் தரட்டுமா?'
'வேணாம்ப்பா...' என்ற மாதவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஸ்ரீகுமாருக்கு உடம்பு பதறியது. 'தாங்ஸ்ப்பா... எனக்கு ரோஸிம்மாவை ரொம்ப பிடிச்சுருக்கு...' என்றவன், தாயைப் போல ரோஸி உணவு ஊட்டியதையும், தந்தையை போல உடம்பு துடைத்ததையும், தாதியைப் போல கண் விழித்து
மருந்தூட்டியதையும், சகோதரி போல பொய் சண்டையிட்டதையும், தோழி போல விளையாடியதையும், முகச்சுளிப்போ, அருவருப்போ இல்லாமல் இயல்பாக தனக்கு உதவியதையும் விவரித்து, 'அப்பா... அம்மாவோட அன்புன்னா இதுதானா...' என்று திக்கித் திக்கி கேட்ட போது, மகனை இறுக்கி, அணைத்து கொண்டான் ஸ்ரீகுமார்.
தாயிருந்தும், தாயன்பை அனுபவிக்காமலேயே வளர்ந்த, தன் மகனின் ஏக்கத்தை உணர்ந்த போது, யாரோ இதயத்தை வாளால் அறுப்பது போல இருந்தது ஸ்ரீகுமாருக்கு!
இச்சம்பவத்திற்கு பின், அவர்கள் நட்பில், மன நெருக்கம் அதிகரித்தது.
நினைவுகளிலிருந்து மீண்ட ஸ்ரீகுமார், 'அவள் மூலம் எனக்கு நட்பு மட்டுமா கிடைச்சது... எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறாள். பணத்தால் செய்தவை தான் எவ்வளவு... கட்டாந்தரை போல காய்ஞ்சு கிடக்கும் என் வாழ்க்கையில ரோஸியோட அன்பு மொத்தமும் வேணும். அவ, என் வாழ்க்கையில உரிமையோடு வரணும்...' என, நினைத்தபடியே உறங்கிப் போனார்.
திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கையில், ஸ்ரீகுமாரின் மனைவியை பார்த்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தாள், ரோஸி.
மருத்துவமனைக்குள் நுழைந்த மூவரையும் உற்சாகமாய் வரவேற்றார் டாக்டர்.
சாய்ந்தாற்போல உட்கார்ந்திருந்தாள், ஸ்ரீகுமாரின் மனைவி. சிவந்த நிறம்; வெளிறிய தேகம்.
''குமார்... பாத்தீங்களா உங்க மனைவி எழுந்து உட்கார்ந்துட்டாங்க. ரெண்டொரு வார்த்தை பேசுறாங்க. உங்க நம்பிக்கை தான் இவங்களை உட்கார வச்சுருக்கு,'' என்றார் டாக்டர்.
'இதென்ன அதிசயம்... இத்தனை ஆண்டுகள் அசைவற்று கிடந்தவள், இப்போது, எழுந்து உட்கார்ந்துள்ளாளே...' என, திகைத்து நின்றார், ஸ்ரீகுமார்.
அருகில் அமர்ந்து அவள் கைகளை, தன் கைகளுக்குள் வைத்தாள் ரோஸி. கைகளை இழுத்துக் கொண்ட ஸ்ரீகுமாரின் மனைவி, பின், ரோஸியை ஒரு விரலால் தொட்டுப் பார்த்து, குழந்தையைப் போல் சிரித்தாள்.
மனைவி குணமடைந்ததற்கு சந்தோஷப் படுவதா, துக்கப்படுவதா எனத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்த தகப்பனின் கைகளை ஆறுதலாக பற்றினான், மாதவன்.
டாக்டரிடம் பேசிய பின், மூவரும் கிளம்பினர். வழியில் மூவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.
புரிபடாத சங்கதிகளின், பிடிபடாத ராகங்களாய் அவரவர் மனதுக்குள், பற்பல வடிவங்களில் உருவமற்று அலைந்தன.
''ஸ்ரீகுமார்... இந்தக் கல்யாணம் வேணாம்...'' என்றாள் ரோஸி.
''ரோஸி...'' அதிர்ந்தார், ஸ்ரீகுமார்.
''இத்தனை வருஷங்களுக்குப் பின், உங்க மனைவி குணமாகியிருக்காங்கன்னா... கடவுளோட விருப்பம் இதுதான். அதனால், இனி, நாம், நாமாகவே இருப்போம்,'' என்றாள்.
ஏதோ பேச வாயெடுத்தார், ஸ்ரீகுமார்.
''ப்ளீஸ்... வேணாம்...''
''ரோஸிம்மா...'' என்று மாதவன் ஆரம்பிக்க, ''ப்ளீஸ்... எந்த விவாதமும் வேணாம். உங்கம்மா குணமாகியிருக்கிற இந்த நேரத்துல, இந்த திருமணத்தை யாராலயும் ஏற்க முடியாது. இது நின்னு போனால், உங்கம்மா குணமானதை குடும்பமே கொண்டாடும். எனக்கும் குற்றவுணர்வு இருக்காது,'' என்றவள், ''பொம்மை சிறகுகள் பறக்க உதவாது,'' என்றாள் மெதுவாக!
தொடர்ந்து... ''பொம்மைகளுக்கு சிறகுகள் இருக்கலாம்; ஆனால், அவற்றால் உபயோகம் இல்லை. நம் உறவும் பொம்மை சிறகுகள் தான்,'' என்றாள்.
அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல், காரிலிருந்து இறங்கிக் கொண்டான் மாதவன்.
மெதுவாக ரோஸியின் தோளை தொட்டார், ஸ்ரீகுமார். சட்டென உடைந்து போய், அவர் நெஞ்சில் முகம் புதைத்து, கதறி அழ ஆரம்பித்தாள். ஸ்ரீகுமாரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
எதற்காக இந்த அழுகை... நின்று விட்ட திருமணத்திற்காகவா, இழந்து விட்ட பந்தத்துக்காகவா காரணம் புரியாமல் வான் மழையும் சரம் சரமாய் இறங்கி, பூமியை சங்கமித்து தழுவியது!

ஜே.செல்லம் ஜெரினா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X