கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

கேள்வி: 'டிஜிட்டல் நேடிவ்' (Digital Native) என யாரைக் குறிப்பிடுகின்றனர்? அமெரிக்கர்களையா அல்லது ஜப்பானியர்களையா? இந்த சொல் பயன்
படுத்துவதன் அடிப்படை என்ன?
ஆர். கலையரசன், மதுரை.
பதில்
: நல்ல வேளை கேள்வியாக அனுப்பினீர்கள். 'டிஜிட்டல் நேடிவ்' என்ற சொல் தொடர், எந்த நாட்டவரையும் குறிப்பிடுவது அல்ல. டிஜிட்டல் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப் படும் நிலைக்குப் பின்னர், பிறந்தவர்கள் எல்லாரும் 'டிஜிட்டல் நேடிவ்' என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே டிஜிட்டல் சாதனங்களை (மொபைல் போன், டேப்ளட் பி.சி. கம்ப்யூட்டர், இணையம்) எளிதாகவும், தங்களுக்கு வசதியாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். நான் பார்த்த வகையில், 17 மாதக் குழந்தை, மொபைல் போனில், ஐ பேடில் ஹோம் பட்டனை அழுத்தித் திரையைப் பெற்று, சிறுவர்களுக்கான (Rhymes) பாடல் தரும் ஐகானை அழுத்திக் கேட்கிறது. மூன்றரை வயதுக் குழந்தை, மொபைல் போனில் அழைப்பு வந்தால் எடுத்துப் பேசுகிறது.
'ஏன் போனில் பேசுகிறீர்கள்? ஸ்கைப் அல்லது பேஸ்டயத்தில் வாருங்களேன்' என்று அழைக்கிறது. 'உங்கள் போனில் நெட் இல்லையா?' என்றெல்லாம் கேட்கிறது. இவர்கள் எல்லாம் 'டிஜிட்டல் நேடிவ் குடிமக்கள்'. இதன் தொடர்பாக இன்னொரு சொல்லையும் தருகிறேன். அது Digital Immigrant. டிஜிட்டல் பயன்பாடு அவ்வளவாகப் பரவாத காலத்தில் பிறந்து, பின் அவை, சமூகச் செயல்பாட்டில் தந்த அழுத்ததினால், டிஜிட்டல் தொழில் நுட்பம் குறித்து வலிந்து கற்றுப் பயன்படுத்தி வருபவரை இந்த சொல் கொண்டு குறிப்பிடுகின்றனர்.

கேள்வி: நாம் ஒரு பைலை கம்ப்யூட்டரிலிருந்து அழிக்கிறோம். கம்ப்யூட்டர், “இதனை அழிக்கவா?” என்று கேள்வி கேட்டு உறுதி செய்த பின்னர் அழிக்கிறது. பின்னர், ரீ சைக்கிள் பின்னிலிருந்தும் அதனை நீக்கிவிடுகிறோம். அதன் பின்னர், எப்படி சில புரோகிராம்கள் அந்த பைலை மீட்டுத் தருகின்றன. அழிக்கப்பட்ட பைல் எப்படி மீண்டுக் கிடைக்கும்? இவ்வாறு மீட்டுத் தரும் புரோகிராம்கள் நிறைய உள்ளன. அவற்றில் பாதுகாப்பான ஒரு புரோகிரமினைப் பரிந்துரைக்கவும்.
என். சேஷாத்ரி, ஸ்ரீரங்கம்.
பதில்:
நல்ல கேள்வி தான். பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது. ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில், “பைல் நீக்கம்” என்பது என்ன என்று பார்த்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். பைல் ஒன்றை நிரந்தரமாக நீங்கள் அழிப்பதாக நினைத்து அழிக்கையில், அந்த பைல் அழிக்கப்படுவதில்லை. அந்த பைலை விண்டோஸ்
சிஸ்டத்துடன் இணைக்கும் தொடர்புகளே அழிக்கப்படுகின்றன. அழித்த பைலை மீட்டுத் தரும் புரோகிராம்கள், இந்த லிங்க்கினை மீண்டும் அது நீக்கப்பட்ட வழியில் பின்னோக்கிச் சென்று கண்டறிகின்றன. பின்னர், அதன் மூலம், பைலை மீட்டுத் தருகின்றன.
இந்த வகையில் Recuva என்னும் புரோகிராம், மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கி, ஸ்கேன் செய்திட கட்டளை கொடுக்கையில், அது அப்போதைய நிலையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, மீட்கப்படக் கூடிய அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டறிந்து பட்டியல் இடும். அழிக்கப்பட்ட பைல்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் இயக்கம், எதிர்பாராத நிலையில், முடக்கப்பட்டு செயல் இழந்து போகையில், அழிக்கப்படும் பைல்களையும், இந்த புரோகிராம் மீட்டு எடுத்துத் தரும்.
எனவே, ரெகுவா அப்ளிகேஷன் புரோகிராம், கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு புரோகிராம் ஆகும். இதனை இலவசமாகவே, இதன் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் வசதிகளுடன் கூடிய புரோகிராம் 20 டாலர் கட்டணத்தில் கிடைக்கிறது.

கேள்வி: இணையப் பக்கங்களில் குறிப்பு எழுதி சேவ் செய்து வைக்கலாம் என்று படித்தேன். இதனை எப்படி அமைப்பது என விளக்கமாகப் பதில் தரவும். நான் விண்டோஸ் 7 மற்றும் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன்.
எஸ்.ஆர். கார்த்திக், தூத்துக்குடி.
பதில்:
நாம் பார்க்கும் இணையதளங்களில் குறிப்பு எழுதும் வசதி, எட்ஜ் பிரவுசரில் மட்டுமே கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்த உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் இருக்க வேண்டும். எட்ஜ் பிரவுசரில், வலதுபுறம் மேலாக Web Note என்ற டூல் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால், இடதுபுறம் அதற்கான மெனு கட்டம் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் குறிப்புகள் எழுதலாம். குறிப்பிட்ட தகவலை வெட்டி தனிப் பகுதியாக அமைக்கலாம். மார்க்கர் பேனா போல வண்ணம் தீட்டி, தகவலை ஹைலைட் செய்திடலாம்.

கேள்வி: விண்டோஸ் 10ல் 'பைல் எக்ஸ்புளோரர்' வியூ இதுவரை இல்லாத வகையில் உள்ளது. வேறுபாடுகள் என்ன? ஏதேனும் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளனவா?
ஆர். சியாமளா, திருச்சி.
பதில்
: நல்ல கேள்வி. இதுவரை விண்டோஸ் 10 குறித்துத் தந்த தகவல்களில் இந்த தகவல்கள் கம்ப்யூட்டர் மலரில் வரவில்லை. வாய்ப்பு தந்த கேள்விக்கு நன்றி. ஆம், விண்டோஸ் 10ல் பைல் எக்ஸ்புளோரர் புதிய சில வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது Windows Explorer என அழைக்கப்பட்டது. விண்டோஸ் 10ல், File Explorer எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட எட்டு வகைக் காட்சிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி, நம் பைல்களை எளிதாகவும், விரைவாகவும் கையாள முடியும். இதில் நான்கு வகை, ஐகான் அடிப்படையில் ஆனவை. அவை Small, Medium, Large, and Extra Large ஆகும். மற்ற நான்கும் List, Details, Tiles, and Content ஆகும். Details வியூ தான், நமக்கு கூடுதல் வழிகளையும் வசதிகளையும் தரும் வியூ ஆகும். இதில் கிடைக்கும் தலைப்புகளைக் கொண்டு, நாம் பைல்களைப் பிரித்துப் பார்ப்பது எளிதாகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வியூ மாற்ற, நாம் கமாண்ட் பாரில் கிடைக்கும் Change Your View என்ற பட்டனைப் பயன்படுத்தினோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி வியூ டேப்பில் இருந்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? விண்டோஸ் 10ல், இதற்கு ஷார்ட் கட் கீகள் உண்டு. Ctrl+Shift+number என்ற கீ தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இதில் 1 முதல் 8 வரையிலான எண்களை இணைக்கையில், வெவ்வேறு விதமான வியூக்கள் கிடைக்கும். இதில் நாம் நினைவில் வைத்துப் பயன்படுத்தக் கூடியவை என இரண்டு ஷார்ட் கட் கீகளைக் கூறலாம். Ctrl+Shift+2 அழுத்தினால், மிகப் பெரிய ஐகான் கொண்ட வியூ கிடைக்கும். Ctrl+Shift+6 அழுத்தினால், Details வியூ கிடைக்கும்.

கேள்வி: ஸ்கிரீன் ஷாட் எடுப்பது குறித்த கட்டுரையில், விண்டோஸ் இயக்கத்தில் எப்படி எல்லாம் அதனை உருவாக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவற்றின் இடத்தில் வைத்து இயக்க, ஏதேனும் வேறு ஒரு நிறுவனத்தின் ஸ்கிரீன் ஷாட் புரோகிராம் இருக்கிறதா? அவற்றில் பாதுகாப்பான புரோகிராம் ஒன்றைப் பரிந்துரைக்கவும்.
ஆர்.வினோத் ராஜ், சேலம்.
பதில்:
தர்ட் பார்ட்டி புரோகிராம் என எடுத்துக் கொண்டால், முதலில் நினைவுக்கு வருவது WinSnap என்பதுதான். இதனைப் பெற 30 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். கிடைக்கும் இணைய தள முகவரி http://www.ntwind.com/software/winsnap.html. வழக்கமான ஸ்கிரீன் ஷாட் விருப்பங்களுடன், ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ காட்சிகளை, வெவ்வேறு அப்ளிகேஷன்களிலிருந்து பெற்றுத் தரும் திறனை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. அத்துடன், அமைத்த ஸ்கிரீன் ஷாட் பக்கத்தை எடிட் செய்து, drop shadows, reflections, மற்றும் watermarks போன்ற கூடுதல் தோற்ற வரைவுகளை உருவாக்கலாம். அடுத்ததாக, PicPick என்னும் இலவச புரோகிராம். இதனை http://ngwin.com/picpick/update என்னும் முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். விண்டோ ஒன்றினை ஸ்குரோல் செய்திடுகையில் கிடைக்கும் மொத்த திரைக் காட்சியையும் இதில் பிடித்து இமேஜ் ஆக்க முடியும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு இலவச புரோகிராம் Greenshot. இதனை http://getgreenshot.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெறலாம். நாம் தயாரித்த ஸ்கிரீன் ஷாட் இமேஜைப் பல அப்ளிகேஷன்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியை இது கூடுதலாகக் கொண்டுள்ளது.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திலேயே பி.டி.எப். பைல் உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளதாகவும், பல இமேஜ்களை ஒரே பி.டி.எப். பைலில் உருவாக்க முடியும் என்றும் ஒரு புத்தகத்தில் படித்தேன். இந்த வசதி உண்மையிலேயே உள்ளதா? இருப்பின் அதனை எப்படி மேற்கொள்வது?
என். ஜூலியஸ் கிறிஸ்டோபர், சென்னை.

பதில்: பி.டி.எப். பைல்களை உருவாக்க, அடோப் அக்ரோபட் சிறந்த புரோகிராம். ஆனால், அதன் விலை அதிகமாகும். எனவே தான், விண்டோஸ் 10 இயக்கத்தில், பி.டி.எப். பைல்களை நாம் விரும்பும் வகையில் அமைக்கும் வசதியை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இதற்கு, சிஸ்டத்திலேயே Print to PDF என்னும் டூலைத் தந்துள்ளது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம். மூன்று ஜேபெக் இமேஜ் பைல்களை ஒரே பி.டி.எப். பைலில் கொண்டு வர விரும்புகிறீர்கள். முதலில் அந்த படங்கள் உள்ள பைல்களை பைல் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கவும். அல்லது டெஸ்க்டாப்பில் வைக்கவும். அடுத்து, இந்த மூன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் மெனுவில், Print என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Print Pictures விண்டோ காட்டப்படும். இதில், Printer கீழ்விரி மெனுவில், இடது மேல் புறம் உள்ள Microsoft Print to PDF என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து, நீங்கள் அமைக்க விரும்பும் பி.டி.எப். பைலின் பேப்பர் அளவு மற்றும் லே அவுட் தேர்ந்தெடுக்கவும்.
இதில், பேப்பர் சைஸ் என்பது, உருவாக்கப்பட இருக்கும் பி.டி.எப். பைலின் பரிமாணத்தைக் குறிக்கும். இது குழப்பமாக இருந்தால், “fit picture to frame” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இவை எல்லாம் முடிந்த பின்னர், Print என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் இந்த மூன்று இமேஜையும் ஒரு பி.டி.எப். பைலில் அமைத்து, அதனை எங்கு சேவ் செய்திட வேண்டும் எனக் கேட்கும். போல்டரைத் தேர்ந்தெடுத்து, சேவ் செய்தால், பி.டி.எப். பைல் கிடைக்கும். Microsoft Print to PDF என்பது சிஸ்டம் கொண்டிருக்கும் ஒரு விர்ச்சுவல் பிரிண்டர் ஆகும். இதனை எந்த அப்ளிகேஷன் மூலமாகவும் அணுகிப் பயன்படுத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஹோலோ லென்ஸ் அப்ளிகேஷன் குறித்து எந்த தகவலும் இல்லை. தேடல் கட்டத்தில் தேடிய போது, கேள்விக் குறிதான் கிடைக்கிறது. இது விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்குமா?
ஆர். ஐசக் ராஜ், புதுச்சேரி.

பதில்: ஹோலோ லென்ஸ் என்பது தலையில் அணிந்து பார்க்க வேண்டிய ஒரு சாதனம். விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுக விழாவில், அனைவருக்கும் ஆச்சரியம் தரத்தக்க வகையில் மைக்ரோசாப்ட் பொறியாளர்களின் கை வண்ணத்தில் உருவான ஹோலோ லென்ஸ் (HoloLens) குறித்து அறிவிக்கப்பட்டது. விண்டோஸ் 10 இயக்கத்தை இதன் வழியாகப் பார்க்கையில், நம் நிகழ் உலகமும், கற்பனையான மாயை உலகமும் இணைந்து காட்சிகளை வழங்கும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் கிரகம் குறித்து கம்ப்யூட்டரில் இயக்குகையில், இதன் வழியே பார்த்தால், நாம் அதன் பரப்பில் நடந்து சென்று, அனுபவிக்கும் உணர்வினைப் பெறுவோம். நம் நிகழ் உலகின் மேலாக, டிஜிட்டல் ஹோலோகிராம் உலகம் நமக்குக் காட்டப்படும்.
நாம் காணும் நிகழ்வு, சாதாரணமாக நாம் பார்க்கும் ஸ்கைப் விண்டோவாகவும் இருக்கலாம்; முப்பரிமாண மாடல் பொருளாகவும் இருக்கலாம்.
எந்தப் புதிய தொழில் நுட்பத்தின் விளைவையும் எழுத்தில் விளக்குவது எளிதல்ல; அதனை உணர்ந்து பார்த்தால் தான், அதன் முழு தாக்கத்தினையும் உணரலாம். ஹோலோ லென்ஸ் சாதனத்திற்கு இது முற்றிலும் பொருந்தும். இது இன்னும் நடைமுறைச் செயல்பாட்டிற்கு வரவில்லை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X