நெருப்புக் கோட்டை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

சென்றவாரம்: மகேந்திரவர்மனின் விருந்து மண்டபத்தில் ஒரு வினோத பறவை வந்து, 'நெருப்புக் கோட்டை மன்னன், நீல வண்ணனுடன் போட்டியிட தகுதியில்லாதவர்கள் இப்படி கொட்டமடிக்க வெட்கமாக இல்லையா...' என்று கேட்டது. இனி -

''கையாலாகாதவர்களே! கோழைகளே! நீல வண்ணனை வெற்றிபெற்று, அழகி அம்பிகாவை கவர்ந்து வரும் துணிவில்லாத உங்களுக்கு விருந்தும், கேளிக்கையும் ஏன்...'' சிறகு கொட்டிச் சிரித்தது பறவை.
அந்தச் சின்னப் பறவையின் கேலிச் சிரிப்பைக் கேட்டு, விருந்து மண்டபத்தில் கூடியிருந்த அரசர்களின் முகமெல்லாம் தொங்கிப் போயிற்று. பல மன்னர்கள் நெருப்புக் கோட்டை மீது படையெடுத்துப் போய் அழிந்து போனது அவர்களுக்கு தெரியும்.
நீலவண்ணனை வெல்ல வீரம் மட்டும் போதாது என்பதை அவர்கள் அறிவர். அவன் பெரிய மாயாவி; மந்திர தந்திரங்களில் வல்லவன். அவனை வென்று, மகள் அம்பிகாவை அடைவதென்பது, குருடனை ராஜபார்வை பார்க்கச் சொல்லுவதற்கு ஒப்பாகும்!
அவமானத்திற்காளான அத்தனை பேரின் மவுனம், போலி இளவரசனைப் பொங்கி எழச் செய்தது.
''ஏதோ ஒரு பறவை என்னவோ சொல்லி விட்டது என்பதற்காகவா இத்தனை பேரும் இப்படித் துவண்டுவிட்டீர்கள்... இது ஏதோ மந்திரக்காரனின் சூழ்ச்சி. தன் நிழலைப் பார்த்துத் தானே பயந்து போவதா என்ன...'' என்று குதித்தான் மொட்டைத்தலையன்.
வக்கணை பேசும் மொட்டைத் தலையனின் பேச்சு, இளங்குமரனுக்கு சிரிப்பை உண்டாக்கியது.
'இவனே ஒரு போலி இளவரசன். இவன் மற்றவர்களைப் பார்த்துக் கேலி பேசுகிறானே!' என்ற நினைப்பில், தன் நிலை மறந்து சிரித்துவிட்டான்.
வந்தது ஆபத்து! தன் அடிமையின் சிரிப்பு அவன் ஆத்திரத்தைக் கிளறியது.
''ஓஹோ! உனக்குக் கேலியாக இருக்கிறதோ... அவையோர்களே! அருமை விருந்தாளி அரசர்களே! நெருப்புக்கோட்டை மன்னன் நீலவண்ணனை எண்ணி நீங்கள் இனி கலங்க வேண்டாம்.
''அவனை வெற்றி பெற்று, அவன் மகளையும் கட்டி இழுத்து வர என்னால் முடியும்! ஆனால், இந்தச் சிறிய காரியத்தில் என் வீரியத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. இதை என் அடிமையே முடித்து விடுவான்,'' என்று அறிவித்தான்.
''நீ இந்த நிமிடமே நெருப்புக் கோட்டைக்கு புறப்பட்டு, நீலவண்ணனிடமிருந்து அவன் மகள் அம்பிகாவை சிறை பிடித்து, ஒப்படைக்க வேண்டியது உன் பொறுப்பு. தோல்வியோடு திரும்பினால், உன் தலை இங்கு தரையில் உருளும் போ!'' என்று அடிமை இளங்குமரனை பார்த்து ஆணையிட்டான் மொட்டைத்தலையன்.
தன் துரதிர்ஷ்டத்தை, தான் சிரித்த தவறை எண்ணி நொந்தபடியே குதிரை லாயத்தை நோக்கி நடந்தான் இளங்குமரன்.
தடுமாறி வரும் இளவரசனைத் தூரத்தில் கண்டதுமே, இளங்குமரனை கொல்ல, ஏதோ புதிய சூழ்ச்சி செய்திருக்கிறான் மோசக்கார மொட்டைத் தலையன் என்று நிலைமையை ஊகித்து விட்டது மின்னல் வீரன்.
தன் அருமை நண்பனான மின்னல் வீரனிடம் வந்த இளங்குமரன், ''தோழா அந்த வேஷக்காரன் என்னை மற்றுமொரு சிக்கலில் ஈடுபடுத்தியிருக்கிறான்...'' என்று நெருப்புக் கோட்டை மன்னனையும், அவன் அழகு மகள் அம்பிகாவை பற்றிக் கூறினான்.
''நெருப்புக் கோட்டை எங்கிருக்கிறதோ? அந்த நீல வண்ணனின் பெயரைச் சொன்னதும் அத்தனை பேரின் முகங்களும் வெளிறிப் போயிற்று. அப்படியானால் அவன் எத்தனை பயங்கரமானவனோ தெரியவில்லை. எந்த வகையிலாவது என்னை அழிக்க உறுதி கொண்டிருக்கிறான் அந்தக் கயவன்.
''நானோ உண்மையைக் கூறுவதில்லை என்று வாளின் மீது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். வாக்கு தவறக்கூடாது... நான் என்ன வேளையில் பிறந்ததேனோ தெரியவில்லை. இப்படியெல்லாம் துன்பப்பட வேண்டியிருக்கிறது!'' என்று இடிந்து போனான் இளவரசன்.
''இளவரசே, ஒவ்வொரு ஜீவனும் பயனுடையது தான். ஒவ்வொரு சோதனையிலும், மனிதன் இறந்துவிடுவானானால் அவன் போகும் வழியெல்லாம் செத்த பிணங்களல்லவோ விழுந்து கிடக்கும்; மனந்தளராதீர்கள்... பொறுமை இழக்காதீர்கள். நிலைமை உங்களுக்குச் சாதகமாகத் திரும்பவே போவதில்லை என்று எப்படி நீங்கள் நினைக்க முடியும்.
''வாழ்க்கையின் மேடு பள்ளங்களை உறுதியோடு கடப்பது தான் மனிதத்தன்மை. நேரமும், காலமும் அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருந்தால், நீங்கள் தீயின் மீது பவனி வரலாம்; நீர் மீது நடக்கலாம்; நெருப்புக் கோட்டை மன்னனையும் வெற்றி கொள்ளலாம்! அதிர்ஷ்ட வேளையில் பிறந்தவனை துன்பம் எதுவும் தொட முடியாது.
''சில நிபந்தனைகளை விதித்து, உங்களை வெற்றி வீரராக்கவே உங்கள் தந்தை என்னை உங்களோடு அனுப்பி இருக்கிறார், நெருப்புக் கோட்டையைப் பற்றிச் சஞ்சலப்பட வேண்டாம்; ஏறுங்கள் என் மீது. உறுதியாக என் பிடரியைப் பற்றிக் கொள்ளுங்கள். அந்த மொட்டைத்தலையனின் மோசடிக்கு இதோடு முடிவு கட்டுவோம்!'' என்றது மாயக்குதிரை மின்னல் வீரன்.
அதன் பேச்சினால், தெம்பும், தீரமும் எற்பட்டது இளங்குமரனுக்கு. நம்பிக்கையோடு அதன் மீது ஏறி அமர்ந்தான். நகருக்கு வெளியே சென்றதும், புதிய தோற்றம் கொண்ட மின்னல் வீரன் ஆகாயத்திலே பறந்தது.
கானகங்களையும், கடல்களையும் மலை முடிகளையும் மின்னல் வேகத்தில் கடந்து, ஓரிடத்தில் இறங்கி தரையில் நடந்தது.
எங்கே பறந்து கடக்க வேண்டும், எங்கே நடந்து செல்ல வேண்டும் என்பதை அறிந்தது அது. அதன் செயல்கள் அனைத்தும் இளவரசன் இளங்குமரனுக்கு நன்மை பயப்பனவாகவே இருக்கும்.
மின்னல் வீரன், இளவரசன் இளங்குமரனை தாங்கி கம்பீர நடை நடந்தபோது, ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அது பயங்கரமான ஆழமும், வேகமும் உடைய காட்டாறு. அதைக் கடக்க அதன் குறுக்கே குறுகலான ஒரு பாலமிருந்தது.
ஆனால், அப்போது அப்பாலத்தில் மாபெரும் எறும்புக் கூட்ட மொன்று மிக மெதுவாகக் கடந்து வந்தது. அந்தக் கானகத்து எறும்புகள் அத்தனையும் அணி திரண்டு வந்து கொண்டிருந்தன. அது ஒரு கல்யாண ஊர்வலம்.
'பாலத்தின் வழியே சென்றால் குதிரையின் காலடியில் நசுங்கி பல ஆயிரம் எறும்புகள் மடியும்; ஆற்றில் இறங்கி மறுகரை சேருவதென்றால், அதன் அசுர வேகத்தில் குதிரையும், நானும் அடித்துச் செல்லப்படுவோம். என்ன செய்ய?' என்று யோசித்தான் இளங்குமரன்.
அவன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதை அறியவே மின்னல் வீரன் அந்த பாலத்துக்கு அவனை அழைத்து வந்திருந்தது. சிறிது நேர தயக்கத்துக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் இளங்குமரன்.
என்ன முடிவு... பல்லாயிரம் எறும்புகளைப் பலி கொடுத்து பாலத்தின் வழியே ஆற்றைக் கடப்பதை விட, ஆற்றில் இறங்கி கடக்க முயல்வதே சிறந்தது. அதில் தோல்வியுற்றால், இரு உயிர்கள் மட்டுமே போகும் என்ற முடிவோடு, குதிரையை ஆற்று நீரில் செலுத்தினான் இளங்குமரன்.
இளவரசனின் இந்த முடிவிலே மகிழ்ந்தது மின்னல் வீரன். அந்த காட்டாற்று வேகம் அதற்கு ஒரு பொருட்டா என்ன... ஜீவராசிகளின் உயிர்களை மதிக்கும் குணம் இளங்குமரனுக்கு உள்ளதா என்று பரீட்சிக்கவே அது அங்கு தயங்கியது. உயிர்களிடம் அன்பு கொண்டவன் இளங்குமரன் என்பதை தெரிந்து, அக்காட்டாற்றை இலகுவாக கடந்து அக்கரை சேர்ந்தது.
அக்கரை ஏறிய இளங்குமரன், திருப்தியோடு எறும்புக் கல்யாண ஊர்வலத்தைப் பார்த்தான். அப்போது இறக்கை முளைத்த ஒரு பெரிய முதிய எறும்பு பறந்து வந்து அவன் கையில் அமர்ந்தது.
''கருணை உள்ளம் கொண்ட இளவரசே! உனக்கு எங்கள் வாழ்த்துக்கள். சிறிய ஜீவன்களான எங்கள் உயிரை மதித்து, எங்கள் மகிழ்ச்சியைப் பாழாக்கக்கூடாதென்று, பாலத்தைப் பயன்படுத்தாமல், ஆற்றில் இறங்கிக் கடந்த உனக்கு எங்கள் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதோ என்னுடைய இறக்கைகள் இரண்டையும் பெற்று கொள்,'' என்று கூறி தன் சிறு இறக்கைகள் இரண்டையும் துண்டித்து அவனிடம் தந்தது.
- தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X