அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

வீட்டில் இருக்கும் பெரிய பெரிய உயிரினங்கள்!
பார்க்க சின்னதுதான்; ஆனால், பண்ணும் வேலையோ படா...படா... பெருசு! எவ்வளவு தான் தூய்மையாக வைத்திருந்தாலும், கொசு, ஈ, சிலந்தி, எறும்பு, மூட்டைப் பூச்சி, கரையான் போன்றவை, வீட்டிற்குள் படையெடுத்து வந்து விடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் வழிகளைப் பார்ப்போமா?

வண்டுகள்:
உணவுப் பொருட்கள், மாவு வகைகள், தானியங்கள், அரிசி ஆகியவை, மழையின் காரணமாக ஈரப்பதம் ஏற்படும் போது, வண்டுகள் உற்பத்தியாகின்றன. வெயிலில் காய வைத்தாலும் அதை வெளியேற்ற முடியாது. மாவு தவிர, மீதியுள்ள உணவு பொருட்களை வெளியில் எடுத்து, 'பேன்' காற்றில் படும்படி வையுங்கள். பின், வாணலியில் லேசாக சூடுகாட்டி, மீண்டும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு சுத்தப்படுத்தி பயன்படுத்தலாம். உணவுப் பொருள் பாதிக்கப்பட்டிருந்தால், சற்றும் யோசிக்காமல் அதை கொட்டி விட வேண்டும்.

எறும்பு: வீட்டின் மூலை முடுக்கில், வெகுநாட்கள் நகர்த்தப்படாமல் வைத்திருக்கும் கனமான பொருட்களின் அடியில், லேசாக ஈரத்தன்மை இருந்தாலும், கருப்பு எறும்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து குவிந்து விடும். இதை தடுக்க, எறும்பு மருந்தை ஆங்காங்கே தூவி விடலாம் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பரவலாக தெளித்தால் எறும்புகள் ஓடி விடும்.
உணவுப் பொருட்களில் எறும்புகள் புகுந்து விட்டால், அவற்றை அகற்றுவது கடினம். ஆனால், சிந்துகிற உணவுப் பொருட்களிலும், திறந்திருக்கும் பொருட்களிலும் தான் அது குடியேறும். அதனால், சமையலறையில் உணவுப் பொருட்கள் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின், எறும்பு தோன்றும் இடத்தை கண்டுபிடித்து, அதன் புற்றின் மேல் சிறிது மண்ணென்ணெய் ஊற்றலாம் அல்லது சிமென்டை பூசி மூடி விடலாம்.
கடையில் கிடைக்கும் எறும்புக்கான சாக்கு கட்டிகளை, உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் ஷெல்புகளில், பொருட்கள் மீது படாமல் கோடு போட வேண்டும். மாவு, சர்க்கரை, ரவை போன்றவற்றில் எறும்பு தொல்லை அதிகம் இருக்கும். அதை தவிர்க்க, உணவுப் பொருட்களின் பாத்திரங்களை சுவரை ஒட்டி வைக்காமல், சற்று தள்ளி வைத்து, எறும்பு சாக்குகட்டியால் அழுத்தமாக கோடு போட்டு விட்டால், எறும்புகள் நுழைவதை தவிர்த்து விடலாம்.

பல்லி: பல்லிகள், மழைக் காலங்களில் மூலை முடுக்குகளில் நிறைய முட்டைகளைப் போட்டு, இனத்தைப் பெருக்கும். யார் கையிலும் அகப்படாது; சமையலறையில் பல்லிகளின் நடமாட்டம் மிகவும் ஆபத்தானது. நீராவி புகை, வெப்பமான காற்று அதன் மீது பட்டால், பட்டென்று, 'பேலன்ஸ்' இல்லாமல் தவறி கீழே உள்ள உணவுப் பொருட்களில் விழுந்துவிடும். பின் உணவே விஷமாகிவிடும்.
உங்கள் வீட்டில் சிலந்திகள் அதிகம் இருந்தால், அதை பிடிக்க, பல்லிகள் வட்டமிடும். முதலில் சிலந்தி கட்டும் வலைகளை ஒழிக்க வேண்டும். அநேகமாக, சுவர் கடிகாரத்தின் பின் புறத்திலும், படங்களின் பின்புறத்திலும் தான், பல்லிகள் பயணிக்கும்!
இதற்கு, பூச்சி மருந்தை, ஸ்ப்ரே செய்தால் மயங்கி விழுந்துவிடும். பின், அப்புறப்படுத்தி விடலாம். தேவையற்ற படங்களை அகற்றி சுவரை காலியாக, சுத்தமாக வைக்க வேண்டும். மயில் இறகுகளை ஆங்காங்கே நான்கைந்தாக சொருகி வைத்தால் பல்லி வராது. மயில் இறகின் நெடி, பல்லிக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, அது உள்ளே நுழைவதை தடுத்து விடும்.

சிலந்தி: வீட்டின் சுவர், மேல் பகுதி, மூலைகளை வாரத்திற்கு மூன்று முறையாவது துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சில நாட்கள் கவனிக்காமல் விட்டாலும், வீட்டின் மூலையில் வலைபின்ன ஆரம்பித்துவிடும். அந்த சின்னச் சின்ன ஓட்டடைகள் சேராமல் இருக்க, பூச்சி மருந்து, 'ஸ்ப்ரே' அடிக்க வேண்டும் அல்லது மண்ணென்ணெயை துணியில் ஊற வைத்து, ஒரு குச்சியில் சுற்றி மூலை முடுக்குகளிலும் பரவலாக தேய்த்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் சிலந்தி தொல்லை ஏற்டாது.

கொசு: பூச்சிகளின் ஆசான் கொசு. இதை ஒழிக்க பல மருந்துகள் வந்து விட்டாலும், கொசுவின் ராஜ்ஜியம் குறைந்த பாடில்லை. இதை ஒழிக்க, வெங்காயத்தை பாதியாக நறுக்கி, அதில் சாம்பிராணி பொடியை தூவி, எண்ணெயில் முக்கி எடுத்து, வீட்டின் மூலை முடுக்குகளில் வைக்க வேண்டும்.
அதில் இருந்து வரும் நெடி தாங்காமல் கொசு வெளியேறி விடும். உலர்ந்த எலுமிச்சை இலைகள், கற்பூரம், சாம்பிராணி புகையாலும், கொசுவை வெளியேற்றலாம். கொசுவை ஒழிக்க மின்சார பேட், கொசுவர்த்தி சுருள் போன்றவை இருக்கின்றன. ஆனால், இயற்கை வழிகள் தான் நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை.

: இதை ஒழிக்க டி.டி.டி., மருந்தை வீட்டை சுற்றிலும் தெளிக்கலாம். அதையும் மீறி வீட்டிற்குள் வருகிறது என்றால், டைனிங் டேபிளில் ஒரு கொத்து பச்சைப் புதினாவை ஒரு ஜாடியில் வைத்து விடுங்கள். அந்த வாசனையில் ஈ, கொசு அண்டாது. சமையலறையில், ஈ தொல்லை அதிகமாக இருந்தால், ஒரு கரண்டி காபி பொடியை தோசைக்கல்லில் சூடாக்கி புகை மூட்டுங்கள். ஈ பறந்து போய்விடும். தரமான, 'பினாயில்' கலந்த நீரில் தரையை சுத்தம் செய்ய வேண்டும்.

முட்டைப் பூச்சி: கடைகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளும் கிடைக்கின்றன. அதை, 'ஸ்ப்ரே' செய்து மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கலாம். வசம்பை அரைத்து தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க விட்டு, பர்னிச்சர்கள், கதவுகள் மற்றும் மர பொருட்கள் அனைத்திலும் ஊற்றி இந்த பூச்சிகளை கொல்லலாம்.

கரையான்: இது அமைதியாக படையெடுத்து, எவ்வளவு கடினமான பொருளையும் அரித்து தின்று விடும் சக்தியுடையது. எலுமிச்சை இலைகளை ஆங்காங்கே சொருகிவைத்தால், அந்த நெடியில் கரையான் வராது. நகர்த்த முடியாத பொருட்களின் மேல், மண்ணென்ணெய் அல்லது கரையான் மருந்துகளை, 'ஸ்ப்ரே' செய்யலாம். இவை துணியில் உள்ளே நுழைவதை தடுக்க துணிகளை நன்றாக உலர்த்தியே பின், பீரோவில் வைக்க வேண்டும்.
இடையிடையே நாப்தலின் உருண்டைகளை போட்டு வைக்க வேண்டும். பீரோவிலும் கூட எலுமிச்சை இலைகளை ஒரு துணியில் கட்டி, மூலையில் போட்டு வைக்கலாம். 'போக்ஸ்' பவுடரை தூவி அதன் மேல் ஒரு உலர்ந்த பேப்பரை போட்டு புத்தகங்களை அடுக்கலாம். இதனால், பல ஆண்டுகள் ஆனாலும் கரையான் அண்டாது.

கரப்பான் பூச்சி: இதை அழிப்பது சிரமம். உருவாகாமலே தடுப்பது எளிது. வீட்டிற்குள் குப்பைகள் சேராமல் இருந்தால், கரப்பான் பூச்சி தோன்றாது. 'போரிக் ஆசிட் பவுடர்'ல சம பங்கு மாவு கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மூலை முடுக்குகளில் போட்டு வைக்க வேண்டும். அதை சாப்பிடும் கரப்பான் பூச்சி வயிறு வெடித்து இறந்து போகும். தண்ணீர் செல்லும் வழிகள், சிங்க், வாஷ்பேஷின் ஆகியவற்றில் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைக்க வேண்டும்.

எலி: எல்லா காலங்களிலும், தொந்தரவு தரும் உயிரினம் இது. மழை பெய்யும் போது, இதன் பொந்துகள் தண்ணீரில் நிரம்பிவிடும். அதனால், பொந்துகளில் இருந்து வெளியேறி, வீடுகளில் தஞ்சம் புகுந்து விடும். எலியை ஒழிக்க, எலி விஷம் வைப்போம். விஷத்தை தின்றுவிடும். தண்ணீரை தேடிச் சென்று, கடைசியில் மறைவிடத்தில் எலி இறந்து விடும். இரண்டு நாட்களுக்கு பின் துர்நாற்றம் வீசும். எந்த இடத்தில் செத்துக் கிடக்கிறது என்று பார்ப்பதற்குள் வீடே நாறி விடும். இதை தவிர்க்க எலிப்பொறி தான் பாதுகாப்பானது. எலி விழுந்தவுடன் அந்த கூண்டை அப்படியே ஒரு சாக்கு பையில் போட்டு சுடு தண்ணீர் ஊற்றி விட வேண்டும். சுடு தண்ணீரில் எலியின் கால்கள் செயலிழந்து விடும். பிறகு, அதனால் ஓட முடியாது. உடனே தூக்கி வெளியில் போட்டு விட வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X