எகிப்தில், அஸ்வான் நகருக்கு, 290 கி.மீ., தூரத்தில் இருக்கிறது, 'அபு சிம்பல்'. இந்தக் கோவில் மிகப் பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்டிருக்கிறது.
இரண்டாம் ராமசேஸ் என்ற மன்னரால், கி.மு., 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அபு சிம்பல். ராமசேஸ் தன்னுடைய போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் தனக்கும், தன் மனைவி, ராணி நெபர்டாரிக்கும் இந்தக் கோவிலைக் கட்டினார்.
எகிப்தில் அதிக அளவு வெளிநாட்டுப் பயணிகளைக் கவரக்கூடிய இடமாக அபு சிம்பல் இருக்கிறது. இந்தக் கோவிலை உருவாக்க இருபதாண்டுகள் ஆயின. கி.மு., 1284ல் ஆரம்பித்து, கி.மு., 1264ல் கட்டி முடிக்கப்பட்டது.
கி.பி., 6ம் நூற்றாண்டில் சிலையின் பாதம் வரை மணல் மூட ஆரம்பித்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முழுக் கோவிலையும் மறைத்து விட்டது மணல். பின், 1813ல் வரை இந்தக் கோவிலைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த, பர்க்ஹார்ட் கோவிலின் மேல் பகுதியை கண்டுபிடித்தார். பர்க்ஹார்ட், இத்தாலிய கண்டுபிடிப்பாளர் கோவன்னி பெல்சோனி என்பவரிடம், தன் கண்டுபிடிப்பை பற்றிச் சொல்லியிருக்கிறார். கோவன்னி எகிப்துக்குச் சென்றபோது, மணலைத் தோண்டி கோவிலின் வாசலைக் கண்டுபிடித்தார். ஆனால், முழு கோவிலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மீண்டும், 1817ல் கோவன்னி, எகிப்துக்கு வந்தபோது தான், முழுக் கோவிலையும் மணலில் இருந்து, வெளியே கொண்டு வர முடிந்தது. அந்தப் பகுதியில் வசித்த அபு சிம்பல், என்ற சிறுவன் தான், மணலைத் தோண்டித் தோண்டி, கோவிலை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தான். அதனால் இந்தக் கோவிலுக்கு, 'அபு சிம்பல்' என்று அவன் பெயரையே சூட்டிவிட்டனர்.
பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில்களிலேயே இது மிகவும் பெரியது. இரண்டு கோபுரங்கள் உள்ளன. சிலையின் தலையிலும், முகவாயிலும் கிரீடங்கள் காணப்படுகின்றன. கோவிலின் உள்ளே, ஆறு உயரமான தூண்கள் இருக்கின்றன. ஆண்டுக்கு இரு முறை அக்டோபர் 20, பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில், கோவிலின் உட்புறத்தில், சூரியக் கதிர்கள் விழுமாறு கோவில் கட்டப்பட்டிருக்கிறது.
அபு சிம்பலுக்கு அருகில், ஹத்தார், நெபர்டாரி என்ற சிறிய கோவில்கள் உள்ளன. இது ராமசேஸ் கோவிலுக்கு, ௧௦௦ மீட்டர் தொலைவில் உள்ளது.