பங்கேற்பாளர்கள்: 4 ரவீந்திரநாத், விஷால், சோமேஷ், கோவிந்த பாபு
ரவீந்திரநாத்: ஏய் விஷால், இதோ பாரேன், நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
என்று ஒரு துண்டுக் காகிதத்தை, நண்பனிடம் காட்டுகிறான்.
நண்பன் வாங்கி, அதில் எழுதி இருப்பதைப் படிக்கிறான்.
விஷால்: குழந்தையின் இதயம் மிகப் பெரிது
உலகத்தை விடவும் அது அரிது
குழந்தையோடு விண்மீனும்
குசுகுசு என்று கதைபேசும்
கீழே வழியும் மழைத்துளியும்
கிச்சுகிச்சு மூட்டி விளையாடும்
மேகக்கூட்டம் தாளாகி
பட்டம் போலே மகிழ்விக்கும்…
டேய்… ரவீந்திரா, அருமையாக எழுதியிருக்கிறாயே… இதையெல்லாம் எப்படியடா எழுதுகிறாய்? எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடேன்…
ரவீந்திரன்: நன்றி, விஷால். ஏதோ எனக்குத் தோன்றியதை எழுதினேன். நீ என் பிரியத்துக்குரிய நண்பன் அல்லவா, உன்னிடம் காட்டினேன்.
விஷால்: என்னை உன் நண்பனாகக் கருதுவதற்கு உனக்கு நன்றி ரவீ.
(பக்கத்தில் திரும்பி, அங்கிருக்கும் இன்னொரு பையனிடம் துண்டுக் காகிதத்தைக் கொடுக்கிறான்.
விஷால்: சோமேஷ், நம் ரவி எவ்வளவு அழகாகப் பாடல் எழுதியிருக்கிறான் பாரேன்…
அந்த சோமேஷ் அதை வாங்கிப் படித்துப் பார்க்கிறான்.
சோமேஷ்: பாட்டு ரொம்பப் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால்…
விஷால்: நன்றாக இருக்கிறது இல்லையா? பிறகென்ன, ஆனால், கோனால்…?
சோமேஷ்: நம்மைப் போன்ற பையன் தானே ரவீந்திரனும். இவனுக்கு எப்படி இவ்வளவு நன்றாகப் பாட்டு எழுத வரும்? இவன் சும்மா கதைவிடுகிறான்.
விஷால்: என்னடா சொல்கிறாய்? இவன் என்ன கதை விடுகிறான்?
சோமேஷ்: யாரோ பெரியவர்கள் எழுதியதைப் பார்த்து எழுதிக்கொண்டு வந்து, தானே எழுதியதாக நம்மிடம் பொய் சொல்கிறான்
விஷால், ரவீந்திரனைத் திரும்பிப் பார்க்க, ரவீந்திரன் வருத்தத்தோடு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து போகிறான்.
காட்சி 2
வகுப்பறை. ரவீந்திரனும் விஷாலும் சோமேஷும் பள்ளித் தலைவர் கோவிந்த பாபுவும் இன்னும் சில மாணவர்களும் இருக்கிறார்கள்.
கோவிந்த பாபு: ரவீந்திரா, பையன்கள் சொன்னார்கள். நீ பாடல்கள் எல்லாம் எழுதுகிறாயாமே…
விஷால்: ஆமாம் ஐயா. அருமையாக எழுதுகிறான்.
கோவிந்த பாபு: அப்புறம், வேறு யாரோ எழுதியதைப் பார்த்து நீ எழுதுகிறாய் என்றும் சொல்கிறார்களே…
ரவீந்திரன்: இல்லை ஐயா. எனக்குத் தோன்றுவதை நான் எழுதுகிறேன்.
கோவிந்த பாபு: நீ ரசனை உள்ள பையன் என்பது எனக்குத் தெரியும். நீயேதான் பாடல்களை எழுதுகிறாய் என்றும் நான் நம்புகிறேன்.
ரவீந்திரன்: நன்றி ஐயா…
கோவிந்த பாபு: கொஞ்சம் பொறு. நீ எவ்வளவு நன்றாகவும் விரைவாகவும் எழுதுகிறாய் என்று எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். அதற்கு நான் உனக்கு ஒரு வேலை சொல்கிறேன், செய்கிறாயா?
ரவீந்திரன்: சொல்லுங்கள் ஐயா. நான் என்ன செய்ய வேண்டும்?
கோவிந்த பாபு: இப்போது நான் ஒரு சூழ்நிலை சொல்லுவேன். அதற்கு நீ ஒரு பாட்டு எழுத வேண்டும்.
விஷால்: இவ்வளவுதானா? நான் கூட என்ன செய்யச் சொல்லப் போகிறீர்களோ என்று பயத்தோடு இருந்தேன். பாட்டு எழுதுவது என்பது ரவீந்திரனுக்கு ரசகுல்லா சாப்பிடுவது போல.
(ரவீந்திரன் பக்கமாகத் திரும்பி)
விஷால்: ரவீந்திரா, அட்டகாசமாக எழுதப்பா. நாங்கள் ரசிக்கக் காத்திருக்கிறோம்.
ரவீந்திரன்: ஐயா, பாட்டு எழுதுவதற்கான சூழ்நிலையைச் சொல்லுங்கள். நான் என்னால் ஆன வரைக்கும் முயற்சி செய்கிறேன்.
கோவிந்த பாபு: மாணவர்கள் எல்லோரும் ஒரு வனப்பகுதிக்குச் செல்கிறீர்கள். குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டுகிறீர்கள். அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அதைப் பார்க்கும் நீ அதை வர்ணிக்கத் தொடங்குகிறாய். இதை வைத்து ஒரு பாட்டு எழுது பார்ப்போம்…
ரவீந்திரன் ஒரு தாளையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்கிறான். பின்னணியில் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்கிற பாட்டின் இசை ஒலிக்கிறது. இரண்டு நிமிடங்கள் கழித்து, தான் எழுதிய தாளை கோவிந்த பாபுவிடம் கொடுக்கிறான் ரவீந்திரன். அவர் அதை வாங்கி உரத்த குரலில் வாசிக்கிறார்.
கோவிந்த பாபு: பெரிய கடவுள் விழித்தெழுந்தான்
மூன்று கண்களைத் திறக்கின்றான்
தொடுவான் அனைத்தையும் அளக்கின்றான்
பினாகம் எனும் வில்லைத் தொடுக்கின்றான்
பேரொலி விண்ணைப் பிளக்கிறது
இயற்கையின் கட்டுகள் தெறிக்கிறது
முதலும் முடிவும் நடுங்கிடவே
நெருப்பின் அம்பு பாய்கிறது…
(படித்து முடித்த கோவிந்த பாபு, ரவீந்திரன் பக்கமாகத் திரும்புகிறார்.)
கோவிந்த பாபு: மகனே ரவீந்திரா, எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறாய். அதையும் மின்னல் வேகத்தில் முடித்துவிட்டாய். உண்மையில் நீ பெரிய கவிஞன் தானப்பா. (மற்ற சிறுவர்களைப் பார்த்துச் சொல்கிறார்.)
கோவிந்த பாபு: மாணவர்களே, பார்த்தீர்களா? உங்கள் கண் முன்னாலேயே ஒரு அழகான பாடல் பிறந்த விதத்தை. நம்மோடு சாதாரணமாக இருப்பதாலேயே ஒருவனைக் குறைவாக எண்ணல் ஆகாது. இப்படிப்பட்ட அருமையான பாடலை எழுதிய ரவீந்திரன் பெரிய கவிஞனாக வருவான். அப்போது, அவனோடு உடன் படித்த மாணவர்களாக இருந்ததை எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்…
ரவீந்திரனைக் கட்டித் தழுவிக்கொள்கிறார்.
(திரை விழுகிறது.)