கலைவாணர் என்.எஸ்.கே. (5)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

ரயில் சில மைல்கள் கடந்த பிறகே, தங்களை அழைத்து செல்லும் மேனேஜர்கள், வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிருந்த சினிமா நடிகர், நடிகையருக்கு தெரிய வந்தது. அந்நடிகர்களுள், என்.எஸ்.கிருஷ்ணனும் ஒருவர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
மற்றவர்களை போல தவிக்காமல், அவர்களுக்கு தைரியம் சொன்ன என்.எஸ்.கிருஷ்ணன், 'இப்ப என்ன ஆச்சு... ரயில் ஓடிக்கிட்டு இருக்கு; நாம வண்டிக்குள்ள, பத்திரமாகத் தானே இருக்கோம்...' என்றார்.
கலைவாணரின் கலங்காத உள்ளத்தையும், வேடிக்கை பேச்சையும், சிறு புன்முறுவலோடு ரசித்தாள், அதே பெட்டியில் இருந்த ஒரு பெண். அவளும், அந்த நடிக கோஷ்டியோடு நடிக்க வந்தவள் தான். ஆனால், அவள் தன் பதற்றத்தை, வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.
ஒவ்வொருவரிடமும், எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார், கிருஷ்ணன். அவர்கள் கொடுத்த பணம் தேவையான அளவு இல்லாததால், அந்தப் பெண்ணிடம், 'பூனாவுக்குப் போனதும், சினிமா கம்பெனிக்காரர்களிடமிருந்து, வாங்கி கொடுக்குறேன்; உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுத்து உதவு...' என்று கேட்டார்.
அப்பெண் தன்னிடமிருந்த, 90 ரூபாயை எடுத்து, கிருஷ்ணனிடம் கொடுத்தாள். ரயிலில், சாப்பாட்டு செலவுக்கு, அப்பணம் உதவியது.
பூனா வந்த நடிகர், நடிகையர் கோஷ்டி, தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களாவை விசாரித்து, அங்கு போய் சேர்ந்தனர். மீண்டும் உணவுப் பிரச்னை தலைதூக்கியது. சமைத்து, சாப்பிட வேண்டுமே! பாத்திரங்கள் இருந்தன; உணவுப் பொருட்களோ, அவைகளை வாங்கப் பணமோ இல்லை. கம்பெனி மேனேஜர்கள், எப்போது வந்து சேர்வரோ... அதுவரை, எல்லாரும் பட்டினி கிடக்க முடியுமா என நினைத்து தவித்தனர்.
மறுபடியும், அப்பெண்ணிடம் சென்று குழைந்த கிருஷ்ணன், 'இங்கு வந்தது முதல், இன்னும் நாம எதுவும் சாப்பிடலை; உன்கையில இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து உதவின. அதற்கு, எல்லார் சார்பாகவும் உனக்கு திரும்பவும் நன்றி சொல்றேன். இப்பவும் உன் உதவி தேவையா இருக்கு; உன் நகைகளை கொடுத்து உதவ முடியுமா...' என்று பக்குவமாகப் பேசினார்.
அதுவரை பேசாதிருந்த அந்தப் பெண், 'போனால் போகட்டும்ன்னு கையிலிருந்த பணத்தை எல்லாம் கொடுத்தா... இப்போ, நகைகளையும் கேட்கத் துணிஞ்சுட்டீங்களே...' என்று சீறினாள்.
கலைவாணர் அமைதியாக, 'உன்னிடம் தான் எதையும் கேட்கத் தோன்றுது...' எனச் சொன்னதும், அந்தப் பெண்ணின் உள்ளம் குளிர்ந்து விட்டது. உடனே, தன் நகைகளைக் கழற்றி, அவரிடம் கொடுத்தாள். அவர் முகமலச்சியோடு நன்றி சொல்லி, நகைகளோடு போனார். சில நிமிடங்களில், நகைகள், அடமானம் வைக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டன.
இரண்டு நாட்களுக்குப் பின் வந்து சேர்ந்தனர், கம்பெனி மேனேஜர்கள். 'நல்லவேளை... இன்றாவது வந்து சேர்ந்தீங்களே... இன்றைக்கும் வரலன்னா, அந்த மகராசிகிட்ட தான், அவர் போட்டிருக்கும் மிச்சம் மீதி நகையை, பிச்சைப் போடும்படி கேட்க வேண்டி இருந்திருக்கும்...' என்றார், கிருஷ்ணன். அசட்டுச் சிரிப்பு சிரித்தனர், மேனேஜர்கள்.
தாம் பொறுப்பேற்றபடி, அவர்களிடமிருந்து பணம் வாங்கி, நகைகளை மீட்டுத் தந்ததுடன், ரொக்கம், 90 ரூபாயையும் சேர்த்து அப்பெண்ணிடம் தந்தார், கிருஷ்ணன்.
அவரது நேர்மையை உள்ளூரப் பாராட்டி, அவைகளைப் பெற்றுக் கொண்ட அப்பெண் தான், டி.ஏ.மதுரம்!
அதற்குபின், படப்பிடிப்புக்கு நடுவில் பலமுறை சந்தித்தனர், மதுரமும், கிருஷ்ணனும். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர் என்று சொல்லும்படி இருந்தது அந்தச் சந்திப்புகள்.கிருஷ்ணனுக்கு, மதுரத்தின் கலை உள்ளம் மிகப்பிடித்திருந்தது. நகைச்சுவையை நன்றாக மனதில் வாங்கி, வசனங்களை விழுங்காமல் வெடுக்கென்று பேசும் திறமை இருந்ததை கண்டார்.
அதேபோல், கிருஷ்ணனின் வேடிக்கை பேச்சும், அதில் இருந்த கருத்துகளையும் கண்டு, தம் மனதை பறி கொடுத்தார், மதுரம்.
இருவரும், ஒருவரையொருவர் விரும்புகின்றனர் என்பதை புரிந்து கொண்டார், இயக்குனர் ராஜா சாண்டோ. ஒருநாள் கிருஷ்ணனை அழைத்து, 'டேய் கிருஷ்ணா... எனக்கு தெரியாதுன்னா நினைக்கிறே... உன்னை சில நாட்களாக கவனிச்சுக்கிட்டுத் தான் வர்றேன்; மதுரத்தின் மேல் உனக்கு ஒரு இதுன்னு! கடைசி வரை கைவிட மாட்டேன்னு உறுதிமொழி சொல்லு. இந்த நிமிடமே மதுரம் உனக்கு சொந்தம்...' என்றார்.
அவர் கேட்டவாறு, உறுதிமொழி அளித்தார், கிருஷ்ணன். அன்று, ராஜா சாண்டோ முன்னிலையில், அவரது ஆசியோடு, கிருஷ்ணனும் - மதுரமும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மதுரத்தை மணந்து கொள்வதற்கு முன்னரே, 1931ல், நாகர்கோவிலில், நாகம்மையை மணந்திருந்தார், கிருஷ்ணன். மதுரத்திற்கு பின், அவரது தங்கையான வேம்புவை, மூன்றாவதாக மணந்து கொண்டார்.
நாகம்மைக்கு ஒரு மகன் பிறந்தான்; அவன் தான் கோலப்பன். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கலைச்செல்வி என்று பெயரிட்டு, அருமையாக வளர்த்தனர். ஓராண்டிற்குப் பின் அப்பெண் மகவு, இறந்து போயிற்று. வேம்புவிற்கு, கிட்டப்பன், சண்முகம், நல்லதம்பி மற்றும் குமரன் என்று நான்கு ஆண்களும், வடிவாம்பாள், பத்மினி, கஸ்தூரி என்று மூன்று பெண்களும் பிறந்தனர்.
கலைவாணரின் மனைவியாவதற்கு முன்னரே, ரத்னாவளி எனும் படத்தில், தனியாகவே நடித்தவர், மதுரம். அதைத் தவிர, அம்பிகாபதி போன்ற, ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒன்றானது போல், படங்களிலும், இருவரும் சேர்ந்து நடிக்க தீர்மானித்தனர். அது, திரை உலகத்துக்கு நல்லதாயிற்று. கிருஷ்ணன் - மதுரம், 'காமிக்' என்றால், பட உலகில், தனி வரவேற்பு கிடைக்க துவங்கியது. அவர்கள் படங்களில் இருந்தால் தான், படங்கள் வெற்றிகரமாக ஓடும் என்ற நிலை ஏற்பட்டது.
கிருஷ்ணனும், மதுரமும் தங்கள் அருமையான, 'காமிக்' காட்சிகளால், ஓடாத படங்களைக் கூட ஓட வைத்தனர்; விற்பனையாகாத படங்களை, நல்ல விலைக்கு, விற்க வைத்தனர். தங்களோடு வேறு சில நகைச்சுவை நடிகர்களையும் சேர்த்து, தாங்களே நகைச்சுவை காட்சிகளை அமைத்தனர்.
தமிழகத்தில், வேறு எந்த நகைச்சுவை ஜோடிக்கும் கிடைக்காத தனிப்புகழ், அவர்களுக்கு கிடைத்தது.
வாழ்க்கை துணைவியாக மட்டுமின்றி, கலைவாணரின் அனைத்து தேவைகளையும் கவனிக்கும் அந்தரங்க காரியதரிசியாகவும் ஆனார் மதுரம்.
வாழ்க்கையில் எத்தனை துன்பங்களும், இன்னல்களும் ஏற்பட்டாலும், அவைகளை அகற்ற, சிரிப்பே அருமருந்து என்று, வாழ்ந்து காட்டியது, அந்த அபூர்வ நகைச்சுவை ஜோடி.
தொடரும்.

நன்றி: வ.உ.சி., நூலகம்
பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X