கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2016
00:00

கேள்வி: ஒரு சில தேவையான அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்கையில், அது தானாகவே, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் இயக்கப்படும் புரோகிராமாக உட்கார்ந்து கொள்கிறது. ராம் மெமரியில் இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை எப்படி மாற்றி, நமக்குத் தேவைப்படும்போது மட்டும் இயக்கும்படி அமைக்கலாம்? நான் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன்.
என். ஜீவராஜ், மதுரை.
பதில்:
இது சில புரோகிராம்கள் இன்ஸ்டால் ஆகும்போது, அவ்வாறு அமையும்படி, அந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டிருக்கும். வைரஸ் கொண்ட புரோகிராம்கள் இது போல அமைவது உண்டு. நீங்கள் விரும்பும்படி, நமக்குத் தேவையான போது மட்டும் இயக்கும்படி இதனை அமைக்கலாம். கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இத்தகைய புரோகிராம்களைத் தனியே அறிந்து கொள்ள msconfig என்ற டூலைப் பயன்படுத்தலாம். முதலில், சந்தேகப்படும் புரோகிராமினை இயக்காமல் முடக்கி வைத்து, கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்க வேண்டும். கம்ப்யூட்டர் இயங்கினால், அந்த புரோகிராமினை நீக்கிவிடலாம். கம்ப்யூட்டர் இயங்க மறுத்தால், அல்லது அது குறித்து வேறு நோட்டிபிகேஷன் வந்தால், அதனை மீண்டும் தொடங்கும் புரோகிராம் பட்டியலில் இணைத்து இயக்க வைக்கலாம். உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது முந்தைய சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் இருந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து அதில் Run என்பதில் கிளிக் செய்திடவும். கட்டத்தில் msconfig.exe என டைப் செய்து ஓகே தட்டவும். இப்போது எம்.எஸ். கான்பிக் விண்டோ திறக்கப்படும். இங்கு உள்ள டேப்களில் ஸ்டார்ட் அப் (Startup) கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் புரோகிராம் பட்டியலில், தேவைப்படாத புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் விளக்கத்தினைப் படிக்கவும். அதன் பின்னரும் அந்த புரோகிராம் தேவை இல்லை என முடிவு செய்தால், disable செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, எம்.எஸ். கான்பிக் விண்டோ சற்று வித்தியாசமாகக் கிடைக்கும். இருப்பினும் செயல்பாடு ஒரே விதமாகவே இருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இது டாஸ்க் மேனேஜர் செயலியில் கிடைக்கும்.

கேள்வி: பல ஆண்டுகளாக, நான் யாஹு மின் அஞ்சல் கணக்கினைப் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர், யாஹு அக்கவுண்ட்டினைக் கொண்டிருப்பவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதனால், வேறு ஒரு மின் அஞ்சல் அக்கவுண்ட்டிற்கு மாற்றிக் கொள்ளுமாறு கூறுகிறார். இது உண்மையா?
என். சோமசுந்தரம், தேவாரம்.
பதில்
: 2014 ஆம் ஆண்டு, யாஹூ மெயில் அக்கவுண்ட் வைத்திருந்தவர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் ஆகிய தகவல்கள் திருடப்பட்டதாகத் தகவல் தரப்பட்டது. தகவலைத் தந்ததும் யாஹூ நிறுவனமே. உடனடியாகத் தன் வாடிக்கையாளர்கள் அவர்களின் பாஸ்வேர்டினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இது ஹேக்கர்கள் பலரால், அவர்கள் நாட்டின் நிர்வாகத்திற்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டது என்ற தகவலும் பின்னர் தரப்பட்டது. தற்போது இந்த ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் உங்கள் மின் அஞ்சல் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை, ஓராண்டாக நீங்கள் மாற்றாமல் வைத்திருந்தால், உடனே அதனை மாற்றிவிட்டுப் பின் யாஹூ அஞ்சல் கணக்கைப் பயன்படுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஜூலை மாதத்திலேயே என் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி வருகிறேன். பதிந்த பின்னர், சிஸ்டம் இயக்குவதற்கான பாஸ்வேர்ட் கொடுக்கும்படி கேட்க, நானும் கொடுத்தேன். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கும்போதும், சில நிமிடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால், மீண்டும் இயக்கும்போதும், பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டியதுள்ளது. என்றாவது மறந்துவிட்டால் என்ன செய்வது? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. எப்படி, பாஸ்வேர்ட் தராமலேயே இயக்கும் வகையில் இதனை அமைப்பது?
பதில்
: நல்ல கேள்வி. பதில் சொல்லும் முன், சில எச்சரிக்கைகளைத் தருகிறேன். பாஸ்வேர்ட் தந்து கம்ப்யூட்டரை இயக்குவது நமக்கும் நம் கம்ப்யூட்டருக்கும் பாதுகாப்பினைத் தருகிறது. உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் மட்டுமே எப்போதும் பயன்படுத்தி வருவதாக இருந்தால், நீங்கள் விரும்பும்படி, பாஸ்வேர்ட் இல்லாமல் இயக்கலாம். ஆனாலும் அது நல்லதல்ல. இருப்பினும், நீங்கள் கேட்டுக் கொண்டபடி இயங்க, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகளைத் தருகிறேன். சிஸ்டத்தின் தேடல் கட்டத்தில் netplwiz என்று டைப் செய்து கிடைக்கும் முதல் விடையில் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் உள்ள 'Users must enter a user name and password to use this computer' என்று இருப்பதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தைக் கர்சர் கொண்டு நீக்கிவிடவும். பின்னர், Apply என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கியவுடன், அது பயன்படுத்தத் தயாராய் இருக்கும். பாஸ்வேர்ட் கேட்காது.
ஆனால், நீங்கள், சில நிமிடங்கள் பயன்படுத்தாமல் மீண்டும் இயக்கும்போது, பாஸ்வேர்ட் தர வேண்டிய சூழ்நிலையை விரும்பவில்லை என்று தெரிகிறது. கம்ப்யூட்டரை முதலில் இயக்கும்போது மட்டும் பாஸ்வேர்ட் கேட்கும் படியும், சிறிது நேரம் ஓய்வில் இருந்து திரும்புகையில், பாஸ்வேர்ட் கேட்காத நிலையை அமைக்க முடியும். இதற்கு தேடல் கட்டத்தில் sign in options என்று டைப் செய்து, கிடைக்கும் விடைகளில் முதல் விடையில் கிளிக் செய்திடவும். இப்போது செட்டிங்ஸ் விண்டோ கிடைக்கும். இதில், Require sign in என்று இருப்பதில் கவனிக்கவும். அதன் கீழாக, If you have been away, when should Windows require you to sign in again? என்ற பிரிவில் பார்க்கவும். அங்கு கீழ் விரி அம்புக் குறி கொண்ட கட்டம் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால், Never என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்து வெளியேறவும். இனி, சிறிது காலத்திற்கு நீங்கள் வெளியே சென்று, மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கினால், அது பாஸ்வேர்ட் கேட்காது.

கேள்வி: விண்டோஸ் 7 இயங்கும் லேப்டாப் ஒன்றை இயக்கி வருகிறேன். (இன்னொரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 வைத்துள்ளேன்). இதில் பல ஆண்டுகளாகவே கிடைக்கும் Shut Down Buttonல், பவர் ஆப் செய்திடும் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. இந்த சிஸ்டத்திலும், கூடுதலாக, யூசர் மாற்றம், ஸ்லீப் போன்றவற்றை Shut Down Buttonல் ஏற்படுத்தலாம் என்று நண்பர் கூறுகிறார். ஆனால், அவருக்கு மாற்றும் வழி தெரியவில்லை. இவ்வாறு ஏற்படுத்த முடியுமா? அதற்கான வழிகளைத் தரவும்.
கே.செந்தில் ராஜன், சிதம்பரம்.
பதில்:
தாராளமாக ஏற்படுத்தலாம். விண்டோஸ் 7 பழக்கமான காலத்திலேயே டிப்ஸ் ஆக இந்த வழிகளைத் தந்துள்ளேன். கூடுதல் ஆப்ஷன்களைக் கொண்டு வர, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், பவர் பட்டனில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Power Button Action அடுத்து உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், நீங்கள் விரும்பும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், சில கூடுதல் படுக்கை வரிசைகள், ஆங்காங்கே சில வரிசைகளின் அருகில் தேவைப்படுகின்றன. இதற்கு Insert கிளிக் செய்து வரிசை அமைத்தால், அது தவறான இடத்தில் செருகப்படுகிறது. இதற்கான சரியான ஷார்ட் கட் கீகள் உள்ளனவா? விளக்கவும்.
என். சாமிநாதன், தஞ்சாவூர்.
பதில்
: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், ரோ (Row) ஒன்றுக்கு மேலாக அல்லது கீழாக வரிசையை, ஷார்ட் கட் கீ கொண்டும் இணைக்கலாம். முதலில், எந்த வரிசைக்கு மேல் அல்லது கீழ் இன்னொரு வரிசையைச் சேர்க்க விரும்புகிறீர்களோ, அதில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஷிப்ட் மற்றும் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். இப்போது முழு வரிசையும் தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+ '+' கீயை அழுத்தவும். இந்த + கீ எழுத்துக்கள் மேலாக உள்ள கீ. நம்பர் பேடில் உள்ள கீ அல்ல. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசைக்கு மேலாக, புதியதொரு வரிசை தோன்றியிருப்பதைக் காணலாம். இதனை மேற்கொள்ள இன்னொரு ஷார்ட் கட் கீ வழியும் உள்ளது. தொடர்பான வரிசையில் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஆல்ட் + 'ஐ' கீயை அழுத்திப் பின்னர் 'ஆர்' கீயை அழுத்தவும். தேர்ந்தெடுத்த செல் இருக்கும் வரிசைக்கு மேலாக ஒரு வரிசை இடைச் செருகப்படும்.

கேள்வி: எக்ஸெல் புரோகிராமில் அடிக்கடி பணியாற்ற வேண்டிய பணியில் நான் இருக்கிறேன். இதில், சில வேளைகளில், அலுவலக யு.பி.எஸ். பிரச்னை கொடுக்கும்போது, ஒர்க் ஷீட்டில் உள்ளீடு செய்த தகவல்கள் காணாமல் போகின்றன. அதற்கு முன் சேவ் செய்த தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாமாக, சேவ் செய்திட மறந்து போனால், இந்த நிலை ஏற்படுகிறது. இதனை எக்ஸெல் புரோகிராமே, வேர்ட் புரோகிராமில் இருப்பது போல, தானாக சேவ் செய்திடும் வகையில் அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
சி. மஹேஸ்வரி, கோவை.
பதில்
: நீங்கள் குறிப்பிடும் ஆட்டோ ரெகவர் வசதி, எக்ஸெல் புரோகிராமிலும் உள்ளது. இதன் மூலம், நம் ஒர்க் புக்குகள் தானாக சேவ் செய்யப்படும். மின் தடை ஏற்பட்டு சிஸ்டம் முடங்கும்போதோ, எக்ஸெல் புரோகிராம் அல்லது விண்டோஸ் இயக்கம் கிராஷ் ஆகும்போதோ, இவ்வாறு சேவ் செய்யப்பட்ட ஒர்க் ஷீட் மூலம், நாம் உள்ளீடு செய்தவற்றைத் திரும்பப் பெறலாம். நீங்கள் ஆபீஸ் 2007 பயன்படுத்தி வந்தால், இந்த வசதி மாறா நிலையில் தரப்பட்டுள்ளதைக் காணலாம். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை, உங்கள் ஒர்க் ஷீட் சேவ் செய்யப்படும். இந்த கால இடைவெளியை இன்னும் குறைவாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதனை அமைக்கும் வழிகளைக் கீழே தருகிறேன்.
1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் மெனுவின் கீழாக “Excel Options” என்று உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது “Excel Options” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள மெனுவின் இடது பக்கமாக உள்ள Save என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு “Save AutoRecover information” என்று உள்ள இடத்தில் காட்டப்பட்டுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.
5. எத்தனை நிமிட இடைவெளியில், எக்ஸெல் டேட்டாவினை சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைத்திடவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் பணியாற்றுகையில், அமைத்திட்ட கால இடைவெளியில், உங்கள் ஒர்க் ஷீட் சேவ் செய்யப்படும். இது நீங்கள் அறியாமலேயே நடைபெறும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X