கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 8.1 பதிக்கப்பட்டுள்ள டேப்ளட் பி.சி. ஒன்றை வாங்கியுள்ளேன். இதற்கென தனியே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மால்வேர் பாதுகாப்பு புரோகிராம் தேவையா? அல்லது விண்டோஸ் இயக்கத்துடன் தரப்பட்ட விண்டோஸ் டிபண்டர் போதுமா? வேறு ஒரு பாதுகாப்பு புரோகிராம் தேவை எனில், அதனை எப்படி இன்ஸ்டால் செய்வது?
ஆர். கரிகாலன், மயிலாடுதுறை.
பதில்:
நீங்கள் குறிப்பிட்ட விண்டோஸ் டிபண்டர் புரோகிராமுடன், MalwareBytes என்னும் புரோகிராமும் தரப்படுகிறது. இவை இரண்டும் இணைந்து உங்கள் டேப்ளட் பி.சி.யினை, மால்வேர் மற்றும் வைரஸ்களிடமிருந்து காப்பாற்றும். தர்ட் பார்ட்டி ஆண்டி வைரஸ் புரோகிராம்களையும் இன்ஸ்டால்
செய்திடலாம். உங்கள் டேப்ளட் பி.சி. வழியாக, நார்டன் போன்ற ஆண்டி வைரஸ் புரோகிராம் தரும் நிறுவனங்களின் இணைய தளம் சென்று, இலவச புரோகிராமினையோ, கட்டணம் செலுத்திக் கிடைக்கும் புரோகிராமினையோ, பெற்று இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: நான் கூகுள் தேடல் மூலம், பல ஆடியோ மற்றும் விடியோ பைல்களை டவுண்லோட் செய்கிறேன். நான் தான் அதற்குப் பெயர் அளிக்கிறேன். ஆனால், சில பைல்களின் பெயரோடு, .crdownload என்னும் பெயர் இணைந்த பைல்கள் சில உள்ளன. இவை எதனைக் குறிக்கின்றன. இவ்வாறு அமைந்தவற்றை இயக்க முற்பட்டால், செயலற்றுப் போய் இருக்கின்றன. இவை கரப்ட் பைலா? அல்லது, டவுண்லோட் செய்யக் கூடாத பைலா?
உ. இளமாறன், திருநெல்வேலி.
பதில்:
குரோம் பிரவுசர் மூலம் நீங்கள் ஒரு பைலைத் தரவிறக்கம் செய்தால், அந்த பைல் முதலில், நீங்கள் குறிப்பிட்டுள்ள .crdownload என்ற துணைப் பெயருடன் இறக்கப்படும். இறக்கப்பட்டு முடித்தவுடன், நீங்கள் அளித்துள்ள பெயரினை முழுமையாகக் கொண்டு பைல், குறிப்பிட்ட போல்டரில் அமர்ந்துவிடும். பைல் தரவிறக்கம் செய்வது, இடையே நிறுத்தப்பட்டாலோ, அல்லது வேறு பிரச்னைகளால் நின்று போனாலோ, அந்த பைல் இந்த இடைக்காலப் பெயருடன் நின்றுவிடும். இது முழுமையானது இல்லை என்பதால், அதனை இயக்கத் தொடங்கினால், அது எந்தவித தகவலையும் தராமல் முடங்கும். இந்த பைல்களை அழித்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தரவிறக்கம் செய்வதே நல்லது.

கேள்வி: யு.எஸ்.பி. 3 மற்றும் 4 என பலமுறை படிக்கிறேன். இவற்றிற்கு இடையே வேறுபாடு உள்ளதா? முதல் முதலில் யு.எஸ்.பி. எப்போது அறிமுகமானது? என்னிடம் உள்ள பழைய ப்ளாஷ் ட்ரைவ்கள், புதிய வகை யு.எஸ்.பி. போர்ட்களில் பயன்படுத்த முடியுமா?
ஆர். கிருஷ்ணன், அறந்தாங்கி.
பதில்
: நல்ல கேள்வி. பழைய ப்ளாஷ் ட்ரைவ்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் தான், புதிய யு.எஸ்.பி. தர வகைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் முதலில், யு.எஸ்.பி.1.1: ஆகஸ்ட், 1988ல் வெளியானது. எல்லாரும் பயன்படுத்திய முதல் யு.எஸ்.பி. பதிப்பு இதுதான். இதற்கு முன் வந்த யு.எஸ்.பி.1, நுகர்வோர் சாதனங்களில் இடம் பெறவே இல்லை. இதன் அதிகபட்ச வேகம் 12Mbps. இப்போது இது வழக்கத்தில் இல்லை. யு.எஸ்.பி. வகை 2, 2,000 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகம் 480Mbps. இதன் அதிக பட்ச மின் சக்தி பரிமாறும் திறன் 2.5V, 1.8A ஆகும். நவம்பர், 2008ல், யு.எஸ்.பி. 3 அறிமுகமானது. இதன் டேட்டா பரிமாற்ற வேகம் 5Gbps ஆக உள்ளது. யு.எஸ்.பி. 3 போர்ட் (கனக்டரும் கூட) பொதுவாக நீல நிறத்தில் இருக்கும். யு.எஸ்.பி. 3.1: 2013 ஆம் ஆண்டில், ஜூலை 16ல் வெளியானது. இது யு.எஸ்.பி. 3 பதிப்பின் வேகத்தைக் காட்டிலும் இரு மடங்கு வேகத்தில் (10Gbps) இயங்குகிறது. இதனை இப்போது SuperSpeed USB 10 Gbps எனவும் அழைக்கின்றனர். யு.எஸ்.பி. டைப் சி: இதன் போர்ட் மற்றும் கனக்டர், மைக்ரோ பி யு.எஸ்.பி.யில் உள்ளது போலவே உள்ளன. Type- C போர்ட் அளவு 8.4 மிமீ x 2.6 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மிகச் சிறிய அளவிலான சாதனங்களுடனும் இது இயங்கக் கூடியதாக உள்ளது. இதன் இன்னொரு அம்சம், இதனை எப்படி வேண்டுமானாலும், சாதனத்துடன் இணைக்கலாம். தற்போதைய யு.எஸ்.பி. ப்ளக்கினை இணைக்கையில், நம்மில் பெரும்பாலோர், அதனை மாற்றி வைத்து இணைக்க முயற்சி செய்து, பின் தலை மாற்றி, சரியாக போர்ட்டில் இணைப்போம். புதிய யு.எஸ்.பி. 4 வகையில், எப்படி வேண்டுமானாலும் இணைக்கலாம். இதுதான் சரியான இணைக்கும் பக்கம் என்று ஒன்று இல்லை. லைட்னிங் கனக்டர் என அழைக்கப்படும் ஆப்பிள் நிறுவன இணைப்புகள் போல, இந்த புதிய வகை வடிவமைக்கப்படுகிறது.

கேள்வி: ப்ளாஷ் ட்ரைவ் கார்ட் (எஸ்.டி மெமரி கார்ட்) அளவில் மிக அதிகம் எவ்வளவு? என் நண்பர் ஒரு டெரா பைட் என்று கூறுகிறார். இது உண்மையாக இருக்காது என்றே கருதுகிறேன். அப்படி இருந்தால், அதிக பட்ச அளவில் இதுவரை வந்துள்ள கார்ட் குறித்து கூறவும்.
என். கோகுல் தாஸ், மதுரை.
பதில்:
உங்கள் நண்பர் கூறுவது சரியே. இத்தகைய கார்ட்களை வடிவமைத்து வெளியிடுவதில் முன்னணியில் இயங்கும், வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷன் நிறுவனம், தன் சான் டிஸ்க் (San Disk) ப்ளாஷ் ட்ரைவ் கார்ட் ஒன்றை, ஒரு டெரா பைட் கொள்ளளவு கொண்டதாக (1TB SDXC card) அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகமாக போட்டோ மற்றும் விடியோ பைல்களை உருவாக்குபவர்களுக்கு இந்த கார்ட் மிகவும் உதவியாக இருக்கும்.
வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷன் நிறுவனம் முதன் முதலில் (2000) வெளியிட்ட சான் டிஸ்க் ப்ளாஷ் ட்ரைவ் கார்ட் கொள்ளளவு 64 எம்.பி. மட்டுமே. அப்போது வெளியான கம்ப்யூட்டர் பைல்களின் அளவின் அடிப்படையில், அதுவே போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது அதிக ரெசல்யூசன் கொண்ட கிராபிக்ஸ் பைல்கள், விடியோ (4கே / 8 கே) பைல்களின் அளவு உயர்ந்து கொண்டே போவதால், 1 டெரா பைட் தேவையாய் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள கார்ட், முதன் முதலாக இந்நிறுவனம் வெளியிட்ட கார்டின் அளவைக் காட்டிலும் 16,000 மடங்கு அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷன் நிறுவனம், “தொடர்ந்து புதிய கார்ட்களை வடிவமைத்து, இமேஜ் உருவாக்கும் செயல்பாடுகளுக்குத் துணையாய் இருப்பதே எங்களின் இலக்கு” என்று 1 டெரா பைட் அளவிலான கார்டை அறிமுகப்படுத்துகையில் அறிவித்துள்ளது.
செப்டம்பரில் காட்டப்பட்ட இந்த கார்ட் இன்னும் விற்பனைக்கென அறிமுகம் செய்யப்படவில்லை. அப்போதுதான் இதன் விலை தெரியவரும். தற்போது அதன் 512 ஜி.பி. அளவிலான கார்ட் (2014ல் வெளியான போது அதுவே அதிகக் கொள்ளளவு) 346 அமெரிக்க டாலர் என்ற அளவில் விற்பனையாகிறது.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் என் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் இயங்குகிறது. கம்ப்யூட்டருடன் பிரிண்டர், விடியோ கார்ட், மானிட்டர் என துணை சாதனங்கள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் செயலிகளுக்கு மட்டும் அப்டேட் செய்திடுமா? அல்லது, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனத்திற்கான ட்ரைவர் பைல்களையும் அப்டேட் செய்திடுமா? செய்திடும் என்றால், விண்டோஸ் இயக்கத்தை எப்படி, அப்டேட் ட்ரைவர் பைல்களைத் தேடி, அப்டேட் செய்திட வைப்பது?
எம். கே. கரன் சந்திரன், மதுரை.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டம், உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் இயக்கத்திற்கான ட்ரைவர் பைல்களையும் மேம்படுத்தும். நீங்கள் இந்த மேம்படுத்தலுக்கான அப்டேட் பைல்களை எப்படி, இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட அனுமதி தந்து செட் அப் செய்திட்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்று கண்டறிய கீழ்க்கண்டபடி செயல்படவும்.
தேடல் கட்டத்தில், Device Manager என்று டைப் செய்து, கிடைக்கும் பதில்களில், முதலாவதாக உள்ளதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சாதனங்கள் பட்டியலில், நீங்கள் சோதனை செய்திட விரும்பும் சாதனத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் முன் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தி விரிக்கவும். கிடைக்கும் மெனுவில் Update Driver Software என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் கம்ப்யூட்டர் எந்த வகையில் ட்ரைவர் அப்டேட் பைல்களைத் தேட வேண்டும் என்பதனை வரையறை செய்திடவும். இணையத்தில் தேடுமாறு அமைத்துவிட்டால், கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து, கம்ப்யூட்டருக்குத் தரவிறக்கம் செய்து தானாகவே, அப்டேட் செய்துவிடும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதற்கு இன்னும் எனக்குத் தயக்கமாய் உள்ளது. என்னுடைய டாகுமெண்ட் பைல்கள், அதில் திறக்கப்படுமா? அல்லது சிக்கல்கள் இருக்குமா? நான் தற்போது பயன்படுத்தும் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் டாகுமெண்ட் பைல்களைப் பயன்படுத்துவதில் எந்த பிரச்னையுமில்லை.
ஆர். நந்தீஸ்வரன், விழுப்புரம்.
பதில்
: ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் திட்டமிடுகையில், இது போன்ற தயக்கங்களும் சந்தேகங்களும் தோன்றுவது இயற்கையே. நீங்கள் குறிப்பிடும் டாகுமெண்ட் பைல் என்பது, வேர்ட் அல்லது வேர்ட் பேட் ஆகிய செயலிகளில் தயாரிக்கப்பட்ட பைல்கள் எனில், விண்டோஸ் 10 இயக்க முறைமையில், இவற்றை இயக்குவதில் எந்த பிரச்னையும் ஏற்படாது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், வேர்ட் பேட் (Word Pad) இணைக்கப்பட்டுள்ளது. இதில் டாகுமெண்ட் பைல்களான text (.txt), rich text (.rtf), Word documents (.docx), மற்றும் OpenDocument (.odt) ஆகிய பைல்களைத் தாராளமாகத் திறந்து பயன்படுத்தலாம். இவை மட்டுமின்றி, வேர்ட் .docm, .dot, .dotm, .dotx, .html, .mhtml, .pdf, ,wps, .xml மற்றும் .xps ஆகிய பார்மட்களில் உள்ள பைல்களையும் திறந்து படிக்கும். நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதிலிருந்து விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்தால், அதில் இயங்கிக் கொண்டிருந்த வேர்ட் செயலி, விண் 10 சிஸ்டத்திலும் செயல்படும். அவற்றிற்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.
மேலும், LibreOffice என்ற இலவசமாகக் கிடைக்கும் வேர்ட் ப்ராசசர், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் செயல்படும். இந்த வேர்ட் ப்ராசசர் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் பிற வேர்ட் ப்ராசசர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து பைல்களையும் திறக்கவும் எடிட் செய்திடவும் வழிகளைத் தருகிறது. இதே போன்ற இன்னொரு இலவச வேர்ட் ப்ராசசர் Open Office. இதுவும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நன்றாக இயங்கும். எந்தவிதமான டாகுமெண்ட் பைலையும் இதில் திறந்து இயக்கலாம்.

கேள்வி: கூகுள் ஸ்ட்ரீட் வியூ தேடிப் பார்க்கும் போது அமெரிக்க ஐரோப்பிய நகரங்களின் காட்சி கிடைக்கிறது. இதன் மூலம் சில சுற்றுலா தளங்களை நன்றாகக் காண முடிகிறது. ஆனால், இந்திய நகரங்கள் குறித்த காட்சிக்கு தேடினால் கிடைக்கவில்லை. இந்தியாவை குறி வைத்து பல திட்டங்களை மேற்கொண்டுள்ள கூகுள் ஏன் இந்த வசதியைத் தரவில்லை? அல்லது தந்து வருகின்றதா?
என். மஞ்சுளா குமார், திருச்சி.

பதில்: நீங்கள் கூறுவது சரியே. கூகுள் Street View எனப்படும் வசதியைத் தர, பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அரசு மறுத்துவிட்டது. இதன் மூலம் இந்திய நகரங்கள், சுற்றுலா தளங்கள், மலைகள், அருவிகள் மற்றும் முக்கிய இடங்களை நாம் நம் கம்ப்யூட்டர் வழியாகப் பார்க்க இயலும்.
ஆனால், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இந்தியாவிற்கு இருப்பதால், இதனை முற்றிலுமாக அரசு மறுத்துவிட்டது. 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பு, தாக்குதல் நடந்த இடங்கள் குறித்த போட்டோக்களே தீவிரவாதிகளுக்கு உதவின என்று கண்டறியப்பட்டதால், இந்த தடையை கூகுள் நிறுவனத்திற்கு அரசு விதித்துள்ளது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X