கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

கேள்வி: ஆங்கிலத்தில் தயார் செய்திடும் டாகுமெண்ட்களில், நான் புழக்கத்தில் இல்லாத சில சொற்களையும் பெயர்களையும் பயன்படுத்துகிறேன். இவை பெரும்பாலும் தாவரப் பெயர்கள். இவ்வாறு பயன்படுத்தும் பல சொற்களை, வேர்ட் பிழையுள்ள சொல் என்று காட்டுகிறது. திருத்த ரைட் கிளிக் செய்தால், சம்பந்தமில்லாத சொற்களைக் காட்டுகிறது. ரைட் கிளிக் செய்து Ignore கொடுத்தால், பிழை எனக் கூறப்படுவது இல்லை. ஆனால், வேறு ஒரு கம்ப்யூட்டரில் இவை படிக்கப்படுகையில், தவறு எனக் காட்டப்படுகிறது. இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது?
எஸ். பிரார்த்தனா, சென்னை.
பதில்
: உங்களுடைய சொற்கள், வேர்ட் சோதனை செய்திடும் அகராதியில் இல்லாததால், இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதனை Custom Dictionary எனப்படும் தனி அகராதியில் சேர்த்தாலும், சேர்க்கப்பட்ட கம்ப்யூட்டரில் மட்டுமே இது சரி எனக் காட்டப்படும். இதற்கு ஒரு வழி உள்ளது. முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
வேர்ட் 2010ல், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து, ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து சென்று, Exceptions என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு Hide Spelling Errors in this Document Only என்ற செக் பாக்ஸ் டிக் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த வழி எப்படி செயல்படுகிறது? என்ற கேள்வி எழலாம். இதன்படி அமைக்கப்படும் செட்டிங்ஸ் மாற்றங்கள், டாகுமெண்ட் உடன் தொடர்ந்து செல்லும். இதனால், குறிப்பிட்ட சொல் ''பிழையானது'' என்னும் குறை காட்டப்பட மாட்டாது.
இன்னொரு வழியாக, உங்கள் custom dictionary file ஐ மற்றவர்களுக்கும் அனுப்பி, அவர்கள் கம்ப்யூட்டரில் வேர்ட் டைரக்டரியில் பதிவு செய்து பயன்படுத்தச் சொல்லலாம். அப்போது, இந்த சொற்கள் பிழையற்றதாகவே காட்டப்படும். அலுவலகம் ஒன்றில் குழுவாகப் பணியாற்றுபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

கேள்வி: சிறந்த கேமரா உள்ள ஆண்ட்ராய்ட் போன் ஒன்றை சென்ற மாதம் வாங்கினேன். இதில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்று, அதிக ஸ்டோரேஜ் வேண்டி போட்டுள்ளேன். இதில் போட்டோக்கள் அழகாகக் கிடைக்கின்றன. இவற்றைச் சரி செய்திட, என் விண்டோஸ் 10 கம்ப்யூட்டருக்கு மாற்றிட முயன்றால், அவற்றை மாற்ற இயலவில்லை. போன் காட்டப்படுகிறது. ஆனால், படங்கள் உள்ள போல்டர் காட்டப்படவில்லை. போட்டோக்களை இதனால் மாற்ற இயலவில்லை. எப்படி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் எனக் கூறவும்.
எஸ். நந்தகுமார், சென்னை.
பதில்:
இதில் பல முன்னேற்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவற்றை வரிசைப்படுத்துகிறேன். போனில் உள்ள ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், போட்டோக்களை யு.எஸ்.பி. கேபிள் வழியாக மாற்ற இருப்பதனைத் தெளிவாக அமைக்க வேண்டும். போனை அதனுடைய யு.எஸ்.பி. கேபிள் வழியாக இணைக்கவும். இந்த கேபிள் சார்ஜ் செய்திடும் கேபிளாக இல்லாமல், டேட்டா பரிமாற்றத்திற்கான கேபிளாக இருக்க வேண்டும்.
போனின் ஸ்கிரீன் லாக் செய்யப்பட்டு இருக்கக் கூடாது. இருந்தால், போனை இயக்க நிலைக்குக் கொண்டு வரவும். ஆண்ட்ராய்ட் 6.0 கொண்டுள்ள போனில், திரையை மேலிருந்து கீழாக ஸ்வைப் செய்திடவும். இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்களிலிருந்து கிடைக்கும் அறிவிப்புகள் காணப்படும். இந்த பட்டியலில், “USB for Charging” என்ற அறிவிப்பு இருக்கும். இதனைத் தட்டி, மேலும் சில ஆப்ஷன்ஸ் இருப்பதைக் காணவும்.
இங்கு கிடைக்கும் “Use USB For” என்ற பாக்ஸில், “Photo transfer (PTP)” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், போனை ஒரு டிஜிட்டல் கேமரா போல இயக்கலாம். (PTP என்பது Picture Transfer Protocol என்பதன் சுருக்கமாகும்) மியூசிக், விடியோ போன்ற மீடியா பைல்களை மாற்ற Media Transfer Protocol, MTP என்ற வழிமுறை உள்ளது. இதனை மிக முக்கியமாகக் கவனித்து செயல்பட வேண்டும்.
இவ்வளவு செட் செய்தும் படங்களை மாற்ற வழி கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கேபிள் பயன்படுத்திப் பார்க்கவும். அல்லது கம்ப்யூட்டரில், வேறு ஒரு யு.எஸ்.பி. போர்ட்டினைப் பயன்படுத்தவும்.
இன்னொரு வழியும் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு ஒரு பேக் அப் வழிமுறையினை Google Photos app என்ற அப்ளிகேஷன் தருகிறது. இதனைப் பயன்படுத்தி, உங்கள் போட்டோக்களை, ஆண்ட்ராய்ட் போனிலிருந்து இணையத்திற்கு கூகுள் தளத்திற்கு அனுப்பலாம். பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து https://photos.google.com என்ற தளம் சென்று, படங்களைத் தரவிறக்கம் செய்து, எடிட் செய்து கொள்ளலாம்.

கேள்வி: பல ஆண்டுகளாக, யாஹூ மெயில் அக்கவுண்ட் ஒன்று வைத்திருந்தேன். அதன் பின், ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து அதனையே கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்குகிறேன். இப்போது யாஹு அக்கவுண்ட்டினை மூட முடிவு செய்துள்ளேன். எப்படி மூடலாம்? இந்த யாஹூ மெயில் முகவரியைத்தான், வங்கிக் கணக்கு ஒன்றுக்கு இணைய முகவரியாகத் தந்திருந்தேன். இதனை எப்படி ஜிமெயில் முகவரிக்கு மாற்றுவது? அன்பு கூர்ந்து வழி காட்டவும்.
பா. மதிநிறைச் செல்வி, சிவகாசி.
பதில்
: யாஹூ மெயில் அக்கவுண்ட்டினை எளிதாக மூடிவிடலாம். பின்னர், அந்த முகவரிக்கு யாராவது மெயில் அனுப்பினால், அவை ஏற்றுக் கொள்ளப்படாமல், அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும். வங்கிக் கணக்கினைப் பொறுத்தவரை, வங்கி சென்று, உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கு எண், முகவரி கொடுத்து, அதற்கான புதிய மின் அஞ்சல் முகவரியாக, ஜிமெயில் முகவரியை மாற்றித்தரும்படி கேட்டு விண்ணப்பம் தரவும். இனி, யாஹூ மெயில் அக்கவுண்ட் மூடுவது குறித்து இங்கு குறிப்புகள் தருகிறேன்.
யாஹூ அக்கவுண்ட் கணக்கினை நீக்க, முதலில் யாஹூ தளத்தில் சென்று, உங்கள் அக்கவுண்ட் செல்லவும். பின்னர், https://login.yahoo.com/?.done=https%3a%2f%2fedit.yahoo.com%2fconfig%2fdelete_user%3f.scrumb%3d0 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். நேரடியாக, இந்த தளம் சென்றால், உங்களுடைய யாஹூ அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் வழங்க வேண்டும். இந்தப் பக்கம் சென்றவுடன், உங்களுக்கு பல எச்சரிக்கை செய்திகள் வழங்கப்படும். நீங்கள் யாஹூ அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டியதற்கான பல காரணங்கள் தரப்படும். யாஹூ அக்கவுண்ட் நீக்கப்பட்டால், HotJobs, Yahoo! Mail, Yahoo! Address Book, Yahoo! Briefcase, and GeoCities ஆகிய தளங்களில் உள்ள உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் உங்களுக்குக் கிடைக்காது என்ற எச்சரிக்கை தரப்படும். யாஹூ தளத்தில், நீங்கள் கட்டணம் செலுத்தி எந்த சேவையினையாவது பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதுவும் முடக்கப்படும் என்றும், மீதமுள்ள உங்கள் பணம் திரும்பக் கிடைக்காது என்றும் அறிவுறுத்தப்படுவீர்கள். பின்னர், மீண்டும் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். CAPTCHA குறியீடு தரப்பட்டு, அதனையும் சரியாக உள்ளீடு செய்திட வேண்டும். பின் மீண்டும் உங்கள் அக்கவுண்ட் முடிக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படும். இதுவே உங்களுக்கான இறுதி நிலை. இதில் சரி என்று பதில் தந்தால், உங்கள் யாஹூ அக்கவுண்ட், 90 நாட்களுக்குள் நீக்கப்படும்.
யாஹூ அக்கவுண்ட்டினை நீக்கும் முன்னர், இந்த அக்கவுண்ட் வழியாக வந்த அனைத்தையும், ஒரு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அத்துடன், இந்த யாஹூ மெயில் வழியாக, நீங்கள் தொடங்கிய மற்ற மின் அஞ்சல் பதிவுகள் ஆகியவற்றையும் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சிறிய எச்சரிக்கை தருகிறேன். நீங்கள் Flickr போட்டோ தளத்தினைப் பயன்படுத்துபவராக இருந்தால், யாஹூ மெயில் கணக்கினை நீக்க வேண்டாம். Flickr தளத்துடன், யாஹூ மெயில் தொடர்புடையது. எனவே, இந்த போட்டோ தளத்தினைப் பயன்படுத்த நீங்கள் விருப்பப்பட்டால், யாஹூ அக்கவுண்ட்டினை மூடக் கூடாது.

கேள்வி: கமாண்ட் லைனில் சிஸ்டத்திற்கான கட்டளை கொடுத்துப் பல செயல்பாடுகளை நான் அடிக்கடி மேற்கொள்கிறேன். தற்போது விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு முறையும், தேடல் கட்டம் சென்று, கமாண்ட் ப்ராம்ப்ட் பெற்று இயக்குவதற்குப் பதிலாக, சுருக்கு வழியில், நேரத்தை வீணாக்காமல், கமாண்ட் ப்ராம்ப்ட் பெற வழிகள் உள்ளனவா?
ஆர். உதயகுமார், திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. கம்ப்யூட்டர் இயக்கத்தில் திறமையுடன் பணியாற்றுபவர்களே, அடிக்கடி கமாண்ட் ப்ராம்ப்ட் பெற்று செயல்பட விரும்புவார்கள். கீழ்க்காணும் சுருக்கு வழியைப் பின்பற்றினால், நேரமும், நிறைய சொற்களை டைப் செய்து, கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியைப் பெறும் வேலையும் குறையும்.
ஏதேனும் ஒரு போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shift கீயை அழுத்திக் கொண்டு, மவுஸில் ரைட் கிளிக் செய்திடவும். தற்போது கிடைக்கும் மெனு பட்டியலில் Open command window என்பதில் கிளிக் செய்தால், உடனே உங்களுக்கு கட்டளைப் புள்ளி கிடைக்கும். இந்த ட்ரிக், விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10ல் செயல்படும்.

கேள்வி: என்னுடைய சாம்சங் ஸ்மார்ட் போனில் நான் பேஸ்புக் பார்க்கிறேன். என் வயது 68. எழுத்துகள் மிகச் சிறியதாகத் தெரிகின்றன. இதனைப் பெரிதாக்கிப் பார்க்க முயன்றும் இயலவில்லை. ஏதேனும் வழிகள் உள்ளனவா? அன்பு கூர்ந்து வழி காட்டவும்.
என். சாருமதி, பாளையங்கோட்டை.
பதில்:
உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுகள். இதே போன்று இன்னும் பல வாசகர்களும் பேஸ்புக் மொபைல் அப்ளிகேஷனில் எழுத்து அளவு பிரச்னை குறித்து எழுதி உள்ளனர். எழுத்தின் அளவைப் பெரிதாக்க ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டுள்ளனர். இதற்குப் பதில் “இல்லை” என்றுதான் சொல்ல வேண்டும். மொபைல் போனில் இயங்கும் பேஸ்புக் செயலி, டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்தின் அளவைப் பெரிதாக்கிக் காட்ட எந்த ஒரு வழியும் கொண்டிருக்கவில்லை. போட்டோக்கள் இருந்தால், அவற்றின் மீது விரல்களால் 'கிள்ளி' விரித்துப் பெரிதாக்கிப் பார்க்கலாம். ஆனால், டெக்ஸ்ட்டைப் பெரிதாக்க வழி இல்லை.
உங்கள் மொபைல் போனில் உள்ள எழுத்து அளவினைப் பெரிதாக செட் செய்தால், அது பேஸ்புக் செட் செய்துள்ள டெக்ஸ்ட் அளவினைப் பெரிதாக்காது. தற்காலிகமாக ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். உங்கள் ஆண்ட்ராய்ட் போனில், accessibility options பிரிவில், Magnification gestures பிரிவினைத் தேர்ந்தெடுத்து இயக்கலாம். அவற்றில் மூன்று முறை தட்டினால், முழுத் திரையும், டெக்ஸ்ட்டுடன் பெரிதாக்கிக் காட்டப்படும். இதுவும் தற்காலிகமாகத்தான். நம்மால் ஒவ்வொரு முறையும் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள இயலாது. அதற்குப் பதிலாக, உங்கள் குறையைத் தெளிவாக, https://www.facebook.com/facebook/ என்ற இணைய தளத்தில் பதிந்தால், பேஸ்புக் நிர்வாகம் நிச்சயம் இதனைக் கவனத்தில் கொண்டு, நமக்கு உதவலாம்.

கேள்வி: இணையப் பக்கங்களில் குறிப்பு எழுதி சேவ் செய்து வைக்கலாம் என்று படித்தேன். இதனை எப்படி அமைப்பது என விளக்கமாகப் பதில் தரவும். நான் விண்டோஸ் 7 மற்றும் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன்.
எஸ்.ஆர். கார்த்திக், தூத்துக்குடி
.
பதில்: நாம் பார்க்கும் இணையதளங்களில் குறிப்பு எழுதும் வசதி, எட்ஜ் பிரவுசரில் மட்டுமே கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்த உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் இருக்க வேண்டும். எட்ஜ் பிரவுசரில், வலதுபுறம் மேலாக Web Note என்ற டூல் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால், இடதுபுறம் அதற்கான மெனு கட்டம் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் குறிப்புகள் எழுதலாம். குறிப்பிட்ட தகவலை வெட்டி தனிப் பகுதியாக அமைக்கலாம். மார்க்கர் பேனா போல வண்ணம் தீட்டி, தகவலை ஹைலைட் செய்திடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalingam.S - THIRUVANANTHAPURAM,இந்தியா
29-செப்-201615:05:59 IST Report Abuse
Rajalingam.S இணையப் பக்கங்களில் குறிப்பு - you can make notes on any web page, any position. when you that page again, the notes get loaded ஆட்டோமடிகிலி s://chrome.google.com/webstore/detail/note-anywhere/bohahkiiknkelflnjjlipnaeapefmjbh - This is for your kind information sir.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X