கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2016
00:00

கேள்வி: என்னிடம் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர் ஒன்று உள்ளது. இதனை இன்னும் அப்டேட் செய்திடவில்லை. புதியதாக விண்டோஸ் 7 அல்லது உபுண்டு லினக்ஸ் உள்ள கம்ப்யூட்டர் வாங்க இருக்கிறேன். என்னுடைய கவலை என்னவென்றால், புதிய கம்ப்யூட்டரில், விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராம்கள் அனைத்தும் இயங்குமா? இல்லை எனில் என்ன செய்வது?
என். ரெஜினா ஜோசப், கரூர்.
பதில்
: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், உங்களுடைய பெரும்பாலான விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராம்கள் கட்டாயம் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் 7 ஆகிய இரண்டும் ஒரே வகை இயக்கத்தில் உருவானவையே. சில விஷயங்களில் தான் மாறுபட்டிருக்கும். முன்னதாக வந்த இயக்கத்தில் செயல்பட்ட புரோகிராம்களை இயக்கும் வகையிலேயே, விண்டோஸ் 7 புரோகிராம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் இதனை “backward compatibility” எனக் கூறுவார்கள். ஒரு சில புரோகிராம்கள் மட்டுமே இயங்காமல் இருக்கும். இதனைச் சரி செய்திட இன்னொரு வழியும் உண்டு. இயங்காத புரோகிராம்களை, இணைவான நிலையில் (Compatibility Mode) இயங்கச் செய்வது. புரோகிராமின் மேல், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Troubleshoot Compatibility Mode' என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், அந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். ஆனால், இந்த வழி அனைத்து புரோகிராம்களிலும் செயல்படாது. ஆனால், இவை ஒரு சில புரோகிராம்களாகத்தான் இருக்கும். நான் முன்னாளில் இது போல எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் விஸ்டாவிற்கும், விஸ்டாவிலிருந்து விண்டோஸ் 7க்கும் மாறியபோது, நான் பயன்படுத்திய அனைத்து புரோகிராம்களும் செயல்பட்டன.
உபுண்டு லினக்ஸ் சிஸ்டத்தைப் பொறுத்தவரை அது வேறு கதையாகும். உங்களுடைய விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராம் அதில் இயங்காது. ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் புரோகிராம் போலவே செயல்படும் பல புரோகிராம்கள், உபுண்டு லினக்ஸில் இயங்கும் வகையில் நிறைய கிடைக்க்கும். அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். அவற்றை https://help.ubuntu.com/community/SoftwareAlphabeticIndex, என்ற தளத்தில் காணலாம். ஆனால், விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராம்களை இயக்கிப் பார்க்க வேண்டாம். உங்களுக்கு இன்னொரு பரிந்துரை சொல்லட்டுமா? விண்டோஸ் 7 / 8 / ஆகிய சிஸ்டங்களைக் கொண்ட கம்ப்யூட்டர் வாங்குவதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரை வாங்கவும். இதற்கான சப்போர்ட் இன்னும் பல ஆண்டுகளுக்கு மைக்ரோசாப்ட் வழங்கும். மேலும், பழைய விண்டோஸ் இயக்க புரோகிராம்களுக்கு, இதில் செயல் இணைவு கிடைக்கும்.

கேள்வி: எக்ஸெல் புரோகிராமினைத் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். தமிழில் நிறைய சொற்களை இதில் டைப் செய்கிறேன். திறக்கும்போதே, தமிழ் எழுத்துருவில் திறக்க இயலவில்லை. ஒவ்வொரு முறையும் மாற்ற வேண்டியதுள்ளது. நிலையாக தமிழ் எழுத்துரு கிடைக்கும் வகையில் மாற்ற என்ன செய்திட வேண்டும்?
கே.நிர்மலா, திருப்பூர்.
பதில்:
விண்டோஸ் இயக்கத்தில், எக்ஸெல் புரோகிராம் மிக அழகான Calibri என்னும் எழுத்துருவினை மாறா நிலையில் வைத்துள்ளது. தமிழ் எழுத்துருவினை எப்போதும் மாறா நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள். இதற்கான செயல்முறைகளைக் கீழே தருகிறேன். முதலில் ஆபீஸ் பட்டனில் (File) கிளிக் செய்திடவும். தொடர்ந்து Excel Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும். இங்கு Popular என்ற பிரிவு காட்டப்பட வேண்டும். இதில் When creating new workbooks என்ற பகுதியில், Use this font என்ற பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துருவினை (நீங்கள் விரும்பும் தமிழ் எழுத்துருவினை) தேர்ந்தெடுக்கவும். கீழாக உள்ள எழுத்துரு அளவில், எழுத்தின் அளவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் உருவாக்கும் புதிய ஒர்க்புக்குகளில் மட்டுமே இந்த எழுத்துரு மாறா நிலையில் கிடைக்கும். ஏற்கனவே உருவாக்கிய ஒர்க் புக்குகள், அதே பழைய எழுத்துருவுடன் தான் திறக்கப்படும். இந்த மாற்றத்தினை செயல்படுத்த, நீங்கள் எக்ஸெல் புரோகிராமினை மூடி, வெளியேறி, பின் மீண்டும் திறக்க வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 7 என் லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்குகிறது. இதில் திடீர் திடீரென, யு.எஸ்.பி. போர்ட் 'not recognized' என்று வருகிறது. சில வேளைகளில் இயங்குகின்றன. சில வேளைகளில், இருக்கும் நான்கு போர்ட்களில், ஒன்று மட்டும் இயங்குகிறது. இதனை எப்படி சரி செய்வது? பிரச்னைக்குக் காரணம் என்ன?
கே.எம். சகாதேவன், காரைக்கால்.
பதில்:
சில வேளைகளில், நம் கம்ப்யூட்டர்களில், “USB Device Not Recognized.” போன்ற செய்தி நமக்குக் கிடைக்கும். மவுஸ், கீ போர்ட் அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றை இயக்க, யு.எஸ்.பி. போர்ட்களை நம்பி இருப்பவர்களுக்கு, இது ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். இந்த செய்தி கிடைத்தவுடன், செயல்படும் புரோகிராம்களை சேவ் செய்து மூடிவிட்டு, கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தி இணைப்பினைத் துண்டிக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து, மீண்டும் மின் இணைப்பை ஏற்படுத்தி, கம்ப்யூட்டரை இயக்கவும். இப்போது யு.எஸ்.பி. போர்ட் செயல்படுகிறதா எனப் பார்க்கவும். இல்லை எனில், யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும், இணைப்பிலிருந்து நீக்கிவிடவும். நீக்குவதற்கு அந்த சாதனத்தின் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, 'Disconnect' என்பதில் கிளிக் செய்து நீக்கவும். நீக்கிய பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன், இந்த சாதனங்களை, யு.எஸ்.பி.போர்ட்டில் இணைக்கவும்.
இப்போதும் சரியாகவில்லை என்றால், உங்கள் விண்டோஸ் இயக்கத்திற்கான அப்டேட் பைல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துள்ளீர்களா எனச் சோதனை செய்திடவும். இதற்கு, ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து “Windows Update” என தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பதில்களில், “Check for Updates” என்பதில் கிளிக் செய்திடவும். ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் காட்டப்பட்டால், அவற்றைத் தரவிறக்கம் செய்து, மேம்படுத்திக் கொள்ளவும்.
உங்களுடைய டிவைஸ் ட்ரைவர் பைல்களையும் அப்டேட் செய்திட வேண்டும். இதற்கு “Device Manager” செல்லவும். இதனையும் தேடல் கட்டத்தில் தேடுவதன் மூலம் பெறலாம். இதனைப் பெற்று, திறந்து பார்க்கவும். இதில் செயல்படாத யு.எஸ்.பி. போர்ட் மீது மஞ்சள் நிறத்தில் சிறிய குறியீடு ஒன்று காட்டப்படும். இது குறிப்பிட்ட அந்த ட்ரைவ் “கெட்டுப் போய் உள்ளதைக் குறிக்கிறது. அதனால் தான், அந்த குறிப்பிட்ட போர்ட் “Unknown Device” என்று காட்டப்படுகிறது. இதனை ஒருமுறை “Disable” செய்து, பின்னர், “Enable” செய்தால், மீண்டும் இயங்கலாம். அல்லது “Properties” என்பதில் கிளிக் செய்து, Driver என்னும் டேப் மீது “Update Driver” என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்திடவும்.மேலே தரப்பட்டுள்ள பல வழிகளில் ஏதேனும் ஒன்றில் நிச்சயம் சரி ஆகிவிடும்.

கேள்வி: என் சாம்சங் போனில் எழுத்துகள் மிகச் சிறியதாக இருப்பதால், என்னால் படிக்க இயலவில்லை. கம்ப்யூட்டரில் உள்ளது போல, இதனைப் பெரியதாக ஆக்கிப் படிப்பது எப்படி? வழி காட்டவும்.
ஆ. செல்வராணி, திருபுவனம்.
பதில்:
பல அளவுகளிள் எழுத்தை அமைக்க சாம்சங் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் வழி தரப்பட்டுள்ளது. இந்த வழிகள், ஒரு சில போன் மாடல்களில் மாறுபட்டு இருக்கலாம். நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையின் பதிப்பினைப் பொறுத்தும் மாறுபடலாம். எனினும், எளிதாகக் கண்டறிந்து மாற்றிவிடலாம். கீழ்க்குறித்தபடி செயல்படவும். செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். இது ஒரு கியர் படம் போல இருக்கும். பொதுவாக, திரையில் மேலிருந்து கீழாக விரலால் இழுத்தால் இது வலது புறமாக இருக்கும். இது ஐகானாகவும் திரையில் கிடைக்கும். இதனைத் தட்டி மெனு பெறவும்.
Settings திரையில், Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Vision என்ற பிரிவில் கீழாகச் சென்றால், Font size என்ற இடத்தில் தட்டவும். இங்கு சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையில் எழுத்தினை அமைத்துக் கொள்ளலாம். உடன் திரையில் எழுத்துகள் நீங்கள் வைத்துள்ள அளவில் காட்டப்படுவதனைக் காணலாம். இதனை எந்த நேரத்திலும் மீண்டும் சென்று மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் மாற்றப்பட்ட எழுத்தின் அளவு, அமைக்கப்பட்ட வகையில் இருக்கும். இதில் இயங்கும் அப்ளிகேஷன்களில் எழுத்தின் அளவை மாற்ற, அந்த அப்ளிகேஷனிலேயே வழி இருக்கும். அதனைப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களாக, விண்டோஸ் அப்டேட் எதனையும் செய்திடவில்லை. மைக்ரோசாப்ட் இதற்கான அப்டேட் பைல்களை அடிக்கடி வெளியிட்டு வருவதாக அறிந்தேன். இப்போது அப்டேட் செய்தால், இறுதியாக வெளியிடப்பட்ட அப்டேட் பைல் மட்டும் அப்டேட் ஆகுமா? முந்தைய அப்டேட் பைல்களை இறக்கிப் பதியாததால், புதிய அப்டேட் பைல் கிடைக்காதா? உங்கள் விளக்கம் பார்த்த பின்னரே, நான் அப்டேட் செய்திட வேண்டும்.
எஸ். ஆனந்தராஜ், தூத்துக்குடி.
பதில்:
அப்டேட் பைல்களை வெளியிடுவதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய கொள்கை ஒன்றைக் கடைப்பிடிக்கிறது. முன்பு நீங்கள் கூறுவது போல், அவ்வப்போது வெளியிட்ட அப்டேட் பைல்கள், அதன் இணையதளத்தில் இருக்கும். ஒரு கம்ப்யூட்டரில் இல்லாத ஒன்றை, பின் நாளில் வெளியிட்டதில் இருந்து வரிசையாகத் தரவிறக்கம் செய்து அப்டேட் செய்யப்படும். ஆனால், இப்போது ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் பாதுகாப்பு சார்ந்த அப்டேட் பைல்களில், அதற்கு முன் வெளியான அப்டேட் பைல்கள் தரும் மாற்றங்களும் இணைந்தே தரப்படும். எனவே, அண்மைக் காலத்தில் வெளியான அப்டேட் பைல்களில், முந்தைய அப்டேட் பைல்களின் அம்சங்களும் அடங்கியிருக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்வதற்கான செட்டிங்ஸ் அமைத்துவிட்டு, நீங்கள் பாட்டுக்கு ஹாயாக அமருங்கள். தானாகவே, அனைத்தும் அப்டேட் செய்யப்படும்.
மைக்ரோசாப்ட் தான் தரும் அப்டேட் பைல்கள் அனைத்தும், பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. அனைத்து விண்டோஸ் இயக்கப் பயனாளர்களும், ஒரே மாதிரியான இயக்க முறைமையைக் கொண்டிருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில், ஒரு குறிப்பிட்ட பாராவினை மட்டும் பார்டர் கட்டம் கட்டி காட்ட முடியுமா? முழுப் பக்கமும் கட்டம் கட்டப்படக் கூடாது. இதனை மேற்கொள்ள இயலவில்லை. வழி காட்டவும்.
ஆர். சுதந்திர ராஜ், தஞ்சாவூர்.
பதில்:
மற்ற வேர்ட் புரோகிராம்களைக் காட்டிலும், வேர்ட் மட்டுமே, குறிப்பிட்ட பகுதிகளில், கட்டம் கட்டும் வசதியைத் தருகிறது. பாரா ஒன்றில் முழுமையாகவோ, அல்லது நான்கு பகுதிகளில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமோ, கட்டத்தினை அமைக்க முடியும். இதற்கு கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றவும்.
1. முதலில், டாகுமெண்ட்டினைத் திறந்து எந்த பாராவினைச் சுற்றி கட்டம் அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.
2. அடுத்து Paragraph பிரிவில், கீழாக இறுதியாகத் தரப்பட்டிருக்கும் கட்டம் ஐகானாகக் கொண்ட இடத்தில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் மெனுவில் கீழாக, இறுதியில் 'Borders and Shading' என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இப்போது 'Borders and Shading' டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இங்கு பலவிதமான பார்டர் கோடு, முப்பரிமாண (3-D) பார்டர் எனப் பலவகை ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். நீங்கள் விரும்புபவதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. பின்னர், Paragraph என்ற பிரிவில், Options என்பதில் கிளிக் செய்தால், பாராவைச் சுற்றி அமைக்கப்படும் கட்டம், ஒவ்வொரு பக்கத்திலும், டெக்ஸ்ட்டிலிருந்து எவ்வளவு தள்ளி அமைக்கப்பட வேண்டும் என ஆப்ஷன் அமைக்கலாம்.
6. இவற்றை அமைத்துவிட்டு, வரிசையாக ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இவ்வாறு அமைத்தவற்றை மொத்தமாக நீக்க வேண்டும் என்றால், அந்த பாராவினைத் தேர்ந்தெடுத்து, Borders and Shade என்ற பிரிவில் None என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் போதும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X