கேள்வி - பதில் | நலம் | Health | tamil weekly supplements
கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2016
00:00

என் வயது, 68. சிறு வயதிலிருந்தே காது கேளாத குறைபாடு உள்ளது; ஆனால் நான் ஊமையல்ல! தற்போது, கடந்த சில ஆண்டுகளாக வலது காதில் மட்டும், சங்கு ஊதுவது போல சப்தம், 24 மணி நேரமும் கேட்கிறது. இரவில் நிம்மதியான துாக்கம் இல்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லவும்.
கே.பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி

காதுகளில் தொடர்ந்து சத்தம் வருவதற்கு, 'டின்னிடஸ்' (Tinnitus) என்று பெயர். இது ஒரு முறை வந்தால், தொடர்ந்து, பல காலம் சம்பந்தப்பட்டவரை தொல்லையில் ஆழ்த்தும். இதற்கு காரணம், குறிப்பிட்ட அந்தக் காதில் இருக்கும் கேட்கும் திறனுக்கான நரம்புகள் பலவீனமாக இருக்கலாம். இதனாலேயே காது கேளாமை பிரச்னை இருக்கலாம் (Sensory Neural Hearing Loss). இதுதான் துாங்கும் நேரத்திலும், ஏதாவது வேலையில் இருக்கும் சமயத்திலும், தொந்தரவைக் கொடுக்கிறது. முழுமையாக என்ன பிரச்னை என்பதைப் புரிந்து கொண்டு, சிசிச்சை தர வேண்டும் என்றால், பியுர்டோன் ஆடியோகிராம் (Puretone Audiogram), இம்ப்பெடன்ஸ் ஆடியோமெட்ரி (Impedance Audiometry), டின்னிடோகிராம் (Tinnitogram), போன்ற பரிசோதனை செய்ய வேண்டும்.
அதற்கேற்ப சிகிச்சையும் தரலாம். சில சமயங்களில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பதும் அவசியம். மூளை அல்லது உள்காதில், குறிப்பாக, கேட்கும் நரம்பில் ஏதாவது கட்டி இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும். உங்களுக்கு இந்தப் பிரச்னை நீண்ட நாட்களாக இருக்கிறது. எனவே இன்னும் தாமதிக்காமல், ஒரு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் ஆலோசனையை நேரில் பெற்று, தேவையான மருத்துவ சிகிச்சையை செய்து கொள்ளுங்கள்.

நான் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவன். மூக்குப் பொடி போடுவதால், காது கேட்கும் திறன், பார்வைக் கோளாறு, மூளை பாதிப்பு வர வாய்ப்புள்ளதா? இந்தப் பழக்கத்தை எப்படி விட்டு விடுவது என, தெரியவில்லை. தயவு செய்து எனக்கு ஆலோசனை தரவும்.
கோபால், வடகரை, தேனி.
மூக்குப் பொடி, மூக்கில் உள்ள மென்மையான சவ்வை (Nasal Mucous Membrane) பாதிப்பதோடு, நுகரும் உணர்வு நரம்புகளையும் பாதிக்கும். மூக்குப் பொடியிலும் நிக்கோடின் உள்ளதால், இது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசத்தை அதிகரிக்கும். சிகரெட் பழக்கம் இருப்பவர்களை ஒப்பிடும்போது, மூக்குப் பொடியால் பாதிப்பு சற்று குறைவு. அவ்வளவு தான். மூக்குப் பொடி, மூக்கின் உள் பக்கத்தில் ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தும். எரிச்சல், மூக்கிலிருந்து நீர் வடிவதுகூட ஏற்படலாம். மூக்கில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. நீங்கள் உடனடியாக, ஒரு மனநல மருத்துவரை சந்தித்து, இந்த பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்களில், இதற்கான ஆலோசனை தருவர். அதையும் முயற்சிக்கலாம்.

டாக்டர் எஸ். கோவிந்தராஜ்
காது, மூக்கு, தொண்டை நிபுணர், அப்போலோ மருத்துவமனை, வானகரம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X