முன்னொரு காலத்தில், வஞ்சிமாறன் என்ற அரசர், சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அவருக்கு நீண்ட காலத்திற்கு பின், புஷ்பேந்திரா என்ற மகன் பிறந்தான். அவனை சீராட்டி பாராட்டி வளர்த்தனர். அவன் பருவ வயதை அடைந்தான்.
ஒரு நாள்-
புஷ்பேந்திரா நந்தவனத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பாம்பு, புற்றில் நுழைவதற்கு பதிலாக, அவன் வாயில் நுழைந்து, வயிற்றிலேயே தங்கி வசிக்கத் துவங்கியது. இதை அரசகுமாரன் உணரவில்லை.
இதனால், அவன் நாளுக்கு நாள் மெலிந்து வந்தான். உடம்பு தேறி வராத காரணத்தால், தன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது. அதனால், ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு சென்றான்.
அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு இவனை தெரிந்தவர் யாரும் இல்லை என்பதால், பிச்சை வாங்கி உண்டு வந்தான். இரவு நேரங்களில் கோவிலில் படுத்து விடுவான். இப்படி ஒரு பரதேசி போலவே வாழ்ந்து வந்தான் புஷ்பேந்திரா.
அந்த நாட்டு அரசனுக்கு, ராகினி, பத்மினி என, இரண்டு மகள்கள் இருந்தனர். தினமும், அதிகாலையில் ராகினி அரசனுடைய காலடியில் அமர்ந்து, ''இன்று, தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்,'' என்பாள்.
பத்மினியோ, அவரது தலைமாட்டில் அமர்ந்து, ''இன்று விதிக்கப்பட்டதை அனுபவியுங்கள்,'' என்பாள். இதனால், பத்மினி மீது கோபம் கொண்டார் அரசர்.
'தினமும் இப்படியே பேசி என்னை கோபப்படுத்துகிறாள். இவளுக்கு தக்க தண்டனை தர வேண்டும். அப்போது தான் திருந்துவாள்...' என்று நினைத்தார் அரசர்.
''மந்திரியாரே... பத்மினி எப்போதும் எதிர்மறையாகவே பேசுகிறாள். அதனால், இவளை எவனாவது ஒரு பரதேசிக்கு திருமணம் செய்து கொடுத்து விடுங்கள். அவளுக்கு விதிக்கப்பட்டதை அவளே அனுபவிக்கட்டும்,'' என்று கூறினார்.
''அப்படியே செய்கிறேன்,'' என்றார் மந்திரியார்.
அரசன் ஆணைப்படி, அரசகுமாரியை சில பணிப் பெண்களுடன் வெளியே அழைத்துச் சென்றார். வழக்கமாக பல பரதேசிகள் கண்ணில் படுவர். அன்று எவனும் கிடைக்கவில்லை.
'என்ன இப்படி ஆகிவிட்டதே' என்ற வருத்தத்துடன் அந்த ஊர்க் கோவிலுக்குச் சென்றனர். அங்கு படுத்துக் கிடந்த பரதேசி தோற்றத்தில் இருந்த அரசகுமாரன் புஷ்பேந்திராவை, பத்மினிக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
பத்மினி அதற்காக வருத்தப்படவில்லை. அவனை மகிழ்ச்சியுடன் ஏற்று, கணவனே கண்கண்ட தெய்வம் என அவனை வழிபட ஆரம்பித்தாள். அது புஷ்பேந்திராவிற்கு மகிழ்ச்சியை தந்தது.
சில நாட்களில் அவர்கள் வேறு நாட்டுக்குச் சென்று விட்டனர். அங்கு, குளக்கரை அருகில் இருந்த சிறு வீட்டில் தங்கினர். அந்த வீடு வசதியாக இருக்கவே அதிலேயே குடும்பம் நடத்த ஆரம்பித்தனர்.
ஒரு நாள்-
கணவனை வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு, வெளியே சென்றாள் பத்மினி.
தனியாக இருந்த புஷ்பேந்திரா வீட்டு தோட்டத்துப் பக்கம் சென்றான். அசதியில் அங்கிருந்த பாம்புப் புற்றில் தலை வைத்து அயர்ந்து தூங்கி விட்டான்.
வெளியே சென்றிருந்த பத்மினி வீடு திரும்பினாள். தோட்டத்தில் படுத்திருந்த கணவனை எழுப்பப் போனாள். அப்போது, தன் கணவன் வாயிலிருந்து ஒரு நாகம் வெளிப்பட்டு படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதே நேரத்தில் புற்றிலிருந்து ஒரு நாகம், தலையை வெளியே நீட்டி காற்று வாங்கிக் கொண்டிருந்தது.
அப்போது பாம்புகள் இரண்டும் ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டன. சீறிப் பாய்ந்து சண்டை போட்டுக் கொள்ளத் துவங்கின.
புற்றிலிருந்த பாம்பு, ''இத்தனை அழகு மிகுந்த அரச குமாரனை ஏன் துன்புறுத்துகிறாய். அதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது?'' என்று கேட்டது.
''நீ மட்டும் என்ன ஒழுங்கோ, தங்க நாணயங்கள் நிறைந்த இரண்டு குடங்களை உள்ளே வைத்து மண்ணால் மூடி வைத்திருக்கிறாயே... அது நியாயமா?'' என்று கேட்டது.
இந்த மாதிரி ஒன்றையொன்று திட்டிய படி, தங்கள் பலவீனத்தை வெளியிட்டன.
''தீயவனே! கடுகை அரைத்து அரசகுமாரனுக்கு கொடுத்தால், நீ அடுத்த கணமே மாண்டு போவாய் என்பது, எந்த மருத்துவனுக்கும் தெரியாததால் தான் இன்னும் நீ உயிரோடு இருக்கிறாய்,'' என்றது புற்றிலிருந்த பாம்பு.
''நீ வசிக்கும்புற்றின் மீது, கொதிக்கும் வெந்நீரை ஊற்றினால், உன் கதி அதோகதி தான் என்பது யாருக்கும் தெரியாத வரைக்கும் தான், உனக்கு வாழ்வு,'' என்று கூறியது அரசகுமாரனிடமிருந்த பாம்பு.
இது மாதிரி இரண்டு பாம்புகளும் பேசிக் கொண்டிருந்ததை அங்கு வந்த அரசகுமாரி கேட்டு விட்டாள். பின் சற்றும் தாமதிக்காமல், அந்த இரண்டு பாம்புகளும் கூறியபடி செய்து முடித்தாள். அரச குமாரனுக்கு கடுகை அரைத்துக் கொடுத்து விழுங்கச் செய்தாள். கொதிக்கும் வெந்நீரை புற்றின் மீது ஊற்றினாள்.
அந்த இரண்டு பாம்புகளும், தவளை தன் வாயாலேயே கெட்டது போல, தங்கள் வாயாலேயே அழிந்து போயின.
அதன்பின், அரசகுமாரன் உடல் நலம் தேறினான். அவனுக்கு நிறைய பொன்னும், பொருளும் கிடைத்தது. மனைவியுடன் தன் நாட்டுக்குத் திரும்பினான். அவனுடைய பெற்றோர் அவர்களை அன்புடன் வரவேற்றனர். நடந்தவற்றை அறிந்து, அரசகுமாரியின் சாதுரியமான நடவடிக்கையை பாராட்டினர்.
மகளைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்ட அரசன், அந்த நாட்டுக்கு வந்தான். தன் மகளுக்கு மணாளனாக அமைந்தவன் அந்த நாட்டின் அரசகுமாரன் என்பதை அறிந்து, மிகவும் மகிழ்ந்து போனான். நாட்டின் ஒரு பகுதியை அவர்களுக்கு பரிசாக அளித்து, மகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தான்.
அதற்கு, அரசகுமாரியான மகள், ''என் கையில் ஒன்றுமில்லை தந்தையே... விதிக்கப் பட்டதை அனுபவிக்கிறேன்,'' என்றாள். மகளின் பதிலில் இருந்த உண்மையை உணர்ந்தார் அரசர்.