மன்னித்துவிடுங்கள் மகாத்மாவே!
மகாத்மாவே...
கண்ணியம், மார்க்கமற்ற
கனவான்கள் விமர்சனம்
செய்வதால் நின் மாண்பு
மழுங்கப் போவதில்லை!
விமர்சித்தோர் கண்டிக்கப்படலாம்
விழா எடுத்து உம்மை வாழ்த்தும்
நாங்கள் மட்டும் விசேஷமானவர்களா?
சத்திய சோதனையை நாங்கள்
காட்சிப் பொருளாக்கினோம்
வாழ்க்கையின் வாசலாக்கவில்லை!
தங்களின் பாத சுவட்டை
பின்தொடர்ந்து வாழவில்லை
தங்கள் பாதுகையை
பேழையில் பாதுகாத்து மகிழ்ந்தோம்!
கைராட்டை சுற்றியே
அந்நிய ஆட்சியை
சுழற்றியடித்த மனோதிடத்தை
நாங்கள் கற்கவில்லை!
ஆடம்பரத்தில் எங்களின்
அடையாளத்தை இழந்த போதும்
அண்ணல் உந்தன் எளிமையின்
அருமையை உணரவில்லை!
நீரருந்த மறந்தாலும்
மதுவருந்த மறக்காததால் - குடும்ப
வேரறுந்து போகுமென்றாலும்
மாற்றிக் கொள்ள மனமில்லாதோர்
எங்களின் மக்கள்!
மதுவுக்கெதிரான உன் வேள்வியை
மறந்தோம், மறுத்தோம்
ஆகவே...
விளம்பர வெறியில் உம்மை
விமர்சித்தவர்கள் மட்டுமல்ல
நாங்களும் குற்றவாளிகள் தான்
மகாத்மாவே மன்னியுங்கள்!
— கதிர் நிலவன், சென்னை