''அப்பா... நீங்க, தாத்தாவாக போறீங்க... இப்ப தான், 'கன்பார்ம்' செய்துட்டு வர்றோம்; நாளைக்கு ராத்திரி, இந்தியாவுக்கு ப்ளைட் ஏறுறோம்,'' என்று போனில் மகிழ்ச்சியுடன் தன் பெற்றோருக்கு தகவல் கூறினான், ரகு.
அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியிடம், ''நித்யா... இப்பவே எல்லாத்தையும், 'பேக்' செய்துடு,'' என்றான்.
''இல்ல ரகு... நாம இங்கயே தான் இருக்கப் போறோம்,'' என்றாள், நித்யா.
''சும்மா ஏதாவது பேசாம, கொஞ்சமாவது நடக்கிற காரியத்த பேசு; ஒரு வருஷ டிரெயினிங்க்காக அமெரிக்கா வந்த நாம, இப்ப இந்தியா போகாம இங்கேயே, 'செட்டில்' ஆயிடலாம்ன்னு சொல்றது நல்லவா இருக்கு,'' என்று, கடிந்து கொண்டான், ரகு.
''அதுல என்ன தப்பு இருக்கு... பிராக்டிக்கலா யோசிச்சுப் பாரு, நம்மளோட நல்லதுக்காக தான் சொல்றேன். உன்னோட வேலைய இங்கேயே, 'பர்மனன்ட்' செய்துக்கலாம்; எனக்கும் வேலை இருக்கு. உங்க அப்பா, அம்மாவையும் அழைச்சுட்டு வந்து நம்ம கூட வச்சுக்கலாம். நமக்கு பொறக்க போற குழந்தைக்கு, இங்க தான் எல்லா வசதியும் கிடைக்கும்,'' என்றாள்.
தன் பெற்றோரை விட்டுக் கொடுக்காமல் பேசும் மனைவியை ஒருபுறம் ரசித்தாலும், ''ஏய்... அவங்களுக்கு இங்க எப்படி செட்டாகும்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா... கடைசி காலத்துல, அவங்க சொந்த ஊர்ல இருக்கணும்ன்னு நினைக்க மாட்டாங்களா... எனக்கும், இங்க செட்டில் ஆக, கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. ச்சே... நீ இப்படி சுயநலமாக மாறுவேன்னு நினைக்கவே இல்ல. வெளிநாட்டு மோகம், உன்னைப் பிடிச்சு ஆட்டுது,'' என்றான்.
''ஆமா... நான் சுயநலவாதி தான்; இந்தியாவில் நீ வாங்கிய சம்பளத்தை விட, இங்க மூணு மடங்கு சம்பளம் அதிகம். ஒண்ணு தெரிஞ்சுக்க... நாம இன்னும் வாடகை வீட்டுல தான் இருக்கோம். உங்க அப்பாவுக்கு, ஹார்ட், 'சர்ஜரி' செய்யணும். அத இங்க செய்றது எவ்வளவு சுலபம்ன்னு உனக்கே நல்லா தெரியும். பொருளாதாரத்தோட நாம படுற கஷ்டம், நம்ம பிள்ளையும் படக்கூடாதுன்னு நினைக்கிறேன்... ஊழல், லஞ்சம், சிபாரிசு, போராட்டம், பிரச்னை, டிராபிக், ஏமாத்தல் நிறைஞ்ச இந்தியாவுல என் பிள்ளையும் கிடந்து கஷ்டப்படக் கூடாது.
''இவ்வளவு ஏன்... நானும் தான் படிச்சு இருக்கேன். படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கலயே... கிடைச்ச வேலைக்கு போனாலோ, அங்க என்ன நடந்ததுன்னு உனக்கே தெரியும். அதுக்காக, வெளிநாட்டுல எல்லாம் இந்த பிரச்னை இல்லயான்னு கேட்கலாம்... இல்லன்னு சொல்லல... ஆனா, அது நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துறதில்ல. முக்கியமா, இங்க, அவங்க கம்பெனியோட பொருளாதார வளர்ச்சிக்காக நானும் உழைக்கிறேன்ங்கிறத புரிஞ்சு, என்னை மதிக்கிறாங்க; பாராட்டுறாங்க. எல்லாரோட மனசும், சின்ன பாராட்டுக்காக தான் ஏங்கிட்டு இருக்கு,'' என்றாள்.
''இதெல்லாம் நம்ம நாட்டுல இல்லயா... அத இதப் பேசாம, நாளைக்கு கிளம்புற வழிய பாரு; சண்டை போட, இது நேரம் இல்ல...'' என்றான்.
நித்யா கருவுற்று இருப்பதால், விமான நிலைய டாக்டர்களால் பரிசோதனை சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, மேலும், சில பரிசோனைகள் செய்து, வசதியாக இருக்கை ஒதுக்கி கொடுத்தனர். இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள், நித்யா. அவள் முகத்தைப் பார்த்த போது, தான் நினைத்த காரியத்தில் உறுதியாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான், ரகு.
'ஒரு வருஷம் கழிச்சு வீட்டுக்கு போறோம்; அதுவும், சந்தோஷமான செய்தியோட! மகனும், மருமகளும் நம்ம கூடவே இருக்க போறாங்கங்கிற சந்தோஷத்துல இருக்கிற அப்பா, அம்மாவுக்கு ஏமாற்றமா இருக்கப் போகுது. இந்த நித்யா இப்படி மாறுவான்னு நினைச்சுக் கூட பாக்கலயே...' என்று மனதுக்குள் புலம்பினான்.
ரகு, நித்யாவை முதன் முதலாக பார்த்ததே, சொந்த ஊரில், 'என் வாழ்வாதாரம் இந்தியா' என்ற, தமிழ் மேடையில் தான். அவளோட கவிதை நடையான பேச்சும், தமிழ் உச்சரிப்பையும் ரசித்துப் பார்க்க, அருகில் அமர்ந்திருந்த அப்பா, 'என்னடா பொண்ணு பிடிச்சுருக்கா... இவ தான், உனக்கு பாத்திருக்க பொண்ணு'ன்னு சொன்னதும், அவன் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.
திருமணம் முடிந்து, நித்யா வீட்டுக்கு வந்த பின், வாழ்க்கையோட அர்த்தத்தையே உணர்ந்தான், ரகு.
உலகத்தையே, தன் மோக வலையில் சிக்க வைத்துள்ள கணினி துறையில், பணிபுரிந்த ரகு, அதில் மூழ்கிப் போக, தனிமையை உணர ஆரம்பித்த நித்யா, ரகுவின் அனுமதியொடு வேலைக்கு சென்றாள். அங்கு தான் உண்மையான நெருக்கடிகளை சந்திக்க ஆரம்பித்தாள். போட்டி, பொறாமை, பகைமை, துரோகம்ன்னு இதுவரைக்கும் அவ பார்க்காத உலகத்தை பார்த்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக, இரவு, பகலாக உழைத்த அவள் உழைப்பை, கூடவே இருந்தவங்க திருடின போது, ரொம்பவே நொந்து போனாள்.
அதற்கு பின், எந்த வேலைக்கும் போகாமல், வீட்டிலேயே அடைந்து கிடந்தவள், எல்லாவற்றிலும் வெறுப்பை காட்ட ஆரம்பித்தாள். இந்நிலையில் தான், ரகு ரொம்ப நாட்களாக எதிர்பார்த்திருந்த, 'பாரீன் ட்ரெயினிங்' வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டும் என்று நித்யாவையும் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனான்.
அமெரிக்கா வந்ததும், அடம் பிடித்து, வேலைக்கு சென்றாள். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, அங்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும், வசதியான வாழக்கையையும், அங்கிருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நட்பால் தெரிந்து கொண்டவள், அந்த நாட்டில் உள்ள வசதி, படிப்பு, கலாசாரம் என எல்லாவற்றிற்கும் அடிமையாகி, இந்தியாவிற்கு வர மறுக்கிறாள்.
மனைவியை திரும்பிப் பார்த்தான் ரகு; அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவளையே உற்றுப் பார்த்தவனுக்கு அவள் தரப்பு நியாயங்களை எண்ணிப் பார்த்தான்... 'நித்யா, என்ன எதிர்பாக்கிறா, எனக்கான அடையாளம், திறமைக்கு ஏற்ற வாய்ப்பு, என்னை நம்பி இருக்கிற பெத்தவங்களுக்கு நல்ல உடல் நலம். அதுக்கெல்லாம் மேல, நம் குழந்தையோட வளமான எதிர்காலம்ன்னு என் இடத்தில் இருந்து, அவ யோசிக்கிறா... அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு... அவ எடுத்த முடிவுக்கு, கண்டிப்பாக நாம சப்போர்ட் செய்யணும்...' என்று பலவிதமாக யோசித்தபடியே தூங்கிப் போனான், ரகு.
விமானம் தரையிறங்கும் சத்தம், காதை கிழித்தது. மனைவியை திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தை, 'உம்'மென்று வைத்திருந்தாள்.
''இப்ப எதுக்கு மூஞ்சி தூக்கி வச்சுருக்கே... ரெண்டு நாள் போகட்டும், நானே, எல்லார்கிட்டயும், ஆபீஸ்ல இருந்து, அமெரிக்காவுல இருக்கிற ஹெட் ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் செய்றாங்கன்னு சொல்லிக்கிறேன்,'' என்றான்.
விமான நிலையத்துக்கு வந்திருந்தனர், ரகுவின் பெற்றோர். தாயைக் கண்ட சேயைப் போல், ஓடிச் சென்று ரகுவின் அம்மாவை கட்டி அணைத்தாள், நித்யா. அவளுக்கு கை குலுக்கி, ஆசிர்வாதம் செய்தார், அப்பா. ''என்னை மறந்துட்டீங்களா, கண்டுக்கவே மாட்டீங்கிறீங்களே...'' என்றான் ரகு.
''நித்யா... யாருமா இந்த பையன்; ரொம்ப நேரமா, இங்க நின்னுட்டு இருக்கான்,'' என்று அப்பா சொல்ல, அனைவரும் பலமாக சிரித்தனர்.
காரில் வீட்டிற்கு செல்லும் போது, ''நித்யா... உன் அம்மா, அப்பா எப்ப வராங்க?'' என்று கேட்டாள் அம்மா.
''தம்பிக்கு பரிட்சை இருக்குமா... அதனால, நாளைக்கு நைட் வர்றோம்ன்னு சொல்லியிருக்காங்க.''
''ரகு... நாளைக்கு மறக்காம நித்யாவ, 'செக்கப்' கூட்டிட்டு போடா,'' என்ற அப்பாவை பார்த்து புன்னகைத்து, ''சரிப்பா,'' என்றான், ரகு.
மருத்துவமனையில், கூட்டம் அதிகமாக இருந்தது. டோக்கனை வாங்கி வந்த ரகு, ''இவ்வளவு கூட்டம் இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, ஆபிசுக்கு, 'பர்மிஷன்' போட்டுட்டு வந்துருப்பேன்,'' என்றவன், ''நித்யா... உனக்கு துணைக்கு அம்மாவ வர சொல்றேன். இன்னைக்கு நான் கண்டிப்பா, ஆபீஸ் போய், 'ஸ்டேடஸ்' சொல்லணும்... அப்புறம், அந்த டிரான்ஸ்பர் விஷயமா கூட பேசணும்,'' என்றான்.
''அம்மாவ கூப்பிட வேணாம் ரகு... நான் பாத்துக்கிறேன், நீங்க, உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு, நான் போன் செய்ததுக்கு அப்பறம் வந்தா போதும்,'' என்றாள்.
'எப்படியாவது, அப்பா, அம்மாவ சம்மதிக்க வைத்து, அமெரிக்கா அழைச்சுட்டுப் போகணும். ஊர்ல இருந்து வர்ற, என் அப்பா, அம்மாவ ஒத்துக்க வைக்கணும்; தம்பியோட படிப்பு முடிஞ்சதும், அவனை கூட்டிட்டு போயிடணும்...' என்று, பலவாறு நினைத்தபடி அமர்ந்திருந்தவளின் கவனத்தை ஈர்த்தது, நன்கு பரிச்சயமான குரல்.
திரும்பிப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம். ''ஐயா... நீங்க தமிழாசிரியர் ஆதித்தன் ஐயா தானே...'' என்றாள், ஆர்வத்துடன்!
''ஆமா... நீங்க...'' என்று, 70 வயது சரீரத்தில், 20 வயது இளைஞனின், கம்பீரமான குரலில் கேட்டார்.
''ஐயா... நான் நித்யா; 10ம் வகுப்புல உங்களோட மாணவி. என்னை தமிழிசைன்னு பட்டப் பேரு வச்சு கூப்பிடுவீங்களே...'' என்று நினைவூட்டினாள்.
''ஓ... அந்த பொண்ணா... எப்படிம்மா இருக்கே...'' என்று நலம் விசாரித்தார்.
''பைன்... சாரி மன்னிச்சிடுங்க ஐயா... நல்லா இருக்கேன்,'' என்று தட்டு, தடுமாறி தமிழில் பேசியவள், தன் தடுமாற்றத்திற்காக தன்னையே கடிந்து கொண்டாள்.
''பரவாயில்லம்மா... ரொம்ப கஷ்டப்படாத. எனக்கு இங்கிலீஷ் தெரியும்,'' என்று கூறி, பலமாக சிரித்து, ''என்னம்மா ஐ.டி.,ல வேலை பாக்குறியா...'' என்று கேட்டார்.
''ஆமாங்க ஐயா,'' என்று தலையாட்டினாள்.
''வெரி குட்; ஆனா, புகுந்த வீட்டுக்கு போன உடனே, அம்மாவ மறந்துட்டீங்க போல...''
அவர், அம்மா என்று சொன்னது தமிழ் மொழியை என்பது புரிந்ததும், உடம்பில் ஆயிரம் ஊசிகளை குத்தியது போன்று உணர்ந்தாள்.
சிறிது நேரம், அவளது குடும்பம், வேலை பற்றி பேசியவர், ''பரவாயில்ல... நீ வெளிநாட்டு மோக வலையில சிக்காம திரும்பி வந்திட்ட. என் பேத்தியும் உன்னை மாதிரி தான், மொழி, நாட்டுப்பற்றோட இருந்தா. வெளிநாடு போனதும் இப்ப, மொத்தமா மாறிட்டா. வெள்ளக்காரன், நம்ம நாட்டுக்கு வந்து நம்மை அடிமைப்படுத்துன காலம் போய், இப்ப, நாம அங்க போய், அவன் கிட்ட அடிமையா வாழ்ந்துட்டு இருக்கோம்...
''இந்தியாவுல மட்டும் தான், ஊழல், போராட்டம், கொலை, கொள்ளை நடப்பது போலவும், மற்ற நாடுகள் எல்லாம் அமைதி பூங்காவ இருக்கிற மாதிரியும் சிலர் பேசுறாங்க.
''நாம, எத ரொம்ப அதிகமா நேசிக்கிறோமோ, அங்க தான் வெறுப்பும், வேதனையும் பிறக்குது. தப்பு செய்துட்டாங்கன்னு, நாம நேசிக்கிற எல்லாரையும், தூக்கி போடவா செய்றோம் இல்லயே... மன்னிச்சு ஏத்துக்கிறோம்ல்லே,,, அப்படி வெறுத்துட்டா, யாருமே நேசிக்கவோ, நேசிக்கப்படுதற்கோ இருக்க மாட்டாங்கன்னு நமக்கே தெரியும்... நம்ம நாடும் அப்படித்தான் முடிஞ்சவரையும், தப்புகளோட ஏத்துக்கணும்; இல்ல, தப்புகள சரி செய்யனும்.
''ஒண்ணு மட்டும் சொல்றேன்... சொந்த வீட்டுல, சந்தோஷம் இல்லன்னு நினைச்சு, பக்கத்து வீட்டுல போய், வாழ்க்கை நடத்துறீங்க. அவங்களும், உங்களுக்கே தெரியாம உங்க உழைப்பை திருடி, அதை, உங்களுக்கே சம்பளமா தராங்க. நம்ம நாட்டுல, நம்மள ராஜா மாதிரி நடத்தப்படாமல் இருக்கலாம்; ஆனா, நம்ம வீட்டுல இருக்கிற சுதந்திரம் இருக்கும்.
''வெளிநாட்டுல நம்மள விருந்தாளி மாதிரி கவனிச்சிக்கலாம்; ஆனா, ஒரு அழையா, அடிமை விருந்தாளியா தான், நாம வாழ்ந்துட்டு இருக்கோம்ங்கிறத ஏனோ உணர மறுக்கிறோம்,'' என்று, தாய் நாட்டின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையின் கடைசி இழையையும், அங்கே விதைத்து சென்றார், ஆசிரியர்.
சிறுது நேரம் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் நித்யா. அவளின் டோக்கன் நம்பரை சொல்லி அழைத்தாள், நர்ஸ். அச்சமயம், ரகுவும் திரும்பி வர, இருவரும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.
ரகுவைப் பார்த்ததும், உற்சாகமாக வரவேற்றார், அவர்களின் குடும்ப டாக்டர். அவரிடம் தாங்கள் திரும்பவும் அமெரிக்கா செல்லவிருப்பதை ரகு கூற, ''இல்ல டாக்டர்... என் வாழ்வும், சாவும் என் மண்ணுல தான்,'' என்று கூறி, ரகுவை நோக்கி புன்னகைத்தாள், நித்யா.
ஆர்.சரஸ்வதி
சொந்த ஊர்: மதுரை
வயது: 22
படிப்பு: பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பணி: ஆஷிஸ் டெக்னாலாஜிஸ் நிறுவனத்தில், பிசினஸ் அனலிஸ்ட்டாக பணிபுரிகிறார். கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். பள்ளி மற்றும் கல்லூரியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில், பரிசு பெற்றுள்ளார். பத்திரிகைக்காக எழுதிய மூன்று கதையில், இக்கதை மட்டுமே பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும் முதல் சிறுகதை! 'பொன்னியின் செல்வன்' போன்ற சரித்திர நாவல் எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.