பூனையும் எலியும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

காட்டில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில், எலி ஒன்று வளையிலும், ஆலமரத்தின் கிளையில் பூனை ஒன்றும் வசித்து வந்தது.
வேடன் ஒருவன், விலங்குகளைப் பிடிக்கும் பொருட்டு காட்டிற்கு வந்தான். இரவில் பெரிய வலையொன்றை, ஆலமரத்தின் அடியில் விரித்து கட்டி விட்டுப் போனான். இரவு நேரத்தில் வலை இருப்பது தெரியாமல் விலங்குகள் வந்து மாட்டும். அப்படி மாட்டினால், அவற்றை பிடித்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்தான்.
வேடனின் கணிப்புப்படி, ஆலமரத்தில் வசித்து வந்த பூனை, இரவில் தாவிக் குதித்து, வலை இருப்பது தெரியாமல் அதில் மாட்டிக்கொண்டது.
ஆலமரத்தின் கீழ் உள்ள வளையில் வசித்து வந்த எலியை எப்படியாவது பிடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்தது பூனைக்கு. இந்நிலையில், பூனை வலையில் மாட்டிக் கொண்டது எலிக்கு ஒரே கொண்டாட்டம்.
'இந்த பூனையால் தானே நாம் வெளியில் சுதந்திரமாக விளையாட முடியாமல், பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை. இனி, அந்த பயம் இருக்காது. நினைத்த நேரத்துக்கு வெளியில் வரலாம்; விளையாடலாம்; குதிக்கலாம்; மரத்தில் ஏறி பழங்கொறிக்கலாம், என்று பலவாறு நினைத்து மகிழ்ந்தது எலி.
ஆனால், எலியின் மகிழ்ச்சி, சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அந்த நேரத்தில், கீரி தன்னுடைய பொந்தில் இருந்து வெளியில் வருவதை பார்த்தது எலி. வளையில் சென்று பதுங்கவும் முடியாது; அதற்குள் கீரி வந்து வந்து விடும். அருகில் இருக்கும் ஆலமரத்தின் மீது ஏறி தப்பிக்கலாம் என்று யோசித்த வேளையில், மேலே கோட்டான் ஒன்று உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டது எலி. அத்துடன், தன்னையே குறி வைத்து உட்கார்ந்திருப்பதையும் பார்த்து விட்டது.
ஒருபுறம் தன்னை விழுங்கப்பார்க்கும் கீரி; மறுபுறம் தன்னை கொத்திச் செல்ல நினைக்கும் கோட்டான், இரண்டையும் கண்ட எலிக்கு உயிர் பயம் வந்து, முன் பக்க பற்கள் உதற ஆரம்பித்தன.
இவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று எலி வேகமாக சிந்திக்க ஆரம்பித்தது. 'கீரி, கோட்டான் மட்டுமல்ல, வலையில் மாட்டிக்கொண்டிருக்கும் பூனையும் கூட வெளியில் வந்தால், தன்னை கொல்லப்பார்க்கும் எதிரிதான். ஆனால், இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் தனக்கு பூனை மட்டும்தான் உதவ முடியும். பூனை தற்போது மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. மூன்று பேரையும் ஒரே நேரத்தில் எதிர்த்து உயிர் வாழும் வல்லமை தனக்கு இல்லை என்பதையும் உணர்ந்தது எலி.
பூனை எதிரியாக இருந்தாலும், ஆபத்திலிருக்கும் சூழலில் அதை நாம் காப்பாற்றினால், அது நம்மைக் காப்பாற்றும். ஆபத்துக் காலத்தில் பகைவனின் உதவியை நாடுவதில் தப்பில்லை என்ற உண்மையை புரிந்து, வலையில் சிக்கியுள்ள பூனையைப் பார்த்து பேச துவங்கியது.
''நீ உயிருடன் வெளியே வருவதை நான் விரும்புகிறேன். இந்த வலையை என் பற்களால் கடித்தெறிந்துன் உன்னைக் காப்பாற்றுகிறேன். அதற்குப் பதிலாக, நீ கீரியிடமும், கோட்டானிடமும் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். உன்னால் நானும், என்னால் நீயும் உயிர் காப்பாற்றிக் கொள்வது தான், இந்த நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு. இதற்கு நீ என்ன சொல்கிறாய்?" என்றது எலி.
''உன்னால் நான் காப்பாற்றப்பட்டால், நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்; மாறாத, அன்பு கொள்வேன். என்னை விடுவிக்க வலையைக் கடித்து சேதப்படுத்து; பதிலுக்கு நான் உன்னைக் காப்பாற்றுவேன். தாமதிக்காமல் உடனே செய்," என்றது பூனை.
''நான் வலைக்குள் புகுந்து உன் மடியில் உட்கார்ந்து கொள்கிறேன். அப்போது கீரியும், கோட்டானும் உன்னை நெருங்காது. பின், நான் வலையை அறுத்தெறிகிறேன். வலை அறுந்தபின், நீ என்னை ஒன்றும் செய்யக் கூடாது. இதற்கு சம்மதமா?" என்றது எலி.
பூனையும் சரி என்று ஒப்புக் கொண்டது.
உடனே, எலி வலைக்குள் புகுந்து பூனையின் அருகில் போய் அமர்ந்து கொண்டது. எலியை தின்பதற்காக ஆவல் கொண்டிருந்த கோட்டானும், கீரியும் இனி எலி தங்களுக்கு கிடைக்காது என்று அறிந்தவுடன் அங்கிருந்து சென்று விட்டன.
அதன் பின் எலி, பூனைக்கு வாக்களித்தபடி வலையை தன்னுடைய கூரிய பற்களால் கடிக்கத் துவங்கியது. பூனைக்கு ஆனால், எலியின் மீது சந்தேகம் எழுந்தது. வேண்டுமென்றே மெதுவாக வலையை கடிப்பது போல் தோன்றியது.
ஒருவேளை மெதுவாகக் கடித்து, அதற்குள் வேடன் வந்து விட்டால், தான் எப்படி பிழைப்பது என்ற பயம் அப்பூனைக்கு எழுந்தது.
''நீ வேண்டுமென்றே மெதுவாக வலையைக் கடித்து எனக்கு துரோகம் செய்ய நினைக்கிறாயோ என்று நான் அஞ்சுகிறேன்... வேடன் வருவதற்குள் நீ வலையை கடித்து முடிக்காவிட்டால் நான் இறந்து விடுவேன். நீ மிகவும் நிதானமாக செயல்படுகிறாயோ என்று தோன்றுகிறது. அப்படி நீ செயல்பட்டால் அது சரியான செயல் அல்ல..." என்று பதற்றத்துடன் கூறியது பூனை.
நீ பயப்படாதே! நான் சொன்ன வாக்கிலிருந்து தவறமாட்டேன். ஆனால், அதற்கான நேரம் தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன்னை உடனே காப்பாற்றி விட்டால், நீ என்னைக் கொன்றாலும் கொன்று விடுவாய். அதனால், தூரத்தில் வேடன் வருவது தெரிந்ததும், கடகடவென்று வலையைக் கடித்து உன்னை காப்பாற்றி விடுவேன்," என்றது எலி.
உன்னை கீரி, கோட்டானிடமிருந்து உடனே, காப்பாற்றினேன். ஆனால், நீயோ தாமதப்படுத்தி காலத்தைக் கடத்துகிறாய். மரத்தில் இருக்கும்போது நான் உன்னை கொல்வதற்காக முயற்சி செய்த பழைய செயல்களை எல்லாம் மறந்துவிடு. இனி நான் எப்போதும் உன்னை கொல்ல மாட்டேன். நாம் நண்பர்களாகவே இருப்போம்,'' என்றது பூனை.
பூனையின் கூற்றை எலி ஏற்க மறுத்தது. ''நண்பனாக இருந்தாலும், ஒருவரிடம் நமக்கு பயமிருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது பெரியவர்களின் வாக்கு. பலமுள்ளவனிடத்தில் சமாதானம் செய்து கொள்ளும் பலவீனமானவன், எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனே இருக்க வேண்டும். சூழ்நிலை தான் நண்பனையும், எதிரியையும் உருவாக்குகிறது; நீ பயப்படாதே. வேடன் வரும்போது நான் வலையை அறுப்பேன். நீயும் ஓடி விடு... என்னை நம்பு,'' என்றது.
பொழுது விடியத் துவங்கியது. வேடனும் தூரத்தில் தன் நாய்களோடு வந்து கொண்டிருந்தான். அதைக் கண்ட பூனை நடுங்க துவங்கியது; உயிர் பயம் கண்களில் தெரிய ஆரம்பித்தது.
அப்போது தான் வலையை வேகவேகமாக கடித்தது எலி. வேடன் மரத்தின் அருகே வருவதற்கும், எலி வலையை அறுத்து முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பூனை ஒரு கணப்பொழுதையும் வீணாக்க விரும்பாமல், அடுத்த நொடியே தாவி குதித்து மரத்தின் மீது ஏறி உச்சிக்கிளையில் போய் உட்கார்ந்தது. எலியும் கண்ணிமைக்கும் நேரத்தில் விருட்டென்று தன் வளைக்குள் புகுந்தது.
அனைத்து எதிரிகளிடமிருந்தும், தன்னைக் காப்பாற்றிக் கொண்ட நிம்மதி எலியிடமிருந்து வெளிப்பட்டது. வேடன் அறுந்த வலையை ஏமாற்றத்துடன் எடுத்துச் சென்றான். அவன் போன பிறகு வளைக்குள் இருந்த எலியைப் பார்த்து பூனை பேசியது.
நீ என் உயிரைக் காத்தவன்! உன்னை நானும், என் உறவுகளும் என்றென்றும் போற்றுவோம். என் மீது சந்தேகம் கொள்ளாதே. உயிர் காத்த உனக்கு நான் என்றும் அடிமை. வெளியே வா... இருவரும் நண்பர்களாய் பழகுவோம்,'' என்று அழைத்தது. ஆனால், பூனையின் வார்த்தைகளை ஏற்க மறுத்து விட்டது எலி.
பிறப்பால் யாருமே நண்பர்களும் அல்ல; பகைவர்களும் அல்ல. செய்யும் செயலைப் பொறுத்தே நண்பனும், பகைவனும் நிர்ணயிக்கப் படுகிறான். நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவது இயற்கை.
வலையிலிருந்து விடுபட்ட நீ, இனி உணவைத் தேடுவாய். அப்போது உன் கண்ணுக்கு முதலில் நான்தான் தெரிவேன். இத்தகைய நிலையில், நாம் நண்பர்களாக இருப்போம் என்று நீ கூறுவதெல்லாம் பொய். ஆபத்திலிருந்து தப்பிக்க நண்பர்களானோம். அந்தக் காரியம் முடிந்து விட்டது. அந்த நட்பு தொடர வேண்டிய அவசியமில்லை. நீ இயற்கையாக என்னுடைய பகைவன்; காரியத்தால் நண்பன்.
நாம் இருவரும் சம பலமுள்ளவர்கள் அல்ல. உன் பலத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நீ எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும், நான் உனக்கு இறுதியில் உணவாகக் கூடியவனே. ஆகையால், உன்னிடமிருந்து எச்சரிக்கையோடு என்னை நான் காப்பாற்றிக் கொள்வது தான், என்னுடைய முதல் வேலை. இதுதான் நியதி; இதுதான் உண்மை.
''போய் வா நண்பா!'' உனக்கு நல்லது நடக்கட்டும். ஆனால், உன் கையில் மட்டும் நான் சிக்க மாட்டேன்...'' என்று கூறிய எலி, வளையின் வாயிலை மண்போட்டு அடைத்தது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X