புயலாய்ச் சுழலும் போக்கமான் கோ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
00:00

பன்னாட்டளவில், ஒரு புயலாகத் தற்போது சுழன்று வருவது “போக்கமான் கோ” விளையாட்டு என்றால் அது மிகையாகாது. இதுவரை எந்த ஒரு விளையாட்டும் அல்லது அப்ளிகேஷனும் இந்த அளவிற்கு தரவிறக்கம் செய்யப்படவில்லை. இன்னும் அறிமுகப்படுத்தப்படாத நாடுகளில் கூட, இதனைச் சுற்றுவழிகளில் தரவிறக்கம் செய்து, விளையாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கம் உள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இந்த விளையாட்டினை விளையாட முடியும். இதற்கு, ஜி.பி.எஸ். வசதியும் இணைய இணைப்பும் மிக முக்கியம். அதன் மூலமே, நாம் வெளியே பல இடங்களில், இந்த விளையாட்டில் இடம் பெறும் உருவங்களைத் தேடிச் செல்ல முடிகிறது.
கம்ப்யூட்டர்களிலும் மொபைல் சாதனங்களில் மட்டுமே விளையாடிக் கொண்டிருப்பவர்களை, தெருவிற்கு இழுத்து வந்து விளையாட வைத்துள்ளது இந்த விளையாட்டு. நம்மைச் சுற்றியுள்ள புல்வெளிகள், பூங்காக்கள், தெருக்களில் நம்மை அலையவிட்டு, இலக்குகளான டிஜிட்டல் உருவங்களைத் தேடி அடையச் செய்கிறது. இந்த விளையாட்டு Augmented Reality (AR) என்ற வகையைச் சேர்ந்தது. இதனை “உண்மை நிலை தோற்றக் காட்சி” (augmented- reality) என அழைக்கின்றனர்.
ஜி.பி.எஸ். எனப்படும் சாட்டலைட் தொழில் நுட்பம் மூலம், நாம் இருக்கும் இடத்தினைக் கண்டறிந்து, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் திரையில், நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் காட்சியாகக் காட்டப்படுகிறது. நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் காட்சித் தோற்றங்களுடன், டிஜிட்டல் வழியாக உருவாக்கப்பட்ட காட்சிகள், இந்த விளையாட்டில் இணைத்துத் தரப்படுகின்றன. இதனை, ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா, அதில் கிடைக்கும் கூகுள் மேப் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் உதவுகிறது. இந்த உருவங்களைத் தேடிக் கண்டுபிடித்து கைப்பற்றுவதுதான் இந்த விளையாட்டு.
நாம் விளையாட்டினைத் தொடங்கும்போது உருவாக்கப்பட்ட உருவம், நாம் நடக்கும்போது நம்முடன் நடக்கிறது. பின், குறிப்பிட்ட இடத்தில், சில கதாபாத்திரங்கள் டிஜிட்டல் வழியில் உருவாக்கப்பட்டு, அவற்றை நாம் பிடிப்பதற்கான வழிகளும் தரப்படுகின்றன. இவற்றைப் பிடிப்பதே, இந்த விளையாட்டின் சுவராஸ்யம்.
போக்கமான் கோ ஒரு விளையாட்டு மட்டுமின்றி, அப்ளிகேஷனாகவும் உள்ளது. இதனை உருவாக்கியவர்கள் 'நியான்டிக்' (Niantic) மற்றும் நின்டென்டோ (Nintendo) நிறுவனங்கள். 2014 ஆம் ஆண்டில், நின்டென்டோ நிறுவனத்தின் Satoru Iwata என்பவர் இதனை வடிவமைத்தார். இவருடன் இணைந்து செயல்பட்டவர், போக்கமான் நிறுவனத்தின் Tsunekazu Ishihara.
அமெரிக்காவில் ஜூலை 6ல் இது வெளியானது. அன்றே, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளிலும் அறிமுகமானது. மறு நாள், பிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வெளியானது. தற்போது 31 நாடுகளில் இந்த கேம் தரவிறக்கம் செய்து விளையாடக் கிடைக்கிறது. அமெரிக்காவில் வெளியாகி ஒரு வார காலத்திலேயே, இதனை விளையாடுபவர்கள் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது. தொடர்ந்து உயர்ந்து கொண்டும் உள்ளது. தரவிறக்கம் செய்தவர்கள் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேல்.
ஆசியாவில், ஜப்பான் மூலம் இது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது இன்னும் தள்ளிப் போகிறது. உலக அளவில், கம்ப்யூட்டர் டிஜிட்டல் விளையாட்டுகளை அதிகம் பயன்படுத்துவது சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகும். தென் கொரியாவில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சீனாவில் அரசின் கட்டுப்பாடுகளினாலும், இந்த கேம் இன்னும் அங்கு அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
தொடக்கத்தில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். (ஆப்பிள்) சாதனங்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டது. ஆனால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் போன்களில் இந்த கேம் விரைவில் கிடைக்கும் என அறிவித்துள்ளது.
தொடக்கத்தில், எதிர்பாராத வகையில் பல லட்சம் பயனாளர்கள், இந்த விளையாட்டினைத் தரவிறக்கம் செய்திட முனைந்ததால், இதனைக் கொண்டிருந்த சர்வர் திணறியது. பின்னர் சரி செய்யப்பட்டது. பிரிட்டனில் வெளியானபோது, மக்கள் ஆர்வத்துடன் இதனைத் தங்கள் போன்களில் பதிந்து விளையாடத் தொடங்கினர்.
மான்செஸ்டர் நகரத்தில், இந்த விளையாட்டை விளையாடியவாறே வீதிக்கு வந்த மக்களை, காவல்துறையினர் எச்சரிக்கை செய்தனர். தங்கள் நிலை மறந்து, வீட்டை விட்டு வெளியேறி விளையாடியவர்களைக் குறி வைத்து திருடர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டத் தொடங்கினர். பலரின் போன்கள் திருடர்களால் பறிக்கப்பட்டது.
தங்களை அறியாமல், போன் காட்டும் உருவங்களைப் பின்பற்றிச் சென்றதால், அமெரிக்க எல்லையைத் தாண்டி கனடா நாட்டுக்குள் சென்று, பின்னர் எச்சரிக்கப்படு சிலர் அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாயின.
இந்தியாவில் இன்னும் போக்கமான் கோ விளையாட்டு அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும், இங்குள்ள ஒரு சிலர், அதன் ஏ.பி.கே. (Android application package (APK)) எனப்படும் பைல்களைத் தரவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். (விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம்களின் .exe பைல்கள் போல, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் இயக்கத்திற்கானவை APK பைல்களாகும்.) சென்னையில் இது போன்ற பைல்களைத் தரவிறக்கம் செய்து விளையாடு
பவர்கள் ஒருநாள் அண்ணா நகர் கோபுரத்தை அடுத்த பூங்காவிற்குச் சென்று தாங்கள் அடையவேண்டிய இலக்குகளைத் தேடினர். இது குறித்த விடியோ ஒன்று https://www.youtube.com/watch?v=67xyhSow03g என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உள்ளதைக் காணலாம். இந்தியாவில் இதனைத் தரவிறக்கம் செய்வது குறித்த விளக்கப் படம் ஒன்றும் யு ட்யூப் தளத்தில் https://www.youtube.com/watch?v=HS1dChFxyFM என்ற முகவரியில் உள்ளது.
எந்நேரமும் வீட்டில் படுக்கையில், சோபாவில் இருந்து கொண்டு, ஸ்மார்ட் போன்களில் விளையாடி, உடல் எடையை அதிகப்படுத்திக் கொண்டவர்களை, இந்த போக்கமான் கேம், வீட்டுக்கு வெளியே, வீதியில் நடக்க, ஓட வைத்துள்ளது.
இந்த விளையாட்டினை அலுவலகத்தில், வீட்டில் உள்ளே இருந்து விளையாட முடியாது. ஹெட்போனை மாட்டிக் கொண்டு, வீதியில் சென்றால், விளையாட்டின் அடுத்த நிலைகளுக்குச் செல்லலாம். எப்போதும் போனின் திரையைப் பார்த்துக் கொண்டு, திரை காட்டும் காட்சிகள், டிஜிட்டல் உருவங்களைப் பார்க்க வேண்டியதிருப்பதால், சாலைகளில் இவற்றைத் தேடுகையில் நாம் விபத்துக்களை அதிகம் சந்திக்க வேண்டியதுள்ளது.
நம்மிடம் 3ஜி இணைப்பு இருந்தால் கூட இதனை முழுமையாக விளையாட முடியாது. 4ஜி இணைய இணைப்பு வேண்டியதிருக்கும். மேலும், இதனை விளையாடுவதால், பேட்டரி மின் சக்தி திறன் வேகமாகக் காலியாகிறது. இதனால், பலர் இந்த கேம் விளையாடுகையில், நல்ல பவர் பேக் தேவை என எண்ணி வாங்கி வைத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர். அப்படி என்ன விளையாட்டு இது?
தெருக்களில் நடந்து சென்று, புனையப்பட்ட டிஜிட்டல் உருவங்களை போன் மூலமாகத் தேடி அடைவது மிகப் பெரிய சவால் தான். அவற்றை ஈடேற்றுகையில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. அதனைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்து தேட வேண்டிய நிலைகளை உருவாக்குவதில் தான் இந்த விளையாட்டின் ரகசியமே உள்ளது.
மிக வேகமாகப் பரவும் அப்ளிகேஷன் மற்றும் கேம் என போக்கமான் கோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. விரைவில் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், இதனை உருவாக்கிய நிறுவனம், இடத்திற்கேற்ற விளம்பரங்களைக் காட்டும். எடுத்துக் காட்டாக, சென்னை, அண்ணா சாலையில் சென்றவாறே இந்த விளையாட்டினை விளையாடினால், சாலையில் உள்ள உணவு விடுதிகள், ஆயத்த ஆடை கடைகள் என விளம்பரம் காட்டப்படலாம். அமெரிக்காவில் ஒரு பீட்ஸா கடையின் வர்த்தகம், போக்கமான் கோ விளம்பரம் மூலம் தன் விற்பனை 75% உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளது.
எப்படி தரவிறக்கம் செய்து விளையாடுவது எனப் பார்க்கலாம். முதலில் கூகுள் அக்கவுண்ட் மூலம் கூகுள் பிளே ஸ்டோர் இணைய தளம் செல்லவும், இலவசமாக இந்த விளையாட்டினைத் தரவிறக்கம் செய்திடலாம். இதனைப் பதிந்த பின்னர், இதனை விளையாடத் தொடங்கவும். இந்த விளையாட்டினை, வீட்டை விட்டு வெளியேறிச் சென்று தான் விளையாட வேண்டும்.
நீங்கள் விரும்பும் வகையில் உருவம் ஒன்றை நீங்கள் உருவாக்கலாம். இவ்வாறு நாம் உருவாக்கிய போக்கமான், நீங்கள் இருக்கும் இடம் அருகே இருப்பது போலக் காட்டப்படும். நாம் அதைத் தேடி, போன் திரையில் காட்டப்படுவதைப் பார்த்தவாறே செல்ல வேன்டும்.
உங்கள் ஸ்மார்ட் போன் திரையில், நிறைய போக்கமான்களைப் பார்க்கலாம். அப்போது உங்கள் போனில் அதிர்வு ஏற்படும். போக்கமான் அருகில் சென்றவுடன், கிளிக் செய்திட வேண்டும். கேமரா இயக்கப்பட்டு, போக்கமான் உங்கள் முன் இருப்பதைக் காணலாம். போக்கமான் கீழாக காலடித் தடங்கள் இருப்பின், அது உங்கள் அருகே தான் எங்கோ இருக்கிறது; அதைக் காண இன்னும் சில அடி தூரம் செல்ல வேண்டும்.

போக்கமானைப் பிடிப்பது எப்படி?
'போக்கபால்' எனப்படும் பந்து ஒன்று உங்கள் நண்பனாக உங்களுக்கு வந்து சேரும். அதனைக் கிளிக் செய்து பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். போக்கமானைச் சுற்றி பச்சை நிறத்தில் வட்டம் ஒன்று கிடைக்கும் வரை கத்திருக்கவும். அப்போது உங்களிடம் உள்ள பந்தை எறிந்து போக்கமானைப் பிடிக்க வேண்டும். பந்து சரியாக எறியப்படாவிட்டால், போக்கமான் ஓடி மறைந்துவிடும். எனவே, சரியாகப் பந்தினை எறிய வேண்டும்.
இவ்வாறு பிடிக்கப்படும் போக்கமான்கள் குறித்து, Pokedex என்பதில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதில் ஒன்றில் கிளிக் செய்தால், அதன் உருவம், எடை, உயரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். பிடித்து வைத்துள்ள போக்கமான்களின் எண்ணிக்கைக்கேற்ப, நீங்கள் விளையாடும் நிலை உயரும். உங்களிடம் உள்ள போக்கமான் உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதனை Professor ஒருவருக்கு அனுப்பலாம். அவர் அதற்குப் பதிலாக போக்கமான் மிட்டாய் (Candy) ஒன்று தருவார். இதனுடன் போக்கமான் பிடித்தற்காக, Stardust வெற்றியின் அடையாளமாகத் தரப்படும்.
அரேபிய வளைகுடா நாடுகளில், இந்த விளையாட்டு குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக குவைத் நாட்டில், இந்த கேம் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பினைப் பலவீனமாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் போது, ஸ்மார்ட் போன்களில் படம் பிடிக்கப்பட்டு அவை இனம் அறியா நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது அந்த இடங்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.
இந்த விளையாட்டினை, முதன் முதலாக, முழுமையாகத் தடை செய்துள்ள நாடு ஈரான். நாட்டின் பாதுகாப்பிற்கு இது குந்தகம் விளைவிக்கிறது என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு, இதனைத் தயாரித்து அளிக்கும் நிறுவனங்களுக்கு, நிச்சயம் பன்னாட்டளவில் மிகப் பெரிய அளவில் வருமானம் பெறும் வழியைத் தருகிறது.
ஏற்கனவே, விளையாட்டில் கூடுதல் வசதிகளைப் பெற கட்டணம் செலுத்தும் வழிகள் உள்ளன. ஆக, இந்த இரு வழிகள் மூலம் வருமானம் நிச்சயம் அதிகரிக்கும்.
போக்கமான் கோ விளையாட்டு குறித்தும், அதனை எப்படி தரவிறக்கம் செய்து விளையாடுவது என்பது குறித்தும் மேலதிகத் தகவல்களுக்குக் கீழ்க்காணும் முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். http://www.polygon.com/2016/7/6/12105992/pokemon-go-guide-faq-ios-android

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X