உறவு மேலாண்மை: நான் ரொம்ப பேட் பாய் | நலம் | Health | tamil weekly supplements
உறவு மேலாண்மை: நான் ரொம்ப பேட் பாய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
00:00

ரொம்ப குறும்பு செய்யும் குழந்தையை சில சமயங்களில், 'நீ, சொல் பேச்சு கேட்கலைன்னா உன்னை, 'பேட் பாய்'ன்னு சொல்லிடுவேன்,' என்று சொன்னால், எந்தக் குழந்தையுமே, 'நோ, நோ, நான் குட் பாய் தான்' என்று உடனே சொல்லும். தன்னை நல்லவன் என்று சொல்வதுதான் இயல்பு; இயற்கையானதும்கூட. ஆனால், ஏழாம் வகுப்பு படிக்கும் சுரேஷை, என்னிடம் அழைத்து வந்தபோது, 'இப்படி செய்தால், உன்னை, 'பேட் பாய்'னு சொல்வாங்களே' என்றேன். 'ஆமாம், நான் 'பேட் பாய்' தான்' என்றான் சிரித்துக் கொண்டே. தன்னை அப்படி சொல்வதில், அவனுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
சுரேஷின் பிரச்னை இதுதான். பள்ளியிலும் சரி; டியூஷனிலும் சரி; உடன் படிக்கும் மாணவியரிடமும், டீச்சரிடமும் சாதாரணமாகப் பேசும்போதே, கெட்ட வார்த்தையை பயன்படுத்தித்தான் பேசுவான். அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் இருந்துதான் சுரேஷை பற்றிச் சொன்னார்கள்.
அவன் நடத்தையும் பேச்சும் கட்டுப்படுத்தவே முடியாமல் போய் படிப்பிலும் மிக மோசமாக இருந்ததால், பள்ளியிலிருந்தே நீக்கி விடலாமா என்ற நிலையில்தான், அவன் அம்மா அவனை என்னிடம் அழைத்து வந்தார். எதைப் பற்றிக் கேட்டாலும், அதில் நான்கு கெட்ட வார்த்தைகளை கலந்து சத்தமாக பேசினான். குறிப்பாக, பெண்களிடம் பேசும்போதுதான் இப்படி செய்தான். அவன் அம்மாவிடம் குடும்ப சூழல் பற்றி விசாரித்தபோது, அப்பா
சிறியதாக ஏதோ பிசினஸ் செய்கிறார். அதோடு, வட்டிக்கு பணமும் கொடுக்கிறார். அம்மா வீட்டை கவனிக்கிறார். இவனுக்கு ஒரு தங்கை உண்டு.
அம்மாவிற்கும், அப்பாவிற்கும் இடையில், சரியான புரிதல் கிடையாது. அப்பா வீட்டில் இருப்பதே அபூர்வம். வீட்டில் இருக்கும் சமயங்களில், போனில் அல்லது நேரில் யாருடன் பேசினாலும், கெட்ட வார்த்தை இல்லாமல் அவரால் பேசவே முடியாது. அம்மாவிடமும் அப்படித்தான் பேசுவார். இவனைப் பொறுத்தவரை, திட்டவும் மாட்டார்; அதே நேரத்தில் கண்டு கொள்வதும் இல்லை. ஆனால், இவன் தங்கை மேல் அன்பாக இருப்பார். அப்பாவின்
நடத்தையைப் பார்த்துப் பார்த்து, பெண்கள் என்றாலே இவனுக்கு அலட்சியம். பெண்கள் மேல் நல்ல அபிப்ராயம் கிடையாது.இவனின் நடத்தை பிடிக்காத அம்மா, எப்போதும் தங்கையை மட்டுமே ஆதரிப்பார். இவன் நடத்தையை, படிப்பை, தங்கையுடன் ஒப்பிட்டு, 'அவளைப் பாரு, எப்படி இருக்கா? நீ ஏண்டா இப்படி ஊதாரியா இருக்கே?' என்பார். நான் சுரேஷிடம், 'நீ பேட் வேர்ட்ஸ் பேசினா, பசங்க எல்லாம் என்ஜாய் பண்ணுவாங்கதான். ஆனால், உன் மேல் யாருக்கும் நல்ல இமேஜ் இருக்காது. உன் நட்பை யாருமே விரும்ப மாட்டாங்க' என்று பல உதாரணங்களுடன், அவனுக்குப் புரிய வைக்கவே இரண்டு அமர்வுகள் ஆனது. கெட்ட வார்த்தை பேசும்போது, அவ்வளவு ஆவேசமாக முகத்தில் பலவித உணர்ச்சிகளுடன் பேசுவான். அப்படி பேசும் சமயங்களில், கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்க்கச் சொன்னேன். நல்ல விஷயங்களை பேசச் சொல்லி, அதையும் காட்டுவேன். 'எந்த நேரத்தில் உன் முகம் அழகா இருக்கு?' என்று கேட்பேன். பாராட்டு மற்றும் ஏற்றுக் கொள்வது என்ற விஷயத்தை செயல்படுத்தினேன். 11 வயது சிறுவன் என்றாலும், நான் சொல்வதைப் புரிந்து கொண்டான். அவன் அப்பாவால் அவ்வளவு எளிதாக தன்னை மாற்றிக் கொள்ள முடிய வில்லை என்றாலும், பையனின் எதிர்காலம் கருதி, இப்போது வீட்டில் அதிகம் பேசுவதில்லை.

செல்லம் நரேந்திரன்
மன நல ஆலோசகர்
98433 14949

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X