சிக்கலின்றி கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

கம்ப்யூட்டர் பயன்படுத்தாதவர் என இனி யாரும் இருக்க முடியாது. தங்கள் பணிநாட்களுக்குப் பிறகே கம்ப்யூட்டர் குறித்து அறிந்தவர்கள் கூட, கம்ப்யூட்டர் பயன்பாடு தெரிந்து கொண்டிருப்பது ஓர் அடிப்படை தேவை என அறிந்து, கற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, பள்ளிப் பருவத்தினை முடித்தவர்களும் இன்று தங்களுக்கென தனியே கம்ப்யூட்டர் ஒன்றை உரிமையாக்கி, அதில் தங்களுக்கு வேண்டிய செயலிகளைப் பதிந்து செயலாற்றி வருகின்றனர்.
எந்த ஒரு சாதனத்தையும் முறையாகப் பராமரிக்கவில்லை என்றால், அதன் பயன் நிலை, முழுமையாக நமக்குக் கிடைக்காது. அதன் குறைந்த பட்ச வாழ்நாள் கூட இயங்காமல் முடங்கிப் போகும் அபாயமும் இருக்கும். அப்படியானால், கம்ப்யூட்டரை எப்படி பராமரிப்பது? என்ற கேள்வி பலருக்கு எழும். அதற்கான விடையை இங்கு காணலாம்.
கம்ப்யூட்டர் பராமரிப்பு என்பது, வெளியே தெரியும் பகுதியைச் சுத்தப்படுத்தி வைப்பது மட்டுமல்ல. அதன் உள்ளே இயங்கும் சாதனங்களின் செயல்பாட்டில் சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதும் ஆகும். இதனைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில், கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில்
முதன்மையானது, “சிதறல்களை ஒழுங்கு படுத்துதல்” எனப்படும் Defragmenting என்னும் பணியாகும். அதற்கு முன்னர் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை எப்படி மேற்கொள்வது என முதலில் பார்க்கலாம்.

டிஸ்க் சோதனை: ஹார்ட் டிஸ்க் ட்ரைவில் சின்ன சின்ன பிழைகள் அடிக்கடி அதன் செயல்பாட்டில் ஏற்படும். அவற்றினால், பெரும் பிரச்னைகள் வரும் முன்னர் அவற்றைச் சரி செய்தால், பிரச்னைகளின் தாக்கத்தில் டேட்டா இழப்பினைத் தவிர்க்கலாம். இதற்கு குறைந்தது மாதம் ஒரு முறை டிஸ்க்கை பரிசோதிக்க வேண்டும். இதற்குக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயலியை முதலில் திறக்கவும். இதில் இடது புறமாக உள்ள This PC அல்லது Computer என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, வலது பக்கம், கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் ட்ரைவ்கள் காட்டப்படும். இதில் C: ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Tools டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இங்கு, Error Checking என்ற பிரிவில், Check என்பதில் கிளிக் செய்திடவும். உங்களிடம் விண்டோஸ் 10, சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர் இருப்பின், Scan Drive என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Start> Schedule Disk Check எனச் செல்லவும். இதன் பின், விண்டோஸ் இயக்கத்தினை ரீ ஸ்டார்ட் செய்திடவும்.

குப்பையைக் காலி செய்க: குறைந்தது மாதம் ஒரு முறை செய்திட வேண்டிய ஒரு இன்றியமையாத துப்புரவு பணி, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் சேர்ந்துள்ள குப்பையைக் காலி செய்தலாகும். அனைத்து செயலிகளின் இயக்கத்திலும் தற்காலிக கோப்புகள் உருவாக்கப்பட்டு, அவை நம் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்கின்றன. அந்த செயலிகளின் பணி முடியும்போது, அவை நீக்கப்படுவதில்லை. கம்ப்யூட்டரில், பிற செயலிகள் இயக்கத்தில் மற்றும் இணைய தளங்களில் நுழைகையில், நாம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைய வேண்டியதுள்ளது. இந்த தகவல்கள், நம் ஹார்ட் டிஸ்க்கில், கம்ப்யூட்டர் சிஸ்டம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் கோப்புகளாகத் தேக்கப்படுகின்றன. நாம் பல கோப்புகளை, அவற்றின் தேவை முடிந்த பின்னர் அழிக்கிறோம். இவை அழிக்கப்பட்டு, ரீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்டாலும், ஹார்ட் டிஸ்க்கில் பதிந்தபடியே தான் இருக்கும். அதனால் தான், நாம் சில வேளைகளில், அழிக்கப்பட்ட கோப்புகளையும், மீட்டுத் தரும் செயலிகள் (Recuva etc.,) மூலம் மீண்டும் பெற முடிகிறது. ஆனால், இவற்றை இப்படியே தங்கவிட்டால், ஹார்ட் டிஸ்க்கில் இடம் தீர்ந்துவிடும். கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகம் குறைந்துவிடும். இது தினந்தோறும் நடைபெறும் பணி என்பதால், இவற்றை நீக்குவதில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். எனவே, குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது, இவற்றை நீக்க வேண்டும். சிகிளீனர் போன்ற செயலிகள் இவற்றை மொத்தமாக நீக்கித் தருவதில் நமக்கு உதவி புரிகின்றன.

சிதறல்களை ஒன்று சேர்த்தல்: நாட்கள் செல்லச் செல்ல, ஹார்ட் டிஸ்க்கில் பதியப்படும் கோப்புகள், ஒழுங்கற்ற முறையில் அமைந்துவிடுகின்றன. இதற்குக் காரணம், நாம் கோப்பு ஒன்றை நீக்குகையில், அது அழிக்கப்படாமல் ஹார்ட் டிஸ்க்கிலேயே இருக்கும். நமக்கு அழிக்கப்பட்டதாகக் காட்டப்படும். தேடினால் கிடைக்காது. ஆனால், சிஸ்டம் அந்த பைல் இருக்கும் இடத்தில் அடுத்த பைலை எழுதிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பினை, பைலை ஹார்ட் டிஸ்க்கில் எழுதும் சாதனத்திற்குத் தந்திருக்கும். அழிக்கப்பட்ட பைல் சிறியதாக இருந்து, எழுதப்படும் பைல் பெரியதாக இருக்கும் பட்சத்தில், சிறிய இடத்தில், பெரிய பைலின் ஒரு பகுதி எழுதப்படுகையில், மீதம் உள்ள டேட்டா, இன்னுமொரு பகுதியிலோ அல்லது கூடுதலான பகுதிகளிலோ எழுதப்படும். இதனால், அந்த பைலை, சிஸ்டம் படிக்கையில், பல இடங்களில் தேடிப் படிக்க வேண்டியதிருப்பதால், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு சிதறலாக டிஸ்க் நிரப்பப்படுவதனையே Fragmentation என்கின்றனர். இதனைச் சரி செய்திடும் பணியே, Defragmentation என அழைக்கப்படுகிறது.
இந்தப் பணியின் போது, சிதறிக் கிடக்கும் பைல்கள், ஒரே இடத்தில் வரிசையாக எழுதப்படுகிறது. இதனால், இடம் மிச்சமாகிறது. பைல்களைப் படித்தறிவது வேகமாக நடக்கிறது. தற்போது வந்துள்ள விண்டோஸ் இயக்கம், வாரம் ஒருமுறை தானாகவே, இந்த டிபிராக் வேலையை மேற்கொள்கிறது. இருப்பினும், இந்த பணி நடைபெற்றுள்ளதா என்பதனை நாம் சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், Start> All apps> Windows Administrative Tools> Defragment and optimize drives என்று சென்றால் இந்தப் பணியை மேற்கொள்ளலாம். விண்டோஸ் 7ல், Start> All Programs> Accessories> System Tools> Disk Defragmenter என்று செல்ல வேண்டும். இந்த இரண்டு சிஸ்டங்களிலும், டிபிராக் செய்வது ஏறத்தாழ ஒரே மாதிரியான செயல்பாடாகவே உள்ளது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் இது சிஸ்டத்தால், தானாக மேற்கொள்ளப்படுகிறது. வாரம் ஒரு முறையாவது இது மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லை எனில், இந்தக் கால அவகாசத்தினை நாம் நிர்ணயம் செய்திடலாம். Change settings அல்லது Configure schedule சென்று, Run on a schedule,Weekly என்று வரையறை செய்திடலாம்.
விண்டோஸ் 10ல், Start, All apps, Windows Administrative Tools, Disk Clean-up என்று சென்று டிஸ்க் கிளீன் அப் பணியைத் தொடங்கலாம். விண்டோஸ் 7ல், Start, All Programs, Accessories, System Tools, Disk Cleanup என்று சென்று டிஸ்க் கிளீன் செய்திடலாம். டிஸ்க் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர், ஆப்ஷன் எனத் தரப்பட்டிருக்கும் அனைத்திலும் (ரீசைக்கிள் பின் தவிர) டிக் அடையாளம் உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

வைரஸ் சோதனை: இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் ஏதேனும் ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை நம் கம்ப்யூட்டரில் இயங்கச் செய்கிறோம். கம்ப்யூட்டர் இயங்கியவுடனேயே, இது இயக்கப்பட்டு பின்னணியில் இயங்கி, நம் கம்ப்யூட்டரில், வைரஸ் செயலி ஏதேனும் நுழைய முயன்றால் அதனை இது தடுக்கிறது. அது குறித்த தகவலை நமக்குத் தெரிவிக்கிறது. இதுவரை, அப்படி ஓர் ஆண்டி வைரஸ் புரோகிமினை, உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திருக்கவில்லை எனில், உடனடியாக, இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து, பதிந்து இயக்கவும்.
பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், வைரஸ் சோதனையை மூன்று நிலைகளில் மேற்கொள்ளும். அவை quick, full மற்றும் custom ஆகும். இதில் quick என்ற வகை சோதனையை வாரம் ஒரு முறையும், முழுச் சோதனையை மாதம் ஒரு முறையும் மேற்கொள்வது நல்லது.
விண்டோஸ் இயக்கத்தில், Windows Defender என்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தரப்பட்டுள்ளது. பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், நாம் தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்குகையில், தானாக இயங்காமல் நின்று கொள்ளும். ஆனால், விண்டோஸ் டிபண்டர், தற்போது குறைந்த பட்ச வைரஸ் சோதனையை மேற்கொள்ளும் வகையில் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில் முதலில் செட்டிங்ஸ் செல்லவும். பின்னர், Update and Security, Windows Defender, Open Windows Defender எனச் சென்று இயக்கவும். விண்டோஸ் 7ல், கண்ட்ரோல் பேனல் திறந்து, Small Icons View திறந்து, அதில் விண்டோஸ் டிபண்டர் மீது கிளிக் செய்திடவும்.

தானாக மேம்படுத்தல்: விண்டோஸ் சிஸ்டத்தில், அதற்கென அவ்வப்போது தரப்படும் மேம்படுத்தப்படும் பைல்களைக் கொண்டு, சிஸ்டத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பைல்கள், சிஸ்டம் இயக்கத்தில் உள்ள குறைகளை நீக்கும். அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் செயலிகளைக் கண்டறிந்து நீக்கும் பைல்களும் தரப்படும். எனவே, அவ்வப்போது, சிஸ்டத்திற்கான மேம்படுத்தல் பைல்கள் தரப்படுகையில், அவற்றைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அல்லது, தானாகவே இந்தப் பணியை கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் வகையில் (Install updates automatically) செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X