கூகுள் அறிவித்த இந்தியாவிற்கான திட்டங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

சென்ற செப்டம்பர் 27ல், கூகுள் தன் 18 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு, டில்லியில் நடந்த 'Google for India' என்னும் நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவை மையப்படுத்தி பல புதிய திட்டங்களை அறிவித்தது. இந்தி மொழியில் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant in Hindi) மக்கள் கூடும் பொது இடங்களில் இலவச இணைய (Wi Fi) சேவை மற்றும் YouTube Go, Chrome Beta போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், 2ஜி மொபைல் சேவையிலும், வேகமான இணைய இணைப்பு சேவை தரும் சிறப்பு திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் நம் பிரதமர் மோடி அறிவித்து, செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவற்றைப் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.

1. Google Assistant in Hindi: செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence) அடிப்படையிலான 'கூகுள் அசிஸ்டண்ட்' திட்டம் குறித்து சென்ற ஆண்டு நடைபெற்ற கூகுள் புரோகிராம் வடிவமைப்பாளர்களுக்கான (I/O 2016 -Input Output 2016/ Simply Developer Conference) கூட்டத்தில், அறிவிக்கப்பட்டது. இதன் முன்னோடியாக மெசேஜ் அனுப்பும் திட்டமான Allo என்ற திட்டத்தினை ஏறத்தாழ முடித்துவிட்டது. இது Google Now திட்டத்தின் புதிய நவீன மேம்படுத்தப்பட்ட திட்டமாக அமையும். இதன் மூலம், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கேள்வி பதில் என இல்லாமல், உயிருள்ள உரையாடலையே மேற்கொள்ளலாம். இந்த வசதி, ஆங்கில மொழி வழி பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்தது. அத்துடன், இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த Hinglish வழியாகவும் கிடைத்தது. ஆனால், கேள்விகள் பத்து மடங்கு தொடர்ந்து அதிகரித்ததனால், ஆங்கில மொழி வழி உரையாடலைக் காட்டிலும், இந்தி மொழி வழி தகவல் பரிமாற்றம் ஐந்து மடங்கு கூடுதல் வேகத்தில் மேற்கொள்ள முடியும் என்பதனை உணர்ந்த கூகுள் தற்போது இந்தி மொழிக்கான கட்டமைப்பினை, செயற்கை நுண்ணறிவியல் அமைப்பில் ஏற்படுத்தித் தர இருக்கிறது.

2. Google Play with 'Wait for Wi-Fi' feature: 'கூகுள் பிளே' ஸ்டோரினை 2ஜி சேவையில் பெறுகையில், அதன் இயக்கத்தினை மேம்படுத்த, இரண்டு புதிய சோதனைகளை மேற்கொள்கிறது. முதலாவதாக, வை பி இணைப்பில் இணைந்தவுடன், கூகுள் பிளே ஸ்டோரின் பிரபலமான, அடிக்கடி பலர் நாடும் பகுதிகளை, கேஷ் மெமரியில் வைத்து முதல் நிலையிலேயே காட்டும். இதன் மூலம், வேகமாக இவற்றைக் கண்டு, தேவையானதைத் தேடிப் பெறலாம். இரண்டாவதாக, 'Wait for Wi-Fi' என்னும் ஒரு விருப்பத் தேர்வினை கூகுள் இணைக்கிறது. இதன் மூலம் பயனாளர்களின் ஸ்மார்ட் போன் வை பி இணைப்பில் இருந்தால் மட்டுமே, அதில் அப்ளிகேஷன்கள் பதியப்படும்.

3. Chrome Beta for Android: கூகுள் தன் குரோம் பிரவுசரின் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான சோதனைப் பதிப்பினை மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தலில், வீடியோ டேட்டா சர்வர் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. இணைய இணைப்பில் இல்லாத போதும், தரவிறக்கம் செய்யப்படும் வசதி கூடுதல் திறனுடன் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டேட்டா சேவ் செய்யப்படும் நிலை தரப்பட்டது. இப்போது விடியோ டேட்டா சேவ் செய்யப்படுவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. “டேட்டா சேவர்” இயக்கத்தில், விடியோ பைல் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், 67% டேட்டாவினை சேவ் செய்திடலாம். ஆண்ட்ராய்ட் போன்களுக்கான இந்த குரோம் சோதனை பதிப்பு, 2ஜி இணைப்பு ஒன்றை உணர்கையில், தானாகவே, இணையப் பக்கங்களை இரு மடங்கு வேகத்தில் பெற்றுக் காட்டும்.
இணைய இணைப்பு இல்லாத போது பயன்படுத்தவென, விடியோ, இசைக் கோப்புகள், போட்டோ மற்றும் இணைய தளங்களைத் தரவிறக்கம் செய்திடும் வசதியைத் தற்போது இணைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Downloads டேப் வழியாக, தரவிறக்கம் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தையும் பார்க்க இயலும். மேலும், நெட்வொர்க் இணைப்பில் பிரச்னை ஏற்பட்டு, தரவிறக்கம் செய்யப்படுவது பாதிக்கப்பட்டால், ஸ்மார்ட் போனுக்கு மீண்டும் இணைப்பு கிடைக்கும்போது, தரவிறக்கம் தடைப் பட்ட இடத்திலிருந்து தானாகவே செயல்படத் தொடங்கும். மீண்டும் புதியதாக அந்தக் கோப்பினைத் தரவிறக்கம் செய்திட வேண்டியதில்லை.
குரோம் பிரவுசரில் புதிய டேப் ஒன்றினை நீங்கள் திறந்தால், ஸ்குரோல் செய்வதன் மூலம், உங்களுக்கென உள்ள புதிய செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆகியன உங்களுக்குக் கிடைக்கும். இது, நீங்கள் அண்மைக் காலத்தில் தேடிப் பார்த்த இணைய தளங்களின்
அடிப்படையில் அமைந்திருக்கும். அல்லது நீங்கள் தொடர்ந்து பார்க்கும் இணைய தளங்கள் கொண்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இருக்கும்.

4. YouTube Go : முற்றிலும் புதியதாக இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, பயனாளர்கள் தங்களுக்குப் பிரியமான விடியோக்களைப் பார்க்கலாம். புதியதாகப் பலராலும் பார்க்கப்படும் விடியோக்களைக் காணலாம். அத்துடன், பிற்பாடு பார்த்துக் கொள்ள என, விடியோ பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இது தற்போதைய யு ட்யூப் செயலியில் கிடைத்தாலும், இந்த புதிய YouTube Go செயலி மூலம் பயனாளர்கள் கூடுதல் வசதிகளையும் கட்டுப்படுத்தும் வசதியையும் பெறுவார்கள். விடியோ பைல்களைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, எவ்வளவு டேட்டா தரவிறக்கம் செய்யப்படுகிறது, சேவ் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு, தங்கள் விருப்பப்படி, திட்டமிட்டபடி, இதனைக் கட்டுப்படுத்தலாம்.
எடுத்துக் காட்டாக, பயனாளர் விடியோ ஒன்றை இயக்கத் தொடங்கினால், அது இயங்கு முன், போனில் உள்ள எஸ்.டி.மெமரி கார்டில் எவ்வளவு இடம் மீதம் உள்ளது என்றும், விடியோ பைலில் உள்ள டேட்டா எவ்வளவு இடத்தைப் பிடிக்கும் என்பதும் காட்டப்படும். இதிலும், தரவிறக்கம் செய்யப்படும் low or standard qualityக்கு ஏற்றபடி எவ்வளவு இடம் பிடிக்கும் என்றும் புள்ளிவிபரத்துடன் தகவல் காட்டப்படும். இதனை உணர்ந்த பயனாளர், தன் முடிவை எடுத்து, விடியோவினை இயக்கலாம். விடியோவினை இயக்கிப் பார்க்கலாம்; அல்லது பிற்பாடு பார்த்துக் கொள்ள சேவ் செய்திடலாம்.
பயனாளர்கள் தாங்கள் சேவ் செய்து வைத்த யு ட்யூப் விடியோக்களை Wi-Fi Direct மூலம் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலி, வரும் மாதங்களில் பயனாளர்களுக்குக் கிடைக்கும். எப்போது கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், http://youtubego.com/signup/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

5. Google Station:
சென்ற ஆண்டில், இந்திய ரயில்வேயின் RailTel நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் 400 ரயில் நிலையங்களில், இலவச வை பி மையங்களை அமைக்க, கூகுள் செயல்பாட்டில் இறங்கியது. தற்போது 50 நிலையங்களில் இந்த வசதி தரப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் ஒவ்வொரு மாதமும் 35 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். தொடர்ந்து பல நிலையங்களில், சேவை மையங்களை அமைக்கும் முயற்சியில் இயங்கி வருகிறது.
இப்போது Google Station என்னும் திட்டத்தின் மூலம், இலவச இணைய இணைப்பு வழங்குவதைப் பன்னாட்டளவில் மேற்கொள்ள கூகுள் அறிவித்துள்ளது. இதற்கு, கூகுள் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய வளாகங்கள் கொண்டவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும். பைபர் ஆப்டிக் அமைப்பாளர்கள், நெட்வொர்க் செயல்படுத்துபவர்கள், நெட்வொர்க் கட்டமைப்பு ஏற்படுத்தித் தருபவர்கள் மற்றும் சிஸ்டங்களை இணைத்து இயக்குபவர்கள் ஆகியோருடனும் இதற்கென ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இணைபவர்கள், அவர்களின் வை பி நெட்வொர்க் கட்டமைப்பினை அமைத்து, பராமரித்து இயக்குவதை எளிதாக்க கூகுள் உதவிடும்.

6. Google News Lite:
ஆண்ட்ராய்ட் போன்களில் இயங்கும் செயலியான, Google News and Weather செயலியில், புதியதாக, 'Lite mode' என்னும் வசதி இணைக்கப்படுகிறது. மிகவும் குறைவான வேகத்தில் இணைய இணைப்பினைப் பயன்படுத்துவோரை இலக்காகக் கொண்டு இந்த செயலி செயல்படும். முக்கிய செய்தி மற்றும் தகவல்களில், தலைப்பினைத் தந்து, மீதமுள்ள தகவல்களைச் சுருக்கி, இந்த செயலி தரும். இதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு டேட்டா இறங்குவது தவிர்க்கப்படுகிறது. இதனால் தேவைப்படும் தகவல்கள் மட்டும் விரைவாகப் பயனாளர்களின் மொபைல் போனை அடைகிறது. இந்த 'Lite mode'னை நாம் இயக்க வேண்டியதில்லை. போனின் இணைய இணைப்பு குறைந்த வேகத்தில் இயங்கும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், இந்த செயலி தானாக இயங்கி, மேலே குறிப்பிட்ட வகையில் தேவையான தகவல்களை மட்டும் வழங்கும்.

7. Allo: தொலை தொடர்பு செயலி ஒன்று எந்த வசதிகளுடன் இயங்க வேண்டுமோ, அவற்றுடன் வடிவமைக்கப்பட்ட செயலியாக Allo என்ற செயலியை, கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலை தொடர்பு செயலி ஒன்றில், அது தரும் வசதிகளைப் பயனாளர்கள் இரண்டாம் பட்சமாகத்தான் எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் உள்ள இடங்களில் அது இயங்குகிறதா
என்பதையே முதல் விருப்பமாகக் கொள்வார்கள். இந்த ஒரு வசதியை மிகத் திறமையாகத் தருவதனால் தான், இந்தப் பிரிவில் 'வாட்ஸ் அப்' முதல் இடம் பெற்றுள்ளது. இந்த வசதியே, Allo செயலியைக் கொண்டு வருவதில், கூகுள் நிறுவனத்திற்குச் சரியான சவாலைத் தரும் என எதிர்பார்க்கலாம்.
Allo மூலம் எந்தவிதச் சிக்கலும் இல்லாத தொலை தொடர்பு வசதி ஒன்றைத் தரும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. இதில் பதிந்து பயன்படுத்த, உங்களுக்கு ஒரு மொபைல் போன், சேவை எண்ணுடன் தேவை. இந்த செயலியைப் பயன்படுத்தத் தொடங்குகையில், அந்த போனுக்கு ஒரு குறியீட்டு எண் அனுப்பப்படும். இதனைத் தந்து பதிந்து கொள்ள வேண்டும். அதே போன் மூலம் நீங்கள், உங்களை செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். இதுவே, உங்கள் அடையாளப் படமாக Allo செயலி கொண்டிருக்கும். Allo செயலி செட் செய்வதற்கு, கூகுள் அக்கவுண்ட் கொண்டிருக்க தேவையில்லை. இதனைப் பதிந்து முடித்தவுடன், Allo அக்கவுண்ட் ஒன்றைக் கொண்டிருக்கும் உங்கள் நண்பருடன் நீங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். அல்லது 'கூகுள் அசிஸ்டண்ட்' உடன் டெக்ஸ்ட் வழி உரையாடலைத் தொடங்கலாம். இதன் மூலம் கேம் விளையாடலாம். கூகுள் அசிஸ்டண்ட்டிடம் சொல்லி, தொடர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் தகவல்களை அனுப்பச் சொல்லலாம். மேலும், உங்கள் நண்பரிடம், நல்ல உணவு விடுதி குறிப்பிடுமாறு நீங்கள் இதன் மூலம் மெசேஜ் பரிமாறிக் கொண்டால், உடனே கூகுள் அசிஸ்டண்ட் அதனை உணர்ந்து, தானே தேடி விடுதிகளைப் பரிந்துரை செய்திடும்.
Allo மூலம் நீங்கள் நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், கூகுள் அசிஸ்டண்ட் நீங்கள் என்ன பதிலை அனுப்பலாம் என்றும் பரிந்துரைத்து டெக்ஸ்ட் காட்டும்.
இந்த செயலி எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது இதனைப் பயன்படுத்துபவர்கள் தரும் பின்னூட்டத்திலிருந்து இனி தெரிய வரும்.
இணையப் பயனாளர்கள் எண்ணிக்கையில், உலக அளவில் இரண்டாவது இடத்தையும், ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும் இரண்டாவது இடத்தையும் இந்தியா பெற்றிருப்பதால், அனைத்து இணைய நிறுவனங்களும், இணைய வழி விளம்பர நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் தொழில் பிரிவுகளை, ஆழமாக வேரூன்ற திட்டமிடுகின்றன.
இதன் ஒரு பகுதிதான், மேலே தரப்பட்டுள்ள கூகுள் நிறுவன முயற்சிகளாகும். இவை, நமக்கு கூடுதல் வசதிகளையும் பயன்களையும் தருவதாலும், இதுவரை இணைய இணைப்பில் இல்லாதவர்களையும் இணைக்கும் முயற்சிகளுக்கு உதவிடுவதாலும், நாம் இவற்றை அவசியம் வரவேற்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X