கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

கேள்வி: ஒரு வழியாக, விண்டோஸ் 10 பதிவு செய்து, அதன் பின்னர், ஆகஸ்ட் 2 அன்று தரப்பட்ட, விண் 10 ஓராண்டு மேம்படுத்தலையும் மேற்கொண்டேன். இது குறித்த உங்கள் கட்டுரையையும் படித்தேன். அடுத்த மேம்படுத்தல், எந்த மாதம் வரும்? இனிமேல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மேம்படுத்தல் கோப்புகள் இருக்காது என்று சொல்கின்றனர், இது உண்மையா?
என். கிருஷ்ண குமார், சென்னை.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டம் பதிந்ததோடு, மேம்படுத்தலையும் மேற்கொண்டது நல்லது. இனி மாதந்தோறும், இரண்டாவது செவ்வாய்க்கிழமை அப்கிரேட் அல்லது பேட்ச் பைல் வெளியிடப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம், மைக்ரோசாப்ட் அப்கிரேட் செய்திடத் தேவையான பைலை வெளியிடும். பெரும்பாலும் விண் 10 இயங்கும் கம்ப்யூட்டர்களில், தானாகவே இவற்றைப் பதிந்திட மைக்ரோசாப்ட் விரும்புகிறது. உங்கள் கம்ப்யூட்டரை தானாக அப்கிரேட் செய்திடும் வகையில் நீங்கள் அமைக்கவில்லை என்றால், இது குறித்த நோட்டிபிகேஷன் உங்களுக்குத் தரப்பட்டு நினைவூட்டல் கொடுக்கப்படும்.
அண்மையில், ஆகஸ்ட் 02ல் பெரிய அளவில் வெளியான மேம்படுத்தல் போன்று, இனி 2017ல் தான் வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இனி அப்டேட் பைல்கள் தரப்பட மாட்டாது. 2017ல் இருமுறை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு Redstone 2 மற்றும் Redstone 3 என குறியீட்டுப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

கேள்வி: ஒரு குறிப்பிட்ட அப்டேட் பைலை நீக்க வேண்டும் என்றால், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எப்படி, எங்கு செட் அப் செய்திட வேண்டும்?
என். சுந்தரி, திருவாடனை.
பதில்:
ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும். இதில் Settings > Update & security > Windows Update >Advanced options > View your update history > Uninstall updates என்று செல்லவும். பின்னர், இங்கு காட்டப்படும் பட்டியலில், எந்த அப்டேட் பைலை நீக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், Uninstall என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
ஏன் குறிப்பிட்ட அப்டேட் செய்த பைலை நீக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் எழுதவில்லை. விண்டோஸ் 10 சிஸ்டம் மேம்பாடு, இந்த அப்டேட் செய்யப்பட்ட பைல்கள் வழியாகத்தான் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் எதனையேனும் நீக்கினால், அதனால் ஏற்படும் வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். எனவே, ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நீக்கவும்.

கேள்வி: வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த இணைய தளங்கள் பலவற்றில் கேப்சா டெஸ்ட் (CAPTCHA)) என்ற ஒன்று தரப்படுகிறது. எழுத்துகள் மற்றும் எண்கள் அடங்கிய ஒரு டெக்ஸ்ட் உற்றுக் கவனித்தால் மட்டுமே தெரியும் வகையில் அமைக்கப்பட்டுத் தரப்படுகிறது. இதனைச் சரியாக அமைத்தால் தான், தொடர்ந்து இயங்க முடிகிறது. என்னால், இதனைச் சரியாக முதல் முறையிலேயே உள்ளீடு செய்திட முடியவில்லை. இதனை ஸ்கிப் செய்திட முடியுமா? 'கேப்சா' என ஏன் அழைக்கப்படுகிறது?
பா. நமசிவாயம், திருச்செந்தூர்.
பதில்
: Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதன் சுருக்கமே CAPTCHA ஆகும். நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் தானாக எதனையேனும் படிவத்தில் நிரப்புகிறதா? அல்லது நீங்களே தகவல்களை நிரப்புகிறீர்களா என்ற தகவலை உறுதி செய்திடவே இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கேப்சா சோதனை. அதனால் தான், இது மனிதன் மட்டுமே படித்து நிறைவேற்றும் செயலாக உள்ளது. பலருக்குக் கடினமாகவும் உள்ளது. உங்களால் ஒரு சோதனையைச் சரியாக அமைக்க இயலவில்லை என்றால், உடனே வேறு ஒரு கேப்சா படம் கேட்டு வாங்கலாம். இதற்கான லிங்க் இதன் அருகிலேயே இருக்கும். இதனை ஸ்கிப் செய்து போக இயலாது.

கேள்வி: யு ட்யூப் தளத்தில் சில வேளைகளில், நாம் பொறுமையாகப் பார்த்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் கொண்ட விடியோக்கள் கிடைக்கின்றன. ஆனால், அவை இயக்கப்படும் வேகத்தில், அவற்றைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. அதன் இயங்கும் வேகத்தைக் குறைத்து வைத்துப் பார்க்க முடியுமா?
என். பிரார்த்தனா, சென்னை.
பதில்:
யு ட்யூப்பில் காட்டப்படும் விடியோ பைல்கள் இயங்கும் வேகத்தினைக் குறைக்கவும், அதிகப்படுத்தவும் முடியும். இதற்கான வசதி தரப்பட்டுள்ளது. விடியோ பைலை இயக்கி, அதன் வலது கீழாக உள்ள சிறிய படங்களில், செட்டிங்ஸ் கியர் மீது கிளிக் செய்திடவும். இங்கு ஒரு மெனு, மேலாக எழும்பி வரும். இதில் ஸ்பீட் என்று இருப்பதைத் தேர்வு செய்திடவும். வழக்கமான வேகத்தில் பாதி வேகம் போதும் என்றால், '5' தேர்வு செய்திடவும். அதிலும் பாதி, கால்வாசி வேகம் என்றால், -.25 தேர்வு செய்திடவும். அதிக வேகம் வேண்டும் என்றால், 1.25, 1.5 மற்றும் 2 என மூன்று நிலைகளில் தேர்வு செய்திடலாம். தேர்ந்தெடுத்த பின்னர், பிளே அழுத்தினால், விடியோ படம், செட் செய்யப்பட்ட வேகத்தில் இயங்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அப்டேட் செய்தேன். இதில் விண்டோஸ் மூவி மேக்கர் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு அது அவசியம் தேவைப்படுகிறது. வழி காட்டவும்.
என். பிருத்விராஜ், கோவை.
பதில்
: விண்டோஸ் 10 சிஸ்டம் மற்றும் சமீபத்திய முதல் ஆண்டுவிழா மேம்படுத்தலுக்கு மாறிக் கொண்டவர்களில் சிலருக்கு இந்தப் பிரச்னை உள்ளதாகத் தெரிகிறது. இதற்காகக் கவலைப்பட வேண்டாம். விண்டோஸ் கீ அழுத்திக் கிடைக்கும் தேடல் கட்டத்தில் Easy Movie Maker என்று டைப் செய்து கிடைக்கும் முடிவுகளில், மைக்ரோசாப்ட் ஸ்டோர் முகவரி கொண்ட இணையப் பக்கத்தினைக் கிளிக் செய்திடவும். பின்னர், அந்த செயலி உள்ள தளம் கிடைக்கும். இங்கு டவுண்லோட் செய்திட இசைவு தெரிவித்து தேர்வு செய்தால், மூவிக்கான பைல் டவுண்லோட் செய்யப்பட்டு, உடனே இன்ஸ்டால் செய்யப்படும். மைக்ரோசாப்ட் ஸ்டோரிலிருந்து கிடைப்பதால், இது சரியாக, உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப இயங்கும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரித்து பிரிண்ட் வழங்குகையில், சில வரிசைகளை சிலருக்கு மறைத்து தர வேண்டியதுள்ளது. இதனை நாம் ஒரே ஒர்க் ஷீட்டில் உள்ளவாறு வைத்து, தேவைப்படாத வரிசைகளை மறைக்கவும், பின்னர் மறைத்ததை எடுக்கவும் முடியுமா? இதில் வரிசை எண்கள் மாற்றப்படக் கூடாது. இதற்கான வழி உள்ளதா?
என். ஸ்ரீமதி, திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி. எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பலவகையான தகவல்களை அமைக்கையில், அதன் சில வரிசைத் தகவல்கள் சிலருக்குக் காட்டப்படாதவையாகவோ, மறைக்கப்பட வேண்டியதாகவோ அமைந்திருக்கும். பிரிண்ட் எடுக்கையில், இந்த வரிசைகள் அச்சாகக் கூடாது. வரிசை எண்கள் மாறா நிலையில் இருக்க வேண்டும். இதுதானே உங்கள் விருப்பம். சற்று விரிவாகவே இதற்கான வழிகளைக் கீழாகத் தருகிறேன்.
1. எந்த படுக்கை வரிசை அல்லது வரிசைகளை மறைக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3. Cells குரூப்பில் Format என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் பலவிதமான பார்மட்டிங் ஆப்ஷன்களைக் காட்டும்.
4. முதலில் Hide & Unhide என்பதில் கிளிக் செய்து, பின்னர், Hide Rows என்பதில் கிளிக் செய்திடவும்.
இதில் ஒன்றைக் கவனிக்கலாம். சில வரிசைகள் மறைக்கப்பட்டாலும், வரிசை எண்கள் மாற்றப்படுவதில்லை. இதற்குப் பதிலாக, அங்கு சில வரிசைகள் மறைக்கப்பட்டுள்ளன என்று காட்டும் வகையில், திரையின் இடது பக்கத்தில், row header ஏரியாவில், கருப்பு வண்ணத்தில் பட்டையாக ஒரு கோடு அமைக்கப்பட்டிருக்கும்.
மறைக்கப்பட்ட வரிசைகளை மீண்டும் காட்டப்படும் வகையில் கொண்டு வர கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
1. மறைக்கப்பட்ட வரிசைகளின் முன் மற்றும் பின் உள்ள வரிசைகளோடு தேர்ந்தெடுக்கவும். எடுத்துக் காட்டாக, நீங்கள் வரிசை 7 முதல் 11 வரை மறைத்திருந்தால், 6 முதல் 12 வரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. ஹோம் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. Cells குரூப்பில் Format என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் பலவிதமான பார்மட்டிங் ஆப்ஷன்களைக் காட்டும்.
4. முதலில் Hide & Unhide என்பதில் கிளிக் செய்து, பின்னர், Unhide Rows என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் லெனோவா டேப்ளட் ஒன்று வாங்கினேன். இதில் இன்டர்நெட் இணைப்பிற்கான வை பி காட்டும் ஐகான் எதுவும் இல்லை. ஆனால், இதற்கான மேனுவலில், வை பி இணைக்க முடியும் எனக் காட்டப்பட்டுள்ளது. என்னிடம் உள்ள ரெளட்டர் மோடத்திலும் இந்த இணைப்பு உள்ளது என உறுதியாகத் தெரிகிறது. வை பி இணைப்பில் டேப்ளட் பி.சி.யை இயங்க வைப்பது எப்படி எனக் குறிப்புகள் தரவும்.
ஆ. பாண்டியன், மதுரை.
பதில்:
உங்கள் டேப்ளட் பி.சி.யில், “connect to Internet” என எந்த ஐகானும் ஹோம் ஸ்கிரீனில் இருக்காது. அதில் “Settings” ஐகான் அழுத்தி செட்டிங்ஸ் மெனு பெறவும். இதில் “connections” அல்லது “network connections” என ஒரு பிரிவு இருக்கும். இதில் Wireless என்பது இயக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
அல்லது Wi Fi என்றே காட்டப்படும். இது இயக்கப்பட்டும், Airplane Mode என்பது இயக்கப்படாத நிலையிலும் இருக்க வேண்டும். நெட்வொர்க் இணைப்பிற்கான பிரிவில், உங்கள் டேப்ளட் பி.சி.யில் இயங்கக் கூடிய அனைத்து வை பி இணைப்புகளும் காட்டப்படும். உங்கள் வீட்டில் உள்ள ரெளட்டர் மோடம் இயக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீட்டு இணைப்பிற்கான பெயர் காட்டப்படும். அதனை அழுத்தினால், பாஸ்வேர்ட் கேட்கப்படும். அதில், நீங்கள் செட் செய்த பாஸ்வேர்ட் கொடுத்து என்டர் செய்தால், உடன் உங்கள் டேப்ளட் பி.சி. வை பி இணைப்பில் இணைக்கப்பட்டு, இணையத்தைத் தொடர்பு கொள்ளும் நிலைக்கு வந்துவிடும். அடுத்த முறை டேப்ளட் பி.சி. தானாகவே, இணைய இணைப்பிற்குச் செல்லும். செல்லவில்லை என்றால், உங்கள் மோடம் இயக்கப்படவில்லை என்று பொருள்.

கேள்வி: நான் என் லேப்டாப் கம்ப்யூட்டரை விண்டோஸ் 10க்கு ஜூன் மாதம் மாற்றினேன். பின்னர், மீண்டும் பழைய விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொண்டேன். நன்றாக பழையபடி இயங்குகிறது. ஆனால், பலரும் விண்டோஸ் 10 இயக்குவதைப் பார்த்த பின்னர், மீண்டும் விண்டோஸ் 10க்கு மாற விரும்புகிறேன். இலவசமாக ஏற்கனவே மாற்றிக் கொண்டதனால், மீண்டும் அதே போல இலவசமாக மாறிக் கொள்ள முடியுமா?
கே. பத்மஜா ரவீந்திரன், சேலம்
.
பதில்: விண்டோஸ் 10க்கு மாறியவர்களுக்கு, மீண்டும் தங்களின் பழைய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள ஒரு மாத கால அவகாசத்தினை மைக்ரோசாப்ட் வழங்கியது. நீங்களும் மாற்றிக் கொண்டீர்கள். ஆனால், மீண்டும் விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வதை நீங்கள் ஜூலை 29க்கு முன்னர் மேற்கொண்டிருக்க வேண்டும். இப்போது காலம் கடந்துவிட்டது. இனிமேல் விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ள அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இலவசமாகப் பெற முடியாது. இதனை முன்பே கம்ப்யூட்டர் மலரில் தெளிவாகத் தெரிவித்திருந்தோமே!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X