இம்புட்டுதான்யா 2017 | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements
இம்புட்டுதான்யா 2017
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2016
00:00

வாழ்க்கை எவ்வளவு வேகமாயிடுச்சு இல்ல? அஞ்சாவது வகுப்பு படிக்கிற போதே, 'பத்தாவது முடிச்ச கையோட இவளை லவ்வுறோம்'னு, பக்கத்துல உட்கார்ந்திருக்கிற வெள்ளைப் பணியாரத்தை மனசுக்குள்ளே ஏத்திக்குது வாண்டு. கல்லுாரியில முதல் வருஷம் சேர்த்ததும், 'மேட்ரிமோனி'ல ஒரு துண்டு போட்டு வைச்சுட்டு, 'ஒரு பாவப்பட்ட ஜீவன் சிக்காமலா போயிரும்'னு காத்திருக்க ஆரம்பிச்சிடுறாரு பொண்ணோட தகப்பர். பொண்ணு இவதான்னு முடிவாகி மண்டபம் புக் பண்றதுக்குள்ளே, தனிக்குடித்தனத்துக்கு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துடுறானுங்க ஸ்மார்ட் பாய்ஸ். பிள்ளை பிறந்ததும் அதுக்கு கொடுக்குற முதல் பரிசு, ஒரு அப்பாடக்கர் ஸ்கூலோட அட்மிஷன் கார்டா இருந்தாத் தான், மாமியார் வீட்டுல மருமகனுக்கு பாயாசம் ஊத்துறானுங்க! இப்படி, வாழ்க்கையோட அடிப்படையான எல்லாமே முன்கூட்டியே நடக்க ஆரம்பிச்சிட்ட சூழல்ல, 2017ம் ஆண்டுல என்னென்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க, அதெல்லாம் நடக்கிற வரைக்கும் காத்திருக்க முடியுமா என்ன? அதான், இந்த தீபாவளிக்கே, 2017 பட்டாசோட திரி கிள்ளிட்டோம். பத்த வைக்கிறது, 'யூ டியூப்' ஜோதிடர் நெல்லை பெ.குமரகுரு.மேஷம் - மீன ராசி வாசகர்களே... தயவுசெய்து, வழக்கமான விஷயத்தை எதிர்பார்த்து மேற்கொண்டு படிக்காதீங்க! ப்ளீஸ்...

நடிகை நயன்தாராவுக்கு, 2017ல் திருமண யோகம் இருக்குதுங்களா ஜோசியரே?
நடிகை நயன்தாராவின் ஜனன ஜாதகப்படி, கணவருக்கு காரக கிரகமான செவ்வாய் உச்சம் பெற்று, அதன் திரிகோணப் பார்வையில் ராகுவை சந்திப்பது, நல்ல பலன்களை தடுத்து நிறுத்தி ஏமாற்றங்களை தரக்கூடிய அமைப்பு! ஆனால், தற்போது உள்ள கோட்சார குருவின் பார்வை, செவ்வாய் மற்றும் ராகுவிற்கு கிடைப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். மேலும், 2017 இறுதியில் நடக்கும் சனிப் பெயர்ச்சியில், ஜனன ஜாதகத்தில் உள்ள குருவையும், சுக்கிரனையும் கோட்சார சனி சந்திப்பது, திருமணம் நடைபெறுவதற்கு அல்லது உறுதி செய்வதற்கான காலமாக அமையும்!
அடுத்த ஆண்டு, எத்தனை நாடுகளுக்கு மோடிஜி சுற்றுப்பயணம் செய்வார்?
வரும் ஆண்டில் பிரதமர் மோடி, 17 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அவருடைய ராசிக்கு, 9ம் இடத்தில் ராகு வருவது, மிக அதிக வெளிநாட்டு பயணங்களுக்கும், குருபலம் நிறைந்திருப்பது நிறைய திட்டங்களை ெசயல்படுத்துவதற்கும் உதவும்! அடுத்த ஆண்டில், அவருடைய புகழ் உயரும். தகவல் தொழில்நுட்பத்தில், முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை அவர் மாற்றுவார்!
பாகுபலி 2 என்னென்ன சாதிக்கும்?
பாகுபலி 2 திரைப்படம் வெளிவரும் நாளான, 28.4.2017 அன்று, எண் கணிதப்படி பார்த்தால், 1ம் எண் வருகிறது. ஆதலால், அடுத்த ஆண்டின் மிகச்சிறந்த பிரம்மாண்ட படமாக அது இருக்கும். மேலும், சந்திரன் உச்சம் பெறும் நாளில் இப்படம் வெளியிடப்படுவது, இப்படத்திற்கு உலகளவில் கூடுதல் பெருமையைச் சேர்க்கும்!'மது இல்லாத தமிழகம்' 2017
முடியறதுக்குள்ளே மலருமா?
வரும் ஜூலை மாதத்தில் ஏற்படும் ராகு - கேது பெயர்ச்சியினால், நீர் வீடான கடகத்திற்கு ராகு வருகிறார். கடகத்தில் ராகு இருக்கும் காலம் வரை மது விற்பனை இருக்கும். பின் படிப்படியாக குறையும். ராகு - கேது ஒன்றரை வருடத்திற்குப் பின் கடகத்திலிருந்து பெயர்ச்சி ஆனதும், மது இல்லாத மாநிலமாக தமிழகம் நிச்சயம் மாறும்! தி.மு.க., தலைவர் பதவி,
2017ல் ஸ்டாலினுக்கு கிடைக்குமா; கிடைக்காதா?
ஜூலை மாதம் நிகழவிருக்கும் ராகு - கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியும், ஸ்டாலின் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையில் இருப்பதால், அவர் தலைமை பொறுப்புக்கு வரப்போவது நிச்சயம்!
சரி, 2017ல் எந்த காய்கறியோட விலை உச்சத்துக்கு போகும்?
எதிர்வரும் ஆண்டில், கோட்சார கிரகங்களின் சூழல்படி, உணவுப் பொருட்களின் விலை உயர்வது நிச்சயம். குறிப்பாக அரிசி, எண்ணெய், சர்க்கரை, துவரம் பருப்பு விலை உயரும். வெங்காயம் மற்றும் வாழை உற்பத்தி பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புண்டு. காய்கறிகளில் வெங்காயத்தின் விலை உயரும்.
அடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தானே?
இல்லை! அடுத்த அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு ஹிலாரிக்கே அதிகம். ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி அவர்களின் ஜனன ஜாதகத்தில், குரு பலம் சேர்வது, மக்களின் ஆதரவை பெற்றுத் தரும். டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு, தற்போது ஏழரை ஆண்டு சனி கோட்சாரத்தில் இருப்பது, அரசியலில் எதிர்பார்த்த பலன் தராது. அதேபோல், தற்போதைய சனி, செவ்வாய், கேது கிரக இணைவின் படி, தீவிரவாத அச்சுறுத்தலில் இருக்கும் அமெரிக்கா, 2017 சனிப்பெயர்ச்சிக்குப் பின் நிம்மதி பெருமூச்சு விடும்!
அடுத்த ஆண்டிலாவது, அழகிரி - ஸ்டாலின் உரசல் முடிவுக்கு வருமா?
பொதுவாகவே, இருவருடைய ஜனன ஜாதகத்திலும், சகோதர கிரகமான செவ்வாய், தன் பகை கிரகமான சனியைப் பார்க்கிறது; இது, நல்லதல்ல! இது, இருவருக்குள்ளும் மனவேதனையையும், உரசல்களையுமே கொடுத்து வரும். பொதுவாக, சனிப்பெயர்ச்சியில் கோட்சார சனி, செவ்வாய் மற்றும் கேதுவைப் பார்த்தால் தொழில் பிரச்னை அல்லது சகோதரப் பிரிவு ஏற்படும். இது, இருவரிடையே கடந்த சனிப்பெயர்ச்சியின் மூலம்
நிகழ்ந்தது. டிசம்பர் 2017 சனிப் பெயர்ச்சி, இருவருக்குள்ளும் இருக்கும் உரசல்களை குறைக்கும்; அவ்வளவே!என்ன மாதிரியான அரசியல்
அதிர்ச்சி, 2017ல் காத்திருக்குது?
வரும் ஆண்டில், அரசாங்க வீடான சிம்மத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பது சிறப்பல்ல. மேலும், சனி ராகுவிற்கு திரிகோணத்தில் சஞ்சரிப்பதும், சனி பகவான் வீட்டில் மோட்சகாரகன்
கேது சஞ்சரிப்பதுவும் அரசியலில் எதிர்பாராத இழப்புகளுக்கு காரணமாகும்; அதிர்ச்சிகள் தரக்கூடியதாக இருக்கும்.எல்லாம் சரி ஜோதிடரே... அடுத்த
ஆண்டு பணப்புழக்கம் எப்படி?
அடுத்த ஆண்டில், பெயர்ச்சிக்கு அதிக நாட்கள் எடுக்கக்கூடிய முக்கியமான கிரகங்களான சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி இருப்பதால், ராசி சக்கரப்படி 7ல்
குரு அதாவது சுக்கிரன் வீட்டில் குரு சஞ்சரிக்கும் போது நிதித்துறை, வங்கி, பங்குச்சந்தை உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றமான சூழல் உருவாகும். இதனால், பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். ஒன்பதாம் இடத்தில் சனிப்பெயர்ச்சி ஆகும் காலமும் வளம் கொடுப்பதாகவே இருக்கும்! இனிய தீபாவளி வாழ்த்துகள்!

குறிப்பு: இணையம் சொன்ன பிரபலங்களின் பிறந்த தேதி அடிப்படையில், மேற்சொன்னவை கணிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பிறந்த நேரம் துல்லியமாக தெரியாத காரணத்தால், திசா, புத்தி கணக்கீடு செய்யப்படவில்லை. நாடி ஜோதிடம், கால புருஷ தத்துவம், கோட்சார கிரகங்கள் அடிப்படையிலேயே மேற்சொன்னவை கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

 

‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X