கர்வம் பிடித்த காட்டு ராஜா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

'நான் தான் ராஜா... நான் தான் ராஜா...' என்று ஒவ்வொரு முறை சொல்லும்போதும், தன் கம்பீரம் முன்பைவிட கொஞ்சம் வளர்ந்தது போல் தோன்றியது சிங்கத்துக்கு.
தன் வீட்டில் இருக்கும் மிகப் பெரிய கண்ணாடி முன் வந்து நின்று, 'கூர்மையான கண்கள், வலிமையான உடல், ஷாம்பூ போட்டு குளித்தது போல் புசுபுசுவென்று அடர்த்தியான பிடரி, 'ஆ...' என்று வாயை திறந்தது சிங்கம்.
முன்னே நீட்டி நின்ற கூர்மையான பற்களைக் காணும்போது பெருமிதமாக இருந்தது. அப்படியே, தன் சிகப்பு நிற நாக்கை ஒருமுறை வெளியில் நீட்டியது.
பின் உடலைத் திருப்பி, கஷ்டப்பட்டு கழுத்தைத் திருப்பிப் பார்த்து,
'அடடா, வால் கூட எவ்வளவு அழகாக இருக்கிறது!' என்று சந்தோஷப்பட்டது.
'சும்மாவா தன்னைக் காட்டின் ராஜாவாக தேர்ந்தெடுத்தனர்... என்னை விட கம்பீரமான, என்னை விட அழகான, என்னை விட வீரமான இன்னொரு பிராணி இங்கே இருக்கிறதா... இருக்கத்தான் முடியுமா...'
சிவப்பு நிற மேலங்கி, சில தங்க நகைகளையும் அணிந்து, தலைக்கு ஒரு கிரீடம் வைத்து தன்னை அலங்கார படுத்தி கொண்டு புறப்பட்டது சிங்கம்.
அந்தக் குகையே அதிரும்படி ஒரு அதட்டல் போட்டது சிங்கம்.
''யாரங்கே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா...''
ஒரு குரங்கு தாவி வந்து பயபக்தியுடன் தலையைத் தாழ்த்தி, ''ஆம் மன்னா! எல்லாம் தயார்!''
அன்றைய தினம், காட்டில், 'மீட்டிங்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு சிங்க ராஜாதான் தலைமை.
ஒவ்வொரு மாதமும் இப்படியொரு மீட்டிங் நடப்பது வழக்கம். காட்டிலுள்ள மிருகங்கள் ராஜாவிடம் வந்து வரி செலுத்தும் தினம் அது. அப்படியே ஏதாவது புகார் இருந்தால் தெரிவிக்கலாம். ராஜா தீர்ப்பு சொல்வார்.
சிங்கம் வாசலுக்கு வந்தது. அங்கே குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி தயாராக இருந்தது. சிங்கம் தாவி ஏறியது.
''ம்... புறப்படலாம்...'' என்று சிங்கம் உத்தரவிட்டதும் வாகனம் ஓடத் துவங்கியது. குதிரை வண்டிக்கு முன்னால், புலிகளின் படையும், பின்னால், சிறுத்தைகளின் படையும் ராஜாவின் பாதுகாப்புக்காக அணிவகுத்து வரும்.
ராஜாவுக்கு அங்கே எதிரிகள் யாரும் இல்லை என்றாலும் இப்படி ஊர்வலமாக செல்வது பெருமை அல்லவா...
அரைமணி நேரப் பயணத்துக்குப் பின் காட்டின் நடுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ராஜா வருவதற்கு முன்பே காட்டிலுள்ள அத்தனை மிருகங்களும் குழுவாக அங்கே திரண்டிருந்தது. யாராவது, 'லேட்'டாக வந்தால் ராஜாவுக்கு பிடிக்காது.
சிவப்பு நிறப் பெரிய இருக்கையில் சிங்கம் அமர்ந்து கொண்டது.
''ம்... தர்பார் ஆரம்பிக்கலாம்...'' என்றது சிங்கம்.
முதலில் மரியாதை செலுத்தும் சடங்கு ஆரம்பமானது. ஒவ்வொரு மிருகமும் ராஜா முன் வந்து வணக்கம் தெரிவித்து வரி செலுத்தியது. வரி என்பது தானியமாக இருக்கலாம், பழமாக இருக்கலாம், காய்கறிகளாக இருக்கலாம் அல்லது வாசனைப் பொருள்களாக இருக்கலாம்.
கணக்கு வழக்குகளை கவனிக்கும் அதிகாரி கரடி. ஒவ்வொருவரும் ராஜாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, எடுத்து வந்திருக்கும் மூட்டையை கரடியிடம் ஒப்படைக்க வேண்டும். கிளம்பும்போது, மீண்டும் ராஜாவுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.
ஆனால், விலங்குகளுக்கு இந்த ராஜா மீது பயம் தான் இருந்ததே தவிர, அன்போ, மதிப்போ இல்லை. ராஜாவின் அடாவடி குணம் தான், அதற்குக் காரணம். வரி வாங்கிக் கொள்வதில் கறாராக இருக்கும் ராஜா, குற்றம், குறைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டமாட்டார்.
காட்டில் ஏதாவது பிரச்சனை என்றாலோ, உணவுத் தட்டுப்பாடு என்றாலோ தலையிட மாட்டார். ஆனால், அவருக்கு யாராவது மரியாதை தரவில்லை என்றால் சீறிவிடுவார்.
முதலில் ஒட்டகச்சிவிங்கி வந்து, 'வணக்கம் ராஜா...' என்று சொல்லி மூட்டையை கரடியிடம் கொடுத்தது. மீண்டும், 'வணக்கம் ராஜா...' என்று சொல்லி விட்டு, நகர்ந்தது. ஆனால், அதற்குள் சிங்கம் கத்தியது.
''ஏய் இங்கே வா!''
ஒட்டகச்சிவிங்கி நடுங்கியபடி முன்னால் வந்து நின்றது.
''உனக்கு வணக்கம் சொல்லும் முறை தெரியாதா? நன்றாக தலையை வளைத்து என்னை வணங்கு!''
ஒட்டகச்சிவிங்கி தடுமாறியது.
''ராஜா, என் கழுத்து மிகவும் பெரியது. என்னால் ஓரளவுக்கு மேல் தலையை வளைக்க முடியாது!''
''எவ்வளவு திமிர் இருந்தால், முடியாது என்று சொல்வாய்... நான் சொல்வதை செய்யாவிட்டால் உன்னைக் காட்டை விட்டே துரத்திவிடுவேன் ஜாக்கிரதை!''
வேறு வழியின்றி, மிகவும் சிரமப்பட்டுத் தலையை வளைத்து, கழுத்து வலிக்க வணக்கம் தெரிவித்தது ஒட்டகச்சிவிங்கி.
அடுத்து யானை; அதற்கும் அதே கதிதான். தன் பெரிய உடலை வளைத்து, முன்னிரண்டு கால்களை மடக்கிச் சிரமப்பட்டு வணக்கம் தெரிவித்தது. புலி, சிறுத்தை, பறவை, பாம்பு என்று ஒவ்வொன்றாக ஒவ்வொருவிதமாக சிரமப்பட்டு ராஜாவுக்கு மரியாதை செலுத்தின.
கடைசியாக வண்டு வந்து நின்றது.
ஏதோ முணுமுணுத்தது. அங்கும் இங்கும் நகர்ந்தது. பிறகு தன் வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தது.
சிங்கத்துக்கு வந்ததே கோபம்!
''ஏய், நீ இப்போது என்ன செய்தாய்...'' என்றது சிங்கம்.
''ராஜா, நான் முறைப்படி உங்களுக்கு வணக்கம் தெரிவித்தேன்!'' என்று தன் குரலை உயர்த்தி பதிலளித்தது வண்டு.
''என்னால் நீ வணங்குவதைக் காண முடியவில்லை; மீண்டும் ஒருமுறை வணங்கு!''
வண்டு அப்படியும், இப்படியும் கொஞ்சம் அசைந்தது; அவ்வளவுதான்.
''என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? பெரிய, பெரிய மிருகங்களெல்லாம் தரையில் தலை, படும்படி விழுந்து வணங்கும்போது உனக்கு அவ்வளவு திமிரா...'' என்று அந்த காடே அதிரும் படி கர்ஜனை செய்தது சிங்கம்.
''ராஜா, நான் சின்னஞ்சிறு பூச்சி என்பதால் நான் வணங்குவதை உங்களால் காண முடியவில்லை என்று நினைக்கிறேன். சந்தேகம் இருந்தால் கொஞ்சம் கீழே இறங்கி வந்து பாருங்கள்!''
'சரி தான்!' என்று இறங்கி வந்தது சிங்கம். வண்டு மீண்டும் என்னவோ செய்தது போல் இருந்தது. ஆனால், அது வணக்கமா என்று தெரியவில்லை.
''கொஞ்சம் குனிந்து பாருங்கள் ராஜா,'' என்றது வண்டு.
சிங்கம் நன்றாகக் குனிந்து பார்த்தது. அப்போதும் வண்டின் தலையையோ, கால்களையோ பார்க்க முடியவில்லை.
''முட்டாளே, நான் பார்க்கும்படி வணக்கம் சொல்!''
மீண்டும் அசைந்து கொடுத்தது வண்டு.
''மதிப்பு மிக்க ராஜா... என் தலை தரையில் படுவது உங்களுக்குத் தெரியவில்லையா? என் கைகள் உங்களை வணங்குவது தெரியவில்லையா? உங்கள் கீரிடத்தை தயவு செய்து கழற்றி, நன்றாக தரையில் தலையை வைத்துப் பாருங்கள்!''
ராஜா தன் கீரிடத்தை அகற்றி, தரையில் அமர்ந்தவாறு உன்னிப்பாக கவனித்தது; இப்போதும் சரியாக தெரியவில்லை. கோபத்துடன் மீண்டும் ஒரு முறை கத்தியது.
''மன்னிக்க வேண்டும் ராஜா. நீங்கள் இன்னமும் தலையைத் தாழ்த்தி பார்த்தால்தான் என்னை நன்றாகப் பார்க்க முடியும்!''
சிங்கம், தன் முன் பக்க கால்களை மடக்கி, தலையைத் தாழ்த்த முயன்றது. சட்டென்று கால் தடுக்கி விட, அப்படியே குப்புறக் கவிழ்ந்துவிட்டது. அதன் சிவப்பு அங்கி முழுக்க மண்; பிடரியில் மண். சிங்க ராஜாவின் புதிய கோலத்தைக் கண்டு கொல்லென்று சிரித்தன விலங்குகள்.
சிங்கத்துக்கு அவமானமாகப் போய் விட்டது. தன் கோபத்தை யாரிடம் வெளிப் படுத்துவது என்று அதற்குத் தெரியவில்லை.
''ராஜா, இன்னொரு முறை வணக்கம் சொல்லவா?'' என்று குறும்பாக கேட்டது வண்டு.
அந்தக் காடே அதிரும்படி விலங்குகள் மீண்டும் சிரிக்கத் துவங்கின. இச்சம்பவம் நடந்த மறுநாளே, தன் பதவியை ராஜினாமா செய்து, வேறு காட்டை நோக்கி சென்றது சிங்கம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X