மொபைல் போன்களுடன் இணைந்து செயல்படுவதுடன், வேறு பல வசதிகளையும் தரும் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனை, வரும் 2020 ஆம் ஆண்டில், 1780 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகம் உயரும் என்று 'இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன்' அமைப்பு கணித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சற்று மந்த நிலையைச் சந்தித்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு இந்த கணிப்பு, ஊக்க மருந்தாக உள்ளது.
நடப்பு 2016 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் வாட்ச் விற்பனை 2 கோடியே பத்து லட்சமாக உயரும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.9% கூடுதலாக இருக்கும். 2020 ஆம் ஆண்டில், இது மூன்று மடங்கு உயர்ந்து, 5 கோடியே 46 லட்சமாக இருக்கும். தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்குக் காரணம், புதிய மாடலாக எந்த ஒரு ஸ்மார்ட் வாட்சும் சந்தையில் வராததே ஆகும். அண்மையில், ஆப்பிள் தன் ஸ்மார்ட் வாட்ச் வரிசை 2 ஐ வெளியிட்டுள்ளது இந்த மந்த நிலையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனை உயர வேண்டுமானால், அவை தரும் கூடுதல் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கும் அப்ளிகேஷன்கள் இணைக்கப்பட வேண்டும். இணைப்பு வழியில் வேகம் மற்றும் முன்னேற்றம், டிஸ்பிளே மாற்றம், பேட்டரியில் கூடுதல் திறன் ஆகியவற்றில் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டால் தான், ஸ்மார்ட் வாட்ச், மக்களின் அத்தியாவசியத் தேவையான சாதனமாகக் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் நிலைக்கு வரும். அப்போதுதான், இதன் விற்பனை உயரும் என ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. தற்போதைக்கு ஸ்மார்ட் வாட்ச்கள், கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு சாதனமாகக் கருதப்படவில்லை.
ஒரு நாளில், நம் மொபைல் போனை எடுத்துப் பேசும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களை இவை குறைக்கின்றன. சில நாடுகளில், இவை பணம் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. உடல் பயிற்சிகள் சார்ந்து இவை, கூடுதல் வசதிகளையும் தகவல்களையும் அளிக்கின்றன. ஆனால், பலர், மொபைல் போன்களிலேயே இந்த வசதிகளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, “இது எனக்குக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது” என்று சொல்லும் நிலைக்கு ஸ்மார்ட் வாட்ச் உயரவில்லை.
வர இருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் 2 பயன்பாடு, மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் எதிரொலிக்கும் என அனைவரும் கருதுகின்றனர். புதிய மாடல்கள், நவீன புதிய வசதிகளுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு, குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. ஆனால், மெதுவாக இதன் பயன்பாட்டினை மக்கள், குறிப்பாக இளைஞர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கூடுதல் வசதி, விலை குறைப்பு, தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் செயலாக்கம் போன்றவற்றுடன் ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் பட்சத்தில், இந்தியாவிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என அனைவரும் கருதுகின்றனர்.