நெருப்புக்கோட்டை (12)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

சென்ற வாரம்: கரடி காட்டுத் தீவுக்கு செல்கிற வழியில் ஒரு தீவில் தேவதை பாட்டியை சந்தித்தான் இளவரசன் இளங்குமரன். அந்தத் தீவை காவல் காக்கும் கரடியை மயக்கமுறச் செய்து, தேன் கிழங்குகளை எடுப்பதற்கு இளவரசனுக்கு உதவினாள் பாட்டி.

இனி-
கரடி கண் விழித்ததை அறிந்த இளங்குமரன், பரபரப்புடன் தன் கரடி அங்கியைக் கழற்றி, அந்த ராட்சதக் கரடியின் முன் வீசினான். தேன் கிழங்கு மூட்டையுடன் ஓடோடிப் போய், மின்னல் வீரன் குதிரை மீது ஏறினான். பாட்டி அதற்கு முன்பே, குதிரை மீதேறித் தயாராய் இருந்தாள்.

நன்றாக விழித்த கரடி, தன் முன் வந்து விழுந்த கரடி உடை மூட்டையை நிஜக்கரடி என்று எண்ணி, விரோதியோடு போரிட்டு, அந்தக் கரடி வேஷத்து அங்கியை, குத்திக் கிழித்து சின்னபின்னமாக்கிக் கொண்டிருந்தது. இளங்குமரனும், பாட்டியும் தேன் கிழங்குடன் போயே போய்விட்டனர்.
தேவதைப் பாட்டியின் கருணைக்கும், உதவிக்கும் அவளை வணங்கி ஆசி பெற்று, கிழங்கு மூட்டையுடன் மரகதபுரிக்கு திரும்பினான் இளங்குமரன். வானவெளியிலே, மின்னலாகப் பாய்ந்து பயணம் செய்த மாயக்குதிரை மின்னல் வீரன், மகேந்திரவர்மரின் அரண்மனைக் குதிரை லாயத்தை அடைந்ததும், தொத்தல் குதிரையாக மாறி மூலையில் போய் முடங்கியது.
தேன் கிழங்கு மூட்டையைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி, சக்கரவர்த்தி மகேந்திரவர்மரின் முன் இறக்கினான் இளங்குமரன். அப்போது, அரசர் தம் குமாரிகள் மற்றும் மொட்டைத் தலையனுடன் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அதிசயப் பொருளான தேன் கிழங்கு மூட்டையைக் கண்டதும், மன்னருக்கும், அவர் மகள்களுக்கும் மகிழ்ச்சியான மகிழ்ச்சி; மொட்டைத்தலையனுக்கோ அதிர்ச்சியான அதிர்ச்சி. தொல்லை இல்லாமல் இளவரசனை ஒழித்துக் கட்டி விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அவன் வெற்றியோடு திரும்பினால் வயிறு எரியாதா என்ன?
அரசகுமாரிகளோ, இவன் நிச்சயம் இந்த அநாகரிக அவலட்சணக்கார இளவரசனின் அடிமையில்லை. இந்த அழகிய வாலிபனின் வாழ்வில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.
''எப்படிப் பெரியப்பா? நான் சொல்லவில்லை, இந்தப் பயல் எதையும் சாதிக்கக்கூடியவனென்று!'' தன் முகவாயைத் தடவியபடி குரூரமாகச் சிரித்தான் மொட்டைத் தலையன்.
''நான் என்ன செய்வது! இப்படிப்பட்ட திறமைசாலியான அடிமை எனக்கு வாய்த்திருந்தால், மூன்று பெண்களைப் பெற்றுவிட்டோமே என்று கவலையே பட்டிருக்க மாட்டேன்,'' என்றார் மகேந்திரர்.
''இவன் திறமையை அறிந்து தான், எனக்கு துணையாக இவனை கூட அனுப்பினார் அப்பா. இல்லாவிட்டால், இந்தச் சுமையை நான் இழுத்து வந்திருப்பேனா...'' என்று புறங்கையை அசைத்து, இளவரசன் இளங்குமரனை போகும்படி சைகை செய்தான் குரூர குணம் படைத்த கொடியவன்.
இளங்குமரன் குனிந்த தலையோடு, அவையை விட்டு வெளியேறினான். மகேந்திரர், அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாதவராக, ஆனால், அந்த அடிமைப் பணியாளனிடம் பரிவுடையவராக தம் இருப்பிடம் சென்றார்.
இளங்குமரன் குதிரை லாயத்துக்குப் போய் நண்பன் மின்னல் வீரன் அருகில், கண்ணீர் ஒழுக உட்கார்ந்தான். மொட்டைத்தலையன் அரண்மனையை அமர்க்களப்படுத்தினான்.
ஒரு சமயம், மொட்டைத் தலையனை தம் பொக்கிஷ அறைக்கு அழைத்துப் போனார் அரசர் மகேந்திரர். அங்கு கொட்டிக் குவித்துச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் செல்வத்தைக் கண்டு பிரமித்தான் மொட்டைத் தலையன். இவ்வளவு செல்வத்துக்கும், தான் அதிபதியாகப் போகிறோம் என்ற நினைப்பு, உண்மை வெளியாகாமல் எச்சரிக்கையோடிருக்க வேண்டும் என்று உறுதி கொள்ளச் செய்தது.
அப்போது அரசர் ஒரு கொப்பரையில் இருந்த வைரக் கற்களைக் காட்டி, ''இளவரசனே... இதோ இங்குள்ள வைரக் கற்களைப் போல வேறு எங்காவது பார்த்ததுண்டா?''டாலடித்துக்கொண்டிருந்த பெரிய, பெரிய பட்டை தீட்டப்பட்ட வைரக் கற்களைக் கையிலெடுத்து, உருட்டிப் பார்த்து வியந்தபடி, ''இல்லை பெரியப்பா, எத்தனையோ அபூர்வ மாணிக்கக் கற்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை எதுவும் இங்குள்ள வைரங்களுக்கு ஈடாகாது,'' என்றான்.
''ம்... என்ன பயன்?'' என்று பெருமூச்சு விட்டார் மன்னர்.
''என்ன பெரியப்பா, ஏன் இப்படி ஆற்றாமைப்படுகிறீர்?'' என்று கேட்டான்.
''ஆதங்கப்படாமல் என்ன செய்வது? இவையெல்லாம் என்ன வைரங்கள்! மான் வனம் என்றொரு கானகம். அங்கே அபூர்வமான கலைமான் உள்ளது. அதன் உடலில் உள்ள புள்ளிகளெல்லாம் வெறும் வெள்ளைப் புள்ளிகள் அல்ல, வைரக்கற்கள். அதன் கொம்புகளுக்கு நடுவிலே, ஒரு பெரிய வைரக்கல் உள்ளதாம்.
''கிரீடம் போல அதன் ஒளி, சூரிய ஒளியையும் மிஞ்சக்கூடியதாம். ஆனால், அந்த அதிசய மானை, யாராலும் நெருங்க முடியாதாம்; அது ஒரு மாய மான்; எந்த ஆயுதமும் அதை எதும் செய்ய முடியாதாம்; அதைக் கண்டவர்கள் உயிரோடு திரும்பியதில்லையாம்.
''அந்த மானின் பார்வையோ அல்லது அதன் தலைமீதுள்ள பெரிய வைரக்கல்லின் ஒளியோ பட்டால், அது மனிதரானாலும், மிருகமானாலும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மடிந்து போவார்களாம். அப்படி இறந்த உடல்களின் எலும்புக் கூடுகள் மான் வனத்தில் ஏராளமாக இறைந்து கிடக்கிறது.
''ஆனாலும், இத்தனை அபாயங்கள் இருந்தாலும் மனிதன், ஆசையை விடவில்லை. தன் அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதை நிறுத்தவில்லை. எப்படியாவது அதிசய மானைப் பிடித்து, அதன் தலை மீது வளர்ந்துள்ள மகத்தான வைரத்தைப் பறித்து வரவேண்டுமென்று முயற்சி செய்து உயிரிழந்தோர் தான் அதிகம்.
''அதிர்ஷ்டம் உள்ளவர்கள் உயிர் பிழைத்து எடுத்து வந்த நவரத்தினக் கற்கள் தான் இவை. அந்த மாயமான் தன் உடலைச் சிலிர்த்துக் கொள்ளும் போது, புள்ளிகளாகப் பொதிந்துள்ள வைரக்கற்கள் கீழே உதிர்ந்து கிடக்கும். அப்படி உதிர்ந்து கிடந்த வைரங்கள் தாம் இவை.
''மாய மான் அடிக்கடி தன் உடலைச் சிலிர்த்துக் கொள்ளாது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், உடலிலுள்ள வைரப் புள்ளிகளை உதிர்க்கும். தங்கள் உயிரை தூசியாக மதித்து அம்மான் வனத்துக்குப் போய், அதன் உடலிலிருந்து உதிர்ந்த வைரங்களைத் தேடி எடுத்து வந்தவர்களுக்கு ஏராளமான பொற்காசுகளை வழங்கி, அவற்றை வாங்கிச் சேமித்து வைத்திருக்கிறேன். ஆனாலும், அதன் தலையிலுள்ள அந்தப் பெரிய வைரம் கிடைக்காத போது இவற்றால் என்ன பிரயோஜனம்!'' என்று பெருமூச்சு விட்டார் மரகதபுரி மன்னர்.
''பெரியப்பா! நான் கூறுவதைக் கேட்டுக் கோபப்படாதீர்கள். உங்கள் பிரதேசத்தில் உள்ளவர்களுக்குத் திறமையோ, வீரமோ கிடையாது. அடிமை பாண்டியனிடம், அந்த மாய மானைக் கொன்று, வைரங்கள் பதிக்கப்பட்ட அதன் தோலையும், வைரம் முளைத்துள்ள அதன் தலையையும் கொண்டு வரச் சொல்கிறேன் பாருங்கள்!'' என்றான் மொட்டைத் தலையன்.
''அந்த மாயமானின் சக்தி அறியாமல் ஏதேதோ பேசுகிறாய் நீ. அது பார்வைக்கு மானே தவிர, மகா கொடிய மிருகமாக்கும்!'' என்றார் மன்னர்.
வஞ்சகமாகச் சிரித்தான் போலி இளவரசன்.
''மாய மானையும், அதன் தலையிலுள்ள வைரத்தையும் பற்றிக் கூறிவிட்டீர்... மற்ற விஷயங்களை என்னிடம் விட்டுவிடுங்கள்,'' என்று நிரம்ப அழுத்தமாகக் கூறிவிட்டு சென்றான்.
''மாய மானையும், அது வாழும் கானகத்தையும் பற்றி இளங்குமரனிடம் கூறிவிட்டு, அந்த மான் வனத்துக்கு உடனே போ. என்ன செய்வாயோ... எது செய்வாயோ தெரியாது. வைரங்கள் பதித்த மான் தோலையும், தலையையும் கொண்டு வந்தாக வேண்டும்.
''அவை இல்லாமல் நீ திரும்பவும் கூடாது. அதுமட்டுமல்ல, அதன் தோலிலிருந்து ஒரு வைரம்கூட உதிர்ந்திருக்கக்கூடாது. முக்கியமாக அதன் தலையில் உள்ள பெரும் வைரம் அப்படியே நலுங்காமல் வரவேண்டும். ஒரு வைரம் காணா விட்டாலும், உன் உடலில் இருந்து, உன் தலை காணாமல் போய்விடும். சீக்கிரம் புறப்படு, இங்கு கொட்டாவி விட்டபடி பொழுதைக் கழிக்காதே...!'' என்று விரட்டினான் மொட்டைத்தலையன்.
அந்த மோசக்காரனின் உத்தரவில் உள்ள அபாயங்களை இளங்குமரன் அறிவான். அவன் என்ன முட்டாளா? ஆனாலும், அவன் கட்டளைக்கு கீழ்ப்படிவதை தவிர, வேறு வழியில்லை. தனக்கு இப்போது கெட்ட காலம், பொறுத்திருக்க வேண்டும் என்ற முடிவோடு குதிரை லாயத்தை நோக்கி நடந்தான்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X