கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
00:00

கேள்வி: கூகுள் நிறுவனம் இந்தியாவில், ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச இணைய இணைப்பு கொடுப்பதாகத் தகவல் தந்திருந்தீர்கள். ஏன் ரயில்வே ஸ்டேஷனைத் தேர்ந்தெடுத்தார்கள்? இணைய இணைப்பிற்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கும் என்ன சம்பந்தம்? ரயில் நிலையத்தைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள்?
ஆர்.கே.நந்தினி, பெரம்பலூர்.
பதில்:
நல்ல கேள்வி. இந்திய ரயில்வேக்குச் சொந்தமான ரெயில் டெல் (RailTel) என்னும் நெட்வொர்க்கிங் நிறுவனத்துடன் இணைந்து தான் இந்த திட்டத்தினை கூகுள் எடுத்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சக்தி நிறுத்தம் என்பது இருக்காது. இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுவதால், பல திசை மக்கள் கூடிச் செல்லும் இடங்களாக ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. தற்போது, ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் மக்கள் இந்த இலவச இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதாக, சென்ற வாரம், கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மொபைல் போன் இணைய இணைப்பில் தினந்தோறும் பயன்படுத்தும் டேட்டா பரிமாற்றத்தினைப் போல 15 மடங்கு அதிகமாக, ரயில் நிலைய இலவச இணைய இணைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 24 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்போது, உலகில் மிகப் பெரிய வை பி இணைய திட்டமாக இது இருக்கும். இந்த 100 நிலையங்களில், தினந்தோறும், 1 கோடி பேர் வந்து செல்வார்கள். ரயில்வே நிலையங்களில் தான், அதிகமான எண்ணிக்கையில், இணைய இணைப்பினை அனைவருக்கும் வழங்கும் வகையிலும், பாதுகாப்பாகவும், Access Points அமைக்க முடிகிறது.
இப்போது, பலர், இந்த இலவச இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதற்காகவே, பிளாட்பாரம் டிக்கட் எடுத்து ரயில்வே நிலையங்களுக்குள் சென்று வருகின்றனர் என்று தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு முறையும் அதிக பட்சம் ஒரு மணி நேரம் இந்த இலவச இணைய இணைப்பினைப் பயன்படுத்தலாம். இதில் பரிமாறப்படும் டேட்டா அளவிற்கு உச்சவரம்பு இல்லை.

கேள்வி: கட்டாயப்படுத்தி, கடந்த ஓராண்டாக, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டத்தை கம்ப்யூட்டர்களில் கொண்டு சேர்த்தது. இதனால், உண்மையிலேயே பயனாளர்கள், அதிக அளவில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியுள்ளார்களா? நான், இன்னும் விண்டோஸ் 7 தான் பயன்படுத்தி வருகிறேன்.
என். பிரேம்குமார், திருச்சி.
பதில்
: நல்ல கேள்வி. விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பயனாளர்களிடம் கொண்டு செல்ல மைக்ரோசாப்ட் வழக்கத்திற்கு மாறாகச் சில நடவடிக்கைகளை எடுத்தது உண்மை தான். ஏனென்றால், இனி புதிய பதிப்பு இருக்காது என்றும், விண்டோஸ் 10 சிஸ்டமே தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் மைக்ரோசாப்ட் முடிவெடுத்தது தான் காரணம். சென்ற வாரம், சிஸ்டம் பயன்பாட்டினைக் கண்காணித்து வரும், நெட்மார்க்கட் ஷேர் என்னும் அமைப்பு, விண்டோஸ் பயன்பாடு குறித்த தகவல்களைத் தந்துள்ளது.
அதன்படி, விண்டோஸ் 10, ஜூலை 29க்குப் பின்னர், பன்னாட்டளவில், மொத்த கம்ப்யூட்டர்களில், 20% க்கும் மேலான எண்ணிக்கையில் இயங்குகிறது. இந்த அளவினை அடைய, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, ஓர் ஆண்டு ஆகியுள்ளது.
இன்னும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான், அதிக கம்ப்யூட்டர்களில் (47.01%) பயன்படுத்தப்பட்டு வருகிறது. (சந்தோஷமா!) ஆனால், இது முந்தைய மாதத்தில் இருந்த 52.47%க் காட்டிலும் குறைவு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், விண்டோஸ் எக்ஸ்பி போல, விண்டோஸ் 7 இன்னும் பல ஆண்டுகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். “எங்களுக்கு இந்த சிஸ்டமே போதும்” என்ற எண்ணத்தில் பலர் உள்ளனர் என்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு மாதமும் 16 கோடி புதிய கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து நெட்மார்க்கட் ஷேர் இந்த முடிவுகளை எடுத்துத் தந்துள்ளது.

கேள்வி: இணையத்தில் மட்டுமே வெளியாகும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றின் தகவல் அஞ்சல்களைப் பெற்றுக் கொள்ள சம்மதித்து என் ஜிமெயில் அஞ்சல் முகவரியினைப் பதிவு செய்தேன். எனக்கு எந்த தகவல் அஞ்சலும் வரவில்லை. ஆனால், அந்த இணையப் பத்திரிக்கை அலுவலகத்தினைக் கேட்டதற்கு, என் அஞ்சல் முகவரி, தகவல் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் இருப்பதாகவும், தொடர்ந்து அனுப்பப்படுவதாகவும் கூறினர். ஏன் எனக்கு அஞ்சல்கள் வரவில்லை? எங்கு பிரச்னை இருக்கும்?
ஆர். ஜெயப்பிரகாஷ், புதுச்சேரி.
பதில்:
நிச்சயம் உங்கள் ஜிமெயில் இன் பாக்ஸை அந்த தகவல் அஞ்சல்கள் அடைந்திருக்கும். ஆனால், அவை உங்கள் இன் பாக்ஸில் மறைந்திருக்கும். பிரவுசரில், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். இன் பாக்ஸின் மேலாக Primary என்ற டேப்பினை அடுத்து, Social மற்றும் Promotions என இரு பிரிவுகளைக் காணலாம். ஜிமெயில், உங்கள் அஞ்சல்களை அலசிப் பார்த்து, அவ்வளவு முக்கியமல்லாத அஞ்சல்களை Promotions என்னும் பிரிவில் அடுக்குகிறது. Social என்பதில் உங்கள் சமூக இணைய தளங்களில் (பேஸ்புக், ட்விட்டர் போன்றவை) உங்கள் அக்கவுண்ட்டிற்கு வரும் அஞ்சல்கள் கொடுத்த தகவல்கள் தரப்படுகின்றன. எனவே, இணைய தளப் பத்திரிக்கை அனுப்பும் தகவல் அஞ்சல் Promotions என்னும் பிரிவில் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவை அங்கு இல்லை என்றால், Spam போல்டரைப் பார்க்கவும். அங்கும் இல்லை என்றால், இன்பாக்ஸ் மேலாக உள்ள அஞ்சல்களுக்கான தேடல் கட்டத்தில், அந்த இணைய தளப் பத்திரிக்கை அஞ்சல் முகவரி, அல்லது தலைப்பு போன்ற முக்கிய சொற்களைக் கொடுத்து தேடவும். அவை அனுப்பப்பட்டிருந்தால், இந்த தேடலில் அவை எங்குள்ளன என்று காட்டப்படும். நிச்சயமாக இந்த வழிகளில், அவற்றைக் காணலாம்.

கேள்வி: அண்மையில் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் தந்த ஓராண்டு நிறைவு அப்கிரேட் மூலம் சிஸ்டத்தினை மேம்படுத்தினேன். அன்றிலிருந்து, எட்ஜ் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இதில், பேவரிட் குறிப்புகள் எந்த போல்டரில் வைக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. அதற்கான வழி தரவும்.
ஆர். திருமலை ராஜன், ஸ்ரீரங்கம்.
பதில்:
எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், நாம் குறித்து வைக்கும் இணையத் தளங்களுக்கான லிங்க் முகவரிகள், “Favorites” என அழைக்கப்படுகின்றன. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர்களில் இவை “Bookmarks” எனக் காட்டப்படுகின்றன. எந்தப் பெயரில் அழைத்தாலும், இவை ஒன்றையே குறிக்கின்றன. எட்ஜ் பிரவுசரில், பேவரிட் தளங்கள் குறித்த குறிப்பு எங்கு பதியப்படுகின்றன என்று தெரிந்தால், அவற்றை நிர்வகிப்பது எளிதாக இருக்கும். இதற்கு பைல் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். பின்னர், கீழே காட்டப்பட்டுள்ள வழியாகச் செல்லவும். அல்லது அப்படியே காப்பி செய்து, பைல் எக்ஸ்புளோரரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டவும். C:\Users\username\AppData\Local\Packages\Microsoft.MicrosoftEdge_8wekyb3d8bbwe\AC\MicrosoftEdge\User\Default
இங்கு காட்டப்படும் பக்கத்தில் Favourite என்னும் போல்டரைத் தேடிக் கண்டறிந்து திறக்கவும். இதில் உங்களுடைய பேவரிட் தளங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்கும். அவற்றை நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பு முழுவதையும் பாதுகாப்பாக பேக் அப் எடுத்து வைத்திட, மேலே காட்டப்பட்டுள்ள வழியினை (Path) அப்படியே காப்பி செய்து, கம்ப்யூட்டரில் வேறு ஒரு டைரக்டரி அல்லது போல்டரில் போட்டு வைக்கலாம். மீண்டும் அதே கம்ப்யூட்டரிலேயே அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டரில் இவை வேண்டும் என்றால், மீட்டு, பழைய இடத்தில் அல்லது புதிய கம்ப்யூட்டரில் இதே டைரக்டரியில் போட்டு வைக்கலாம். உங்களுக்கு இன்னொரு போனஸ் டிப் தருகிறேன்.
நீங்கள் டவுண்லோட் செய்த இணையப் பக்கங்கள், கோப்புகள், படங்கள் மற்றும் பிற டாகுமெண்ட்ஸ் அனைத்தும் எட்ஜ் பிரவுசரில், கீழ்க்காணும் முகவரியில் கிடைக்கும். C:\Users\username\AppData\Local\Packages\Microsoft.MicrosoftEdge_8wekyb3d8bbwe\AC\MicrosoftEdge\User\Default\DownloadHistory

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தினைச் சென்ற மாதம் என் லேப்டாப் கம்ப்யூட்டரில் பதித்தேன். இந்த சிஸ்டத்துடன் பல சிறிய புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவை எனக்குத் தேவை இல்லை. எனவே அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், இவற்றில் அதற்கான ஆப்ஷன் தரப்படவில்லை. எவ்வாறு இவற்றை அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம்?
ஆர். ஷண்முகம், விழுப்புரம்.
பதில்
: பொதுவாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாகத்தான் தரப்பட்டுள்ளது. ஆனாலும் அதனுடன் வந்த புரோகிராம்களை நீக்குவது பலருக்குச் சிரமமாக இருப்பதாகப் பல வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவற்றையும் நீக்கிவிடலாம். இவற்றை நீக்கும் விதம் குறித்து, விண்டோஸ் 10 தெளிவாக குறிப்பிடவில்லை என்பதே உண்மை. இவை எல்லாமே, மிகச் சிறிய புரோகிராம்கள் தான். இவை உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் மிகக் குறைவான இடத்தையே கொண்டிருக்கும். எனவே, இவற்றை நீக்குவதைக் காட்டிலும், மறைத்து வைக்கலாம். மறைத்து வைக்க, Start மெனு சென்று, நீக்கப்பட வேண்டிய புரோகிராமின் டைல் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Unpin from Start என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டார்ட் மெனுவிலிருந்து நீக்கிவிட்டால், அவை இணையத் தேடலின் போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது. அப்டேட் செய்திடும் செய்தியை அனுப்பாது. இருந்தாலும், நீங்கள் நீக்கவே விரும்புகிறீர்களா? சில புரோகிராம்கள், எடுத்துக் காட்டாக, News, Money, மற்றும் Get Office போன்றவற்றை வழக்கமான வழிகளில் நீக்கிவிடலாம். இவற்றின் டைல் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Uninstall என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும். மீண்டும் ஒரு முறை உங்களிடம் உறுதி செய்து கொண்டு, புரோகிராம் அன் இன்ஸ்டால் ஆகும். ஆனால், இது எல்லா புரோகிராம்களுக்கும் பொருந்தி வரவில்லை. எடுத்துக் காட்டாக, Films & TV, Groove Music, மற்றும் People போன்ற புரோகிராம்களில் இந்த அன் இன்ஸ்டால் ஆப்ஷன் கிடைக்காது. இதற்கு Priform நிறுவனத்தின் CCleaner புரோகிராம் உங்களுக்கு உதவி செய்திடும். சிகிளீனர் புரோகிராமினைத் திறந்து, Tools > Uninstall எனச் செல்லவும். பின்னர், அங்கு கிடைக்கும் பட்டியலில், நீக்கப்பட வேண்டிய புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். புரோகிராம் முழுமையாக நீக்கப்பட்டுவிடும். சிகிளீனர் தரும் பட்டியலில் நாம் காண முடியாத புரோகிராம், விண்டோஸ் 10 கொண்டிருக்கும் பிரவுசர் புரோகிராமான Edge ஆகும். இதனை அன் இன்ஸ்டால் செய்திட முடியாது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், மாறா நிலையில் (Default) இயங்கும் பிரவுசராக, உங்களுக்குப் பிடித்த பிரவுசரைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர் எட்ஜ் பிரவுசர் புரோகிராமினை, டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் மெனுவிலிருந்து எடுத்துவிடவும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துவிட்டேன். இதற்கு முன்பு, என்னால், யாஹூ மற்றும் ஜிமெயில் தளங்களில், படங்களை இணைப்பது எளிதாக இருந்தது. காப்பி செய்து பேஸ்ட் செய்தேன். இப்போது அவ்வாறு இயலவில்லை. என்ன செய்திட வேண்டும்? செட்டிங்ஸ் ஏதேனும் மாற்ற வேண்டுமா?
எஸ். செல்வமதி, திருச்சி.
பதில்
: உங்கள் மின் அஞ்சல்களில், படங்களை இணைக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் தடை எதனையும் விதிக்கவில்லை. அதற்கான கட்டளைகள் மட்டுமே மாறியுள்ளன. copy and paste க்குப் பதிலாக, “inserting” கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஜிமெயில் இணைய தளத்திலிருந்து மின் அஞ்சல் அனுப்புவதாக இருந்தால், மின் அஞ்சல் மெசேஜ் பெட்டியின் கீழாகத் தரப்பட்டிருக்கும் “insert photo” கட்டளையைப் பயன்படுத்தினால், அப்லோட் செய்திட பட்டன் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் இருக்கும் போல்டரிலிருந்து போட்டோவைத் தேர்ந்தெடுத்து இணைக்கவும். போட்டோவை இணைத்து அனுப்புவதாக இருந்தால், கீழாக உள்ள Attach ஐகானைப் பயன்படுத்தி இணைக்கவும். யாஹூ மெயில் பக்கத்தில், மின் அஞ்சல் செய்தியுடன், போடோவினை இணைத்து மட்டுமே அனுப்ப முடியும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X