கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 அக்
2016
00:00

கேள்வி: என்னிடம் கேனன் பவர் ஷாட் கேமரா உள்ளது. இதில் சிறிய அளவில் விடியோ படங்களை எடுக்கிறேன். இதனை கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பார்க்கையில், பின்னணியில் சத்தம் அதிகமாக உள்ளது. விடியோ பார்ப்பதற்கு இடையூறாக உள்ளது. இதனை எப்படி நீக்குவது? விடியோ பதியும் போதே, ஒலி பதிவாகாமல் பார்த்துக் கொள்ள முடியுமா?
என். மோனிகா வசந்த், காரைக்கால்.
பதில்:
உங்கள் பிரச்னை புரிகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், ஒரு டிஜிட்டல் பைல் என்பது ஒட்டு மொத்த விஷயங்கள் அடங்கிய ஒரு பைல். பைலின் ஒரு பகுதியை முடக்கலாம்; ஆனால், பைலில் உள்ள ஒரு அம்சத்தை எளிதாக முடக்க இயலாது. ஒலியே இல்லாமல் விடியோ பைல் இருக்க வேண்டும் என்றால், விடியோ பதியும் போது, ஒலி இல்லாமல் எடுக்க வேண்டும். (பொதுவாக அனைத்து கேமராக்களிலும் இந்த ஒலி முடக்கும் வசதி தரப்பட்டிருக்கும்). அல்லது விடியோ எடுத்த பின்னர், அதற்கான 'நேரிலா புதுப்பித்தல் செயலி' ஒன்றின் மூலம் (non-linear editing program) ஒலியை நீக்கலாம்.
இந்த சிரமம் இல்லாமல், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலேயே ஒரு வசதி உள்ளது. அது மைக்ரோசாப்ட் மூவி மேக்கர் என்னும் செயலியைப் பயன்படுத்தி இதனை மேற்கொள்ளலாம். இதனை ஸ்டார்ட் மெனுவில் உள்ள தேடல் கட்டம் மூலம் பெறலாம். இது உங்கள் கம்ப்யூட்டரில் இல்லை என்றால், http://windows.microsoft.com/en-us/windows/movie-maker என்ற முகவரியில் இதனைப் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
மூவி மேக்கரை இயக்கவும். அடுத்து, Add videos and photos என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எடிட் செய்திட விரும்பும் விடியோவினைத் தேர்ந்தெடுக்கவும். அது உங்கள் ப்ராஜக்ட் என்பதில் காட்டப்படும். Edit டேப்பினைக் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Video volume என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் காட்டப்படும் ஸ்லைடரை நகர்த்தி, no sound என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர் Save movie என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எந்த பார்மட்டில் சேவ் செய்திட விரும்புகிறீர்கள் என்று கேட்பதற்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதில் Publish movie என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதனை நேரடியாக, சமூக ஊடகங்களில் பதிக்கவும் செய்திடலாம்.

கேள்வி: சமூக வலைத் தளங்களில் (பேஸ்புக், ட்விட்டர் போன்றவை) பலர் தங்கள் பொன்னான நேரத்தைப் போக்குவதனால், மனித உழைப்புத் திறன் குறைகிறது என்றும், இதனால், பலர் விரக்தி அடைகின்றனர் என்றும் பரவலாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது உண்மையா? இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? முடிவுகள் என்ன?
என். ஆனந்தராஜ், திருநெல்வேலி.
பதில்
: நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, இது குறித்து இரு வேறு வகையான கருத்துகள் உலவுகின்றன. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற நம் பழமொழியைத்தான் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அதிக நேரம் செலவிடுவதால், நம் உழைப்புத் திறன் வீணாகும் வாய்ப்பு நிச்சயம் ஏற்படும். ஒரு சிலர், சமூக வலைத் தளங்கள் வழியாக ஏமாற்றப்படுவதால், மன விரக்தி அடைகின்றனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. Facebook, YouTube, Twitter, Google+, Instagram, Snapchat, Reddit, Tumblr, Pinterest, Vine and LinkedIn ஆகிய வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைச் சந்தித்து இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. வாழ்க்கையில் தனிமையினால் விரக்தி அடைந்தவர்களுக்கு, சமூக வலைத் தளங்கள் புத்துணர்ச்சி தரும், மனதிற்கு நிறைவைத் தரும் இடமாகவும் உள்ளது எனவும் அதே ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, அளவோடு பயன்படுத்தினால் எதுவும் நல்லதே. இளைஞர்கள் இதனை அவசியம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கேள்வி: குரோம் பிரவுசரை விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்துகிறேன். இதில் பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்தி வருகிறேன். இவை இயங்கும்போதும், இயங்காத போதும், பிரவுசரின் டூல் பாரில் இடம் எடுத்துக் கொள்கின்றன. இவை காட்டப்பட வேண்டிய தேவையே இல்லை. இவற்றை எப்படி மறைப்பது? மறைத்தால், இவற்றின் இயக்கம் கிடைக்காமல் போய்விடுமா?
ஆர். ஷண்முகம், மதுரை.
பதில்
: நீங்கள் சொல்வதும் சரியே. தேவையற்ற வகையில் இந்த எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்பட வேண்டியதில்லையே. இதனை நீக்க அல்லது மறைக்க, அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அந்த ஐகான் அதன் பின்னர் காட்டப்பட மாட்டாது.

கேள்வி: இணைய தள உலா வருகையில், சில பக்கங்களில், சில இடங்களில், எழுத்துகள் மிகவும் சிறியனவாக உள்ளன. இந்தப் பக்கத்தினை மட்டும் பெரிதாக்கிப் பார்க்க எந்த ஷார்ட் கீ பயன்படுத்த வேண்டும். மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர எந்த கீ பயன்படும்? விளக்கமான குறிப்பு தரவும்.
ஜ. ஜாபர் அலி, புதுச்சேரி.
பதில்:
எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “---” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும். கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.

கேள்வி: ஆங்கில நூல் ஒன்றில் இணையம் குறித்துப் படிக்கும் போது “Dark Web” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் இதன் வழியாக விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டிருந்தது. அப்படி தனியாக ஓர் இணையம் இயங்க முடியுமா? அது குறித்த விபரங்கள் தர முடியுமா?
என். ஜகன் மூர்த்தி, சிவகங்கை.
பதில்:
இந்தக் கேள்விக்குப் பதில் தரலாமா, வேண்டாமா என்று பல வாரங்கள் சிந்தித்த பின்னர் இதனை எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல “Dark Web” என்று ஓர் இணையம் உண்டு. ஆனால், திருட்டுத்தனமாக தடை செய்யப்பட்ட போதை மருந்து விற்பதற்கு மட்டும் இது இயங்குவதாகக் குறிப்பிட்டது தவறு. இந்த போதை மருந்து விற்பனை எந்த வகை இணையத்திலும் இருக்கலாம்.
இனி, “இருண்ட இணையம்” குறித்துப் பார்க்கலாம். இரண்டு வகையான இணையங்கள் உள்ளன. ஒன்று நாம் அனைவரும் தகவல் தேடும் இணையம். கூகுள் சர்ச் போன்ற தேடல் சாதனங்களால் இதனைத் தேடி நாம் தகவல்களைப் பெறுகிறோம். இன்னொரு இணையத்தின் பெயர் “deep web”. இதன் ஒரு பகுதியே நீங்கள் குறிப்பிட்டுள்ள Dark Web. கூகுள் அல்லது பிங் போன்ற தேடல் சாதனம் மூலம் தேடுகையில் இந்த இணையத்தில் உள்ளவை கிடைக்காது. அதற்கென தனியாக சாப்ட்வேர் அப்ளிகேஷன் மற்றும் அனுமதி வேண்டும். Tor என்ற இலவச சாப்ட்வேர் மூலம் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள இணைய தளங்கள் குறித்து தகவல் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இதனைப் பயன்படுத்தினால், வழக்கமான நம்முடைய இணையத் தேடலை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலாமல் மறைக்கலாம். இந்த இருண்ட இணையம் மூலம், சில நாடுகளில், அரசியல் கட்சிகளை எதிர்த்து குழப்பம் செய்பவர்கள் தனியே ரகசியமாகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட போதை மருந்து விற்பனை, Silk Road என்னும் இணைய தளம் மூலம் இந்த இருண்ட இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இது கள்ளச் சந்தைக்கென உருவாக்கப்பட்ட இணைய தளம். ஆனால், யாரும் எளிதில் அணுக முடியாது.
இதனால் நன்மை என ஏதாவது உண்டா? ஒரு நாட்டில் வாழும் மக்கள், அதன் அரசால் ஒடுக்கப்பட்டால், அவர்கள் இந்த இருண்ட இணையத்தை அணுகி தங்களின் இயலாமையை எடுத்துரைக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்க இயலும். ஆனால், இதனை அணுகாமல் இருப்பதே நலம். இல்லையேல் பலவகை சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.

கேள்வி: செல்லும் இடங்களில் எல்லாம் போட்டோ எடுத்து பதிந்து வைத்துக் கொள்வது என் பொழுது போக்கும். ஓரிடத்தில் எடுத்த போட்டோக்களை, கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கையில், கேமரா தரும் பெயரே பெரியதாக அமைக்கப்படுகிறது. இதற்குப் பதிலாகப் பெயரிட வேண்டும் என்றால், ஒவ்வொன்றாக பெயரிட வேண்டியதுள்ளது. அதற்குப் பதிலாக, அந்த பெயருடன் 1,2,3 என இணைத்துப் பெயரிட முடியுமா? அதற்கான வழி என்ன? நான் விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன்.
எஸ். சோமசுந்தரம், திருநகர், மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. டிஜிட்டல் கேமரா பயன்படுத்தும் பலருக்கு உதவும். இதோ அதற்கான வழிகள். பொதுவாக பைல் ஒன்றின் பெயரை மாற்ற, அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், 'Rename' என்பதைத் தேர்ந்தெடுத்து மாற்றுவோம். இந்த வேலையெல்லாம் மேற்கொள்ளாமல், F2 கீ அழுத்தினால், புதிய பெயர் அமைப்பதற்கு வழி காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களின் பெயர்களை மாற்றவும் இந்த எப்2 கீ பயன்படும்.
இதனை மேற்கொள்ள, முதலில், பெயர் மாற்ற வேண்டிய அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் எப்2 கீயை அழுத்தவும். இதன் பின்னர், பொதுவான பெயர் ஒன்றை அமைக்கவும். உங்களுடைய பிரச்னையில், எந்த ஊரில் எடுத்த போட்டோக்களை, அல்லது விழாவில் எடுத்த போட்டோ பைல்களின் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டுமோ, அந்த ஊரின் பெயர் அல்லது விழாவின் பெயரை (Madurai / My Bday) அமைக்கலாம். இதன் பின்னர், என்டர் கீ அழுத்தவும்.
இதனைச் செய்தவுடன், விண்டோஸ் சிஸ்டம், தானாகவே, நீங்கள் தேர்ந்தெடுத்த போட்டோக்களின் பைல் பெயர்களுடன், 1,2,3 என இணைத்துக் கொள்ளும். எடுத்துக் காட்டாக, Madurai1, Madurai2 என அமைக்கும். ஒவ்வொன்றாக வெவ்வேறு பெயரில் அமைக்க, அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுத்த பின்னர், பெயர் கொடுத்துவிட்டு, TAB கீ அழுத்தவும். உடன் அந்த பெயர் சேவ் செய்யப்பட்டு, அடுத்த பைல் புதிய பெயர் எடுத்துக் கொள்ள தயாராகும். ஏதேனும் ஒரு பைலை இது போல மாற்ற வேண்டாம் என எண்ணினால், இருமுறை டேப் கீ அழுத்தவும்.
இன்னொரு கொசுறு செய்தி விண்டோஸ் 10 குறித்து தரட்டுமா? புதிய போல்டர் ஒன்று உருவாக்க வேண்டுமா? CTRL+SHIFT+N என்ற கீகளை தொகுப்பாக அழுத்தவும். இது விண்டோஸ் 7 / 8 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களில் செயல்படும்.

கேள்வி: என் தங்கையின் படத்தை சிறிது மாற்றமே செய்து, அவரின் பெயரைப் போலவே தோற்றமளிக்கும் பெயரையும் பயன்படுத்தி ஒரு போலி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது. பல நண்பர்கள், இதனைச் சுட்டிக் காட்டுவது வேதனை அளிக்கிறது. இதனை எப்படி நீக்குவது? எங்கு இது குறித்து புகார் தரலாம்?
பெயர் வெளியிடாத வாசகர்
பதில்
: உங்கள் தர்மசங்கடமான நிலை புரிகிறது. சமூக இணைய தளங்களில் இது போன்ற குறுகிய மனம் படைத்தவர்கள் தற்போது நிறைய அதிகரித்துள்ளனர். போலியான பேஸ்புக் அக்கவுண்ட்டுகள் நிறைய உருவாக்கப்படுகின்றன. இது குறித்து குற்றச் சாட்டினை பேஸ்புக் தளத்திற்கே அனுப்பலாம். போலியான அக்கவுண்ட் என நீங்கள் கண்டு கொண்டுள்ள பக்கத்திற்குச் சென்று, அதன் profile பக்கத்தில், மூன்று புள்ளிகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். அப்போது ஒரு கீழ்விரி மெனு கிடைக்கும். இதில் Report என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் கட்டத்தில், Report this account என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பேஸ்புக் நிறுவனம் தங்களின் இந்த செய்தியை எடுத்துக் கொள்ளும். அந்த அக்கவுண்ட் குறித்து விசாரணை நடத்தும். நடவடிக்கை எடுக்க சிறிது காலம் ஆகும். அந்த பக்கத்தைத் தொடங்கியவருக்கு விசாரணை அஞ்சல் செல்லும். அவர் உஷாராகி, அந்தப்
பக்கத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடுவார். அல்லது, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததினால், பேஸ்புக் நிறுவனமே நிறுத்திவிடும். நீங்கள் காவல் துறையையும் நாடி, ஒரு புகார் அளிக்கலாம். சைபர் கிரைம் பிரிவினர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து, நீங்கள் புகார் செய்த, உங்கள் பகுதி காவல் நிலையத்திற்கு தகவலைத் தருவார்கள். உடனே தீர்வு கிடைக்காது. இருப்பினும் உங்கள் கவலை தீர்க்கப்படும். நம்பிக்கையுடன் இருங்கள்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X